ஹிஜ்ரி 646-ஆம் ஆண்டு முடிகிற தறுவாய் வந்துவிட்டது. அதுவரைகூட ஷாமில் போர்புரிந்த சுல்தானுக்கு முஹம்மத் ஷா பிடிபடவில்லை. அவனுடைய
கூட்டத்தினர்களை அங்கு மிங்குமாகச் சந்தித்து முறியடிப்பதிலேயே நாள்கடந்துவந்த தென்றாலும், குழப்பத்தைக் கிளப்பிய தலைவனாகிய அத்தறுதலை அதுமட்டில் சுல்தானை எதிர்க்க நேரில் வரவில்லை. அவன் எங்கோ மறைவிடத்தில் பதுங்கியிருந்தான். ஷாமுக்கு வந்த சுல்தான் சென்ற ஒன்றரை யாண்டுகளாக எவ்வளவோ முயன்றுங்கூட அத் துரோகியை ஒருமுறையேனும் நேரிற் சந்திக்க இயலவில்லை.
ஸாலிஹ் மிஸ்ருக்குத் திரும்பிவிடலா மென்று எண்ணினார். ஆனால், வந்த காரியத்தை முற்றும் முடிக்காமல், துரோகியைக் கொன் றொழிக்காமல் திரும்பி விடுவதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது? அல்லாமலும், சுல்தானாவின் ஆட்சிமகிமையால் மிஸ்ரின் ஸல்தனத்துக்கு யாதொருவிதக் குறைவும் இல்லாதிருக்க, அவர் மிஸ்ருக்குத் திரும்புவதால் என்ன இலாபம் கிடைக்கப்போகிறது?
பற்றாக்குறைக்கு, ஷஜருத்துர் அடிக்கடி சுல்தானுக்கு அனுப்பிய செய்தியி லெல்லாம், அவர் அநத ஷாவைச் சிறை பிடித்தா லன்றி, அல்லது அவனைக் கொன்றொழித்தா லன்றி, திரும்புவது உசிதமில்லையென்று வரைந்துக் கொண்டே யிருந்தார். அந்த ஷா ஒரு சுண்டெலிதான். எனினும் அச் சுண்டெலியை ஒழித்துக்கட்டினாலன்றி, எப்படி மனநிம்மதியுடன் ஆட்சி செலுத்தமுடியும்? ஷாமில்தான் எப்படி அமைதி நிலவும்? ஷஜருத்துர்ரின் உபதேச மொழிகள் முற்றும் உண்மையே யென்பதை யுணர்ந்த ஸாலிஹ் நஜ்முத்தீன் எத்தனை நாட்களாயினும், இறுதிவரை ஒருகை பார்த்து, அந்த ஷாவைத் தீர்த்துக் கட்டுகிறமட்டில் தாய்நாடு திரும்புவதில்லை யென்று கங்கணம் கட்டிக்கொண்டு விட்டார்.
காஹிராவில் சுல்தானாவும், திமஷ்கில் சுல்தானுமாக இருந்துகொண் டிருந்த அச் சந்தர்ப்பத்தில் ஐரோப்பாவின் கிறிஸ்தவர்களுக்கு நாவில் நீர் சுரந்துவிட்டது. இதுவரை அவர்கள் ஏதாவது ஒரு பொய்க்காரணத்தைச் சொல்லிக்கொண்டு, அதிலும் சிறப்பாக ஜெரூஸலம் என்னும் புண்ணிய பூமியை ‘முஸ்லிம் அரக்கர்’களிடமிருந்து விடுதலை செய்யப் போவதாகப் பாசாங்கு செய்து, ஏழுமுறை “சிலுவை யுத்தங்களைப்”புரிந்து, முதுகொடிந்து, பிடரி முறிந்து, மானமிழந்து, பொருளிழந்து, உயிர் துறந்து, அவமானமுற் றிருந்தனர். ஐரோப்பிய சரித்திரத்தை நீங்கள் படித்துப்பார்ப்பீர்களே யானால், அக் கண்டத்திலிருந்த அத்தனை கிறிஸ்தவர்களும் சிறிதும் காரணமின்றியே ஒவ்வொரு முறையும் சிலுவையுத்தம் புரிந்தார்கள் என்பதைக் கண்டுகொள்வீர்கள்.
