தூரான்ஷா குதிரையின் கடிவாளத்தை இழுத்துப் பிடித்து நிறுத்தி, ஒரே பாய்ச்சலில் தரையிற் குதித்தார். எதிரே நின்ற சிற்றன்னை ஷஜருத்துர்ரை நோக்கி அதே மூச்சில் விரைந்தார்; சுல்தானாவின் முகத்தை ஏறெடுத்துப் பார்த்தார். அக் கண்களில் அவல நீர் நிரம்பியிருந்தது!

“தாயே! ஏன் அழுகின்றீர்கள்? அபூ எங்கே? அவர் சுகமாய் இருக்கின்றாரா?”

ஷஜருத்துர் பறக்கப்பறக்கத் தம்மிரு கண்களையும் துடைத்துக் கொண்டார்.

“கண்மணி! நான் அவலக் கண்ணீர் வடிக்கவில்லை. நின்னைப் பிரிந்திருந்த சோகத்தாலும், மீண்டும் நின்னைக் காணும் பாக்கியம் கிடைத்தமையாலும் என்னை அறியாமலே ஆனந்தக் கண்ணீர் பொழிகின்றது. இன்று உன்னை இவ்விடத்தில் நின்று மார்புறத்தழுவி வரவேற்க உன் தாயார் இருக்க வில்லையே என்றுதான் நினைந்து வருந்துகின்றேன்,” என்று பிரியம் நிரம்பிய மொழிகளுடன் ஷஜருத்துர் உபசரித்தார்.

“என் தாயின் ஸ்தானத்திலே இருந்துகொண்டு, அவரினும் அதிகமான கரிசனத்துடனே என்னை நேசிக்கும் தாங்கள் இருக்கிற வரையில் எனக்குக் கவலை ஏது? அபூ எங்கே அம்மா?”

“ஏன் நீ அவசரப்படுகிறாய்? யுத்தத்தால் அவர் களைத்துப் போய் நித்திரை செய்துகொண்டிருக்கிறார். நீ போய் இப்போதே குளித்துவிட்டு, உணவுட்கொண்டு, சற்றே சிரம பரிகாரம் செய்துகொள். அதற்குள்ளே அவரும் எழுந்துவிடுவார். அரசவை கூட்ட வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. காலதாமதம் செய்ய வேண்டாம்!”

தூரான்ஷாவுக்கு இந்தப் பதில் மிகுந்த ஏமாற்றமாய் இருந்தது. சுற்றுமுற்றும் பார்த்தார். எல்லார் முகத்திலும் நியாயமாய் ஜொலிக்க வேண்டிய தேஜஸைக் காணோம்.

“தந்தைக்கு உடம்பு எப்படி இருக்கிறதம்மா? நான் முதலில் அவரைப் போய்ப் பார்க்க வேண்டுமே!”

“அவர் உடம்புக்கு ஒன்றுமில்லை; சுகமாக நித்திரை செய்துகொண்டிருக்கிறார். முஹம்மத் ஷாவைப் பழிதீர்த்து விட்டு வந்திருக்கும் நீ மிகவும் சோர்வுற்றிருக்கின்றாய். முதலில் சிரமபரிகாரம் செய்துகொள். அப்பால் வேண்டிய மட்டும் நாமெல்லாரும் அளவளாவிப் பேசலாம்,” என்று ஷஜருத்துர் பேசிக் கோண்டே அரண்மனை வாயிலின் பக்கல் நடையைக் கட்டினார்.

தூரான்ஷாவும் சிற்றன்னையுடனே வார்த்தையாடிய வண்ணம் நடந்தார். ஷஜருத்துர் அஞ்சிய வண்ணம் அசம்பவமொன்றும் அங்கு நிகழாமல், இருவரும் பத்திரமாகவே அரண்மனையுள் நுழைந்தனர்.

“அம்மா! தந்தையை யான் ஒருமுறையாவது தரிசிக்க ஆவலுறுகின்றேன். அவர் எந்த அறையில் படுத்திருக்கிறார்?” என்று கெஞ்சினார் இளவரசர்.

“இந்த அரண்மனையின் காற்று அவருக்கு இதமாய் இல்லையென்று ஹக்கீம் கூறியபடியால், வெளியே டேராவில் காற்றோட்டமான இடத்தில் வைத்து, அவர் சிகிச்சை புரிகின்றார். நீ முதலில் குளியலை முடித்துக்கொள்.”

