ரமலான் என்னும் முப்பது நோன்புக்குரிய மாதம் நாளையிரவு ஆரம்பமாகப் போவதால், வீண் காலதாமதமின்றி விரைவிலேயே மையித்தை நல்லடக்கஞ் செய்துவிட வேண்டுமென்று எல்லாரும் சேர்ந்து முடிவு கட்டினார்கள். எனினும், அந்தக் கால வழக்கப்படி ஒரு விஷயம் பாக்கியாய் இருந்தது : அஃதாவது, சுல்தானுக்கோ அல்லது சுல்தானின் நெருங்கிய பந்துவுக்கோ

மரணம் சம்பவிக்கிற நேரத்தில், உரியவர்கள் பக்கத்தில் இல்லாவிட்டால், மரணம் எப்படி நேரிட்டது என்பதை நன்கு விசாரித்த பின்னரே பிரேதம் அடக்கம் செய்யப்படல் வேண்டும். இன்று கூட மேல்நாடுகளில் ஒவ்வொருவரின் மரணத்துக்கும் டாக்டர் நற்சாட்சிப் பத்திரம் அளித்தாலொழிய, பிரேதம் அடக்கப்படுவதில்லை. இந்தப் பழக்கம் முஸ்லிம்களாலேதாம் முதலில் புகுத்தப்பட்டது. என்னெனின், முஸ்லிம்களுக்கு விரோதமாக யூதர்களும் கிறிஸ்தவர்களும் விசித்திரம் விசித்திரமான சதியாலோசனைகளை எல்லாம் புரிந்து, கண்ட கண்டபடியெல்லாம் படுகொலைகளைப் புரிந்து வந்தமையால், அரச குடும்பம் சம்பந்தப்பட்ட வரையிலாவது, பிரேத விசாரணை நடந்த பின்னரே நல்லடக்கம் செய்ய வேண்டுமென்னும் சட்டம் பின்பற்றப்பட்டு வந்தது. இப்போது கிறிஸ்தவர் யுத்தம் நடந்த மறுதினம் சுல்தான் மாண்டிருப்பதாலும், அவர் உயிர் துறந்த தறுவாயில் அவர் பக்கத்தில் ஷஜருத்துர்ரோ அல்லது தாமோ இல்லாமையாலும், விசாரித்த பின்னரே மேற் கொண்ட காரியத்தைக் கவனிக்க வேண்டுமென்று இளவரசர் கண்டித்துக் கூறிவிட்டார்.

மறுகணத்தில் அரண்மனை ஹக்கீம் கொண்டு வரப்பட்டார். அவரைப் பிரதம மந்திரியும் தூரான்ஷாவும் குறுக்கு விசாரணை செய்தார்கள். தலைக்கு வந்த ஆபத்து இன்னம் தப்பவில்லையே என்னும் ஏக்கத்துடனே அந்த வயோதிக ஹக்கீம் ஷஜருத்துர்ரைப் பார்த்துக்கொண்டே, “மரணம் சாதாரணமாகத்தான் சம்பவித்தது. மூளை ஜுரம் வந்துவிட்டபடியாலும் அதை நிறுத்த ஆண்டவனின் நாட்டப்படி இன்னம் ஏற்ற மருந்தை மருத்துவர்கள் படைக்காமையாலும் சுல்தான் மலிக்குஸ் ஸாலிஹ் நஜ்முத்தீன் ஐயூபி திடீரென்று உயிர் நீத்தார். நான் அந்த அல்லாஹ் அறிய மெய்யாகவே சொல்லுகிற இந்த வார்த்தைகளை நீங்கள் நம்பாவிட்டால், வேறு எந்தச் சிறந்த வைத்தியனையும் கொண்டு வந்து இதைப் பரிசோதித்துக் கொள்ளலாம்,” என்று மிக மிருதுவாகவும், அதிக அழுத்தமாகவும் அமரிக்கையுடன் மொழிந்தார். அவருடைய முகத்தோற்றத்தைப் பார்த்தால், அவர் பேசுவது சத்தியமான மொழிகளே என்பது தெற்றெனப் புலப்பட்டது.

அஜாக்கிரதையாலோ அல்லது கபடமான வழியாலோ சுல்தான் உயிரிழக்க நேரவில்லை என்பதும், இயற்கையாகவே ஆண்டவனிட்ட கட்டளைப்படியே அவர் மாண்டாரென்பதும் ஹக்கீமின் வாய்மொழியிலிருந்து நிரூபணமாகியபடியால், இனித் தாமதமின்றிப் பிரேத வடக்கத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டியதுதான் என்று இளவரசர் கூறினார். ஆனால், அதற்குள் மாலைப் பொழுது வந்து விட்டபடியால், நாளை விடிந்த பின்னரே மையித் எடுக்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது.

