மன்ஸூரா போர்க்களத்தில் சண்டை மிகக் கடுமையாக நடந்துகொண்டிருந்த அந்தப் பதினொரு நாட்களும் ஷ­ஜருத்துர்ருக்குப் பதினொரு நெடிய யுகங்களாகவே காணப்பட்டன என்பதைக் கூறவும் வேண்டுமா? சுல்தான் ஸாலிஹின் மையித்தாகிய “மூமிய்யா”வைக்

காப்பாற்றிக் கொண்டும், அந்தக் கூடாரத்துக்கு வேளா வேளைக்கு உணவு அனுப்பிக் கொண்டும் அந்த நாடகத்தை மிக்க வெற்றியுடனே நடாத்தி வந்தார். அவசரமாக சுல்தானைப் பார்க்க விரும்பிய பிரமுகர்களை ஷ­ஜருத்துர் மிகச் சாதுரியமாகத் திருப்பியனுப்பி வந்தார்.

“நாளைக்கு வாருங்கள்!” என்று சிலருக்குச் சொல்லப்பட்டது; “சாயங்காலம் செளகரியப்பட்டால் பார்க்கலாம்,” என்று வேறு சிலருக்குக் கூறப்பட்டது; “நாளைக் காலையில்தான் பார்க்க முடியும்,” என்று மற்றும் பலருக்கு அறிவிக்கப்பட்டது; “இன்று சுல்தான் யுத்த திட்டங்களை மிகவும் இரகசியமாக வகுத்துக்கொண்டிருப்பதால், இப்பொழுது எவருக்கும் தரிசனம் கொடுக்க முடியாது,” என்று அநேகருக்குத் தெரிவிக்கப்பட்டது; “காலை முதல் இதுவரை பலரைப் பார்த்துப் பேசிவிட்டு இப்போதுதான் சுல்தான் சிறிது சிரம பரிகாரம் செய்துகொள்வதால், தற்சமயம் முடியாது,” என்று வேறு சிலருக்குச் சொல்லப்பட்டது.

இம்மாதிரியாகவே சுல்தானா சகல மனிதருக்கும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வேளையும், ‘டிமிக்கி’ கொடுப்பதென்றால், அது லேசுபட்ட காரியமென்றா எண்ணுகிறீர்கள்? மிகவும் முக்கியமான பிரதமர்கள் சுல்தானைப் பார்க்க விழையும்போது ஷஜருத்துர் வேறொரு தந்திரத்தையும் பிரயோகித்தார்: மாறுவேடம் பூண்டுகொண்டு இப்போதுதான் சுல்தான் போர்க்களத்துக்குப் போயிருக்கிறார். விஷயத்தை வெளியே சொல்லாதீர்கள்; எதிரிகள் விழிப்படைந்து கொள்ளப் போகிறார்கள்! என்றும் சமயத்தில் கயிறு திரித்தார்.

இது படிப்பதற்குக் கட்டுக் கதைபோல் தொனிக்கிறதே! என்று வியப்படையாதீர்கள். உண்மை இதுவேதான். உலக சரித்திரத்தில் வேறெந்தப் பெண்மணியும் அப்படிப்பட்ட மிகவு நெருக்கடியான சந்தர்ப்பத்தில் சிறிதுமே சாதிக்க முடியாத கண்கட்டு வித்தையைச் சாதித்து முடித்த பிரத்தியேகப் பெருமை ஷஜருத்துர் என்னும் இருபத்தாறு வயதே அடைந்திருந்த ஒரு பெண்மணிக்கே உரித்தாகும். கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை என்பது எவ்வளவு அற்புதமானதோ, அதை விட வாலிப ஷஜருத்துர் புரிந்த இப் பெரிய மாயா வித்தை பேரற்புதம் வாய்ந்ததென்பதை உலக மக்கள் என்றுமே மறக்க முடியாது. எஃகு நரம்பு படைக்கப்பெற்ற பெண்களை ஆண்டவன் சிருஷ்டி செய்திருப்பானாயின், ஷஜருத்துர் மட்டுமே அவர்களுள் தலைசிறந்த நாயகியாய்த் திகழ்கிறார் என்பதை உலக சரித்திரம் இன்றும் எண்பித்துக்கொண்டிருக்கிறது.