தூரான்ஷா இதுபோது நிஜமாகவே பொறுமையை இழந்து விட்டார். தம் சிற்றன்னையின் வாயில் பிறக்கும் சொற்கள் கபடம் நிறைந்தவையாகவே அவருக்குப் புலப்பட்டன. கோபம் பொத்துக் கொண்டது.

“எல்லாம் எனக்குக் குளித்துக் கொள்ளத் தெரியும்! இப்போது என் தந்தையைப் பார்க்காமல் அடுத்த வேலை எதையும் செய்யப் போவதில்லை. என்னை வீணே சோதிக்காதீர்கள்” என்று இளவரசர் படபடவென்று கத்தினார்.

மின்னல் வேகத்தில் ஷஜருத்துர்ரின் கண்முன்னே பழைய சம்பவமொன்று வந்து நின்றது : சென்ற மாதம் ஷாமிலிருந்து ஸாலிஹ் திரும்பிவந்த பின்னர் அவர் ஷஜருத்துர்ருடனே கொஞ்சிக் குலவிக்கொண்டிருந்த வேளையில் தூரான்ஷாவைப்பற்றி சுல்தான் விவரித்தனவெல்லாம் நினைவுக்கு வந்தன. அதிலும் சிறப்பாக, தூரான்ஷா ஸாலிஹிடம் இறுதியாகக் கூறிய வார்த்தைகளைப்பற்றி அவர் தம் மனைவியிடம் மனங்கனிந்து செப்பிய மொழிகள் ஞாபகத்துக்கு வந்தன.

“என்னருங் குமாரரே! உம்மை ஏன் நான் சோதிக்கிறேன்? ஆண்டவனேதான் நம்மையெல்லாம் சோதிக்கிறானே! நீர் இப்போது தூர தேசத்திலிருந்து திரும்பி வந்திருப்பதால், முதலிலே ஹம்மாமுக்குச் சென்று வருதல் சாலச் சிறந்ததென்று நான் நினைக்கிறேன். ஆண்டவனே நம்மனைவரையும் காத்து ரக்ஷிப்பானாக!”

பிறகு அவர் நேரங் கடத்தவில்லை. ஹம்மாமுக்குள் நுழைந்து வெந்நீரில் நன்றாய்க் குளித்துக் கொண்டார். அவர் குளித்துக் கரையேறு முன்னே நல்ல உண்டி வகைகள் சித்தஞ் செய்து வைக்கப்பட்டன. வந்த களைப்பாலும் உடலசதியாலும் அவர் வயிறார உண்டார்.

ஷஜருத்துர் சென்ற பதினாறு அல்லது பதினேழு நாட்களாக வெகு சாமர்த்தியத்துடன் நடித்துவந்த நாடகத்தின் இறுதி அங்கம் இவ்வளவுடனே பூர்த்தியாயிற்று.

ஷஜருத்துர் சென்ற பதினாறு அல்லது பதினேழு நாட்களாக வெகு சாமர்த்தியத்துடன் நடித்துவந்த நாடகத்தின் இறுதி அங்கம் இவ்வளவுடனே பூர்த்தியாயிற்று. நாடகம் நன்கு நடைபெற்றதுடன், போட்ட திட்டங்கள் அனைத்தும் ஒரு சிறிதுமே தவறின்றி இறைவனருளால் இனிது நிறைவேறி முடிந்தன. இனி ஒரேயொரு கடைசிக் காட்சி மட்டுமே எஞ்சியிருந்தது. அக் காட்சியும் இப்பொழுது நிகழ ஆரம்பித்தது:-

கிழக்குவாயிற் கூடாரத்தை விட்டு இறுதியாக வெளியேறு முன்னே, சுல்தானின் மூமிய்யாவண்டை நின்றுகொண்டிருந்த இரு அடிமைகளுக்கும் ஷஜருத்துர் கட்டளையிட்டிருந்த வண்ணம் அடுத்த நிகழ்ச்சி தொடர்ந்தது:

