அன்றைக்குச் சுமார் நாலாயிரம் ஆண்டுகட்குமுன்னே — (அஃதாவது, கிறிஸ்து பிறப்பதற்கு உத்தேசம் மூவாயிரம் வருடங்களுக்கு முன்னே) அதே எகிப்து தேசத்தில் திடுக்கிடத் தக்க சம்பவமொன்று நிகழ்ந்தது. அந்தப் புராதன காலத்தில் பண்டை எகிப்தின் தலைநகராய் விளங்கிய பட்டணம் ‘மெம்பிஸ்’ (Memphis) என்று

அழைக்கப்பட்டு வந்தது. மெங்கவ்ரா என்னும் பேரோ (பிர் அவ்ன்) அப்போது எகிப்தின் ஏக சக்ரவர்த்தியாக ஆட்சிபுரிந்து வந்தான். அச் சக்ரவர்த்தியின் கீழே ஒரு மாகாணா அதிபதியாய் இருந்த மெண்ட்டோ ஹாட்டப் என்பவனுக்கு ஒரே ஒரு கட்டழகு மிக்க பெண் குழந்தை இருந்து வந்தாள்; அவள் நாமம் நிட்டாக்ரிஸ் என்பதாகும். தற்செயலாக அவ் வழகியைச் சந்திக்க நேர்ந்த மெங்கவ்ரா என்னும் பிர்அவ்ன் அவள் மீது காதல் கொண்டு விட்டபடியால், அவளையே மணந்தும் கொண்டான்.

ஆனால், வெண் துகிலுடுத்து, காதுகளில் பெரிய தங்க வளையங்களையும், கழுத்தில் அழகிய அட்டிகை ஒன்றையும் அணிந்திருந்த அந்தச் சாதாரண நிட்டாக்ரிஸை மணப்பதை விட, இன்னம் பெரிய தகுதியும் பெருமையும் வாய்ந்த அழகு மிக்க ஆசியாவாசி ஒருத்தியையே அந்த பிர்அவன் மணந்துகொள்ள வேண்டுமென்று புரோகிதர்கள் உள்ளிட்ட பற்பல நிமித்திகர் தங்கள் அபிப்பிராய பேதத்தைத் தெரிவித்தார்கள். சக்ரவர்த்தி ஒன்றும் செவிசாய்க்காமல் தான் நாடிய அந்த அப்ஸரஸையே மணந்துகொண்டான். இதனால் அப்புரோகிதர்கள் தீய சூழ்ச்சி ஒன்றைச் செய்ய ஆரம்பித்தார்கள்.

ஒருநாள் அந்த பிர்அவ்ன் மூன்று குதிரைகள் பூட்டப்பட்ட வனப்பு வாய்ந்த தேர்மீது ஏறிச் சிங்கங்களை வேட்டையாடப் போயிருந்தான். பண்டைக் கால எகிப்து தேச சக்ரவர்த்திகளுக்குச் சிங்கங்களை வேட்டையாடுவதில் விருப்பம் அதிகம். வேட்டைக்குச் சென்ற தன் கணவனின் வருகையை இராணி நிட்டாக்ரிஸ் பேராவலுடனே எதிர்நோக்கி இருந்தாள். அப்போது அடிமை ஒருவன் ஓடிவந்து, வெற்றியுடன் திரும்புகிற அரசனின் வருகையைத் தெரிவித்தான். அக்கணமே நிட்டாக்ரிஸ் சட்டென எழுந்து எதிர்கொண்டு சென்றாள். பிர்அவ்னும் தன் தேரைவிட்டிறங்கி அரண்மனையுள் புகுந்துகொண்டிருந்தான். அச் சமயத்தில் சதியாலோசனைக்காரர்கள் மெங்கவ்ராவின் மீது குபீரென்று தாவி வீழ்ந்து அவனைக் கொலை செய்துவிட்டார்கள். இதைக் கண்ட நிட்டாக்ரிஸ் மயங்கி மூர்ச்சித்துவிட்டாள். அரசனுடைய மெய்காப்பாளர்கள் அரண்மனை முழுதும் தேடியும், கொலையாளிகள் அகப்படவே இல்லை. என்னெனின், கொலையை அடுத்து நிகழந்த குழப்பத்திலே அக் கொலைஞர்கள் கூட்டத்துள் கலந்து வெளியேறி விட்டார்கள்.