உள்ளத்திலே உந்தி மோதிக்கொண்டிருந்த அலையும், காஹிராவின் புறநகரிலே தங்கி மோதிக்கொண்டிருந்த படைகளின் போரும், அடுத்து என்ன நிகழப் போகிறதோ என்னும் ஏக்கமும், நெருக்கடி தீரு முன்னே தூரான்ஷா வந்து சேர்வாரோ மாட்டாரோ என்னும் மாபெருஞ் சஞ்சலமும், சுமக்க முடியா மனவேதனையைச் சுமந்துகொண்டிருக்கின்றமையால் மூளை குழம்பிப் பைத்தியம் பிடித்துவிடக் கூடாதே என்னும் பேரச்சமும் ஷஜருத்துர்ரை வாட்டி வதைத்துக்கொண்டிருந்தும், அவர் ஒரு சிறிதுமே உளந்துளங்காது அதிக தைரியமாகவே அந் நெருக்கடியைச் சமாளித்து வந்தார். ஊக்கத்திலும் அவர் தளர்ச்சியுற்றுவிடவில்லை; அல்லது எடுக்கவேண்டிய முயற்சிகளிலும் சற்றும் சலிப்படையவில்லை.

ஆண்டவன் உதவியால் ஷஜருத்துர் இறுதி வரை எல்லாவற்றிலும் வெற்றிபெற்றே வந்தார். போர்க்களத்திலும் முஸ்லிம்களின் கையே ஓங்கி நிற்கிறது என்னும் மகிழ்ச்சிக்குரிய செய்தியும் அவர் செவிக்கு எட்டிக்கொண்டிருந்தது. அமானத்துப் பொருளாகிய எகிப்தின் ஸல்தனத்துக்கு வந்த பெருஞ்சோதனையில் ஆபத்தில்லாமலே போய்விடும் என்னும் பேரானந்தம் அவரது உள்ளத்தில் ஒருவித உற்சாக உணர்ச்சியை உந்திக் கிளப்பி விட்டது. அன்றியும், இவ் யுத்தத்தில் கிறிஸ்தவர்கள் ஒரு வேளை தப்பித் தவறி வெற்றிபெற்று விட்டால், அக்கொடியோர் சுல்தான் மீதிருக்கும் ஆத்திரத்தில், அவரைக் கொல்ல வருவார்கள். ஆனால், அவர் முன்னமே செத்த சவமாய்க் கிடக்கிறார் என்பதைக் கண்டதும், தங்களுக்கிருக்கிற ஆத்திரத்தோடு ஏமாற்றத்தையும் பெற்று, எல்லாச் சினத்தையும் ஒருசேர ஷஜருத்துர் மீதே காட்டுவார்கள். உதவுவாரற்ற அந் நாரிமணி அந்த அநாகரிக ஜாதியாரின் மிருக சேஷ்டைகளுக்கும், சொல்லொணாச் சித்திரவதைகளுக்கும் உட்பட நேருமன்றோ?

இந்தப் பயங்கர எண்ணமே ஷஜருத்துர்ரைச் சென்ற பத்து நாட்களுக்கும் மேலாக வாட்டி வதைத்து வந்திருக்க, இப்போது முஸ்லிம்களுக்கே வெற்றி கிடைக்குமென்னும் செவியமுதம் பிழியப்பட்டால், அந்த ராணி திலகம் சொல்ல முடியாத உள்ளத்துணர்ச்சியைப் பெற்றுக்கொண்டதில் வியப்பென்ன இருக்கிறது?

மன்ஸூராவின் போர் முற்றுப்பெற்ற அந் நள்ளிரவிலே ஷஜருத்துர் கிழக்கு வாயில் கூடாரத்திலேயே தங்கியிருந்தார். ருக்னுத்தீனின் வீரத்தனத்தின் முழுச் சக்தியையும் சுல்தானா நன்கு உணர்ந்திருந்தமையால், இறுதி வெற்றியைப்பற்றிக் கிஞ்சித்தும் சஞ்சலப்படவில்லை. ஆனால், அச் சண்டை முடிந்தவுடனேயாவது இளவரசர் தூரான்ஷா வந்துசேர வேண்டுமே என்னும் ஏக்கமே ஷஜரை வாட்டி வதைத்துக்கொண்டிருந்தது. என்னெனின், யுத்தத்தில் வெற்றி பெற்ற வீரர்கள் சுல்தானைப் பார்க்காமல் இனியும் எப்படிச் சும்மா இருக்க விழைவார்கள்? அல்லது, இன்னம் எத்தனை நாட்களுக்குத்தாம் இந்தப் பேராபத்தான பொய்ந் நாடகத்தை நடித்துக்கொண்டிருக்க முடியும்? ஷஜருத்துர் தந் தலைவிதியைப் பெரிதும் நொந்துகொண்டார்.

