சிந்தித்துப் பாருங்கள்! நாடாளும் சுல்தான் நெருக்கடியான நேரத்திலே உயிர் துறந்திருக்கிறார். அக்கணமே அரியாசனம் ஏற வாரிஸ் ஒருவரும் மிஸ்ரிலோ, அல்லது காஹிராவிலோ இல்லை; அரசியே அரியாசனம் ஏறலாமென்றால், அவர் அரச குடும்பத்தில்

உதித்தவராயில்லை; அல்லது கலீல் உயிருடனே இருந்திருந்தாலும், இதுபோது அந்த “மைனர் இளவரசன்” சார்பாக ஷஜருத்துர் அரசாட்சி நடத்தலாம். எல்லாம் போகட்டுமென்றாலும், எதிரிகள் காஹிராவின் எல்லையை எட்டிக் கொண்டிருக்கிறார்கள். போதாக் குறைக்கு, புர்ஜீ மம்லூக்குகள் எந்த நேரத்தில் தாங்கள் ஸல்தனத்தைக் கைப்பற்றிக் கொள்ளலாமென்று தக்க தருணத்தை ஆவலுடனே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பொது மக்களின் ஊக்கத்தையும் குன்றவிடக் கூடாது; புர்ஜீகளுக்கும் தருணம் வாய்க்க விடக் கூடாது; சுல்தான் காலஞ் சென்ற விஷயத்தை எவ்வாற்றானும் வெளியிடத் தகாது; இளவரசர் ஷாமிலிருந்து திரும்புகிறவரை சுல்தான் உயிருடனே இருப்பது போன்ற பொய்ந் நாடகத்தைத் திறமையுடன் நடித்து முடிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, நெஞ்சைப் பிளந்து கொண்டு பீரிட்டு வரும் துக்கமென்னும் கடுஞ் சோகத்தையும் அமுக்கிப் பிடித்து அழுத்திக் கொண்டு நடக்க வேண்டும்… இவையெல்லாம் இலேசான காரியங்களா? அதிலும் அவற்றையெல்லாம் ஒரு பெண்மணியால் செய்து காட்டத்தான் முடியுமா?

சிறிதே சங்கடமான வேளையில், அல்லது சற்றே இசகுபிசகான சந்தர்ப்பத்தில் சாதாரணக் குடும்பத்தில் ஒருவர் திடீரென்று இறந்து விட்டால், அக் குடும்பத்தைச் சார்ந்தவர் அனைவரும் நிலைதடுமாறிப் போவதையும், நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்று ஏங்கித் தவித்துப் பதறுவதையும், அங்குமிங்கும் ஓடியாடி ஒன்றும் முடியாமல் பிறர் சகாயத்தைப் பெற்று ஒரு விதமாக மற்ற வேலைகளை முடிப்பதையும் நாம் காண்கிறோம். அம் மாதிரியான இடைஞ்சலில் மாட்டிக் கொண்டவர்கள் இறைவனைத் தூஷிப்பதையும், ஓடி ஓடிப் பார்த்துவிட்டு மனமுடைந்து, ‘தேரோ டலைந்து தெருவோடு நின்று’ தந் தலைமேல் கையை வைத்துக் கொண்டு அலறித் துடிப்பதையும் நாம் பார்க்கிறோம். அத்தகையினர் அவ்வகால மரணத்தால் ஏற்பட்ட சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு எடுத்துக் கொள்ளும் அவசர முயற்சிகள் ஏற்கெனவேயுள்ள உபத்திரவங்களைத் தீர்ப்பதற்கு மாறாக அவற்றை இன்னம் கடுமையாக்கி விடுவதும் சகஜமாய் இருக்கிறது.

