பிறைக் கொடிகளை ஏந்திக் கொண்டு, ஜாஹிர் ருக்னுத்தீனின் தலைமையில் முஸ்லிம்களின் படைத்திரள் தமீதா நோக்கி வடக்கே தற்காப்புப் போர் புரியச் சென்றது என்று முன்னம் நாம் குறிப்பிட்டோமல்லவா? அந்தப் பெரிய சேனை தமீதாவை

முற்றுகையிட்டுக் கிறிஸ்தவர்களைத் திகைக்கச் செய்து விட்டது. அதுவரை லூயீ மன்னரின் உபதேசத்துக்குச் செவிதாழ்த்தாமல், தாம் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று நிலை தடுமாறிய வாழ்க்கை நடாத்திக் கொண்டிருந்த “சிலுவை யுத்த வீரர்கள்” இத் தாக்குதலைக் கண்டு திடுக்கிட்டார்கள். எனினும், அவர்களனைவரும் சற்றும் முன்பின் யோசியாது முஸ்லிம்களைத் தாக்கத் தலைப்பட்டனர்.

நிலைமையின் தன்மையை நன்குணர்ந்துகொண்ட லூயீ மன்னர் இனிச் சும்மா இருப்பது ஆபத்தென்று கண்டு, நீலநதியின் கரையோரத்தை அவசரம் அவசரமாகப் படைகளைக் கொண்டு பலப்படுத்தத் துணிந்தெழுந்தார். இந்தப் போரில் தோல்வி அடைவதாயிருந்தாலும், புறமுதுகிட்டுத் தாய் நாட்டுக்குத் திரும்பி ஓடுவதைவிட, நதியுள் புகுந்து நேரே தெற்கு நோக்கிக் காஹிரா மீது பாய்வதே மேல் என்று லூயீ கருதித் திட்டம் வகுத்தார். இதுவரை அவர் பேச்சைக் கேளாத படையினர் இப்போது அவரையே கண்கண்ட தெய்வமாகக் கருதி அடிபணிய ஆரம்பித்தனர்.

தமீதாவின் போர் மிக்க உக்கிரமாக நடந்துகொண்டிருந்தது. இரத்த வெள்ளத்தில் பல தலைகள் மிதக்க ஆரம்பித்தன. இரு க­ட்சியினர்க்குமே உரோஷம் உச்சத்தில் ஏறி நின்றமையால், மிகவும் வீரத்துடன் அவர்கள போர் புரிந்தார்கள். எனினும், ஒரே ஒரு வித்தியாசம் மட்டும் காணப்பட்டது: முஸ்லிம்கள் அனைவரும் சற்றும் நிலை குலையாப் பெரியதோர் ஒற்றுமையுடன் சண்டையிட்ட வண்ணமிருக்க, ஐரோப்பாவிலிருந்து வந்த நசாராக்களுள் கட்சிப் பிளவும், “நீ பெரியவன், நான் பெரியவன்” என்னும் வேற்றுமையுணர்ச்சியும் போர்க்களத்திலும் காட்சியளிக்க ஆரம்பித்து விட்டன. இன்றைக்குங்கூட இவ்வுலகின் பல வர்க்கத்தினர் முஸ்லிம்களைக் கண்டு ஆச்சரியமடைவதும், இவர்களைக் கண்டு அஞ்சுவதும், இவர்களை வியப்பதும் முஸ்லிம்களிடையே நிலவும் அதியற்புதமான ஒற்றுமையைக் கண்டேயன்றோ?

எட்டு நாட்கள் மட்டும் முரட்டுப் பிடிவாதமான போர் நிகழ்ந்தது. கிறிஸ்தவர்களிடையே மட்டும் முஸ்லிம்களைப் போன்ற ஒற்றுமையிருந்திருக்குமாயின், ஒரே நாளில் இவர்களை முறியடித்திருக்க முடியும். என்னெனின், முஸ்லிம்களின் படை ஷாமிலிருந்து வந்த களைப்பால் பலஹீனமடைந்திருந்தது. ஆனால், கிறிஸ்தவர்களோ, தமீதாவில் காலடி வைத்த நாளாகத் தின்று கொழுத்து, உண்டு உல்லாச வாழ்க்கை நடாத்தியிருந்தார்கள். இதுவுமல்லாமல், அவர்களின் படைப்பலம் முஸ்லிம்களைவிடப் பன்மடங்கு அதிகமாக இருந்தது. ஆனால், ஆண்டவன் இரு கட்சியினர்க்கும் ஏற்றதான நீதியையே வழங்கிக்கொண்டிருந்தான்.