பின்னர் நிட்டாக்ரிஸ் சிலநாள் சென்று மன மாறுதல் அடைந்தவுடன் அவளையே எகிப்தின் ராணியாக மக்கள் ஏற்றுக்கொண்டனர். உலகம் உற்பத்தி ஆனதிலிருந்து, சிம்மாசனத்தின்மீது ஒரு பெண் அமர்ந்தது அதுவே முதல் தடவையாகும். இன்றுங்கூட அந்த நிட்டாக்ரிஸே உலகத்தின் முதற் பெண்ணரசியாகக் கருதப்பட்டு வருகிறாள். அவள் பட்டமேறிய பின்னர் மூன்றாவது கூர்நுதிக் கோபுரம் கட்டப்பட்டு முடிவடைந்து விட்டது. மெங்கவ்ராவின் பிரேதம் ‘மம்மீ’யாக (மூமிய்யாவாக)ச் செய்யப்பட்டு, அக் கோபுரத்துக்குள்ளே வைக்கப்பட்டது. இன்றுங்கூட, அஃதாவது சுமார் ஐயாயிரம் ஆண்டுகட்கு மேலாகியும் அக் கூர்நுதிக் கோபுரமும், அதனுள் வைக்கப்பட்ட பிரேதமும் கொஞ்சமும் கிலமடையாதிருப்பதை எகிப்துக்குச் செல்கிறவர்கள் தரிசிக்கிறார்கள்.

இந்தச் சரித்திரத்தைத் தாம் சிறுமியாய் இருந்தபோது படித்தது ஷஜருத்துர்ருக்கு இதுபோது ஞாபகத்துக்கு வந்தது. அன்று எகிப்தின் முதல் ராணியாயிருந்த நிட்டாக்ரிஸுக்கு வந்த சோதனையைப்போல, இன்று அதே மிஸ்ரின் முதல் சுல்தானாவாய் இருக்கும் தமக்கு ஆண்டவன் மற்றொரு சோதனையை விட்டுவிடக் கூடாதே என்று கவலுற்றார். இப்போது சுல்தானின் மரணத்தைப் பற்றிப் பிரகடனப் படுத்திவிட்டால், பட்டத்துக்குரிய ஒரே வாரிஸாகிய தூரான்ஷாவைச் சதிகாரர்கள் எவரும் கொலை புரிந்துவிட்டால், என்ன செய்வதென்னும் அச்சம் உதித்தது. தலைவலியை விட்டுத் திருகுவலியைச் சம்பாதித்துக் கொள்ளக்கூடாது என்னும் முடிவுக்கு அவர் வந்தார். எனவே, வருவது வரட்டும் என்று இன்னம் சில மணி நேரத்துக்கும் அந்த நாடகத்தை ஒழுங்காய் நடித்துத்தான் முடிக்க வேண்டுமென்று துணிந்துவிட்டார். கூடாரத்தை விட்டு வெளியேறி, அம் மந்திரிகளின் முன் கம்பீரமாக நின்றார் ராணியார் ஷஜருத்துர்.

“இங்கே ஏன் இவ்வளவு குழப்பமாக இருக்கிறது? சுல்தானைச் சற்று நேரம் நிம்மதியாய்த் தூங்கவிட மாட்டீர்களோ?” என்று மிகவும் கடுமையான குரலில் அதட்டினார்.

ஷஜருத்துரைக் கண்டதும் மந்திரிகள் பயந்து விட்டனர்; அதிலும் அவருடைய கடுமையான கோபாவேசத்தைக் கண்டு நடுநடுங்கினர்.

“இங்கே ஏன் எல்லாருமாகப் படையெடுத்து வந்திருக்கிறீர்கள்? இப்போது என்ன ஆபத்து வந்துவிட்டது?”

எல்லாரும் நிச்சப்தமாய்த் தலைகவிழ்ந்து நின்றார்கள்.

“ஏன் மெளனமாய் நிற்கிறீர்கள்? ஏதேனும் சொல்ல வேண்டியதாய் இருந்தால், தாராளமாய்ச் சொல்லலாமே?”

பிரதம மந்திரியை எல்லாரும் ஏறெடுத்துப் பார்த்தார்கள். எனவே, அவரே பேச வேண்டி வந்தது.

“யா ஸாஹிபா! அரசவை இன்னம் கூட்டப்படாததைக் கண்டு காஹிராவாசிகள் பொறுமையிழந்து நிற்கிறார்கள். நேற்று முடிந்த யுத்த விஷயமாக எல்லாரும் சுல்தானையும் தங்களையும் சந்தித்து, இறைவனுக்கு நன்றி செலுத்த ஆவலாய் இருக்கிறார்கள். ஆனால், எந்த அறிக்கையையும் விடாமல் இப்படி ஏன் தாங்கள் மந்தணமாக இருக்கவேண்டுமென்று எங்களுக்கொன்றும் புரியவில்லை. ஐயத்தைத் தெளிவித்துக் கொள்ளலாமென்னும் நோக்கத்துடனேயே இங்கு வந்திருக்கிறோம்,” என்று அப் பிரதமர் பேசினார்.