இவற்றிற்கெல்லாம் அவர்களை நோவதிலே பயனில்லை. எதிர்பாராத சோதனையை ஆண்டவன் இறக்கும்போது, அதைச் சமாளிக்க இயல்பில்லாதவர்களின் எண்ணிக்கையே இவ்வுலகெங்கும் நிறைந்து காணப்படுவதால், அவர்களும் அப்படி நிலை தடுமாறி, குளிக்கப்போய்ச் சேற்றைப் பூசிக்கொண்டு வந்த கதையாக, ஓர் உபத்திரவத்தைக் களைந்து கொள்ள நாடி, ஓராயிரம் உபத்திரவங்களை உற்பத்தி செய்துகொண்டு விடுகிறார்கள். “ஏ ஈமான் கொண்டவர்கள்காள்! பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்வின்பால்) உதவி தேடுங்கள்!” என்னும் வேத வாக்கியத்தை ஓதுவர். சோதனைக்குரிய வேளை வந்து விடுங்கால், நிலைதடுமாறி நாஸ்திகத்துள்ளும் இழிந்து விடுவர். இஃது இழிசனர் இயற்கை.

ஆனால், ஷஜருத்துர் இந்த மானிட இனப் பலஹீனத்துக்கு ஒரு விதிவலக்காய்க் காணப்பட்டார்!-விதிவிலக்காக மட்டும் திகழவில்லை; ஆயின், இம்மாதிரியான பெருஞ் சங்கடம் விளையும்போதும் எப்படி மனவுறுதியுடனும் மனவொருமையுடனும் சாதிக்க முடியாதவற்றையும் சாதிக்க முடியும் என்பதை உலகுக்கு நிரூபித்துக் காட்டிய உன்னத முன்மாதிரியாய்ச் சரித்திரத்தில் சுடரொளி வீசிக்கொண்டிருக்கிறார்!

“ஆண்களைவிடப் பெண்களுக்கு ஆண்டவன் சற்றுக் கம்மியான ஞானத்தையும், அறிவையும், விவேகத்தையுமே படைத்திருக்கிறான் என்பதில் ஐயமில்லை!” என்று முரட்டு வாதம் புரிகிற மூர்க்க குணம் படைத்த “ஆண்கள்” என்போர் இனி வரப்போகும் விருத்தாந்தத்தைப் படித்துப் பார்த்து, பழுதடைந்து போயுள்ள தங்கள் மூளைகளைச் செப்பஞ் செய்து கொள்வார்களாக.

ஜாஹிர் ருக்னுத்தீனிடம் வாதுபுரிந்து சூளுறவு செப்பிய ஷஜருத்துர் தனியே சென்று ஒரு மூலையில் குந்திக் கொண்டு, நடிக்க வேண்டிய நாடகத்துக்குரிய விரிவான திட்டத்தைச் சுருக்கமாக ஆராய்ந்தார். அன்று நள்ளிரவுக்குள் எல்லாவற்றையும் உள்ளத்துள்ளே வகுத்துக் கொண்டு விட்டபடியால், அக்கணமே அவற்றை அமல் நடத்த ஆரம்பித்தார்.

சுல்தானின் பிரேதம் இருந்த அறையிலே ஹக்கீமும், முற்கூறிய இரு அலிகளும் அசையாது நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அது சிறைவாசத்தை விடக் கடினமாய் இருந்ததுடன், உயிரற்ற சவத்தின் முன்னே மவுனமாய் நின்று கொண்டிருந்தது இன்னம் பெரும் சங்கடமாகவே தோன்றிற்று. தங்களை அந்த இடத்திலிருந்து விடுவித்து விட்டுவிட்டாலே போதுமென்று அவர்களுடைய உள்ளங்கள் உண்மையிலே ஏங்கிக்கொண்டிருந்தன. உயிருடனே புதைகுழியுள் புதைக்கப்பட்ட மனிதர்களுக்கும் அவர்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசந்தான் இருந்தது; உயிருடன் புதைக்கப்பட்டவர் மற்றொரு பிரேதத்தைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது; ஆனால், அவ் வறையில் இருந்தவர்களோ, கண்ணெதிரில் ஒரு பிரேதத்தைப் பார்த்த வண்ணமே இருந்தார்கள்.

அந்த நள்ளிரவிலே ஷஜருத்துர் அவ் வறைக்குள்ளே நுழைந்தார். கதவை உட்புறம் பூட்டிக்கொண்டு, அப் பிரேதத்தின் மேல் விழுந்து மெல்லச் செறுமினார்.