முடிவாக நடந்த ஒன்பதாவது நாட் போரிலே முஸ்லிம்கள் வெற்றி பெற்று விட்டார்கள். தமீதா இவர்களுடைய கைக்குக் கிட்டிவிட்டது. லூயீ மன்னர் தம் திட்டத்தை இடைவிடாமல் பலப்படுத்திக் கொண்டே வந்தபடியால், தமீதாவைக் கைவிட்டதும், எல்லாக் கிறிஸ்தவப் படைகளையும் கலங்களில் ஏற்றிக் கொண்டு, அவர் நீல நதியில் குதித்து விட்டார். சண்டையில் வெற்றி பெற்றுங்கூட, விரோதிகளை மத்திய தரைக்கடல் பக்கம் ஓட்டிவிடாமல், காஹிராப் பக்கம் தெற்கு நோக்கி விரட்டவேண்டிய சங்கடம் முஸ்லிம்களுக்கு விளைந்துவிட்டது. எனவேதான், காற்றினும் கடிய வேகத்தில் பறக்கும் குதிரைமீதேறி ஒரு தூதன் சுல்தானிடம் இவ் விஷயத்தை அவசரமாகத் தெரிவிக்க ஓடிவந்தான். அவன் வந்து சொன்ன செய்தியைக் கேட்டு அரசவையே திடுக்கிட்டுப் போயிற்று.

அப்பால் அரை நிமிஷமும் கழியவில்லை. அன்று அரசவையில் முற்கூட்டியே முடிவு செய்யப்பட்ட தற்காப்புச் சம்பந்தமான அத்தனை ஏற்பாடுகளும் உடனே எடுக்கப்பட்டன. ஷாம் சிற்றரசருக்கும் விசேஷத் தூதர்களையனுப்பி, அங்குள்ள படைகளைச் சீக்கிரம் இங்கு அனுப்பிவைக்கும்படி செய்தி அனுப்பப்பட்டது. இரவு வந்தடைவதற்குள் காஹிராவே அமளி குமளிப்பட்டு விட்டது. தற்காப்பு ஜிஹாதுக்காக எல்லா ஆடவரும் பெண்டிரும் ஆயத்தமாயினர். மம்லூக்குகள் தங்களின் மேன்மைக்காக அளிக்கப்பட்ட வாக்குறுதியின் மகிழ்ச்சியால் சொல்லொணா ராஜபக்தி விசுவாசத்துடனே சித்தமாயினார்கள். அதிலும், புர்ஜீகளும் பஹ்ரீகளும் தாம்தாமே மற்றவரைவிட முன்னிற்க வேண்டுமென்னும் ஆவலால் போட்டியிட்டுக் கொண்டு ஒருவரையொருவர் விஞ்சத் தலைப்பட்டார்கள். அன்று காஹிரா அளித்த காட்சியை எப்படி இந்த ஒரு பேனாவால் வருணிப்பது?

வீதிகளெல்லாம் ஒரே அமளி குமளியாயிருந்தன. மக்கள் அனைவரின் வதனத்திலும் பீதி குடிகொண்டிருந்தாலும், உள்ளத்துள்ளே வீரம் துடித்துக்கொண்டிருந்தது. அவரவரும் தத்தம் கையில் அகப்பட்ட ஆயுதத்தை வாரிச் சுருட்டிக்கொண்டிருந்தனர். தள்ளாத வயதடைந்த முதியவர்களும் தங்களால் போருக்குச் செல்ல முடியாதென்றாலும், செல்கிறவர்களுக்கு உதவி புரிந்துகொண்டிருந்தார்கள். இளவல்களும் வாலிபர்களும் தங்கள் ஆத்திரத்தைத் தணித்துக் கொள்ளும் தருணத்தை அதிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். பெண்களோ, களத்தில் போர் புரியும் வீரர்களுக்கான உதவிகளைச் செய்வதற்காக வேண்டிய பண்டங்களைச் சித்தப்படுத்தினார்கள். அங்கஹீனர்களும் பிணியாளிகளும், தாங்களும் அந்தப் புனித ஜிஹாதிலே கலந்துகொள்ளக் கொடுத்து வைக்காமற் போயினோமே என்று ஏங்கிப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தார்கள்.