எவரேனும் ஒரு ‘போப்பாண்டவருக்கு’ எப்போதேனும் நினைவு வந்துவிட்டால், பக்கத்தில் பலம்பெற்று வருகிற முஸ்லிம்களை நசுக்கி யொழித்துவிட வேண்டுமென்னும் அழுக்காறு பிறந்துவிடும். அவர் அக்கணமே தம் அக்கிரமமான அபிலாஷாகளைத் தணித்துக் கொள்வதற்காக, ஒரு பாவமுமறியாத பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவ பொதுமக்களைத் தூண்டிவிட்டு, அவர்களை அநியாயமாகப் போர்க்களத்தில் அக்கிரமமாய்ப் பலியிடுவார். அப்பொழுதெல்லாம் ஐரோப்பா முழுதையும் அரசியலிலும் மதத்துறையிலும் சர்வாதிகார ஏகபோக உரிமையுடன் ஆட்டிப் படைக்கும் எதேச்சாதிகாரம் முழுமையும் போப்பாண்டவர் ஒருவரின் கையிலேயே இருந்துவந்தமையால், அவர் இட்டதே சட்டமாகவும், எண்ணுவதே இறைவன் தீர்மானமாகவும் இருந்தன. கண்டதே காட்சி, கொண்டதே கோலம்! என்னும் பழமொழியை அக்காலப் போப்பாண்டவர்களைத் தவிர வேறு எவர்க்கும் அவ்வளவு பொருத்தமாகக் கூற முடியாதென்பதைக் கிறிஸ்தவ ஆசிரியர்களே வெட்கத்துடன் ஒத்துக்கொள்கின்றனர்.
மேலும், ஒவ்வொரு சிலுவையுத்தத்தின் போதும் கிறிஸ்தவர்களே அக்கிரமப்போர் தொடுத்துவந்தார்கள்; முஸ்லிம்கள் தற்காப்புப் போர்களையே நடத்தினர். ஒரு முறையேனும் ஒரு சுல்தானேனும், அந்தப் போப்புக்களும், கிறிஸ்தவர்களும் அநீதியான அக்கிரமமே புரிகின்றனரென்பது மகா நிச்சயமாய்த் தெரிந்திருந்தும், ஐரோப்பாவின்மீது வலியப் படையெடுத்துச் சென்று கிறிஸ்தவர்களை யெதிர்த்துப் போர்தொடுத்ததேயில்லை. அதிலும், கிறிஸ்தவர்கள் புரிந்த சிலுவையுத்தங்களுள் மிகப் பெரும்பான்மையன ஐயூபி சுல்தான்களின் ஆட்சிக் காலத்திலேயே நடைபெறலாயின. ஸுல்தான் ஸலாஹுத்தீன் காலத்தில் நடந்த மூன்றாவது சிலுவையுத்தத்தை யடுத்து; ஸாலிஹ் காலத்துக்குள் ஏழாவது யுத்தமும் நடந்து முடிந்திருந்தது.
கிறிஸ்தவர்கள் “புண்ணிய பூமி”க்காகப் போர் புரிந்ததைவிட, முஸ்லிம்களை ஒழித்துக்கட்ட வென்றே ஒவ்வொரு முறையும் படைதிரட்டி வந்தனரென்பதை எவரும் மறுக்க இயலாது. ‘சிலுவை யுத்தம்’ என்கிற பெயரை வைத்துக்கொண்டு, அந் நசாராக்கள் அனாவசியமாகவும் அக்கிரமமாகவுமே நிரபராதிகளான முஸ்லிம்களைப் படுகொலை புரியவென்று கிளம்பிவந்தனர். ஒவ்வொரு முறையும் அவர்கள் நல்லபாடம் கற்றுக்கொண் டிருந்தும், அவர்கள் மீண்டும் மீண்டும் முன்னினும் அதிகமான மதவெறியுடனேதான் அக்கிரம யுத்தம் தொடங்கினார்கள்.