அவ்வாறு அழுது வடிந்த வதனத்தை ஷ­ஜருத்துர் உயர்த்தினார்; தொண்டையை அடைக்கிற துக்கத்தைச் சிரமத்துடன் மென்று விழுங்கினார். அங்கு நின்ற மூவரையும் பரிதாபத்துடனே பார்த்தார். சாதாரண காலமாயிருந்து, ஸாலிஹ் மன்னர் மாள வேண்டிய மாதிரியில் மாண்டிருந்தால், இந்த நான்கு பேர் மட்டுமா அம் மையித்தண்டை இருந்திருப்பார்கள்? அப்பொழுது அவர்கள் இவ்வளவு திருட்டுத்தனமாகவும் இரகசியமாகவுமா துக்கங் கொண்டாடி இருப்பார்கள்? ஸாலிஹின் சகோதரர் அபூபக்ர் ஆதில் கொலை புரியப்பட்ட போது, அச் சவத்தை மதிப்பதற்கு ஆளில்லாமற் போயினமையால், அப்படியாயிற்று. இப்போதோ, ஸல்தனத் முழுதுமே புரண்டுருண்டு அழுது பிரலாபிக்க முடியுமென்றாலும், விஷயத்தை வெளியே விட வழியில்லாமற் போயினமையால், இப்படியாயிற்று. அல் மலிக்குல் காமில் பெற்ற இரு குமாரர்களுக்கும் இவ்வாறாய வின்னியாசமான இறுதிக் காலத்தை ஆண்டவன் விதித்திருந்தான் போலும்!

ஷஜருத்துர் வேகமாக எழுந்தார். மீண்டும் அவ் வறைக்கதவைத் திறந்து கொண்டு வெளியேறி, வெளிப் பக்கம் பூட்டைப் பூட்டிவிட்டு, நேரே ஜாஹிர் ருக்னுத்தீன் வாசஞ்செய்யும் பகுதிக்குத் தனியே நடந்து சென்றார். அந்தச் சேனைத் தலைவரின் வாசஸ்தலம் அரண்மனையின் பின்புறத்திலே இருந்தது. அன்று பெளர்ணமி கழிந்து இரண்டாவது நாளே ஆதலால், நிலா வெளிச்சம் இருந்தது. நவம்பர் மாத இறுதியின் நளிர்மிக்க அக் குளிரான இரவிலே பனிமண்டலம் எங்கும் புகைபோல் சூழ்ந்துகொண்டிருந்தது. அப் பனிமேகத்தூடே சந்திரனின் ஒளி ரேகைகள் மிகவும் மங்கலாகவும் மந்தணமாகவும் கம்மியதேபோல் காணப்பட்டன. பனிவாடையாலும், நள்ளிரவின் கடுங்குளிராலும் எல்லா உயிர்ப் பிராணிகளுமே விறைத்துப் போயிருந்தபடியால், அரண்மனையின் திறந்த வெளிகளிலே கம்பளியைப் போர்த்துக்கொண்டு காவல் புரிந்து நின்ற வீரர்களின் உதிரமெலாம் சிலுசிலுப்பால் குளிர்ந்து உறைந்துகொண்டிருந்தது.

உடல் சிலிர்க்கச் செய்யும் கடுங்குளிர் காலங்களில் போர் நிகழ்ந்தால், எப்படி இருக்குமென்பதைப் போர்முனைகளுக்குச் சென்றுவர நேர்ந்தவர்களே மிக நன்றாய் உணரமுடியும். அத்தகைய குளிர் காலத்தின் நடு நிசியிலே, யுத்த நிலைமையை முன்னிட்டுச் சென்ற பல நாட்களாகவே அங்குள்ள காவலர்கள் கண்ணயராமல் அல்லு பகல் அனவரதமும் பணிபுரிந்து வந்தார்களென்றாலும், அன்று அவர்களையும் அறியாமலே அயர்ச்சி மிகுந்துபோய், அரை உறக்கமாய்த் தூங்கி வழிந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் இத்தனை நாட்களாக எதிரிகள் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து போயினமையால், இன்று தளர்ச்சியுற்றுப் போயிருந்தார்கள். அன்றியும், கால் கடுக்கப் பல நாட்கள் தொடர்ச்சியாய் நின்று கொண்டு ஏற்பாடுகளனைத்தையும் மேற்பார்வையிட்டு வந்த சுல்தானும் சுல்தானாவும் அந்தப்புரத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்களென்று கேள்வியுற்ற அக் காவலர்கள் தாங்களும் தங்கள் ஸ்தானத்தில் நின்றபடியும், அமர்ந்தபடியும், சாய்ந்தபடியும் “ஓய்வெடுத்துக்கொண்டு” இருந்தார்கள்.

