16. ஸாலிஹின் திருமண வைபவம்

பேரதிசயத்துடனும் பெருத்த ஆச்சரியத்துடனும் அமீர் தாவூதின் பேச்சைக் கேட்டுவந்த ஷஜருத்துர் அந்தக் கிறிஸ்தவர்களின் படுதோல்வியைக்

கேள்வியுற்றவுடனே தன் விழிகளை மேலே உயர்த்தி அண்ணாந்து பார்த்து, “அல்லாஹ்வைத் தவிர்த்து வேறு எந்தச் சக்தியேனும் சாமர்த்தியமேனும் இல்லை!” என்று பெருமூச்சுடன் முணுமுணுத்தாள். அவள் கண்களின் பக்திப் பரவசத்தாலெழுந்த உவகைக் கண்ணீர் மின்னிக்கொண்டிருந்தது. அவள் மௌனமாகத் தலையை வளைத்து, “தாதா! ஆண்டவன் புரிந்த அப்பேருதவிக்கு மிஸ்ர் மக்கள் என்றென்றுமே கடமைப்பட்டிருக்க வேண்டுமன்றோ?” என்று மெல்ல வினவினாள்.

“மிஸ்ர் மக்கள் மட்டுமா? முஸ்லிம் உலகம் முழுதுமே கடமைப்பட்டிருக்கிறது. ஏனெனில், அன்று அந்த வெள்ளம் மட்டும் வராமலிருந்திருந்தால், நமது சிறிய படைத் தொகுதி, மஹா சமுத்திரம்போன்ற மிகப் பெரிய எதிரியை முறியடித்திருக்கவும் முடியாது; இன்று இந்த ஸல்தனத்தை நாம் காணவும் முடியாது.* ஆண்டவன் செய்வனவெல்லாம் நம் நன்மைக்காகவே இருக்கும். ஸல்தனத்துக்கு வந்த அந்தப் பேராபத்து அவ்வளவோடு இலேசாயிற்று. உடனே சமாதானமும் கையொப்பமிடப்பட்டது. அதன் ஷரத்துப்படி முஸ்லிம்களுக்கே சகல லாபமும் கிட்டின. இறுமாப்புடனும் மண்டைக் கிறுக்குடனும் துள்ளித் துடித்துக்கொண்டிருந்த அந்தக் கிறிஸ்தவப் பிரதிநிதி கர்தினால் பெலேஜியஸ் இப்போது சென்னி தாழ்த்திப் பேரவமானத்துடன் அரசர்பிரான் முன்பு வெட்கி நின்றார். தம் பெயருக்கேற்ற குணம் படைத்த சுல்தானும் அப் பிரதிநிதியைப் பழிவாங்கத் துணியாது, அவரை மிகவும் மரியாதையுடனே நடாத்தினார்.

சமாதான ஒப்பந்தத்தில் யுத்தக் கைதிகளை இரு தரப்பினரும் திருப்பிக் கொடுத்துவிட வேண்டுமென்றும், தமீதாவை அக் கிறிஸ்தவர்கள் முற்றும் காலி செய்துவிட்டு வெறுங்கையுடனே ஐரோப்பாவுக்குத் திரும்பிச் சென்றுவிட வேண்டுமென்றும் எழுதப்பட்டிருந்தது. கிறிஸ்தவர்களுக்கு என்ன சலுகை காட்டப்பட்டதென்றால், அவர்கள் தமீதாவைத் துறந்து மத்தியதரைக் கடல் மார்க்கமாக வெளியேறும்போது அவர்களை முஸ்லிம்கள் எந்தத் தொல்லைக்கும் ஆளாக்கக் கூடாதென்றும், புனித யாத்திரை புரிகின்ற எண்ணத்துடன் வருகிற கிறிஸ்தவர்களுக்கு முஸ்லிம்கள் குறைந்த கட்டணத்தை மட்டும் வசூலிக்க வேண்டுமென்றும், இயேசு கிறிஸ்து அறையப்பட்டதாகக் கருதப்படும் அசல் சிலுவை மரமென்று கிறிஸ்தவர்கள் கூறி வருகிற அந்தச் ‘சிலுவையை’ முஸ்லிம்கள் அவர்களிடம் கொடுத்துவிட வேண்டுமென்றும் அவ்வுடன்படிக்கையில் நிபந்தனைகள் வரையப்பட்டிருந்தன. இது கையெழுத்தான தேதியாகிய ஹி. 619, ரஜப் மாதம் 19 (8-9-1221) அன்றே ஸாலிஹும் காமிலிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டார்.”