பதினைந்து நாட்களாகப் பிரேதத்தைக் காத்துவந்த களைப்பாலும், உடலதிர்ச்சியின் அலுப்பாலும் அந்தக் கூடாரத்துள் குந்தியிருந்த நிலையிலேயே மூமிய்யாவின் பக்கத்தில் ஷஜருத்துர் நன்றாய் உறங்கிவிட்டார். இன்னம் சற்று நேரத்தில் சண்டை முடிவு தெரியப்போகிறது என்பதையும் மறந்து, அவர் மெய்ம்மறந்த ஆழிய உறக்கத்தில் ஆழ்ந்து தாழ்ந்துபோய் விட்டார்.

அந்த நேரத்தில் குதிரை வீரன் ஒருவன் நாற்காற் பாய்ச்சலில் அக் கிழக்குவாயில் முன்னே வந்து தொப்பென்று குதித்தான். யுத்தகாலம் ஆகையால், கோட்டை வாயில்கள் எல்லாமே தகுந்த பந்தோபஸ்தில் இருந்ததுடன், இராக் காலங்களில் உட்புறம் பூட்டப்பட்டும் இருந்தன. எனவே, அந்த அசுவபாலன் வாயிற் கதவண்டை நெருங்கிவந்து, தன் வாம்பரியை விட்டுக் கீழே குதித்தபடியால், பாதியிரவில் கோட்டை வாயிலின் முன்னே குதிரை வீரன் ஒருவன் வந்து குதித்ததை மதில்மேல் நின்ற ஞாயில் காவலர்கள் கண்டதும் அங்கிருந்தபடியே கீழே குனிந்து, “யாரது?” என்று அதட்டிக் கேட்டார்கள்.

“நான் இளவரசர் தூரான்ஷாவால் அனுப்பப்பட்ட தூதன். கீழே இறங்கிவந்து சீக்கிரம் கதவைத் திறங்கள்!” என்று அக் குதுரை வீரன் ஆகாயத்தை அண்ணாந்து பார்த்துக் கத்தினான்.

இதில் சூழ்ச்சியேதும் இருந்தால் என்ன செய்வது? என்று அந்த ஞாயில் காவலர்கள் சந்தேகித்தனர். இருட்டிலே ஒரு குதிரைவீரன் தன்னை இளவரசனின் தூதனென்று சொன்னால், யாரும் சந்தேகிக்கத்தானே நேரும்? அன்றியும், மேற்கு வாயிலுக்கு எதிரில் பெரும் போர் நடந்துகொண்டிருக்கிற வேளையில், எப்படித்தான் சந்தேகிக்காது இருக்க முடியும்?

சில நிமி­ஷங்கள் வரை அவர்கள் யோசித்தார்கள். எதற்கும் சுல்தானையே கேட்டுவிட்டுக் கதவைத் திறக்க வேண்டுமென்று முடிவு செய்தார்கள்.

“இதோ திறக்கிறோம்; சற்று நில்!” என்று அக் காவலரின் தலைவன் கூச்சலிட்டுக் கத்திவிட்டு, கோட்டைச் சுவரினின்று உட்பக்கம் கொத்தளத்தில் இறங்கி, நேரே சுல்தானின் கூடாரத்தை நோக்கிப் போனான்.

அந்தக் கூடாரத்தின் வாயிலண்டை அவன் நெருங்கியதும் அங்கே நின்ற ஒரு கறுப்பினக் கூடாரக் காவலன் அவனைத் தடுத்து நிறுத்தினான்.

“எங்கே போகிறாய்? நில்!”

“தூரான்ஷா இளவரசரிடமிருந்து தூதனொருவன் வந்திருக்கிறான். ஏதோ அவசரமாக சுல்தானிடம் பேச வேண்டுமாம். இக்கணமே கதவைத் திறக்கச் சொல்லுகிறான். அவனை உள்ளே விடலாமா? என்று யான் இங்கு வந்தேன்.”