ஆறாவது சிலுவை யுத்தத்தை ஒரு போப் ஏன் ஆரம்பித்தா ரென்பதையும், படையெடுத்து வந்த “வீரர்கள்” சுல்தானைப் போர்க்களத்தில் சந்திக்க அஞ்சி எங்ஙனம் திருட்டுத்தனமாக தமீதாவின் பக்கம் சூறையாடத் திரும்பினரென்பதையும், அவர்கள் தமீதாவில் புரிந்த காட்டுமிறாண்டித்தனம் எத்தகைய மிருகத்தனமிக்கது என்பதையும், பின்னர் அவர்கள் காஹிராமீது படையெடுத்ததற்காக இறைவன் எப்படித் தண்டித்தான் என்பதையும் முன்னமே விவரமாய் விளக்கியிருக்கிறோ மல்லவா? அந்த ஆறாவது சிலுவையுத்தத்தின் காரணமாகக் கிறிஸ்தவர் பெருத்த அவமானத்துக்கு ஆளாகிப் போயினமையால், ஏழா முறையும் படையெடுத்தார்கள். ஆனால், அப்பொழுது ஷாம் சிற்றரசரே அக் கிறிஸ்தவப் படையை நிர்மூலமாக்கிவிட்டப்படியால், அப் படையெடுப்பாளர் மிஸ்ர் சுல்தானின் கைவரிசைக்கு ஆளாக வேண்டிய அவசியமில்லாமலே போய்விட்டனர்.
சூதுவிளையாடும்போது கைப்பணத்தை இழக்க இழக்க ஒருவனுக்கு எப்படி ஆத்திரம் அதிகப்பட்டுக் கொண்டேபோய், மேலும் மேலும் அவனது உள்ளம் பணயம் வைத்துக் கொண்டுபோகத் தூண்டுமோ, அதேவிதமாகத்தான் அந்தக் கிறிஸ்தவர்களென்னும் சிலுவையுத்தச் சூதாட்டக்காரர்களுக்கும் ஆத்திரமும் அபிலாஷையும் வயற்றெரிச்சலும் ஒவ்வொரு முறையும் முந்திய முறையைவிட அதிகரித்துக் கொண்டே வந்தன. இதுவரையில் ஏழு முறை முஸ்லிம்களிடம் படுதோல்வி யடைந்துவந்த கிறிஸ்தவர்களுக்கு இப்பொழுது ஆத்திரம் மென்னியைத் திருக ஆரம்பித்தது. இந்த முறை எப்படியாவது மிகமிகப் பெரிய படையைத் திரட்டிக்கொண்டுபோய், ஷாம், பலஸ்தீனம், மிஸ்ர் ஆகிய எல்லா முஸ்லிம் நாடுகளையுமே நிர்மூலமாக்கி விடுவ தென்றும், முடியுமானால் கலீபாவையும் கிலாபத் சாம்ராஜ்யத்தையுங் கூட ஒழித்துத் தீர்த்துவிடுவ தென்றும் வைராக்கியம் கொள்ளத் துணிந்தனர்.
இதுவரை அவர்களுக்கு ஏற்பட்டுவந்த தோல்விக்குமேல் படுதோல்வி யென்னும் பெரிய ஏமாற்றம் அவர்களை முஸ்லிம்கள்மீது அதிகமான ஆக்ரோஷம் கொள்ளச் செய்துவிட்டது. எல்லாவற்றையும்விட அந்தக் கிறிஸ்தவர்கள் ஆறாவது சிலுவையுத்தத்திலே காஹிராவின் பிரளயத்தில் உயிர்துறந்த வைபவம் அவர்களுடைய உத்வேகத்தைத் தணிக்காமல் கிளப்பி விட்டுக்கொண்டே யிருந்தது. தமீதாவை விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டுக் காஹிராவைக் ‘கவளீகரம்’ செய்யப்போகிற வேளையில் அப்படிப் படுதோல்வி ஏற்பட்டுவிட்டதே என்று அவர்கள் நினைக்க நினைக்க நெஞ்சம் குமுறியது. வெட்கம் தலைகுனியச் செய்தது.
‘பாலைவனத்தில் தோன்றிய, எழுத்துவாசனை யில்லாத, பலதார மணம் புரிந்துகொண்ட ஒரு சூனியக்காரரை இறைவனின் இறுதி நபி’ யென்று ஏற்று அட்டகாசம் புரிந்து உலகை முஸ்லிம்களாக மாற்றும் இவர்களைக் கண்டு அவர்கள் மனம் புழுங்கினர். ‘தந்தை யின்றி, கன்னிப் பெண்ணுக்குப் பாலகனாய்த் தேவகுமாரனாக அவதரித்து, சிலுவையி லேறித் தம் இரத்தத்தைச் சிந்திப் பாவிகளின் அஞ்ஞானத்தைக் கழுவ உயிர்நீத்த பெருமானின்’ மார்க்கத்தைக் கைப்பிடிக்கும் தாங்களெங்கே? அந்தத் தேவ தூஷணையாளராகிய, தேவகுமாரனை மறுதலிக்கிறவர்களாகிய, கிறிஸ்து விரோதியாகிய “முஹம்மதியர்கள்” எங்கே?