தூரான்ஷா உணவருந்தி முடிந்ததும், அங்கேயே ஆவலுடன் அமர்ந்திருந்த ஷஜருத்துர் சற்றுப் பொறுமையிழந்தவராகக் காணப்பட்டார். அந்தச் சரியான சந்தர்ப்பத்திலே அவ்விரு அலிகளுள் ஒருவன் தலைதெறிக்க ஓடிவந்து, மேல் மூச்சு வாங்க வாங்கத் திணறிக்கொண்டு நின்றான். இதனையே எதிர்பார்த் திருந்த ஷஜருத்துர் தாம் நடிக்க வேண்டிய பாகத்தை ஆரம்பித்தார் :

“ஏன் இந்த ஓட்டம் ஓடிவருகின்றாய்? என்ன வந்து விட்டது?” என்று படபடப்புடன் ஷஜர் வினவலுற்றார்.

“யா, ஸாஹிபத்தல் ஜலாலத்தில் மலிக்கா! சுல்தானுக்குத் திடீரென்று காய்ச்சல் அதிகரித்துவிட்டது. அவர் ஏதேதோ பினாத்துகிறார். ஹக்கீம்இதை இக்கணமே தங்களிடம் தெரிவிக்கச் சொன்னபடியால், இப்படி அலறியடித்து ஓடி வருகின்றேன்,” என்று அவசரமாக உளறினான்.

“என்ன?” என்று ஷஜரும் தூரானும் ஏக குரலில் எழுந்து பதஷ்டத்துடன் கேட்டனர்.

மறுவினாடி வரைகூட அவ்விருவரும் தாமதிக்கவில்லை; இருகாற் பாய்ச்சலில் கிழக்கு வாயிலை நோக்கி ஓடினார்கள். இதுதான் சமயமென்று அந்த அலி, கூண்டிலிருந்து பறக்கும் காடைபோல், அங்கிருந்து நழுவியோடி விட்டான். அவன் இத்தனை நாட்களாக வேண்டித் தவங் கிடந்த விடுதலை இதுபோது கிடைத்துவிட்டதல்லவா?

நாலே பாய்ச்சலில் சுல்தானாவும் தூரான்ஷாவும் அந்தக் கூடாரத்துள்ளே தாவினார்கள். மலிக்குஸ் ஸாலிஹின் பிரேதம் கிப்லா நோக்கி நீட்டி வைக்கப்பட்டிருந்ததையும், பக்கத்தில் ஹக்கீம் வெளுத்துப்போன முகத்துடனே கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தையும், மற்றோர் அலி நின்ற வண்ணம் அழுது கொண்டிருந்தையும் அவர்கள் கண்ணுற்றார்கள்.

“நாதா! என்ன நேர்ந்து விட்டது!” என்று அலறித் துடித்துக்கொண்டே ஷஜருத்துர் வீறிட்டலறினார்.

“அபூ! எங்களை விட்டுவிட்டா போய் விட்டீர்கள்?” என்று பொங்கிப் புலம்பினார் தூரான்ஷா.

“அந்தோ! இவ்வளவு திடுமென்று மலக்கல் மெளத் தங்கள் இன்னுயிரைப் பறித்து விடுவாரென்பதை யான் சற்றுமே எதிர்பார்க்கவில்லையே!” என்று பிரலாபித்தார் ஹக்கீம்.

கூடாரத்துள் அவதியுடன் ஓடிய சுல்தானாவையும் இளவரசரையும் பார்த்த காவலர்களும், மம்லூக்குகளும், ஏனைச் சிப்பந்திகளும் அவர்களுக்குப் பின்னேயே ஓடிவந்தார்களாகையால், எதிரி குண்டு வீசியவுடனே திரள் திரளான ஜனங்கள் ஒருவர்மீது ஒருவர் அடித்து மோதிக் கொண்டு நெருக்கிப் பிடித்துப் பாதுகாவலுள்ள அறைக்குள்ளே ஏக காலத்தில் நுழைவதைப்போல, அந்தச் சிறு கூடாரத்துள்ளே நுழைந்து விட்டார்கள்.