“இப்போது சுல்தானும் சுல்தானாவும் உள்ளே சயனித்துக் கொண்டிருக்கிறார்கள். நீ உள்ளே போகக் கூடாது.”

“குதிரையில் வந்த வீரன் கோட்டை வாயிலுக்கு வெளியே அவசரப்படுகிறானே! சுல்தான் அல்லது சுல்தானா தூங்கி விழிக்கிற வரையிலா அவனை அங்கேயே நிறுத்தி வைப்பது?”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. வானமே வாய் திறப்பதாயிருந்தாலும், பூமியே காலின் கீழ்ப் பிளப்பதாக இருந்தாலும், எவரும் இங்கே உள்ளே நுழைய விடப்படுதல் கூடாது என்று சுல்தானா எனக்குக் கடுமையான கட்டளையிட்டிருக்கிறார். மறு உத்தரவு பிறக்கிற வரையில் என்னால் ஏதும் செய்ய முடியாது; நீயும் உள்ளே போகக்கூடாது!”

ஞாயில் காவலனுக்கு இந்த இறுதி வார்த்தைகள் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தன. என்னெனின், தூரான்ஷாவிடமிருந்து வந்த தூதனென்று தெரிந்தும் ஏன் கதவைத் திறக்கவில்லை என்று நாளைக்கு சுல்தானோ அல்லது சுல்தானாவோ கேட்டால் என்ன பதில் சொல்வது? கேட்காமல் கதவைத் திறந்துவிட்டு, வந்தவன் எதிரியாக இருந்தால், என்ன செய்வது? அரசர் உத்தரவைப் பெறலாமென்று வந்தபோது ஒரு சாதாரண ஹபஷீ காவலன் தடுத்ததற்காக எப்படிச் சும்மா இருக்கலாம் என்று நாளை யாரும் கோபித்தால் என்ன செய்வது? – அவன்பாடு பலதலைக்கொள்ளி எறும்புபோலே கபணப்பட்டது.

“ஏ ஹபஷீ! நம் சுல்தானா உனக்குக் கடுமையான கட்டளையிட்டிருப்பது மெய்யாய் இருக்கலாம். ஆனால், சமய சந்தர்ப்பத்தை நீ அனுசரிக்க வேண்டாமா? கோட்டைக்கு வெளியே வந்து நிற்பவன் இருளில் மறைந்திருப்பதால் அவன் இன்னான் என்பதை என்னால் நிதானிக்க இயலவில்லை. எதற்கும் சுல்தானைக் கேட்டுவிடலாமென்று கருதியே இங்கு நான் வந்தேன். நீ முரட்டுத்தனமாக எனக்கும் ஒரே பாடத்தைப் படிக்கிறாயே! இப்போது நீ என்னைத் தடைசெய்வதால் ஏதும் விபரீதம் விளைந்து விடுவதாக வைத்துக்கொள்வோம். அப்போது உன் தலையும் என் தலையும் ஒருசேர உருண்டுவிடுமே! தமீதாவைத் தவற விட்ட ஷெய்கு ஜீலானீயின் கதி எப்படிப் பரிதாபகரமாய் முடிந்ததென்பதை நீ இதற்குள்ளாகவா மறந்து விட்டாய்?”

அவனோ, முரட்டு நீகிரோவன். ஞாயில் காவலனோ, அவனிடம் தர்க்கம் பேசுகிறான். அந்த ஹபஷீயா இதற்கெல்லாம் மசிபவன்? “முடியாதென்றால், முடியாதுதான்!” என்று ஒரே அழுத்தமாகக் கூறினான்.

“வீணாய் மதிகெட்டுப் பேசாதே! நீயாவது உள்ளே போய் விஷயத்தைச் சொல்லிப் பதில் பெற்று வா,” என்று அக்காவலன் இப்பணியாளை ஏவினான்.

“இந்த இடத்தைவிட்டு நான் ஓர் அங்குலமும் அப்பாலிப்பால் அசைய முடியாது!”

“என்ன! அசைய முடியாதா?”

“முடியவே முடியாது!”

“ஏ, நீகிரோவனே! இளவரசனின் தூதனை நீ இப்படி வீணாய்த் தாமதிக்கச் செய்வதால் என்ன நேரும் தெரியுமா?”

