Slave Trade

ஆடு மாடுகளைப் போலே மனிதரும் விற்கப்பட்டனர், அல்லது வாங்கப்பட்டனர் என்பது இந்த இருபதாம் நூற்றாண்டில் வாழும் நமக்கு வியப்பான விஷயமாகக்

காணப்பட்டாலும், சென்ற நூற்றாண்டின் மத்திமம் வரையில் கூட அடிமை வியாபாரம் இக்குவலயத்தில் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டிருந்தது என்பதையும், அந்த வர்த்தகத்தை எல்லா நாட்டினரும் எல்லா நாகரிகத்தினரும் ஆதரித்தே வந்தார்கள் என்பதையும் சரித்திரம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. அதிலும், பண்டைக்கால நாகரிகம் படைக்கப்பெற்ற எகிப்து தேசத்தில் அடிமை வர்த்தகமென்பது சென்ற ஆறாயிரம் அல்லது ஏழாயிரம் ஆண்டுகளாகவே பரம்பரையாக நடந்து வந்த வியாபாரமாகும். எனவே, ஷஜருத்துர்ரின் வளர்ப்புத் தந்தை யூசுபிடம் அஜீஜ் அம்மாதிரி கூறியதில் அதிசயிக்கத்தக்க அம்சமேதும் இல்லை என்றறிக. என்றாலும், அந்த ஆலோசனையைச் செவியேற்ற அவர் பெரிதும் இடிந்துபோனார்.

வேறு என்ன செய்வது? ஷஜரோ, போய்த்தான் தீர்வதென்கிறாள்; யூசுபுக்கோ, வேறு மாற்று யோசனையொன்றும் புலனாகவில்லை. எனவே, அன்று மாலை வீடு திரும்பியதும் முதலில் வந்த கோபம் சிறுகச்சிறுக மாறி, அஜீஜ் சொல்கிறபடி கேட்டுத்தான் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியுமேயன்றி, வேறொன்றும் செய்வதற்கில்லை என்னும் முடிவை அவர் எட்டிவிட்டார். அன்றிரவு முழுதும் திரும்பத்திரும்ப ஆலோசனை செய்தார். ஷஜரையே கேட்டுப்பார்த்து விடுவதென்று இறுதியில் முடிவுகட்டினார்.

பொழுதும் புலர்ந்தது; அவர் கண்ணும் விடிந்தது. காலைக் கடன்களை முடித்துக்கொண்டு, ஷஜரைத் தம் அருகினில் அழைத்தார் யூசுப்.

“ஏ ஷஜருத்துர்! யோசனை செய்தாயா? என்ன முடிவு செய்திருக்கிறாய்? வெளியேறித்தான் தீரவேண்டுமென்னும் பிடிவாதக் குணத்தை விட்டுவிட்டாயா?” என்று மிக லலிதமாக வினவினார்.

“அபூ! ஏற்கெனவே நாம் முடிவு செய்துவிட்ட விஷயத்தைப் பற்றி மீண்டுமா கேட்கிறீர்கள்? என் தீர்க்கமான இறுதிக் கோரிக்கையைத்தான் நான் நேற்றே தங்களுக்கு நன்கு விளக்கிக் காண்பித்திருக்கிறேனே. தாங்களல்லவோ ஏதோ யோசித்து, முடிவு சொல்வதாகச் சொன்னீர்கள்?” என்று வைரத்தினும் கடிய வைராக்கிய சித்தத்தோடு சற்றும் தட்டுத் தடங்கலின்றிப் பளீரென்று பதில் கேள்விகளை அடுக்கினாள்.

“ஏதோ என் இறுதி முயற்சியாக இப்படிச் சொல்லி உன்னை நிறுத்திக் கொள்ளலாம் என்பதற்காக நான் இதைக் கூறவில்லை, ஷஜர்! உனக்கே எண்ணம் மாறியிருந்தால், அதை நான் ஆமோதிக்கக் காத்திருக்கிறேன் என்பதை உனக்குத் தெரிவிக்கவே விரும்பினேன். சரி! எனக்கு அறவே விருப்பமில்லாத ஒன்றை நீ விரும்புவதாயிருந்தும், ஆசையைக் கெடுக்கக்கூடாதென்னும் ஒரே காரணத்துக்காக நான் இணங்குகிறேன். ஆனால், உன் எதிர்காலம் இருள் நிறைந்த பாதாளப்படுகுழியாய்ப் போய்முடியக் கூடாதே என்னும் வருத்தமே என்னை வாட்டுகிறது.”