“இதற்காகவா இந்தக் கலகம்? நேற்று மாலை சுல்தானுக்குக் கொஞ்சம் ஜுரம் வந்துவிட்டது. இரவெல்லாம் தூங்கவில்லை. யுத்தத்தில் நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்னும் செய்தியைக் கேள்வியுற்ற பின்னர்த்தான் சற்றுக் கண்ணயர்ந்தார். அவர் நன்றாகத் தூங்கி விழிக்கவேண்டுமென்றும், இடையில் எவரும் எழுப்பி விட்டுவிடக் கூடாதென்றும் ஹக்கீம் வற்புறுத்திக் கூறுகிறார். இதற்கிடையில் தூரான்ஷாவும் இங்கே வந்து சேர்ந்துவிடுவாராகையால், பிற்பகலுக்கு மேல் அரசவை கூட்டலாமென்று நினைக்கிறேன். அதுவரை சற்றுப் பொறுமையுடன் இருக்கலாகாதா?” என்று ஷஜருத்துர் மிக நயமாகப் பேசினார்.

“எனினும், எங்களுக்கு ஆவல் அதிகமாயிருப்பது இயற்கையேயன்றோ? சுல்தானை நேரில் சந்தித்து பல நாட்கள் ஆகிவிட்டதாலேயே இந்த ஆவலை அடக்க முடியவில்லை.”

ஷஜருத்துர் பாடு சங்கடமாகி விட்டது. இனி எவ்வளவு லலிதமாகப் பேசினாலும், அல்லது கோபமாகக் கத்தினாலும் விஷயம் விபரீதத்தில் வந்து முடிவடைந்து விடலாம் என்று அவர் கலங்கினார். எனவே, ஒரு யோசனை புலனாயிற்று : விர்ரென்று கூடாரத்துள் நுழைந்தார். பிரேதத்தை நன்றாய் மூடி அதை ஒரு புறமாய் ஒருக்கணித்துப் படுக்கவைத்து, முகத்தை மட்டும் நன்றாய்த் திறந்து வைத்தார். ஹக்கீமைப் பக்கத்தில் நாற்காலியில் அமர்த்தி, முமீய்யாவின் கீழ்ப்பாகத்தை மறைக்கும்படி குந்தச் செய்தார். ஏனென்றால், எவரும் வந்து பார்த்தால் சுல்தானின் வயிறு சுவாசத்தால் வீங்கி வடியாததைக் கண்டு சந்தேகிக்கக் கூடுமல்லவா ? இப்போது ஹக்கீம் உட்கார வைக்கப்பட்ட நிலைமையில் பிரேதத்தின் மார்பு, வயிறு முதலியன மறைந்திருந்தன.

மீண்டும் சுல்தானா வெளியே வந்தார். “மந்திரிகளே! பிரதானிகளே! சுல்தான் இன்னமும் நித்திரை தெளியாமல் அயர்ந்த தூக்கத்திலேயே இருக்கிறார். எனினும், தாங்களெல்லாரும் அவரைப் பார்க்க விரும்புவதால், ஒவ்வொருவராக இந்தக் கூடாரத்தின் வாயிலெதிரில் நின்று சந்தடி செய்யாமல் பார்த்துவிட்டுப் போகலாம். அதிலும் ஒவ்வொருவராக, ஒருவர்பின் ஒருவராகப் போகவேண்டும். கூட்டம் கூடிச் சந்தடி செய்யாதீர்கள்!” என்று உத்தரவு கொடுத்தார்.

மறுகணமே அப் பிரதானிகள் ‘கியூ’ வரிசையில் ஒருவர் பின் ஒருவராக நகர்ந்தனர். சுல்தானின் முகத்தைப் பார்த்தால் அசல் நித்திரையின் கோலமே தென்பட்டபடியால், ஒருவரும் ஐயமோ அல்லது தப்பெண்ணமோ கொள்ளவில்லை. மேலும், நீண்ட நாள் வியாதியால் பீடிக்கப்பட்டு நிறமும் உடலும் குன்றிப்போய் ஸாலிஹ் மரணம் அடைந்திருந்தால் அல்லவோ முகத்தோற்றம் மாறியிருக்கும்? ஒரே நாள் ஜுரத்தால் உயிரிழந்த காரணத்தாலும், உயிர் நீங்கிய சற்று நேரத்துக்குள்ளே அவ்வுடல் தைலமிடப்பட்டு விட்டபடியாலும், உருவத் தோற்றத்தில் ஒரு சிறு மாறுதலும் ஏற்படவில்லை.