உலக சமாதானத்துக்காக உயிர்விட்ட ஏசுநாதருக்காக அச் சாந்தமூர்த்தியின் பெயரால், அவர் போதித்த சற்போதனைகளுக்காகவே அக்கிரமக் கோர யுத்தத்தைத் தொடங்காவிட்டால், அவர்கள் “கிறிஸ்தவர்கள்”என்று எப்படித் தங்களைப் பெருமையுடன் கூறிக்கொள்ள முடியும்? எனவே, அவர்கள் தங்கள் மதத்தின் பெயராலும், சாந்தகுண சமாதான சீலரான இயேசு கிறிஸ்துவின் திருநாமத்தாலும், சமாதானத்தை உலகில் நிலைநாட்டுவதற் காகவே அப்படிப்பட்ட அநியாய அக்கிரம யுத்தங்களைப் பலமுறை புரியவேண்டுவது தங்கள் முக்கிய முதல் மதக் கடமை யென்று கருதத் தொடங்கினர் போலும்! சாந்தியையும் சமாதானத்தையம் உலகிலே நிலைநிறுத்துவதற்காகச் சிலுவையிலேறி உதிரம் சிந்தியதாகக் கருதப்படும் இயேசுநாதரைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொண்ட கிறிஸ்தவர்களின் ஞானோபகாரம் இச் சிலுவை யுத்தமாகும்!
ஒரு கன்னத்தில் அறை விழுந்தால் மறு கன்னத்தைத் திருப்பிக்காட்ட சொன்ன “மஹானைப்” பின்பற்றுவதாகக் கூறுகிறவர்கள், மேலங்கியைக் கேட்பவனுக்கு நெடுஞ் சட்டையையும் சேர்த்துக் கழற்றிக் கொடுத்துவிடச் சொல்லி நல்லுபதேசம் புரிந்த “தேவகுமாரனை”ப் பின்பற்றுவதாகக் கூறுகிறவர்கள், ‘எதிரியையும் நேசிப்பாயாக!’ என்று நீதிவாக்கியங்கூறிய “பரம பிதா”வின் மார்க்கத்தைச் சேர்நதவர்களாகக் கூறிக்கொள்கிறவர்கள் நடத்தியவையே அச்சிலுவை யுத்தங்கள் அத்தனையும். அவர்களே வலியப் போர்தொடுத்தார்கள். ஒவ்வொரு முறையும் நல்ல உதை வாங்கினார்கள்; அவர்களுக்கு நல்ல புத்தி வருவதற்குப் பதிலாக மேலும் விநாச காலத்துக்கான விபரீத புத்தியே தோன்றிக்கொண் டிருந்தது.
அவர்கள் தங்கள் சொந்தச் செயல்களைக்கொண்டு தேவனின் கட்டளைக்கு மாற்றம் புரிந்துவந்தமையாலும், அநியாயமான அக்கிரம யுத்தம் பலப்பல தொடுத்துவந்தமையாலும், எல்லா நீதிமான்களுள்ளும் தலைசிறந்த நீதிமானாகிய ஆண்டவன் அவர்களுக்கு நல்ல பாடம் கற்பித்துவந்தான். இருந்தும், அவர்களுக்கு நல்லறிவு இறுதிவரை உதயமாகாமையால், மேலும் மேலும் “இன்னம் கெடுவோம், என்ன பந்தயம்?” என்று ஆண்டவனையே அறைகூவி யெதிர்க்கும் விதமாக அடுத்த சிலுவையுத்தத்துக்கு ஆயத்தமாகி விட்டார்கள்.
இதுவரை நடந்த ஏழு சிலுவை யுத்தங்களில் ரோமபுரி போப்புக்களும், ஆஸ்திரியாவின் அரசர்களும், ஜெர்மானியின் கோமகன்களும் சக்ரவர்த்திகளும், இங்கிலாந்தின் மன்னர் ரிச்சர்டும் கிறிஸ்துவ மதத்துக்காகக் கொடிபிடித்துச்சென்று மூக்கிழந்து மீண்டனர். இம்முறை திட்டமிடப்பட்ட எட்டாவது சிலுவை யுத்தத்தில் இறங்கிக் குட்டிச்சுவராய்ப் போகவேண்டிய பாக்கியம் பிரான்ஸ்தேச மன்னருக்கு விதியாக்கப்பட் டிருந்தது போலும்!