எனவே, அந் நேரத்தில் அரசியார் பனிமண்டலத் தூடே சேனைத் தலைவரின் அறைப் பக்கம் விரைந்து சென்றதை ஒருவரும் பார்க்கவில்லை. ருக்னுத்தீனும் உறங்காமலே தம் படுக்கைக்குப் பக்கத்தில் மேலுங் கீழுமாக உலவிக்கொண்டிருந்தார். சுல்தானா அங்கு வந்ததை அவர் பார்த்ததும், ஓடி வந்து அரசிமுன் நின்றார்.

ஷஜருத்துர் மெளனமாக ருக்னுத்தீனுக்கு ஜாடை காண்பித்து, அவரைத் தம் பின்னோடே அழைத்துக் கொண்டு மீண்டும் அந்தப்புரத்துள் புகுந்தார். பின்னர் இருவரும் அரசியின் அந்தரங்க அறைக்குள்ளே சென்று அமர்ந்து குசுகுசு வென்று பேசினார்கள் :

“மலிக்கா! இந் நேரத்தில் என்னைத் தாங்கள் இங்கு அழைத்து வந்த காரணம் என்னவோ?”

“நாளை விடிந்த பின்னரும் பிரேதம் சுல்தானின் சயன அறையில் இருப்பது நம் திட்டத்துக்கு ஒத்து வராதென்று நினைக்கிறேன். எனவே, இக் கணமே அதை நாம் வேறிடத்தில் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும்.”

“ஏன் அப்படி?”

“எவ்வளவு வியாதியாய் இருந்தாலும் சுல்தான் தற்போதுள்ள நிலைமையில் சயன அறையிலேயே புகுந்துகொண்டிருக்க மாட்டாரே என்று எவரும் ஐயறலாம் அல்லவா? எனவே, நாம் அவரை உயிருள்ளவராகவே எல்லார் மனத்துக்கும் படும்படி செய்ய வேண்டுமாதலால், அப் பிரேதத்தை வேறோரிடத்தில் கொண்டுபோய் வைத்துவிட்டு, அந்த இடத்துக்கு எவரும் போகாதபடி பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அரண்மனையில் உள்ளவர்களுங் கூட இரவில் சுல்தான் தமது சயன அறையிலிருந்து தாமதமாகவே வெளியேறிப் போனதாக நினைத்துக் கொள்வார்கள் அல்லவா?”

“அப்படியானால், அப் பிரேதத்தை எங்கே கொண்டு போவது?”

“அதையும் நான் யோசித்து வைத்திருக்கிறேன். நமது அரண்மனையின் கிழக்கு வாயிலருகிலே சுல்தான் வழக்கமாகச் சில சமயங்களில் தங்கும் கூடாரம் இருக்கிறதல்லவா? அங்கே கொண்டுபோய் வைத்துவிடுவோம். இதனால் இரண்டு சவுகரியங்கள் உள்ளன; முதலாவது, ஷாம் தேசத்திலிருந்து தூரான்ஷா திரும்பி வரும்போது அந்தக் கிழக்கு வாயில் வழியாகவே இங்கே நுழைய வேண்டுமாதலால், அவர் இங்குக் காலடி எடுத்து வைக்கும்போதே உண்மையை விளங்கிக் கொண்டு விடுவார். அவருக்கு நான் ஆளனுப்பியபோது, யுத்த விஷயமான காரணத்தைக் கூறியே அனுப்பியுள்ளேனாகையால், அவருக்கு இங்கு வருகிற வரையில் சுல்தான் வியாதியுற்ற செய்தியோ, அல்லது அகால மரணமடைந்த விஷயமோ அறவே தெரியாது. ஆகவே, அவர் இந்தக் கிழக்கு வாயில் வழியே உள்ளே நுழைகிற போதுதான் உண்மையை உணர்ந்து கொள்வார்.