“அப்படியானால், சற்றேறக்குறைய மூன்றாண்டுகள் வரையிலா ஸாலிஹ் கிறிஸ்தவர்களிடம் பிணையாக இருந்தார்?” என்று ஷஜர் வியப்புடனே வினவினாள்.

“ஆமாம்! தமீதா முற்றுகை நடந்துகொண்டிருக்கையில் அந்தக் கிறிஸ்தவப் பிரதிநிதி இங்கே வருவதற்குப் பயப்பட்ட காரணத்துக்காகத்தானே ஸாலிஹை ஈடாக வைத்து அவரை வரவழைத்தோம்? ஆனால், விவகாரம் எதுவுமே முடியாததாலும், அப் பிரதிநிதி அடிக்கடி வரவழைக்கப்பட வேண்டியிருந்தால் என்ன செய்வதென்று யோசித்தும் ஸாலிஹை அங்கேயே விட்டுவைத்தோம். எனவே, சமாதான ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டதும் ஸாலிஹ் காமிலிடம் திரும்பிவந்து சேர்ந்தார்.”

“அன்று முதல் அவர் இங்கே அரண்மனையிலே தானே இருந்துவருகிறார்?”

“இல்லை. அந்த யுத்தம் நின்ற ஆண்டின்போது அவருக்கு 14 வயதிருக்கலாம். பட்டத்து இளவரசராகிய அபூபக்ர் அப்போதே தம் தம்பியை வெறுத்துவந்த காரணத்தால் இருவரையும் ஒன்றாகச் சேர்த்துவைக்க விரும்பாத சுல்தான் காமில் ஸாலிஹை ஷாமுக்கு அனுப்பிவைத்தார். அங்கேதான் அவர் வசித்துவந்தார். அங்கேயே அவர் திருமணமும் செய்து கொண்டார்.”

“யாரை மணந்தார்?”

“அதைத்தான் சற்றுமுன்னே நான் கூறினேனே! நம்முடைய பெரிய சுல்தானாகிய ஸலாஹுத்தீனின் கடைசிக் குழந்தையாகிய, ஒரே பெண்ணாகிய மூனிஸ்ஸா என்பவரை மணந்தார். அதே மூனிஸ்ஸாதான் இன்று சுல்தான் ஸாலிஹ் ஐயூபியின் சுல்தானாவாக, பட்டத்து ராணியாக மிளிர்கின்றார்.”

“மூனிஸ்ஸா சுல்தான் ஸலாஹுத்தீனின் மகளா?”

“ஆம்! விவாகமானது முதல் ஸாலிஹும் மூனிஸ்ஸாவும் கருத்தொருமித்து மணியும் ஒளியும்போலே ஒன்றித்து வாழ்ந்துவருகிறார்கள். அவர்களுக்கு விவாகமாகி ஓராண்டுக்குள்ளேயே ஓர் ஆண்குழந்தையும் பிறந்தது. ஆண்டவனுதவியால் அக்குழந்தையும் நன்றாக வளர்ந்து இன்று பெரிய பையனாகச் சோபிக்கிறான். இனிமேல் அவர்களுக்கென்ன குறைச்சலம்மா?”

“அப்படியானால், ஸாலிஹுக்கும் மூனிஸ்ஸாவுக்கும் நடந்த திருமணத்துக்குத் தாங்கள் போகவில்லையோ?”