கி. பி. 13-ஆம் நூற்றாண்டின் மத்தியிலே அக்கால ஐரோப்பிய அந்தஸ்தில் மிகவும் கீர்த்திவாய்ந்த மாபெரிய மன்னராய் விளங்கி வந்தவர் பிரெஞ்சுநாட்டு ஒன்பதாவது லூயீ மன்னராவர். அவர் போப்புக்கு மிகவும் உற்ற நண்பர். கிறிஸ்து மதத்தை உலகெங்கும் ஸ்தாபிக்க ஆண்டவன் தன்னையே தேர்ந்தெடுக்கிறா னென்று பகற்கனவு கண்டவர். கிறிஸ்து மதத்துக்கோ, கிறிஸ்துவ ராஜ்ஜியத்துக்கோ, போப்பாண்டவருக்கோ எவன் மாறு செய்வதா யிருப்பினும், அவனைக் கண்டதுண்டமாய் வெட்டி வீசி யெறிய வேண்டுமென்று வீர வைராக்கியம் பூண்ட வன்றொண்டர். அவர் தம்மைக் கிறிஸ்துமதத்தின் தூணே என்று நினைத்துக்கொண்டதை விட, அவரை நிஜமான தூணாகவே ஆக்கிவிடவேண்டு மென்று போப்பாண்டவரும் கச்சை கட்டிக்கொண்டார்.
பேராசையும், இரத்தவெறியும், போர்ப்பசியும் மட்டுமே உருவா யமைந்தவர்களைக் கொண்டுதான் அக்கால அநாகரிக ஐரோப்பா உயிர்வாழ்ந்து வந்தமையால், இம்மாதிரியான காட்டுமிறாண்டித்தன முள்ள லூயீ மன்னரே போப்புக்கும், ஏனைக் கிறிஸ்துவர்களுக்கும் மிகப் பொருத்தமான பிரதிநிதியாய்க் காணப்பட்டார். அந்த லூயீ மன்னரின் மதவெறியை அதிகமாக ஊக்கிவிடவே போலும் போப்பாண்டவர் அவருக்குத் தூபம்போட ஆரம்பித்தார்! இன்றைக்குங்கூட அந்த லூயீ மன்னருக்கு ‘ஸெயிண்ட் லூயீ’ என்றுதான் பெயர் வழங்கிவருகிறது. அம் மன்னரின் மதாபிமானத்தைப் பாராட்டியே போப்பாணடவர் அவருக்கு “முனிவர்” (Saint) என்னும் பட்டத்தை வழங்கினாரென்று சரித்திரம் கூறுகிறது. லூயீ மன்னரை ‘முனிவர்’ என்று போப் அழைத்ததில் அதிசயமில்லை. ஆனால், அம் மன்னர் தமது மதபக்திக்காகச் சிலுவை யுத்தம் புரிந்த கதை யிருக்கிறதே, அதுதான் வின்னியாசத்தினும் வின்னியாச மிக்க விசித்திர வைபவமாகும்.
அந்தக் கிறிஸ்தவ மன்னரை அவர் நாட்டுச் சரித்திரம் பல்லாயிரக்கணக்கான ஏடுகளில் பாராட்டி வரைந்திருக்கிறது. அவரை பிரெஞ்சு பாஷையில் ருவா த பிரா(ன்)ஸ் (அஃதாவது, பிரான்ஸ் தேச மன்னர்) என்று அழைப்பதால், முஸ்லிம்கள் அவரை ரிதா பிரான்ஸ் என்றே அழைத்தனர். எனினும், வாசக நேசர்கள் சுலபமாய் விளங்கிக்கொள்வதற்காக நாம் அவரை லூயீ யென்றுமட்டுமே குறிப்பிட்டுக் கூறுவோம்.