“இரண்டாவதாக, மந்திரிகளும் மற்றப் பிரபலஸ்தர்களும் சுல்தான் அந்தக் கூடாரத்தில் இருக்கிறாரென்றால், அதை இயற்கையென்று கருதுவதுடன், அவரைப் போய் நேரில் பார்த்துத் தொந்தரை கொடுக்க வேண்டுமென்று விரும்பவும் மாட்டார்கள். அக் கூடாரத்தின் வாயிலிலே நீர் அமர்ந்து கொண்டு, மீதி விஷயங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.”

“யோசனை பிடித்தமாகவே இருக்கிறது. ஆனால், எத்தனை நாட்களுக்கு அவ் விடத்திலே நாம் காவல் காப்பது அம்மா?”

“அதைப்பற்றி இப்போது கவலைப்பட வேண்டாம். அத்திட்டத்தில் தவறோ, அல்லது ஐயம் விளையும் இழுக்கோ ஏற்பட்டால், அப்போது வேறு முறையைக் கையாளுவோம். தற்போது இதுதான் நான் நினைக்கும் வழிகள்:- இப்போதே நாமிருவரும், அங்குள்ள இரு அலிகளும் ஹக்கீமும் சேர்ந்து ஒரு போர்த் தளவாடப் பெட்டியில் பிரேதத்தை வைத்து, மெதுவாகத் தூக்கிக் கொண்டு, அந்தக் கிழக்கு வாயிலுக்குக் கொண்டு போவோம். காவலர்கள் கண்ணயர்ந்து காணப்படுகிறார்கள். மூடுபனி மேகமோ எங்கும் சூழ்ந்திருக்கிறது. எனவே, அவர்கள் நம்மைப் பார்த்துவிட வழியில்லை. அப்படி ஓரிருவர் கவனித்தாலும், நீரும் நானும் கண்காணித்துச் சுமந்து செல்கிற தளவாடப் பெட்டியில் யுத்தத்துக்கான ஏதோ இரகசிய ஆயுதங்கள் கொண்டுபோகப் படுவதாகவே நினைத்துக் கொள்வார்கள். யுத்தத்துக்காக நாம் எடுக்கிற எந்த ஏற்பாட்டையும் குறித்து எவருமே ஒருவர் மற்றொருவருடன் பேசிக் கொள்ளவோ, பிரஸ்தாபிக்கவோ தகாதென்று சுல்தான் முன்னமே கடுமையான கட்டளையைப் பிறப்பித்திருப்பதால், அவர்கள் அதை வெளியிட மாட்டார்கள். எனவே, கூடாரத்துக்கு அதைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் பெரிய கஷ்டமேதும் விளையாது.

“அப்பால், சுல்தானுக்காக ஒவ்வொரு வேளை உணவு கொண்டுவரப்படும் போதும், நீர் அதை அக் கூடாரத்தின் வாயிலியே வாங்கிக்கொண்டு, உணவுத் தட்டத்தைத் தூக்கி வரும் அடிமையை அங்கேயே நிற்க வைத்துவிட்டு, உள்ளே கொண்டுபோய் நீரே உண்ண வேண்டும். தின்றது போக மீதியுள்ளவற்றைத் திருப்பிக் கொணர்ந்து அவ் வடிமையிடம் கொடுத்து, அவனைப் போகச் சொல்லி விடவேண்டும். ஞாபகமாக, ஒவ்வொரு வேளையும் ஹக்கீம் சுல்தானின் உடல் நிலைக் கொப்ப இன்ன இன்ன ஆகாரத்தைக் கொண்டுவரச் சொல்கிறார் என்பதைச் சுயம்பாகிக்குச் சொல்லியனுப்பவேண்டும். நான் அரண்மனை வேலையாகவோ, அரசவை விஷயமாகவோ அங்குமிங்கும் அலைவேனென்றாலும், பெரும் பகுதியை அக் கூடாரத் தண்டையே கழிப்பேன்.