மின்சார அலையாவது மெதுவாய்ப் பாயும்; ஆனால், சுல்தான் மரணமடைந்து விட்டாரென்னும் செய்தி அதைவிட விரைவாக அரண்மனையெங்கும் பரவி விட்டது. பலரால் இச் செய்தியை நம்ப முடியவில்லை; இன்னம் பலருக்குத் தங்கள் காதுகளின் கேட்கும் சக்தி மீது சந்தேகம் பிறந்தது; அநேகர் அச் செய்தியைக் கேட்டதும், நிலைத்து நின்று விட்டார்கள்; வேறு சிலர், “சுல்தான் மரணமடைந்து விட்டாரா? எந்த சுல்தான்? நம்முடைய சுல்தானா? மரணமடைந்து விட்டாரா! என்ன ஆச்சரியம்!” என்று வாய்பிளந்தார்கள். சிறிது நேரத்துக்குள்ளே எல்லா முஸ்லிம்களின் வாயிலும், “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்,” என்னும் வேத வார்த்தைகளே முணு முணுத்து முழங்கப் பட்டன.

கூடாரத்துள்ளே சற்று நாம் எட்டிப் பார்ப்போம்:

இத்தனை நாட்களாக மிகவும் சிரமத்துடன் அமுக்கி, அழுத்தி, அடைத்து வைத்திருந்த பெருந் துக்கத்தின் முழுச் சக்தியும் ஷஜருத்துர்ரின் ஹிருதய கமலத்திலிருந்து இப்போது பொங்கியெழுந்து வழியத் துவக்கிற்று. தாம் நடிக்க வேண்டியவற்றை எல்லாம் நன்கு நடித்து முடித்து விட்ட படியாலும், போட்ட திட்டங்களை எல்லாம் ஒழுங்காய் நிறைவேற்றிக் கொண்டபடியாலும், எஞ்சி நின்ற ஒரே அம்சமான இந்த அவலக் கோலம் இப்போது ஆரம்பித்தது.

அணைக்கட்டில் முழு நீர்மட்ட அளவுக்குத் தண்ணீரைத் தேக்கி விட்டுத் திடீரென்று மதகைத் திறந்தால் அஃது எப்படியிருக்குமோ, அப்படி இருந்தது, ஷஜருத்துர் கதறியழுத காட்சி! ஷஜருத்துர் அழுதார்; அரற்றினார்; புலம்பினார். துடியாய்த் துடித்தார்; அழுது அழுது சலித்தார். விம்மினார்; வெதும்பினார்; பாங்கினார்; பொருமினார். ஏ, கொழுந்தா வென்றார், மிஸ்ரியர் தங் கோவே என்றார், சோர்ந்தார், மேன்மேலும் அரற்றத் தொடங்கினார். சுல்தானின் பிரேதத்தைப் பார்த்து மக்கள் கண்கலங்காவிட்டாலும், ஷஜருத்துர்ரின் அவல நிலையைக் கண்டு மனம் நைந்து வெதும்பினர்.

“மங்கையழலும் வானாட்டு மயில்கள் அழுதார் மழவிடையோன், பங்கின் உறையுங் குயிலழுதாள் பதும மலர்மேல் மா(து) அழுதாள், கங்கை யழுதாள் நாமடந்தை யழுதாள் கமலத் தடங்கண்ணன், தங்கை யழுதாள் இரங்காத அரக்கிமாரும் தளர்ந்தழுதார்,” என்று கம்ப நாடன் வருணித்திருப்பதேபோல், தமது ஆயுளிலேயே ஒரு தடவை கூடக் கண்ணீர் சிந்தியறியாத கடின உள்ளம் படைத்த பலர்கூட ஷஜருத்துர்ரின் நிலையைக் கண்டு, அனலிடைப்பட்ட மெழுகென உருகிக் கண்ணீர் மாரி பொழிந்தனர். உலகத்தில் சிரிப்பே வராதவர்கள் சிலரிருக்கலாம். ஆனால், எவரே அழாமலிருக்க இயலும்?

அரசவை கூடப் போவதையும், நேற்று மாலை ஜிஹாதிலே முஸ்லிம்கள் பெரு வெற்றியடைந்து வந்த பெருமையைக் கொண்டாடப் போவதையும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஊகித்துக்கொண்டிருந்த நேரத்திலே இந்தப் பேரிடிச் செய்தி காட்டுத்தீப்போல் எங்கும் பரவ ஆரம்பித்ததும், அனைவரும் நிலை குலைந்தனர். சுருங்கச் சொல்லின், சிறையுள்ளே அடைக்கப்பட்டுக் கிடந்த லூயீயையும் அவருடைய சகாக்களையும் தவிர, ஏனையோர் அனைவரும் வருணிக்க முடியாத வேதனையால் மனம் நைந்துருகினர்; நசாராக் கைதிகள் மட்டும் உள்ளத்துள் குதூகலங் கொண்டனர். காந்தியார் சுடப்பட்ட செய்தி கேட்டு, ஒருசிலர் மிட்டாய் வழங்க வில்லையா! – அது போல.