நடுங்கிய உள்ளத்துடன் ஷஜருத்துர் நின்றுகொண்டே இருக்க, அப்பிரதானிகள் ஒவ்வாருவராக அக்கூடாரத்தைக் கடந்தார்கள். அவருக்கு இந்தச் சோதனையிலும் ஆண்டவனருளால் வெற்றியே கிடைத்தது. கடைசிப் பிரமுகரும் சென்ற பின்னர், ஷஜருத்துர் அவர்களை நோக்கி, “பொது மக்களைச் சற்று அமைதியாய் இருக்கச் சொல்லுங்கள். இன்று மாலைக்குள் அரசவை கூடும் என்பதையும் தெரிவியுங்கள்,” என்று கேட்டுக் கொண்டார்.

எல்லாரும் அங்கிருந்து அகன்ற பின்பு ஷஜருத்துர் வானத்தின் பக்கல் தலையை உயர்த்தி, மனத்துக்குள்ளே ஆண்டவனைப் புகழ்ந்துகொண்டார். பிறகு அவசரம் அவசரமாக அங்கிருந்து புறப்பட்டு அரண்மனைக்குள் நுழைந்து, இளவரசர் வருகையை எல்லார்க்கும் அறிவித்தார். தூரான்ஷா வந்தவுடன் அவர் ஹம்மாமில் குளித்துக்கொள்ளட்டும் என்பதற்காகக் குளியல் வசதிகளையும் செய்யச் சொல்லிக் கட்டளையிட்டார்.

இச் சந்தர்ப்பத்தில் முற்கூறிய நிட்டாக்ரிஸ் சம்பவம் ஷஜருத்துர்ருக்கு மீட்டும் நினைவிற்கு வந்தது. எனவே, தூரான்ஷா வந்து நுழையக்கூடிய வழி நெடுகிலும் நம்பிக்கைக்குப் பாத்திரமான பஹ்ரீ மம்லூக்குகளை ஷஜருத்துர் இருமருங்கிலும் நிற்கச் சொல்லிக் கட்டளையிட்டார். இன்று பிற்பகல் கூடப்போகும் அரசவைக்கு அங்கக் காவலராய் நிற்கவேண்டிய பொறுப்பை புர்ஜீ மம்லூக்குகள் ஏற்கவேண்டுமென்னும் உத்தரவைப் பிறப்பித்தார். இதனால் புர்ஜீகளை வேறு விஷயத்தின் பக்கல் கவனத்தைத் திருப்பி விட்டதுடன், தூரான்ஷாவுக்கு ஏதும் இடையூறு ஏற்படக்கூடிய மார்க்கமும் இல்லாமற் போகும்படி செய்து விட்டார். பிறகு சற்று நேரம் அமர்ந்து தீவிரமாக யோசானை செய்து, இனிமேல் நடக்கவேண்டிய நிகழச்சிகளுக்குத் திட்டம் வகுத்துக் கொண்டார்.

இதுவரை மிக்க பக்குவமாகக் காப்பாற்றிய ஸல்தனத்தை இன்னங் கொஞ்ச நேரம் காப்பாற்றுவதிலேதான் எல்லாக் கஷ்டமும் இருக்கிறதென்று உணர்ந்தார். எல்லாவற்றுக்கும் அல்லாஹ் ஒருவனே போதுமானவன் என்னும் திட நம்பிக்கையோடு மீண்டும் எழுந்தார். முன்ஜாக்கிரதையாக எல்லாவற்றையும் சித்தப்படுத்திக் கொண்டார். தமக்கோ, தம் புத்திரருக்கோ எவ்வித ஆபத்தும் நிகழ முடியாதபடி நிலைமைகளைச் சீர்திருத்திக் கொண்டார். உடைகளை மாற்றிக் கொண்டு, கைகால் முகத்தைக் கழுவிக்கொண்டு, மீட்டும் கிழக்குவாயில் நோக்கி விரைந்தார்.

ஷ­ஜருத்துர் அங்கே வந்து சேர்வதற்கும், தூரான்ஷாவும் அவருடைய பரிவாரங்களும் பேராரவாரத்துடன் கோட்டைக்குள் நுழைவதற்கும் சரியாயிருந்தது.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<அத்தியாயம் 45>> <<அத்தியாயம் 47>>

<<ஷஜருத்துர் முகப்பு>>

Related Articles

Leave a Comment