“இன்று காலையில் அந்தரங்க அறையில் நான் மற்றப் பிரதானிகளுக்கு உள்ள நிலைமையை அவ்வப்போது தெரிவிப்பதாகச் சொல்லியிருப்பதால், அவர்களிடம் இறுதி வரை சுல்தான் காலஞ் சென்ற விஷயத்தை வெளியிடாமல், சுல்தானின் உடல்நிலை நெருக்கடியாக இருப்பதாகவே சாதித்துக் கொள்கிறேன். அந்த ஒன்பது பேருமே நமக்கு மிகவும் அந்தரங்க நண்பர்களே என்றாலும், அவர்களிடமும் நாம் உண்மையை உரைத்துவிடுவது எப்படியும் அபாயத்தையே விளைக்கக் கூடுமாதலால், நான் அதைச் சொல்ல விரும்பவில்லை. இவ்வாறாக, நான் போட்டிருக்கிற விரிவான திட்டத்தை நீர் திறம்பட அமல் நடத்தினால், நாடகம் இறுதிவரை வெற்றிகரமாகவே நடந்து முடியுமென்று நான் திண்ணமாய் எண்ணுகிறேன்.”

“ஸாஹிபா! மிகவும் விசனிக்கத்தக்க, நரம்பதிர்ச்சியை உண்டு பண்ணத்தக்க இவ் வேளையிலே சிறிதும் மனந் துளங்காமல் இவ்வளவு அபூர்வமான உயரிய வழியைத் தாங்கள் வகுத்திருக்கும்போழ்து, நான் என்னாலான இந்த அற்ப உதவியைக் கூடச் செய்யாமல் இருப்பதை விட இறப்பதே மேலல்லவா? ஆண்டவன் மட்டும் எனக்குச் சக்தியைக் குறைக்காமலிருப்பின், என்னால் இயன்ற அளவுக்கும் மேலாகவே எதையும் அமல் நடத்திக் காண்பிக்கிறேன், என் அரசி!”

உடனே ஷஜருத்துர் எழுந்தார். இருவரும் அப் பிரேதத்தண்டை நெருங்கினார்கள். ஒரு கயிற்றைக் பிடித்து, அகல நீளத்தை அளந்து கொண்டு, எவ்வளவு பெரிய பெட்டி தேவைப்படுமென்பதை நிர்ணயித்தார்கள். சற்று நேரத்தில் ருக்னுத்தீனும் அவ் வறையில் நின்ற இரு அலிகளும் சேர்ந்து வெளியேறினார்கள். அம் மூவரும் விரைவாக யுத்த தளவாடங்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பெரிய போர்ச் சேமிப்பறைகளை நெருங்கினார்கள். சேனைத் தலைவர் ருக்னுத்தீனிடமே அந்த அறைகளுக்குரிய சாவிகள் இருந்தமையால், வேறெவர் துணையுமின்றி அவ் விடங்களுக்குள் தாராளமாய் நுழைய முடிந்தது. பின்னர், தங்களுக்குத் தேவைப்பட்ட அகல-நீள-உயரத்துக்கு ஏற்ற பெட்டியாக ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு வெளியேறினர். அதை ஓர் அலி தன் தலைமீது தூக்கிக்கொள்ள, மற்றிருவரும் பின் தொடர்ந்தனர். இறைவனின் நாட்டத்தால் இதையும் எந்தக் காவலாளியும் பார்க்கவில்லை. என்னெனின், இப்போது மூடுபனிப் படலம் இன்னம் கடுமையாயே இருந்தது.