சுல்தான் ஸலாஹுத்தீன் அகால மரணமடைந்த போது மிஸ்ரின் ஸல்தனத்தில் இருந்தோர் வருந்தியதை விட இப்போது சுல்தான் ஸாலிஹ் நஜ்முத்தீன் மரணமடைந்த செய்தி அதிக துக்கத்தை மூட்டி விட்டது. என்னெனின், ஸலாஹுத்தீனாவது சிலுவை யுத்தத்தில் வென்று சில நாட்கள் சென்று மரணமடைந்தார். ஆனால், இவரோ, வெற்றி கிடைத்துச் சில மணி நேரத்துக்குள் உயிர் நீத்து விட்டாரே என்று ஏங்க நேர்ந்தது.

ஆண்டாண்டு தோறும் அழுது புரள்வதால் யாது பயன்? ஷஜருத்துர்ரோ, தூரான்ஷாவோ, அல்லது வேறு பிரமுகரோ எவ்வளவு நேரந்தான் தொடர்ச்சியாக அழுது கொண்டே இருக்க முடியும்? சுமார் இரண்டு மணி நேரஞ் சென்று அழுகை சற்றே ஓய்ந்தது.

சுல்தான் மாண்டு விட்டாரென்றால், ஏனை ஏற்பாடுகளைக் கவனிக்க வேண்டியவர்கள் சும்மாவா இருப்பார்கள்? மையித்தை இந்தக் கூடாரத்திலிருந்து தூக்கிச் சென்று அரண்மனை முன் மண்டபத்தில் கிடத்தாட்ட ஏற்பாடுகள் செய்யப் பட்டன. உயிர் நீத்த அன்றிரவு மகா இரகசியமாக மூன்று நான்கு நபர்களால் கூடாரத்துக்குத் தூக்கிச் செல்லப்பட்ட சுல்தானின் பிரேதம் இப்போது பகலிலே பகிரங்கமாகப் பல நூற்றுக் கணக்காணவர்களால் அரண்மனைக்குத் தூக்கி வரப்பட்டது.

அங்கு வந்த பின்னர் மையித்தை அடிக்கழுவி விட்டு, அலங்காரமான மொட்டை கட்டிலிலே நீட்டி வைத்தார்கள். பல்லாயிரக் கணக்கான மக்கள் வாயிலே துணியை வைத்து அழுத்திக் கொண்டு, அப் பிரேதத்தை வந்து வந்து பார்த்தார்கள். காலை முதல் சொல்லொணா மகிழ்ச்சி ஆரவாரத்தால் அல்லோல கல்லோலப் பட்டுக் கிடந்த காஹிரா நகரும் அரண்மனையும் இப்போது கப்ருஸ்தானைப் போல் உரு மாறிவிட்டன. எங்குப் பார்த்தாலும் சோகக் காட்சியே சூழ்ந்துகொண்டிருந்தது.

பாவம்! ஷஜருத்துர்ரைக் கண் கொண்டு எவராலும் பார்க்கச் சகிக்கவில்லை. இதற்கு முன் எத்தனையோ சுல்தான்கள் மரித்திருக்கிறார்கள்; எத்தனையோ சுல்தானாக்கள் பக்கத்தில் அமர்ந்து கதறியிருக்கிறார்கள். ஆயின், இப்படிப்பட்ட காட்சி என்றுமே நிகழ்ந்ததில்லை. கருத்துத் தெரியாத சிறு சிறு பையன்களுங்கூட அவருடைய பரிதாபகரமான வதனத்தைப் பார்த்து விசும்பினார்கள்.

தூரான்ஷாவோ, பித்துப் பிடித்த வெறியனைப் போல், அசையாமலே நின்று அவலக் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தார்.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<அத்தியாயம் 46>> <<அத்தியாயம் 48>>

<<ஷஜருத்துர் முகப்பு>>

Related Articles

Leave a Comment