“தலைவிதியைத் தவிர்ப்பது எவரால் முடியும், அபூ! என் எதிர்காலம், நீங்கள் கூறுகிறபடி, நான் இங்கிருக்கையிலேயே இருள் நிறைந்த பாதாளப்படுகுழியாய் வந்து முடிவதாக வைத்துக் கொள்வோம்; அப்போது அதைத் தாங்கள் தடுத்து நிறுத்த இயலுமோ? அல்லது இங்கிருந்து யான் வெளியேறிய பின்னர் மிக்க ஒளி நிறைந்த மேலான உயர்பதவி எனக்கு வந்து சேர்வதாக வைத்துக் கொள்வோம்; அப்போது அதை வேண்டாமென்று என்னால் உதைத்துத் தள்ளத்தான இயலுமோ? எல்லாம் விதியின் விசித்திரமன்றோ? ஆண்டவன் நாடிய வண்ணமே அனைத்தும் நடைபெறும்.”

‘மிக்க ஒளி நிறைந்த மேலான உயர்பதவி’ என்னும் வார்த்தைகள் ஷஜரின் உள்ளத்திலிருந்து அதிக கம்பீரமாக வெளிவந்ததைக் கேட்ட யூசுபுக்கு நேற்று அஜீஜ் கூறிய சாமுத்திரிகா லக்ஷண வித்தையின் நினைவு வந்தது. தமதெதிரில் ஷஜருத்துர் ஓர் உயரிய அரியாசனத்தின்மீது முடிசூடிய மகுடராணியாக வீற்றிருப்பதே போன்ற உவமத் தோற்றம் காட்சியளிப்பதாக அவர் நினைத்துக் கொண்டார். கண்களை மூடிக்கொண்டு அந்தக் கற்பனையை வெகுதூரம் கொண்டு சென்றார். ஷஜர் அவரையே அதிக ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“சரி! அப்படியானால், நீ அரண்மனைக்குச் செல்கிறாயா?” என்று சட்டென்று கேட்டார் யூசுப்.

“அரண்மனைக்கா! எந்த அரண்மனைக்கு?”

“ஏன், இந்தக் காஹிராவிலுள்ள அரண்மனைக்குத்தான். நம் சுல்தானுல் மலிக்குல் காமில் வீற்றிருக்கும் அரண்மனைக்குத்தான்.”

“நம்முடைய சுல்தானின் அரண்மனைக்கா! நானா!”… அவள் ஆச்சரிய மேலீட்டால் தன் குவளைக் கண்களை அகல விழித்தாள்.

“சந்தேகிக்காதே! நிஜமாகத்தான் சொல்லுகிறேன்.” இந்த வார்த்தைகள் அழுத்தமாகவும் அதிக அமைதியாகவும் யூசுபின் வாயில் பிறந்தன.

“என்னை அங்கே யார் ஏற்றுக்கொள்வார்? அல்லது அங்கே எனக்கு எவரைத் தெரியும்? நீங்கள் சொல்வதொன்றும் எனக்கு விளங்க வில்லையே!”

“ஆம். உனக்கும் அங்குள்ளவர் எவரையும் தெரியாது; அங்குள்ளவர் எவருக்கும் உன்னைத் தெரியாது. ஆனாலும், உனது எதிர்காலமெல்லாம் அங்கேதான் இருக்கிறது.”

ஷஜருத்துர்ருக்கு ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியமாக இருந்தது; அதிசயத்துக்கு மேல் அதிசயமாக இருந்தது. அவள் துள்ளிக் குதிக்காவிட்டாலும், அவளது உள்ளம் துடித்துப் பாய்ந்தது. அரசர் வாழும் அரண்மனை என்றால், இலேசா! அதிலும், கீழ்நாட்டு ஸுல்தானது அரண்மனை!

“ஷஜர்! நேற்று நான் என் நண்பர் ஒருவருடன் உன்னைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். இங்குக்கூட அடிக்கடி வருவாரே, அதே அஜீஜிடம்தான் கலந்தாலோசித்தேன். அவர்தாம் இந்த யோசனையை வழங்கினார். உனக்கு இதில் சம்மதந்தானே?”

அவள் பதில்கூற முடியாமல், அவ்வளவு அதிகமான குதூகலம் அவளது தொண்டையை அடைத்துக் கொண்டுவிட்டது.

“அஜீஜ்கூடச் சொல்கிறார், நீ இந்த ஸல்தனத்துக்கே ராணியாகி விடுவாயென்று! நானும் அதை இப்போது நம்புகிறேன்.”