“ஏ, நாய்க்குப் பிறந்தவனே! நீ என்ன, என்னுடன் விளையாடுகிறாயா? நான் சுல்தானாவின் கட்டளைப்படி இங்கே நிற்கிறேன். என்னை மீறி நீயும் உள்ளே செல்ல முடியாது; நானும் போக மாட்டேன். நீ மரியாதையாகத் திரும்பிப்போய் உன்னுடைய வேலையைப் பார். என்னுடன் நீ வீண் தர்க்கம் புரியாதே! தூரான்ஷாவின் தூதன் காத்துக்கொண்டிருந்தால் என்ன? அல்லது தூரான்ஷாவே காத்துக்கொண்டிருந்தால் தான் எனக்கென்ன? முடியாதென்றால், முடியாதுதான்!”

தன்னை “நாய்க்குப் பிறந்தவனே!” என்று ஒரு நீகிரோவன் அழைத்ததை அக் காவலன் சகிக்கவில்லை. இருவரும் கூச்சலிட்டுக்கொண்டு ஒருவரை யொருவர் வேகமாக ஏசத் துவக்கினர். கூடாரத்தின் வாயிலில் இந்தச் சமர் முற்றியவுடனே உள்ளே இருந்த ஷஜருத்துர் அரை நித்திரையில் விழித்துக்கொண்டார். தூரான்ஷாவின் பெயர் அடிபடுவதையும், ஏசல் மாலைகள் பரிமாறப்படுவதையும் செவி மடுத்தார். இனியும் அயர்ந்திருக்க மனமில்லாமல் வாரிச் சுருட்டி எழுந்து வெளியில் ஓடி வந்தார்.

அங்கே நிலவிய காட்சி ஷஜரைத் திகைக்கச் செய்து விட்டது. அந்த நீகிரோவன் ஞாயில் காவலனைக் கீழே தள்ளி மேலே ஏறிக் கழுத்தை நெரித்துக்கொண்டிருந்தான்.

“நிறுத்து!” என்று ஷஜருத்துர் கத்தினார்.

மல்யுத்தத்தில் இருந்த இருவரும் சட்டென்று எழுந்து, சுல்தானா முன் மரியாதையாய் நின்றனர். கோபக் கனல் கக்குகிற கண்களுடன் ஷஜருத்துர் வெறித்துப் பார்த்தார்.

“இங்கே என்ன, கலகமா விளைக்கப் பார்க்கறீர்களா என்ன கூத்து இது?”

“யா ஸாஹிபத்தல் ஜலாலத்தில் மலிக்கா! இளவரசர் தூரான்ஷாவிடமிருந்து தூதனொருவன் வந்து கோட்டை வாயிலில் காத்துக்கொண்டிருக்கிறான். அவனை உள்ளேவர அனுமதிக்கலாமா என்று கேட்டுப் போகவே தங்கள் சமூகத்துக்கு விரைந்தோடி வந்தேன்…” என்று அந்த ஞாயில் காவலன் மரியாதைமிக்க வார்த்தைகளுடனே அடக்க ஒடுக்கத்துடன் ஆரம்பித்தான். அவன் பேசிக்கூட முடியவில்லை.

“என்ன! ஷாமிலிருந்து தூதன் வந்திருக்கிறானா? அவனை இக்கணமே இங்குக் கொண்டுவந்து சேருங்கள். சீக்கிரம், சீக்கிரம்!” என்று துடிதுடித்துக் கூறினார் சுல்தானா.

காவலன் கனவேகத்தில் திரும்பி, காற்றெனப் பறந்து கடிதில் கோட்டைக் கதவை எட்டினான். நூறு யானைகள் ஒரு நாளெல்லாம் மோதினாலும் அசைக்க முடியாத பிரம்மாண்டமான கருங்காலிக் கதவை அக் காவலர் தலைவன் பொறியின் உதவியால் வெகு சுலபமாகத் திறந்தான். பொறுமையெல்லாம் இழந்து இவ்வளவு நேரம் மிகுந்த சிரமத்துடன் வெளியில் நின்று காத்துக்கொண்டிருந்த அத் தூதன் மின் வெட்டும் வேகத்தில் உள்ளே பாய்ந்தான். கோட்டைக் கதவு மீட்டும் முன்போலே மூடிக்கொண்டது.