முஸ்லிம்களைப் பழிவாங்க வேண்டு மென்றும், இந்தத் தடவை சிலுவை யுத்தத்தில் எல்லா முஸ்லிம்களையும், ஸல்தனத்தையும், கிலாபத்தையுங்கூடச் சேர்த்து அடையாளமில்லாமல் அடியோடு சுத்தமாய்த் துடைத்தெறிய வேண்டுமென்றும் தீவிர ஆலோசனை புரிந்துகொண்டிருந்த அந்த 9-ஆவது லூயீக்கு ஒரு நாள் செய்தி எட்டிற்று : மிஸ்ரின் சுல்தான் இப்போது தமது ஸல்தனத்தைத் தம் மனைவியிடம் ஒப்படைத்துவிட்டு, ஷாம் தேசத்திலே போர்புரிந்து கொண்டிருக்கிறா ரென்றும், இச் சிறந்த சந்தர்ப்பத்தில் தருணத்தை நழவவிடாமல் கிறிஸ்தவர்கள் சிலுவை யுத்தத்தின் பெயரால் நேரே மத்தியதரைக் கடலைக் கடந்து மிஸ்ருக்குள்ளே நுழைய வேண்டு மென்றும், மிஸ்ர் ஸல்தனத்தின் படைகளெல்லாம் இப்போது ஷாமில் இருப்பதால், காஹிரா உட்பட முழு எகிப்து தேசத்தையுமே வெகு சுலபமாக விழுங்கிவிட முடியுமென்றும், மிஸ்ரை முழுதும் கைப்பற்றிய பின்னர் அப்பால் தரைமார்க்கமாகவே முழு அரபு நாட்டையும் வென்றுவிடலா மென்றும், முஸ்லிம்களும், அவர்கள் மதமும், அவர்கள் சாம்ராஜ்யமும் பகற்கனவில் தகர்ந்த புழுதிமாளிகை யாகிவிடுமென்றும் லூயீ மன்னருக்கு உபதேசிக்கப் பட்டது.
பேராசையும் மிருககுணமும் படைத்த லூயீக்கு வாயில் எச்சில் ஊறியது. ஒரு சிறு நங்கையை வெல்வது அந்தப் பெரிய லூயீக்கு எம்மாத்திரம்! ஆலோசிப்பதற்கு என்ன இருக்கிறது? தரைமார்க்கமாகச் சென்று சுல்தானின் படைகளை யெதிர்க்க வேண்டிவருமே என்கிற பயமும் கிடையாது. மிஸ்ரிலோ, கேவலம் ஒரு சிறு பெண்பிள்ளை அரசாளுகிறாள். முன்பு மலிக்குல் காமில் ஆட்சியின்போது கிறிஸ்தவர்கள் கிட்டத்தட்டக் காஹிராவையே கூட விழுங்கக்கூடிய எல்லைக்கு எட்டியிருந்தனர். இப்போது ஒரு பெரிய படையைத் திரட்டிக்கொண்டு, கடலைக் கடந்து, தமீதாவை ஒரேநாட் போரில் முறியடித்துவிட்டு, நீல நதி வழியே மேல்நோக்கி முன்னேறிக் காஹிராவை ஒரு நிமிஷத்தில் விழுங்கவேண்டும் என்று லூயீயின் மூளை மிகவேகமாக வேலை செய்தது.
நினைப்பதொன்று, செய்வது மற்றொன்று, என்னும் கெட்ட வழக்கம் லூயீக்குக் கடையாது. அவர் அதே க்ஷணத்தில் போப்பாண்டவரிடம் சென்றார். தமது திட்டத்தை விளக்கினார்: “சுல்தானும் சுல்தானின் படைகளும் வெளியே; மிஸ்ரும் ஓர் அற்பப் பெண்பிள்ளையும் மட்டுமே இங்கே! எனக்கு உத்தாரம் தாருங்கள். ஒரே கணத்தில் அந்த எதிரிகளைச் சின்னா பின்னப்படுத்தி வந்துவிடுகிறேன்!”என்று தாள்பணிந்து மண்டியிட்டுக் கேட்டுக்கொண்டார்.
லூயீயின் இவ்வார்த்தைகளைக் கேட்டுப் போப்பாண்டவரின் உள்ளம் பூரித்துப் புளங்காகிதமாய் மயிர்பொடித்து விட்டது. அவரது ஞானக்கண் முன்னே இப் பூவுலகம் முழுதுமே பரலோக ராஜ்ஜியமாய் விட்டதேபோல் காணப்பட்டது. அவர் உதடுகள் மீசையுடன் ஆனந்தத்தால் துடிதுடித்தன. கன்னங்களில் குழிவிழுந்தது. மேனியெல்லாம் மயிர்க்கூச் செறிந்தது. பலமுறை பரீஷையில் தவறியவன் இறுதிமுயற்சியில் முதல் ஸ்தானம் பெற்று வெற்றியடைந்தால், அவனதுள்ளம் எவ்வளவு துள்ளிக்குதிக்குமோ, அதைவிட அதிகமாக அவர் குதூகலங் கொண்டுவிட்டார்! இரண்டு மூன்று நிமிஷம் போப் செயலிழந்து வாளா நின்றுவிட்டார்.