இரவு பகல் எந்த நேரத்திலும் எதிரிகள் காஹிராவுள் வந்து குதித்துவிடக் கூடுமேயென்று எல்லா மக்களும் ஊணுங்கொள்ளாமல், உறங்கவுமில்லாமல் சதா விழித்துக்கொண்டிருந்தனர். மிஸ்ரின் ஸல்தனத்தையே ஒழிப்பதற்காகப் படையெடுத்து வருகிற கிறிஸ்தவ மறமாக்களை எப்படியாவது அடியோடு நிர்மூலமாக்கிவிட வேண்டுமென்னும் பேராவலும், தேசபக்தியும், மதாபிமானமும் மிக்க மூமின்கள் காஹிராவிலே இவ்வண்ணமாக எதிரிகளின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அரண்மனையிலோ, எல்லா விதமான யுத்த ஏற்பாடுகளும் நடந்துகொண்டிருந்தன. ஷஜருத்துர்ரின் தலைமையிலே பல காரியங்கள் கவனிக்கப்பட்டன. உணவுப் பண்டங்கள் ஏராளமாகச் சேகரித்து வைக்கப்பட்டன; ரொட்டிகளும் காய்ந்த பேரீச்சங் கனிகளும் களஞ்சியங்களிலே நிரப்பப் பட்டன. பார்லி, கோதுமை முதலிய தானியவகைகள் போதுமான அளவுக்கு எங்கெங்கிருந்தோ கொண்டுவந்து மூட்டை மூட்டையாக அடுக்கப்பட்டன. அலிகளும், அடிமைகளும், அரண்மனைச் சிப்பந்திகளும் தத்தம்மாலான அளவுக்கு உணவுப் பண்டம் சேகரிப்பதில் முனைந்தார்கள். பால் கறக்கும் பசுக்களும், பெண்ணொட்டகங்களும் குதிரை லாயங்களில் கொண்டு வந்து அணியணியாய் நிறுத்தப்பட்டன. போர்க்களத்துக்குச் சென்றவைபோக எஞ்சியிருந்த குதிரைகள் உயர்தரமான தீனிகொடுத்து உரம் ஏற்றப்பெற்றன. அரண்மனை மூலைமுடுக்கெல்லாம் எதிரியின் ஒற்றர் எவரும் புகுந்துவிட முடியாதபடி எச்சரிக்கைகள் எடுக்கப்பட்டன.

சுல்தானோ, உட்காரவும் நேரமின்றி, ஆயுதங்கள் தயாரிக்கப்படும் இடத்திலே கால் கடுக்க நின்றுகொண்டு பொறுமையற்றவராய்த் தாமே கூட உதவி செய்துகொண்டிருந்தார். பல்லாயிரக் கணக்கான ஈட்டிகளும், வாட்களும் போர் போல் குவிந்துகொண்டிருந்தன. ஒரு மூலையில் அம்புகள் வடிக்கப்பட்டன. பழுதாய்ப் போன ஆயுதங்கள் மின்னல் வேகத்தில் செப்பனிடப்பட்டன. இருப்புக் கொல்லர்கள் ஏற்கெனவே மிகக் களைத்திருந்தும், ஸல்தனத்தைக் காப்பாற்ற வேண்டிய முழுப்பொறுப்பும் தங்களையே சார்ந்திருக்கிறதென்று ஊக்கம் பெற்றுத் தங்கள் களைப்பை மறந்து, ஓங்கி ஓங்கிச் சம்மட்டியை அடித்தார்கள். அவரவரும் இந்த ஜிஹாதில் தங்கள் தங்கள் கடமையை உணர்ந்திருந்த உணர்ச்சியே இவ்வாறாய திட்டங்களாக உருப்பெற்றுவிட்டன.

ஸாலிஹ் நஜ்முத்தீன் உணவருந்தி இரண்டு நாட்களாகி விட்டன. மெய்வருத்தம் பாரார், பசிநோக்கார், கண்துஞ்சார், … கருமமே கண்ணாயினார் என்னும் வாக்கு அவருக்கு முற்ற முற்றப் பொருத்தமானதாய்க் காணப்பட்டு வந்தது. அவர் அங்குமிங்கும் அலைந்தலைந்து நடந்தார்; சில இடங்களில் கால் கடுக்க நின்றார். தம் முன்னோர்கள் காப்பாற்றிய இந்த ஸல்தனத்தின் கெளரவத்தை நிலை நிறுத்த வேண்டிய மகத்தான பொறுப்பை ஆண்டவன் தம் தலைமீது போட்டுவிட்டானே, அப்பொறுப்பை எப்படியேனும் நிறைவேற்றித் தீரவேண்டுமே என்னும் சகிக்கொணாக் கவலையுடன் அவர் அல்லு பகலாய்ப் பாடுபட்டார். பட்ட பாடுகளின் ஊக்கத்தால் பசியும் தெரியவில்லை; தாகமும் எடுக்கவில்லை. சென்ற முறை தம்மையே ஈடாக அனுப்பி முஸ்லிம்களைக் காப்பாற்ற அவர் தந்தை கடுமுயற்சிகளெல்லாம் எடுத்திருக்க, இம்முறை தாம் இப்படித் தியாகம் புரிவது மிகவும் குறைவனதே என்று எண்ணிக்கொண்டார்.