ஞாயில் காவலன் ஷஜருத்துர்ரை விட்டுக் கதவண்டை ஓடியவுடனே அந்த ராணியாரும் அவன் பின்னே நடந்து வந்தார். எனவே, தூதன் கோட்டை வாயிலைத் தாண்டி உள்ளே நுழையும்போது ­ஷருத்துர் அவ்விடத்தை எட்டி விட்டார்.

சகிக்கொணாப் பேராவலுடன் அல்லுபகல் அனவரதமும் ஓய்வு ஒழிவு இல்லாமல் எதிர்பார்த்துக்கிடந்த இளவரசரின் தூதன் தங் கண்முன்னே நிற்பதைக் கண்டு அரசியார் மெய்பதறிப் பேச நாவெழாமல் மெளனமாய் அசைவற்று நின்றார்.

“யா மலிக்கா! ஷாமிலிருந்து நம் இளவரசர் திரும்பி வந்து கொண்டிருக்கிறார். அவர் பொழுது விடிவதற்குள்ளே இங்கே வந்து சேர்வார். தம் வரவை முற்கூட்டியே தங்களுக்கும் சுல்தானுக்கும் தெரிவிக்கச் சொல்லி, என்னை முன்னே அனுப்பி வைத்தார். அவரை உடனே திரும்பிவர வேண்டுமென்று தாங்கள் செய்தியனுப்பி வைத்தபோது, இளவரசர் சிறிது ஜுரமாயிருந்தபடியால், அக்கணமே புறப்பட இயலாமற் போயினமைக்குத் தம்மை மன்னிக்கச் சொல்லிச் செய்தி அனுப்பி இருக்கிறார்,” என்று தூதன் வணக்கமாய்க் கூறினான்.

கடல் நடுவில் பெரும் புயலில் சிக்கிய மரக்கலம் துண்டு துண்டாய்ச் சிதறியதும் அக் கப்பலிலுள்ளவர் கலங்கித் தவிப்பதினும் அதிகமாகப் பதறியிருந்த ஷஜருத்துர்ருக்கு இச்செய்தி பெரிய மனஆறுதலை அளித்தது. எனவே, அவர் வெகு சாதுரியமாகத் தம் மனத்தைத் தேற்றிக்கொண்டார்.

“முஹம்மத் ஷாவின் கதி என்னாயிற்று?” என்று சுல்தானா அதிக கம்பீரமாய்க் கேட்டார்.

“அத்துரோகி சென்ற பதினைந்து நாட்களுக்கு முன்னர்த்தான் கொல்லப்பட்டு ஒழிந்தான்.”

ஷஜருத்துர் நன்றி செறிந்த தம் பார்வையை வானத்தின் பக்கல் உயர்த்தினார். விழிக்கடைகளிலிருந்து உவகைக் கண்ணீர் ஒரு துளி சுரந்தது.

இச் சந்தர்ப்பத்தில் போர்முனையிலிருந்து மம்லூக் தலைவரொருவர் சுல்தானாவின் முன்னே வந்து நின்று, “ஆண்டவனைக் கொண்டேயன்றி வேறெச் சக்தியேனும் சாமர்த்தியமேனும் இங்கில்லை! யா ஸாஹிபா! இறைவன் நமக்குப் பெருவெற்றியைக் கொடுத்துவிட்டான்! ரிதா பிரான்ஸ் வீழ்த்தப்பட்டு விட்டான்” என்று கழறினார்.

நாற்காற் பாய்ச்சலில் காற்றெனப் பறக்கும் நிமிர்பரிப் புரவியினும் மிகவாய வேகத்திலே ஷஜருத்துர்ரின் நெஞ்சு அடித்துக் கொண்டது. துன்பத்தை அடுத்து, இன்பத்தையூட்டுகின்ற இறைவனது மாயா மர்ம சக்தியை மனமார வழுத்தினார்.

“ஏ மம்லூக்! இந்த நிகழ்ச்சிக்குரிய திவ்ய செய்தியைக் கொண்டுவந்ததற்காக இந்த முத்தாரத்தை உனக்குப் பரிசாக அளிக்கிறேன். பெற்றுக்கொள்! இப்போது ருக்னுத்தீன் என்ன செய்துகொண்டிருக்கிறார்?”