இத்தனை நாட்களாக அப் பிரேதம் கேட்பாரற்று மூலையிலே முடங்கிக் கிடந்ததென்றாலும், இப்போது எல்லா மக்களும் அதற்குத் தத்தம்முடைய இறுதி மரியாதையைச் செலுத்தினார்கள். நறுமண மூட்டும் சாம்பிராணியும், அகர் பத்திகளும் “கம்” மென்று வாசனை வீசிக்கொண்டு புகைந்தன; அகிற் கட்டைகளும், சந்தன மரங்களும் பொடியாகச் சவதரிக்கப்பட்டு நெருப்பில் கொட்டப்பட்ட படியால், இன்னம் அதிகமான நறுமணம் அரண்மனை முழுதும் பரவி விட்டது. இருள் நெருங்க நெருங்க, அம் மையித் நீட்டப்பட்டுக் கிடந்த இடம் பல்வகை விளக்குக்களைக் கொண்டும், தீவர்த்திகளைக் கொண்டும் பகல் போன்று பிரகாசிக்கச் செய்யப்பட்டது. இரவாகி விட்டமையால், எல்லாப் பிரதானிகளின் மனைவியரும், வேறு பெருமக்கட் பெண்டிரும் திரள் திரளாகக் கூடி அரண்மனைக்கு விஜயஞ்செய்தார்கள். சுல்தான் வெறுத்துவந்த புர்ஜீ மம்லூக்குகளும், அவர் வளர்த்துவந்த பஹ்ரீ மம்லூக்குகளும் இந்தத் துக்கத்தை மேற்கொள்வதில் ஒருவரையொருவர் மிகைத்தே காணப்பட்டார்கள். இவ்விதமாக அந்த இரவு மிகவும் நீளமானதாக வளர்ந்து கொண்டேயிருந்தது.

எல்லாரும் அழுது கண்களிலே நீரும் வறந்தது; பொழுதும் புலர்ந்தது. இறுதி யீமச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் செவ்வன் செய்யப்பட்டன. மையித்தைக் குளிப்பாட்டும் போது அதை மூமிய்யாவென்று எவராவது கண்டுபிடித்து, அந்த இறுதி வேளையிலே குழப்பமேதும் விளைந்து விட்டால் என்ன செய்வது என்னும் பிரச்சினை ஷஜருத்துர் உள்ளத்துள் எழுந்தது. எனவே, அவர் ஒரு தந்திர யுக்தியைக் கையாண்டார்; கண்ட மனிதரும் அம் மையித்தைக் குளிப்பாட்டக் கூடாதென்றும், சுல்தான் உயிருடன் இருந்தவரையில் மிகவும் அன்புடனே பக்ஷம் பாராட்டி வந்த அந்த இரு அலிகள் மட்டுமே அந்தப் புனித கருமத்தைக் கவனிக்க வேண்டுமென்றும் சுல்தானா கட்டளையிட்டார்.

குளிக்கிற தண்ணீரையும் குடிக்கிற தண்ணீரையும் நறுமண மூட்டிய கைத்திறனை நம்மால் வருணிக்கவோ, அல்லது முற்றும் ஓர்ந்துணரவோ முடியாது.

மிஸ்ரிகள், அதிலும் பண்டைக்கால நாகரிகத்தில் தலை சிறந்து விளங்கிய சகலகலா வல்லுநர்களின் வம்சத்தில் வந்தவர்கள், குளிக்கிற தண்ணீரையும் குடிக்கிற தண்ணீரையும் நறுமண மூட்டிய கைத்திறனை நம்மால் வருணிக்கவோ, அல்லது முற்றும் ஓர்ந்துணரவோ முடியாது. அத்தகைய சுவாசனை மிக்க நறுமண நீரைக்கொண்டு ஸாலிஹின் மேனி குளிப்பாட்டப்பட்டது. தூய வெண்டுகில்கொண்டு நேர்த்தியாகக் கபனிடப்பட்டது. மையித் வைக்க வேண்டிய பேழையுள் அது தூக்கி வைக்கப்படு முன்பு, இறுதித் தரிசனத்துக்காக ஸாலிஹ் மன்னரின் முகம்மட்டும் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