ஆண்டவனிட்டுள்ள இச் சோதனையிலிருந்து எப்படியாவது மீண்டு, இஸ்லாத்தின் கெளரவத்தையும் நீதியையும் நிலை நாட்ட வேண்டுமே என்னும் ஏக்கமே அவரை வாட்டிக்கொண்டிருந்தது. தாம் முடி சுமக்கும் அரசனென்ற அகம்பாவம் சற்றுமில்லாது, இந்த ஏற்பாட்டுக்காக மனமுவந்து உழைத்துக்கொண்டிருந்த மற்றையோருடன், நபிபெருமானார் முன்னம் அகழ்யுத்தத்தின் பொழுது செய்ததே போல இவரும் ஒருவராகவே நின்றுகொண்டு பாடுபட்டார்; உழைத்தார்; நெற்றிவேர்வையை நிலத்தில் சிந்தினார்; அடிக்கடி ஆகாயத்தின் பக்கல் கையேந்தி ஆண்டவனிடம் குறையிரந்தார்; சகல முஸ்லிம்களின் க்ஷேமத்தை வேண்டிக் கண்ணீருகுத்தார். கலங்காத உள்ளம் படைத்த சுல்தான் ஸாலிஹே இப்படிச் சோக முற்றதைக் கண்டு ஏனையோரின் உள்ளமனைத்தும் குழைந்து நெக்குநெக்குருகின.

என் செய்யலாம்! இஃது ஆண்டவன்விட்ட சோதனையன்றோ! மனிதரால் ஆகக்கூடிய முயற்சியனைத்தும் செய்து முடித்த போதினும், இறுதி வெற்றி தோல்வியை அளிக்கும் வல்லமை அவனிடத்தேயே யுள்ளதன்றோ!

சுல்தான் ஸாலிஹும் அவர்தம் பாரியையும் இந்த ஜிஹாதெ கபீருக்காகப் பட்டபாடுகளை முஸ்லிம் உலகம் என்றென்றும் பாராட்டிக்கொண்டாடக் கடமைப்பட்டிருக்கிறது. என்னெனின், லூயீ மன்னர் மிஸ்ரைக் கைப்பற்றவென்று கிளப்பிய சாதாரண ராஜீய தந்திரமுள்ள யுத்தமன்று அது. ஆனால், முஸ்லிம்களையே இவ்வுலகத்தில் இல்லாது அழித்தொழித்துத் துடைத்து விடுதற்காக அவர் கிளப்பிய அறை கூவலேயாகும் அப் படையயடுப்பு. அவ்யுத்தத்தில், ஒன்று இஸ்லாம் வெற்றி பெற்று உன்னதத்துக்கு உயர வேண்டும்; அல்லது அநாகரிக ஐரோப்பிய கொள்ளைக் கூட்டத்தினரின் மிருகத்தனத்துக்குப் பலியாகி நசித்தொழிய வேண்டும். இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த சத்திய – அசத்திய சோதனைப் போராட்டத்தில் நீதியை நிலைநாட்டப் பாடுபட வேண்டும் என்னும் கடமையை உணர்ந்த ஐயூபி சுல்தானும் அவர்தம் அருமந்த மனைவியும் இவ்வாறெல்லாம் சகல முஸ்தீபுகளும் புரிந்ததில் வியப்பென்ன இருக்க முடியும்?

எட்டு நாட்கள்வரை கால் கடுக்க நின்று மேற்பார்வையிட்டு, எல்லா ஏற்பாடுகளையும் நல்ல முறையில் செய்து முடித்த சுல்தான் சிறிதே ஓய்வெடுத்துக் கொள்வதற்காக அரண்மனை அந்தப்புரம் புக்கார்.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<அத்தியாயம் 33>> <<அத்தியாயம் 35>>

<<ஷஜருத்துர் முகப்பு>>

Related Articles

Leave a Comment