“யா மலிக்கா! லூயீயும் அவனுடைய பிரதானிகளும் விலங்கிடப்பட்டுச் சிறைக்கூடத்தின் பக்கம் கொண்டு செல்லப்படுகிறார்கள். ருக்னுத்தீனே எல்லாவற்றையும் நேரிற் கண்காணிக்கிறார்.”

“அவருடைய அவசர வேலைகள் முடிந்தவுடனே அவரை இங்கே நேரே வரச்சொல். ஷாமிலிருந்து தூதன் வந்திருப்பதாகவும், எம் மைந்தர் காஹிராவை நெருங்கிக்கொண்டிருப்பதாகவும் அவருக்கு இக்கணமே தெரிவி!”

சுல்தானாவின் பரிசைப் பெற்ற அந்த மம்லூக் மிக்க பணிவுடன் ஆங்கிருந்து அகன்றார். சுல்தானா ஷாமிலிருந்து வந்த தூதனை நோக்கி, “நீ போய் உணவருந்திவிட்டுப் படுத்துக் கொள். சுல்தான் இவ்வளவு நேரம் விழித்திருந்துவிட்டு இப்போதுதான் சற்றுக் கண்ணயர்ந்திருக்கிறார். நீ அவரிடம் ஏதும் நேரிற் செய்தி சொல்லவேண்டுமானால், விடிந்த பின்னர்ப் பார்த்துக்கொள்ளலாம்,” என்று கூறி, அவனை அனுப்பிவிட்டார். பின்பு அவர் மீண்டும் கூடாரத்தண்டை சென்றார்.

பனியுடன் கூடிய வாடைக்காற்று உதிரத்தை உறையச் செய்வதேபோல், ஊசி குத்துவதைப்போல மேனியைத் துளைத்துக்கொண்டிருந்தது. அங்கங்கே நின்றுகொண்டிருந்த மம்லூக் பரிவாரங்கள் தூங்கி வழிந்துகொண்டிருந்தன. அமாவாசை இருள் இந்தப் பயங்கரமான காட்சியை இன்னம் மிகை படுத்திக்கொண்டிருந்தது. ஷஜருத்துர்ரோ, சற்றும் உணர்ச்சியின்றி, வேரூன்றிய நெடுமரமே போல் கூடார வாயிலிலே நின்றுகொண்டிருந்தார். இதுவரையில் இனி என்ன ஆகுமோ என்று ஏங்கித் தவித்த அவர், இப்போது சிலுவை யுத்தத்தின் வெற்றிச் செய்தியையும், தூரான்ஷா வந்துகொண்டிருக்கிறார் என்னும் மகிழ்ச்சியையும் செவிமடுத்ததால் சிறிது மனச்சாந்தி அடைந்தார். எனினும், ஒரு பக்கத்தில் தங் கணவரை நினைந்து நினைந்து வருந்தி உருகினார்.

கஷ்டங்கள் குறையக் குறைய முன்னிருந்த எல்லா வேதனைகளும், எஞ்சி நிற்கிற ஒரே அம்சமான ஒரு குறையின்மீதே ஒரு மொத்தமாய்ப் போய்த் தாக்கும்.

மனிதருக்கு ஏக காலத்தில் பல கஷ்டங்கள் விளைந்தால், அவற்றுள் ஏதாவதொரு கஷ்டமாவது உடனே விலகினால் போதுமே என்று முதலில் ஏங்குவது வழக்கம். அந்தப்படி ஒரு கஷ்டம் விலகிவிட்டால், அவரால் திருப்தியடைய முடிவதில்லை. அதற்கு மாறாக, மற்றக் கஷ்டம் ஒவ்வொன்றுமே நீங்க வேண்டுமென்று பேராசைப்படுவர். அல்லாமலும், கஷ்டங்கள் குறையக் குறைய முன்னிருந்த எல்லா வேதனைகளும், எஞ்சி நிற்கிற ஒரே அம்சமான ஒரு குறையின்மீதே ஒரு மொத்தமாய்ப் போய்த் தாக்கும். இஃது இயற்கை. எனவே, ஷஜருத்துர், பல சங்கடங்களில் சிக்கிக் கொண்டபோது, அவர் பட்ட கவலையெல்லாம் அந்த எல்லா அம்சங்களிலும் சமமாகப் பரவி நின்றது. இப்பொழுது முக்கியமான இரு கவலைகள் நீங்கியவுடனே எல்லாத் துக்கமும், துயரமும், ஏக்கமும், விம்மலும் ஸாலிஹின் பிரேதத்தின்மீது ஒரு சேரப் பாய்ந்தன.