அதுபொழுது நடந்த வைபவங்கள் சொல்லொணாத் துயரையும் துக்கத்தையும் ஊட்டின. என்னெனின், அந்தக் கடைசிச் சந்தர்ப்பத்திலே எல்லாரும் எதிர்பார்த்தபடி ஷஜருத்துர் அலறியழவில்லை; மார்பில் அறைந்துகொள்ளவில்லை; முகத்தைப் பிறாண்டிக்கொள்ளவில்லை; மண்டையை மோதிக்கொள்ளவில்லை; மயிரைப் பிய்த்துக்கொள்ளவில்லை. ஆனால், மிகவும் பயபக்தியுடனும், விரல்கோத்த கரங்களுடனும், கவிந்த முகத்துடனும் தம் பர்த்தாவின் உடலருகில் நின்று கொண்டு முணுமுணுத்த குரலில் மிழற்றுகிறார்:

“நாதா, கடலுட் கலங்கவிழ்த்தேன்; அலை கடல் துரும்பென அல்லலுறுகிறேன். எங்கேயோ பிறந்து, எங்கேயோ வளர்ந்து, கேட்பாரற்று மங்கிக்கிடந்த இவ் வபலையைக் கைதூக்கிவிட்டு உயர்த்தி வைத்த தங்களை யான் இழந்தே விட்டேன். சஞ்சலமே சதா வாட்டி வதைத்துக்கொண்டிருந்த இல்வாழ்க்கையெனும் கொடும் பாலையிலே சிறிதே தங்கி இளைப்பாறத் தங்களை நெருங்கியிருந்தேன். யான் பெற்ற சுகமெல்லாம் போதுமென்று ஆண்டவன் தங்களை இந் நாற்பத்திரண்டாம் பிராயத்திலே அழைத்துக்கொண்டான். போனவர்கள் மீளாத அவ்வுலகுக்குச் செல்லும் தாங்கள் என்பொருட்டாகவேனும், ஏழாவது வயதிலே எத்தீமாகி, இருபதாம் பிராயத்திலே இத் தேச ராணியாகி, இருபத்தாறாம் வயதளவிலே இளந்தலைக் கைம் பெண்ணாய் நிற்கும் இவ்வடியேன் பொருட்டாக இறைவனிடம் மன்றாடி என்னையும் அங்கே இப்போதே அழைத்துக் கொள்ள மாட்டீர்களா ? துயரே மிகுந்த, சஞ்சலமே சதா குடிகொண்ட இப் பாழுலகில் யான் அனுபவித்ததெல்லாம் போதும். இனி யான் அனுபவிக்க வேண்டிய இன்பங்களோ அல்லது துன்பங்களோ இப் பாருலகில் ஒன்றும் எஞ்சியில்லை. தாயை இழந்தேன்; தந்தையைப் பறிகொடுத்தேன்; அடிமையாய் விற்கப்பட்டேன்; அமீரால் ஆதரிக்கப் பெற்றேன்; தங்களால் கைது செய்யப்பட்டேன்; பின்னர்த் தங்கள் காதலுக்கே இரையானேன்; சொல்லொணா இன்ப வாழ்க்கையைத் தங்களுடனே அனுபவித்தேன்; கலீலைப் பெற்று மகிழ்ந்தேன்; இம் மிஸ்ரின் சுல்தானாவாகவும் ஆண்டு விட்டேன்; கிறிஸ்தவர்களிடமிருந்து இந்த ஸல்தனத்தைக் காப்பாற்றியும் விட்டேன்; இறுதியாகத் தங்களையும் இவ் விளவயதிலே பறிகொடுத்துவிட்டேன்.

“இனியும் யான் என்ன அனுபவிக்க வேண்டும்? ஏ, மானிட வாழ்க்கையே! நீ யொரு மாயை. மன்னாதி மன்னனாயினும், வீராதி வீரனாயினும், தவத்துறை மாக்கள் மிகப் பெருஞ் செல்வர், ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர் யாவரே யாயினும், முதியோரே யாயினும், இளையோரே யாயினும், எவரே என்றென்றும் இவ்வுலகில் ஜீவித்திருக்கிறார்? எனினும், ஏ, மரணமே! எவரைக் கொண்டுசெல்ல வேண்டுமோ, அவரை நீ விட்டுவைக்கிறாய் ! எவரை விட்டுவைக்க வேண்டுமோ, அவரை நீ பறித்துக்கொள்கிறாய்! என் கருத்துத் தெரிந்து யான் இத்தனை பேரைப் பறிகொடுத்திருக்க, என்னை நீ பற்றுகிறாயா? என்னை விட்டுவைத்து இக்காட்சிகளை யெல்லாம் எனக்கு ஏன் காட்டுகிறாய்?