அந்தப்புரத்தின் சயன அறையுள்ளே அப்பெட்டி கொண்டு வரப்பட்டது. மங்கலாக எரிந்துகொண்டிருந்த ஒரே மெழுகுவர்த்தியின் வெளிச்சத்திலே அடுத்துள்ள வேலைகள் அவசரம் அவசரமாக நடந்தேறின. சுல்தானின் பிரேதம் மெதுவாகத் தூக்கி அந்தப் பெட்டிக்குள்ளே திணிக்கப்பட்டது. பின்பு, சுல்தானின் படுக்கை விரிப்புக்கள் ஒழுங்காக்கப்பட்டன. ஷஜருத்துர்ரின் கடுமையான உத்தரவுப்படி, ருக்னுத்தீனும் மற்றிரு அலிகளுமாகிய மூன்றுபேர் மட்டுமே அப் பெட்டியைத் தூக்கினர். அரசியார் ஹக்கீமின் முகத்தை மறைத்துக் கொள்ளச் சொன்னார். அப் பெட்டியைத் தூக்கிக்கொண்ட மூவரின் பின்னே இவ் விருவரும் தொடர்ந்தார்கள். மெதுவாகவும், நிதானமாகவும், கூடிய வரை இருட்டான பாதைகளினூடேயும், அந்த “இரகசிய யுத்த ஆயுதப் பேழை” சுமந்து செல்லப்பட்டது. அப்போது, இரவின் கடைச்சாம நேரம்; ஆனபடியால், இந்த இரகசிய வேலையையும் வேறு எவரும் பார்க்க முடியவில்லை; மூடுபனியால் எழுந்த புகைப் படலம் மிகவும் வன்மையாக எங்கும் கம்பியிருந்தது.

மெல்ல மெல்ல அச் சுமையைத் தாங்கிவந்த மூவரும் கிழக்கு வாயிலருகிலுள்ள கூடாரத்துள்ளே அதை நிதானமாக இறக்கி வைத்தார்கள். இதுவரை யாதோர் இடையூறுமின்றிப் பத்திரமாக அங்கு வந்து சேர்ந்ததற்காக ஷஜருத்துர் தம் வதனத்தை மேலே உயர்த்தி, எல்லாம் வல்ல இறைவனுக்கே வந்தனை செலுத்தினார். அவருடைய இரு நேத்திரங்களிலும் அவலக் கண்ணீர் நிரம்பித் ததும்பிக்கொண்டிருந்தது.

அக் கூடாரத்திலே சுல்தான் வழக்கமாகச் சயனிக்கும் ஸோபா ஒன்றிருந்தது. ஷஜருத்துர் நிமிட நேரத்தில் அந்த ஸோபாவைச் சித்தஞ் செய்தார். பேழை மெதுவாகத் திறக்கப்பட்டது. ஐந்து பேருமாகச் சேர்ந்து ஸாலிஹின் உடலை அப் பெட்டியிலிருந்து மெல்ல எடுத்து மீட்டும் படுக்க வைத்துக் காலை நன்கு நீட்டிவிட்டார்கள். தலையைக் கழுத்துட்படத் திறந்து வைத்து, மீதி உடம்பு முழுதையும் நீளமான போர்வை கொண்டு போர்த்தினார்கள். இவற்றையெல்லாம் அவர்களுடைய கைகள் இயந்திரம் போல இயங்கச் செய்தனவேயன்றி, மூளைகொண்டு வேலை செய்யவில்லை. ஓயாத கண்விழிப்பாலும், சகிக்காத துக்கத்தாலும், மட்டுப்படுத்த முடியாத உணர்ச்சியாலும், எந்த நேரத்தில் காஹிரா மீது படையெடுப்பு முடுகிவிடுமோ என்ற பயத்தாலும் அவர்களுடைய மண்டையுள்ளிருக்கும் மூளை முன்னமே உருகி, இப்போது ஆவியாகப் பரிணமித்துக் கொண்டிருந்தபடியால், கைகொண்டு செய்வதை அவர்கள் கருத்துக் கொண்டு அறிய இயலவில்லை. எனவே, கோழி கூவுகிற வரை அவ் வைந்து பேரும் அக் கூடாரத்திலேயே உறங்கிவிட்டனர்.