கூடாரத்துள்ளே மினுமினுவென்று சிதறிய ஒளியைக் கக்கிக்கொண்டிருந்த ஒரே சிறு மெழுகுவர்த்தியில் உருகி வழிந்த மெழுகேபோல் ஷஜருத்துர்ரின் இரு நீண்ட வேல்விழிகளும் திவலை திவலையாகக் கண்ணீரைப் பெருக்கிக் கொண்டேயிருந்தன. சுல்தானின் பிரேதம் நீட்டிப் படுத்திருந்த பஞ்சணைக்குப் பக்கத்திலே ஷஜருத்துர் மற்றொரு பிரேதமேபோல் பைய அமர்ந்திருந்தார். கட்டுக் கடங்காத கடுந்துயரால் அவருடைய உடலுறுப்புக்கள் ஒவ்வொன்றும் – ஏன், ஒவ்வொரு நரம்புமே – செயலற்றுக் கிடந்தது. ஆண்டவன் ஷஜருத்துர்ரை இன்னம் பைத்தியங்கொள்ளியாக்காமலும், அல்லது இறந்துபடச் செய்யாமலும் இருந்தது பேராச்சரியமான வைபவமேயாகும்.

அமீர் தாவூத் காலஞ் சென்ற பின்னர்த் தாம் கைது செய்யப்பட்டு ஸாலிஹின் முன்னே நிறுத்தப்பட்ட அன்றிலிருந்து இன்று வரை நடந்த அத்தனை நிகழ்ச்சிகளும் அவர் கண்முன்னே பல வர்ண தர்சனியில் காணப்படும் விசித்திரங்களேபோல் வந்து நின்றன. அதிலும், கருத்தொருமித்த காதலுடன் அந்த ஐயூபி சுல்தானுடனே சமயங்களில் நிகழ்த்திய ஊடலும் உவகையும் கூடலும் அவர் கண்ணெதிரில் மாறிமாறித் தோற்றமளித்தன. அதுபோது ஷஜரின் ஹிருதயகமலம் விரிந்தது. ஆனால், அதே சமயத்தில் தம் ஈரற் கொழுந்து கலீலைப் பெற்றுப் பின்னர்ப் பறிகொடுத்த வேதனையும், நல்ல திடகாத்திரத்துடனிருந்த சுல்தான், அம்படி பட்டுப் பொத்தென்று வீழ்ந்த பருந்தேபோலச் சட்டென்று ஆண்டவனால் அழைக்கப்பட்டு விட்ட வாதனையும் அபலையாகிய ஷஜருத்துர்ரின் உள்ளத்தை நெக்கு நெக்கு உருக்கிவிட்டு, அவரைச் சகிக்கொணாத் துன்பத்தில் துவளச் செய்துவிட்டன. துக்கமென்றால், எப்படிப்பட்ட துக்கம்? இப் பாழுலகில் வேறெவரும் அனுபவித்த மிகக் கடுமையான துயருடனும் உருவமித்துக் கூற இயலாத அத்துணைக் கொடிய மாபெருந் துக்கம்!

உள்ளுக்குள்ளேயே பலகாலும் புழுங்கிக்கொண்டிருந்த எரிமலை ஒன்று எல்லாவற்றையும் ஒருமிக்கச் சேர்த்து கொண்டு ஒருநாள் ஆதுரத்துடன் நெருப்புக் குழம்பைக் கக்கிக்கொண்டு பொங்கி வழிவதேபோல், ஷஜருத்துர்ரின் உள்ளம் இனியும் அடக்க முடியாமல் குப்பென்று பொங்கியது. “யா அல்லாஹ்!” என்று அவர் அலறினார். அத் துயரக் காட்சியைக் காணச் சகியாத அவ் வொரே மெழுகுவர்த்தி பட்டென்று அணைந்துவிட்டது!

தொடரும்…

-N. B. அப்துல் ஜப்பார்

<<அத்தியாயம் 42>> <<அத்தியாயம் 44>>

<<ஷஜருத்துர் முகப்பு>>

Related Articles

Leave a Comment