“ராணியா! நானா? ஷஜருத்துர் மி்ஸ்ரின் ஸுல்தானாவா! அபூ, அபூ! நான் ஸுல்தானாவாகவா உயரப்போகிறேன்! இந்த மிஸ்ரின் ஸல்தனத்துக்கே ராணியாகவா போகப்போகிறேன்!”… இதுவரை பொறுமையாக இருந்த ஷஜருத்துர் பேராச்சரியத்தின் பெருமகிழ்ச்சியால் நிஜமாகவே துள்ளிக் குதித்தாள்; தாவித்துடித்தாள்.

“அப்படியானால், இப்போதே என்னை அங்குக் கொண்டுபோய் விட்டுவிடுங்கள். எனக்கு அதில் முற்றும் சம்மதமே!” என்று தன்னையறியாமலே அவள் துடிதுடித்தாள்.

யூசுப் பெருமூச்செறிந்தார். வாழ்க்கையின் தலைவாசலைக்கூட இன்னம் மிதிக்காத ஒரு சிறுமி, புள்ளிமானைப்போல் துள்ளிக் குதிப்பது பார்க்கப் பரவசமூட்டுவதாக இருந்தும், அவள் தன்னுடைய விடாப் பிடிவாதத்தில் வெற்றிபெற்றுத் தம்மைப் பிரியப்போகிறாளே என்னும் ஏக்கமே அவரை அதிகம் வாட்டிற்று. ஆனால், அதையொன்றும் அவள் பொருட்படுத்தவில்லை. பேழையைத் திறந்து மிகவுயர்ந்த ஆடைகளையும், விலைமதிப்பேறிய ஆபரணங்களையும் எடுத்துத் தன் மீது பொருத்திக் கொண்டாள். அவளுக்கு இந்த உலகத்தில் இருப்பதாகவே தோன்றவில்லை. ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தாள். எல்லாம் மானஸ உலகம். எல்லாம் மனோராஜ்யம்.

கோடி சூரிய பிரகாச தேஜசுடன் திகழும் ரூபலாவண்ய சிருங்கார அலங்காரத்துடன் யூசுப் முன்வந்து ஷஜர் நின்றாள். அவளைக் கண்டதும், அவர் அப்படியே மெய் சிலிர்த்துப் போனார்.

“எதற்கு இந்த அலங்கார மெல்லாம், ஷஜர்?” என்று கேட்டார்.

“அரண்மனைக்குப் போக!”

அவருக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

“அதற்கேன் இந்தச் சிங்காரிப்பெல்லாம்?”

“ஐயூபி சுல்தான் வாழும் அரண்மனைக்குள் பின்னே பரதேசியைப் போலவா நுழைய வேண்டுமென்கிறீர்கள்?” என்று ஷஜர் கர்வத்தோடு கடாவினாள்.

“நீ என்ன, அங்கே இருக்கிற சுல்தானின் மைந்தரை மணம் புரிந்து கொள்ளப்போவதாக நினைத்துக் கொண்டிருக்கிறாயோ?” என்று யூசுப் சிறிது கடுமையாகக் கேட்டார்.

“அரண்மனைக்குள்ளே நுழைந்தால், சுல்தானின் மைந்தரை நான் மணக்காமலா போகப்போகிறேன்?”

இந்த எதிர்பாராத துடுக்கான பதிலைக் கேட்டதும் யூசுபுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அப்படியே திக்பிரமை பிடித்தாற்போலே திருதிருவென்று விழித்தார்.

“அபூ! ஏன் இப்படி வெறிக்கப் பார்க்கிறீர்கள்? புறப்படுங்கள் சீக்கிரம்! என்னைக் கொண்டுபோய் அங்கே சேர்ப்பியுங்கள். எல்லாவற்றுக்கும் அல்லாஹ் இருக்கிறான்; பார்த்துக்கொள்வோம்! அவன் தான் நாடியவரை நாடாளச் செய்யவும் போதும்” என்று அடுக்கினாள்.

இளங்கன்று பயமறியாது என்னும் உண்மையை யூசுப் நன்கறிந்தே இருந்தார். எனினும், இவள் பேசுகிற பேச்சைக் கேட்டதும், அவர் உடல் நடுங்கிவிட்டது. சொல்லுகிறபடி இவள் செய்துவிட்டாலும், அதிசயிப்பதற்கில்லை என்று வியப்பது போலிருந்தது, அவர் முகத்தோற்றம்.