கிழக்கு வெளுத்ததும் ஷஜருத்துர் கண் விழித்தார். பலஹீனமென்னும் நோயால் துவண்டிருந்த தம் கை கால்களை உதறிக் கொண்டு எழுந்தார். மற்ற நால்வரையும் அவர் எழுப்பி விட்டு, இனிமேல் அவர்கள் தத்தம் பாகத்தை எப்படி எப்படி நடிக்க வேண்டுமென்று உபதேசித்துவிட்டு, வெளியே வந்தார். அப்போது அங்கே உலவிக் கொண்டும், நின்று கொண்டும், திரிந்துகொண்டுமிருந்த ஏவற்காரர்களை நோக்கி, “சுல்தான் இப்போது இந்தக் கூடாரத்துள்ளே தங்கியிருக்கிறார். எவரும் அதற்குள் நுழையாதபடி இங்கிருந்தே காவல் புரிய வேண்டும். எதிரிகள் காஹிராவை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, இனி உளவர் உபத்திரவம் அதிகரித்துவிடும். ஜாக்கிரதை! என்னையும் சேனாதிபதியையும் தவிர்த்து வேறு எந்த மனிதனையும் சுல்தானிருக்கும் இடத்துக்குள்ளே போகவிடக் கூடாது! இது கடுமையான கட்டளை. என்ன, தெரியுமா?” என்று அரச ஆக்ஞை பிறப்பித்தார். அவர்கள் ஆமென்று தலையசைத்தார்கள். அடுத்த நிமிஷத்தில் ஆயிரக் கணக்கான காவலாளிகள் அணிவகுத்து, அக் கூடாரத்தைச் சுற்றிலும் வரிசைக்கிரமமாக நின்றுவிட்டார்கள். யுத்த காலத்தில் சுல்தானைக் காப்பாற்ற வேண்டுவது முக்கியக் கடமையென்று அவர்கள் நன்கு உணர்வார்களல்லவா?

பின்பு ஷஜருத்துர் அரண்மனையுள் நுழைந்து, அதேமாதிரியான செய்தியைப் பரப்பிவிட்டு, குளிரின் காரணமாகச் சளி ஜுரத்தால் சுல்தான் சற்று நோயுற்றிருப்பதாகவும், அவர் போர் நிலைமையை முன்னிட்டே கிழக்குவாயில் கூடாரத்திலே இரகசியமாகத் தங்கியிருப்பதாகவும், எப்படிப்பட்டவரும் சுல்தானைப் போய் நேரில் பார்க்கக் கூடாதென்றும், யுத்த நடவடிக்கை சம்பந்தமான ரகஸ்ய திட்டங்களை அவர் ருக்னுத்தீனுடன் அனவரதமும் வகுத்துக்கொண்டிருப்பதாகவும் கூறி விட்டார். இதை எல்லாரும் நம்புவது இயற்கைதானே, அந் நேரத்தில்!

அடுத்தபடியாக, அவ் வரசியார் ஹம்மாமிலே குளித்துக் கொண்டார். இழுக்கில்லாமல் தமது திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமே என்னும் கவலையால், இனி எக்காரணத்தை முன்னிட்டும் கண்ணீர் உகுப்பதில்லை என்னும் வைராக்கிய சித்தத்தோடு வெளியேறினார். ஒழுங்காகத் தம் ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டார். துக்கமற்று, ஆனால் உள் கவலை தோய்ந்த வதனத்துடனே அவர் சற்றுநேரம் அந்தப்புரத்தில் அமர்ந்திருந்தார். அரசவை கூடுகிற நேரம் வந்தது. அக்கணமே அவர் எழுந்து, இன்று தாமே அச் சபையை நடத்தப் போவதாக அறிவித்துவிட்டு, அத்தாணி மண்டபம் நோக்கி விரைந்து நடந்தார்.

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<அத்தியாயம் 37>> <<அத்தியாயம் 39>>

<<ஷஜருத்துர் முகப்பு>>

Related Articles

Leave a Comment