இத்தனை நாட்களின் கடுஞ்சோதனையின் பயனாக, தேவன் இறுதியாகத் தன் பரலோக ராஜ்ஜியத்தை இப்பூமியில் ஸ்திரப்படுத்துவதற்காக இம் மாதிரியான வீரமிக்க தீரர் லூயீயை அனுப்பியருளினானோ என்னும் ஆனந்தக்களிப்பால் அப் போப்பாண்டவரின் கண்களில் ஆனந்தபாஷ்பம் அரும்பிப் பொழிந்தது. தமக்கு முன்னால் போப்பாஸனத்தில் வீற்றிருந்த அத்தனை போப்புக்களுக்கும் கிடைக்காத மாபெருங் கீர்த்தியும் கியாதியும் தமக்குக் கிடைக்கப்போகின்றனவே என்னும் பூரிப்பால் அவருடைய இரு தோள்களும் அகன்று விரிந்தன. கால்களை மண்டியிட்டுத் தலைவணங்கி முழந்தாள் மீது நின்றுகொண்டிருந்த லூயீ மன்னரின் தலைக்குமேலே போப்பாணடவர் தம் வலக்கரத்தின் ஆட்காட்டிவிரலை நீட்டிச் சிலுவைக்குறி தீட்டினார். அவருக்கிருந்த ஆனந்தப் பெருக்கின் காரணத்தால் அவர் தம்மையறியாமலே இப்படியெல்லாம் செய்தார்.
“மகனே! நீ அந்த அஞ்ஞானிகளை – கிறிஸ்து விரோதிகளை – அடியோடு அழித்தொழித்துவிட்டு, மாபெரும் வெற்றியுடனே திரும்பக்கடவாயாக! தேவனும், தேவகுமாரனும், பரிசுத்த ஆவியும் உனக்குச் சதா உதவிபுரிவர். தேவலோக ராஜ்ஜியம் சமீபித்துவிட்டது. ‘வெற்றியும் கொற்றமும்’ நின்னதே!”
அச் சுருக்கமான ஆசிச் செய்தியை மெளனமாய் ஏற்றுக்கொண்ட லூயீ, வலதுக்காலைத் தூக்கி நிறுத்தி, போப்பாண்டவரின் கைகளைப் பயபக்தி விசுவாசத்துடன் நீட்டிப் பிடித்து முத்தமிட்டார்.
போப்பும் லூயீயைத் தாங்கித் தூக்கிவிட்டுக் கட்டியணைத்து ஆசையுடன் ஆலிங்கனம்செய்து தழுவி விட்டார். ‘தேவனின் பிரதிநிதி’யாகிய போப்பாண்டவரின் கருணையைப் பெற்றுக்கொண்டுவிட்ட லூயீ மன்னர் அகமகிழ்ச்சியால் துள்ளிக் குதித்து, நேரே தம் சொந்தநாடு சென்றார். மிகக் குறுகிய காலத்துக்குள் இலக்ஷக்கணக்கான கிறிஸ்தவர்களைப் படைதிரட்டிக்கொண்டு, தாமே தலைமை தாங்கி, மத்தியதரைக் கடலைக் கடக்கத் தலைப்பட்டார்.
துரதிருஷ்டம் பிடித்த தமீதாவுக்குப் பழைய ஆபத்து மீண்டும் வந்துவிட்டது! லூயீயின் படைகள் தமீதாவை நேரே முற்றுகை யிட்டுவிட்டன.
அன்று பிரசவக்கட்டில் ஷஜருத்துர் ஸாலிஹிடம் கூறிய தீர்க்கதரிசனம் இவ்வண்ணமாக மெய்த்துப் போய்விட்டது! ஆண்டவன் சோதனை அரிய சோதனையே!
தொடரும்…
-N. B. அப்துல் ஜப்பார்
<<அத்தியாயம் 26>> <<அத்தியாயம் 28>>