“கண்மணி! உன்னை நான் பிரிய நேர்ந்ததற்காக வருந்தவில்லை. ஆனால், உன் வைராக்கிய சித்தமுள்ள நெஞ்சுறுதியான வார்த்தைகளை நான் இனி எங்கே கேட்கப் போகிறேன் என்பதைத்தான் என்னால் சமாதானப்படுத்திக் கொள்ள இயலவில்லை.”

அவர் அப்பாலொன்றும் பேசவில்லை. அழுதுகொண்டிருந்தார்.

ஷஜருத்துர் சற்றுநேரம் பேசாதிருந்தாள். பின்னர் அவரையண்மி மிகவும் நயமான முறையில் சமாதானப்படுத்தினாள். ஷஜருத்துர் அந்தச் சிறுபிராயத்திலேயே அவ்வளவு சிருங்காரமான குணம் படைத்தவளாய் இருந்தமையால், ஒரு நொடிப்பொழுதில் எப்படிப்பட்ட வன்னெஞ்சையும் தன் மனம்போலே திருப்பிவிடக்கூடிய சக்தியைப் பெற்றிருந்தாள். அஃதாவது, தான் எதைச் சாதிக்க வேண்டுமென்று நினைத்தாளோ, அதை ஒரே வைராக்ய சித்தத்துடன் நிறைவேற்றிக் கொண்டாள். அப்படிச் சாதித்துக் கொள்வதால் எதிரியின் மனம் எத்துணைப் புண்பட்டு முறுக்கிக் கொண்டிருந்தாலும், அதையும் தன் சாகசச் செய்கைகளால் மாற்றிவிடக் கூடியவளாயும் இருந்தாள். எனவே, யூசுபைப் பிரிவதென்ற வைராக்யம் பெற்ற அவள் அதில் வெற்றியைப் பெற்றுக் கொண்ட பின்னர், அதன் காரணமாக அவர் மனமுடைகிறார் என்பதைத் தெரிந்து, அவருக்கு மிக சாதுர்யத்துடன் ஆறுதல் கூற முற்பட்டாள்.

“அபூ! தாங்கள் இவ்வளவெல்லாம் மனமுடைந்து போவதற்காகவா என்னை இத்தனை நாட்களாக ஆதரித்து வந்தீர்கள்? என் வாழ்க்கையென்னும் அலைகடற் சுழலில் தங்களைப் போன்ற ஒரு திட்டில் நான் சில நாட்கள் தங்கியிருந்தேன். ஆனால், அதையே காரணமாக வைத்துக்கொண்டு, யான் இங்கேயே தங்கிவிட முடியுமா? நீங்களே என்னை வெருட்டினாலல்லவோ நான் வருந்த வேண்டும்? ஆனால், நானாகவே தங்களைவிட்டுப் போகிறேனென்றால், அதுவும் தங்கள் நன்மையைக் கருதியே போகிறேனென்றால், அதற்காக ஏன் வருந்துகிறீர்கள்? தாங்கள் எவ்வளவோ அன்புடன் வளர்த்த தங்கள் தங்கை பர்கானா உங்களை மட்டும் விட்டுப்போகாமல் இந்த உலகத்தையே விட்டுப் போய்விடவில்லையா? அதற்காக நீங்கள் மனமுடைந்தா போனீர்கள்? இல்லையே! என்மீதுள்ள பாசத்தினால் பர்கானாவைத் தாங்கள் மறந்துவிட்டதாகக் கூறுவீர்கள். ஒரு வகையில் அது வாஸ்தவந்தான். ஆனால், நான் இங்கிருந்து போன பின்னர்த் தங்கள் கருத்துக்கிசைந்த பெண்ணொருத்தி மனைவியாக வந்து நுழைந்துவிட்டால், அப்போது அவள் மீது கொள்ளும் பாசத்தால் என்னையே மறந்துவிட மாட்டீர்களா?”

கடைசி வாக்கியத்தைக் கேட்டதும், யூசுப் அவளை அன்போடு பார்த்தார். தன்னிடமிருந்து பதில் எதையும் அவள் எதிர்பார்க்காமலே பேசிக்கொண்டு போகும்போது, அவளைத் தடுத்து நிறுத்த அவர் விரும்பவில்லை. அவள் மேலும் மேலும் விசித்திரமாகப் பேசிக்கொண்டே போனாள். ஆனால், அவர் செவிகளில் ஒன்றும் நுழையவில்லை. அவர் மூளை மிக வேகமாய் ஏதேதோ சிந்தித்துக்கொண்டிருந்தது.