“ஏ இறைவா! யான் இன்று வரை, இந்த நிமஷம்வரை உன்னால் எனக் கிடப்பட்ட கட்டளைகளை முற்றமுற்றச் செவ்வன் நிறைவேற்றி வைத்துவிட்டேன் என்பதற்கு நீயே சாட்சியாய் இருக்கிறாய். நீ என்னை எந்த நிலையில் இக் காஹிராவுக்குள் கொண்டுவந்து சேர்த்தனையோ, அதே நிலைமைக்கு இன்று யான் மீண்டுவிட்டேன். ஆனால், அன்று ஒன்றுமறியா அபலையாகவும், கன்னிப் பெண்ணாகவும் இருந்தேன்; இன்றோ, என் காதலரைப்பறி கொடுத்து, விதவையாகிக் கிழடுதட்டி நிற்கின்றேன். என்னை நீ இனி எச் சோதனைக்கும் உள்ளாக்காமல் விரைவிலே நின்பக்கல் ஈர்க்க மாட்டாயா? ஏ கிருபாநிதி! ஏ அருளாளா! ஏ அன்புடையோனே! ஏ கருணையுள்ளவனே! காருண்யமிக்கவனே! ஞானவானே! நீதிமானே! என்னையும் நீ அழைத்துக்கொள்… என்னையும் நீ அழைத்துக்கொள்! போதும் நான்பட்ட பாடெல்லாம். இனிச் சகியேன் ஒரு கணமும்!” -என்றார்; இராணியார் மூர்ச்சித்து வீழ்ந்தார்!

சுல்தானாவை மூர்ச்சை தெளிவிக்க ஹக்கீம் மருந்து பிரயோகிக்க ஆரம்பித்தார். இனியும் காலந் தாழ்த்துவது பெரிய மனச் சங்கடத்தை விளைக்குமென்று நினைத்து, சுல்தானின் மையித்தை மெல்லத் தூக்கி, சந்தூக்குள் வைத்து மூடி, அப்பேழையை விலைமதிப்பேறிய இரத்தினக் கம்பளத்தைக் கொண்டு போர்த்தி, அதன் மீது பூமாரிகளைப் பொழிந்து, நான்கு பக்கமும் பன்னூற்றுக் கணக்கான பிரமுகர்கள் தோள் கொடுத்துத் தாங்கி, மெதுவாக நடந்தனர். குமுறுகிற உள்ளங்களால் தொண்டை அடைக்க அடைக்க ஒவ்வொருவரும் ­ஷஹாதத் கலிமாவை விம்மி விம்மி உச்சரித்துக் கொண்டே ஜாமிஆ மஸ்ஜிதை நோக்கி ஊர்ந்து சென்றார்கள்.

பெரிய பள்ளி வாயிலை எட்டியவுடனே காஹிராவாசிகள் ஒருவர் எஞ்சியில்லாது அத்தனை பேரும் அணியணியாக நின்று ஜனாஸாவுக்குரிய இறுதித் தொழுகையைத் தொழுது, பிரிந்துபோன அந்த ஆவிக்கு இன்னருள் பாலிக்க வென்று இறைவனை இறைஞ்சினார்கள்.

எல்லாம் முடிந்தபின்னர், உலகோர் அனைவருமே, ஒருநாளில் இல்லாவிட்டாலும் இனி யொருநாள் சென்று சேரவேண்டிய ஆறடி நீளமுள்ள ஒரு குறுகிய கப்றென்னப்படும் மட்குழியுள்ளே மிஸ்ரின் சுல்தான், மலிக்குல் முஸ்லிமீன், அஸ்ஸாலிஹ் நஜ்முத்தீன் ஐயூபியும் தாழ்த்தப்பட்டு விட்டார். “மண்ணிலேயே பிறந்து, மண்ணிலேயே வளர்ந்து, மண்ணுக்குள்ளேயே சென்று மறையும்” மானிடன் எவனாய் இருந்தாலென்ன? எல்லாருக்கும் ஒரே முடிவைத்தான் ஆண்டவன் அளித்திருக்கிறான். அதனைத் தவிர்ப்பது ஆராலும் ஆகாது! எந்தவொரு நாத்திகனாலுங்கூட ஆகாது!

சுல்தானின் இறுதி(ஈம)ச் சடங்கு இவ்விதமாய் இனிதே நிறைவேறிற்று.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<அத்தியாயம் 47>> <<அத்தியாயம் 49>>

<<ஷஜருத்துர் முகப்பு>>

Related Articles

Leave a Comment