“போகவில்லை. நீ சரியாக உணர்ந்துகொண்டிருக்கிறாய். ஷாம் தேசத்தில் அவருக்கு விவாகம நடந்தபடியால், அமீர்களாகிய நாங்கள் போக இயலவில்லையென்று நினைக்காதே. ஆனால், அவ்விவாக ஏற்பாடுகளைக் காமிலி்ன் தம்பி ஈஸா என்பவர் செய்த காரணத்தால் நாங்கள் செல்லவில்லை. ஏனென்றால், அந்தச் சிலுவையுத்தப் பேர்வழிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், எதிர்பாராத விதமாகக் காமிலுக்கும் அவருடைய மற்றிரு சகோதரர்களுக்குமிடையே மனஸ்தாபம் மூண்டுவிட்டது. ஆதலின், பெரிய ஸல்தனத்தை மூன்று கூறாக்கிப் பெற்றுக்கொண்ட மூன்று சகோதரர்களும் பொறாமையால் ஒருவரை மற்றொருவர் கவிழ்க்கச் சூழ்ச்சி செய்துகொண்டிருந்தார்கள். அது பெரிய கதை; அந்த விவரத்தையும் நீ தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால், இறுதி வரை அம் மூன்று சகோதரர்களும் விரோதத்துடனேயே வாழ்ந்து வந்தார்களென்பதை மட்டும் நீ நினைவில் வைத்துக்கொள். எனவே, அந்த மனஸ்தாபம் உச்சத்திலிருந்த காலத்தில் ஸாலிஹுக்கு அந்த ஷாம் தேசத்தில், அதிலும் ஈஸா சுல்தானாயிருந்த தலைநகரில் விவாகம் நடந்தேறியபடியால், நம் சுல்தான்கூட மைந்தன் திருமணத்துக்கு விஜயம் செய்யவில்லை; நாங்களும் யாரும் போக இயலவில்லை. அன்றியும், பட்டத்திளவரசர் திருமணமா அது? இரண்டாவது மகனின் விவாகந்தானே? எனவே, எவரும் அதைப் பொருட்படுத்தவுமில்லை; அல்லது அதற்காகக் கவலைப்படவுமில்லை.”

“பெற்ற தகப்பனாருக்கும் சிறிய தந்தைக்கும் இடையே மனஸ்தாபம் இருந்த போதினும், ஸாலிஹ் மட்டும் ஷாமிலேயே தம் சிறிய தந்தையின்கீழ் வசித்து வந்தாரென்றா தாங்கள் கூறுகின்றீர்கள்?”

“ஆம். அரசியல் வியவகாரங்களில் இது சகஜம். ஆனால், குடும்ப விவகாரங்களில் அந்த அரசியல் அபிப்பிராயபேதம் நுழைவது பெரும்பாலும் வழக்கமில்லை.”

அமீருக்கும் ஷஜருத்துர்ருக்கும் இடையே நடைபெற்ற இந்நீண்ட உரையாடல் ஒருவாறு முடிவதற்கும், அவர் பிடிக்கும் ஹுக்காவின் நெருப்பு அணைவதற்கும் நேரம் சரியாயிருந்தது. சென்ற இருபத்து நான்கு மணி நேரத்துக்கிடையே ஏற்பட்ட சகல விஷயங்களையும், அவற்றின் மாறுதல்களையும அவள் நினைந்து நினைந்து பெருமூச்சு விட்டவண்ணம் நின்றிருந்தாள்.

மறுநாள் பொழுது புலர்ந்ததும், காஹிரா முழுதுமே அலலோல கல்லோலப்பட்டது. காரணம் என்னவென்று பார்த்தால், ஸாலிஹ் ஐயூபியின் அரண்மனை அன்று பெரிய தடபுடலான பெருவிருந்தும் விசேஷக் களரியுமாகக் காட்சியளித்தது. அரசர்பிரான் முடிசூட்டு விழாவுக்காக அக்கேளிக்கை கொண்டாடப்பட்டதென்றாலும், உண்மை அதுவன்று. ஸாலிஹ் வாலிபராய் இருந்தகாலத்தில் அவருக்கும் மூனிஸ்ஸாவுக்கும் நடைபெற்ற விவாக வைபவம் காஹிரா மக்களுக்குத் தெரியாதாகையாலும், அத் திருமணத்தின்போது ஷாமில் நடந்த பெரிய விருந்துக் களரிக்கு எந்தக் காஹிராப் பிரமுகரும் செல்லாமையாலும், சுல்தான் ஸாலிஹ் தமது பழைய திருணத்தின் சார்பான புதிய வலீமா விருந்தை இப்போது நிகழ்த்தினாரென்னும் உண்மையை அநேகர் தெரிந்துகொள்ள முடியவில்லை. அன்று நடந்த விசேஷத்துக்கு எல்லா அமீர்களும் அரண்மனைக்கு வருகை புரிந்திருந்தார்கள். ஷஜருத்துர்ரும் அளவுகடந்த ஆசைமேலீட்டால் தானும் அந்த வைபவத்துக்கு எப்படியாவது சென்றுசேர வேண்டுமென்று துடியாய்த் துடித்துக்கொண்டிருந்தாள். மெதுவாகத் தன் விருப்பத்தையும் அமீர் தாவூதிடம் அச்சத்துடனே அறிவித்துக்கொண்டாள்.