“ஷஜர்! உன்னை நான் அரண்மனைக்கு அழைத்துப்போக நிச்சயித்துவிட்டேன். ஆனால், நீ அங்கே போனால், உன் அந்தஸ்து என்னாகும் தெரியுமா? நீ நினைக்கிறபடி அங்கே வாழ முடியாதே!”

“அதைப்பற்றி நீங்கள் கவலைப்படவே தேவையில்லை. என்னை எத்தகைய அந்தஸ்தில் வேண்டுமானாலும் அங்குக் கொண்டு போய்ச்சேருங்கள். எனக்கேற்ற வாழ்க்கையை நான் சுயமே அமைத்துக் கொள்வேன்.”

“என்ன? ஓர் அடிமையாக நீ அமீர் ஒருவரால் விலை கொடுத்து வாங்கப்பட்டால, அப்போது என்ன செய்வாய்?” என்று ஒரு போடுபோட்டார் யூசுப்.

ஷஜர் திகைத்துவிட்டாள்.

“அடிமையாகவா?” என்று குலைநடுங்குங் குரலில் கேட்டாள்.

“ஆம். வேறு எந்தவழியாலும் நீ அரண்மனைக் கோட்டை வாயிலுக்குள் நுழையவே முடியாதே! எனக்கு அரசாங்கத்தில் ஏதாவது உயர்ந்த உத்தியோகமிருந்தால், உன்னைக் கண்ணியமான நிலையில் நான் அங்குக் கொண்டுபோய்ச் சேர்க்கலாம். ஆனால், நான் சாதாரண வியாபாரியாய் இருக்கும்போது, அதிலும் நீ அரண்மனைக்குள்ளே குடிபுகுந்துவிட ஆசைப்படும்போது, உன்னை நான் எப்படி அங்கே கொண்டு போய்ச் சேர்க்க முடியும்? நான் வர்த்தகனென்ற ஹோதாவில் உன்னை ஒரு விற்பனைப் பொருளாக விலை கூறினால்தான் உன் ஆசை நிறைவேறும்; இல்லையென்றால், நீ இங்கேயே இருக்கவேண்டியதாகத்தான் போய்முடியும்.”

மின்வெட்டும் வேகத்தில் அவள் மூளை வேலைசெய்தது. நிமிர்ந்து நின்றாள். ஆயுள் முழுதும் இந்த வீட்டில் ஓர் அடிமையைப்போல் சதா வாழ்வதைவிட, அரண்மனைக்குள் நுழைந்து ஏன் ஓர் அரச அடிமையாகவே வாழக்கூடாதென்று யோசித்தாள்.

“அபூ! விற்பனைக்குத் தயாராகுங்கள். நான் விற்கப்படுவதிலோ, அடிமையாகப் போவதிலோ வருத்தம் அடையவில்லை. வீரத் துருக்கி உதிரம் என் உடம்பில் ஓடுகிறது. என்னை எவர் விலை கொடுத்து வாங்கினாலும், என் ஆவியை மட்டும் எவரும் அடிமைப்படுத்திவிட இயலாது. புறப்படுங்கள்!” என்று தீரத்துடன் கூறினாள் நம் ஷஜர்.

அந்நேரத்தில் அஜீஜ் அங்கே வந்து சேர்ந்தார். ஷஜரின் சிங்காரிப்பும், யூசுபும் அவளும் பெற்றிருந்த முகத்தோற்றங்களும் அந்த ஸாமுத்தரிகா லக்ஷண வித்தைகற்ற விற்பன்னருக்கு விஷயத்தை விளக்கிக்காட்டின. அவ்விருவரையும் அவர் மாறிமாறிப் பார்த்தார். என்ன நடந்திருக்குமென்பதை ஒருவாறு ஊகித்துக்கொண்டார்.

“அரண்மனைக்குப் புறப்பட்டுக் கொண்டேயிருக்கிறீர்கள் போலும்?” என்று அஜீஜ் அவர்களைப் பார்த்துக் கேட்டார்.

உடனே ஷஜர் அழுத்தந் திருத்தமாக “ஆமாம்!” என்று பதில் கூறினாள்.

“அப்படியானால், நீ விற்பனைக்கு இணங்கிவிட்டாயோ?” என்று யூசுப் வினவினார். அவள் அதற்கும் ஆமென்று தலையசைத்தாள்.

(தொடரும்)

மறுபதிப்பு: சமரசம் – 1-15 நவம்பர் 2011

<<அத்தியாயம் 5>>     <<அத்தியாயம் 7>>

<<ஷஜருத்துர் முகப்பு>>

Related Articles

Leave a Comment