தாவூத் சற்றுநேரம் ஏதோ சிந்தித்தார்; புன்முறுவலுடனே அவளை நோக்கி, “சரி, புறப்படு!” என்று அனுமதியும் கொடுத்துவிட்டார்.

அவளுக்கு இது மட்டற்ற பெருமகிழ்ச்சியை அளித்தது. அப்பால் சொல்வானேன்! சிட்டாய்ப் பறந்து, நொடிப்பொழுதில் தன்னை அழகுபடுத்திக் கொண்டாள். சுல்தான் வீட்டு விருந்துக்குப் போக வேண்டுமென்றால், உடுத்துக் கொள்ளும் உடையழகை வருணிப்பானேன்? இந்த அமீரிடம் வந்த பின்னர்ப் பெற்றுக்கொண்டிருந்த உன்னத உடைகளே ஷஜருத்துர்ரைக் கனவுலகில் சஞ்சரிக்கும் மிக அழகியப் பெண்ணாக மிளிர்ந்து ஒளிரச்செய்தன. சிறிது நேரத்தில் சுல்தானின் அரண்மனைக்குள்ளே பையச் சென்று நுழைந்தாள்.

அங்கே நடந்த வைபவங்களைப் பார்த்தால், அன்றுதான் சுல்தானுக்குத் திருமணம நடைபெறுவதைப் போன்று எல்லா நிகழ்ச்சிகளும் காணப்பட்டன. நேற்றுவரை ஆட்சிபுரிந்து வந்த அபூபக்ர் ஆதில் கொல்லப்பட்டதைக்கூட அன்று விசேஷத்துக்கு வந்திருந்தவர்கள் சிறிதும் கருதவில்லை. அதற்கு மாற்றமாக எல்லாரும் மிக மகிழ்ச்சியுடன் மிக்க செழிப்புடனே காணப்பட்டனர். சுல்தானோ, மிகவும் கம்பீரமாக எழுந்து நின்று, அங்குக் கூடியிருந்த அனைவருக்கும் தம் வரவேற்பைச் சமர்ப்பித்துக் கொண்டு, வெகு ஆனந்தத்துடன் புன்னகை பூத்து நின்றார். அவர் மனைவி மூனிஸ்ஸாவோ, தான் என்றுமே கனவுகூடக் கண்டிராத பதவிக்கு உயர்த்தப்பட்டு விட்டதை எண்ணி எண்ணிக் களித்துக்கொண்டிருந்தாள். அவர்களுடைய ஒரே குமாரன் தூரன்ஷாவோ, தானே இனிப் பட்டத்து இளவரசனென்பதை நினைத்துத் துள்ளிக் குதித்துக்கொண்டிருந்தவனைப் போலே காணப்பட்டான். மிஸ்ர் தேச சரித்திரத்திலேயே இதற்கு முன்னே எப்போதும் நடந்திராத அத்துணை உயர்தரமான நேர்த்தியுள்ள விருந்தும் தடபுடலாக நடந்தது. அமீர்களும் பிரமுகர்களும் அன்றைய அரிய உணவை வயிறார உண்டுவிட்டு குதூகலத்துடன் வீடு திரும்பினர். பல ஆண்டுகளுக்கு முன்னரே விவாகமாகியிருந்தும், காஹிராவாசிகள் எல்லாரும் அன்றுதான் ஸாலிஹின் திருமணமென்று வாய்விட்டுக் கூறிப் பெருவிழாக் கொண்டாடினர்.

இக் காட்சிகளையெல்லாம் கண்ட நம் ஷஜருத்துர் அலாவுதீனின் அற்புதக் குகையுள் அகப்பட்டவளே போல பெரிதும் வியப்புற்றாள்.

(தொடரும்)


*ஏன்! இந்த முழு முஸ்லிம் உலகமும் பாதிக்கப்பட்டேயிருக்கும்; ஏனெனில், அந்தக் கிறிஸ்தவர்கள் வென்றிருந்தால், பைத்துல் முக்கத்தஸே இழக்கப்பட்டிருக்கும். பலஸ்தீனே பறி போயிருக்கும்.


மறுபதிப்பு: சமரசம் – 16-30 ஏப்ரல் 2012

<<அத்தியாயம் 15>>     <<அத்தியாயம் 17>>

<<ஷஜருத்துர் முகப்பு>>

Related Articles

Leave a Comment