“ஏ குழந்தை! அழாதே! இதோ பார்!” என்று நயமாகப் பேசினான் முதல் திருடன். அவள் கண்ணீர் வழிந்த வதனத்துடன் அவனை ஏறெடுத்துப் பார்த்தாள். பெரிய
மனிதர்களே கண்டால் ஒரு காததூரம் ஓடி ஒளியக்கூடிய அவ்வளவு பயங்கரமான உருவம் படைக்கப்பெற்றிருந்த அக்கொலைகாரனை அவள் ஏறிட்டுப் பார்த்ததும், மீண்டும் தன் கண்களைக் கரங்களால் மூடிக்கொண்டாள். “என் அபூ! அபூ! என் அபூ எங்கே?” என்று அலறியழத் தொடங்கினாள்.
“பயப்படாதே குழந்தை! உன் அபூ பின்னால் கழுதையில் வருகிறார்” என்று அவன் அவளைத் தேற்றினான்.
அவள் மீண்டும் தன் முகத்தைக் கைகளிலிருந்து விடுத்து, சுற்றுமுற்றும் பார்த்தாள். இந்த இரண்டுபேரும், இவர்களுடைய குதிரைகளும் அன்றி, வேறெவரையும் காணவில்லை. காலை வெயில் சுறுசுறுவென்று கதிர்களைக் கக்கிக்கொண்டே எரித்தது. “அபூ! அபூ!” என்று வீறிட்டுக் கத்திக் கொண்டே துள்ளித் துடித்தாள் அச்சிறுமி.
“ஏ குழந்தை! உன் அப்பன் செத்துப் போனான். சும்மா நீ ‘அபூ’, ‘அபூ’ என்று கத்தினால், உன்னைக் கொன்றுபோடுவேன். மூடு வாயை!” என்றான் பக்கத்துக் குதிரைவீரன்.
சூரியவொளியில் மின்னுகிற வாள்களையும், இரத்தக் கறை படிந்த அவர்களுடைய கைகளையும், கறுத்துப் பருத்துள்ள மேனிகளையும், கோபம் சிந்துகிற கண்களையும், இரக்கமென்பது கொஞ்சமுமில்லாத நெஞ்சமுடைய மிருக குணங்களையும் அவள் இயற்கையாகத் தானே உணர்ந்துகொண்டாள். இனி ஏதும் செய்தால் உயிர் தப்பாதென்பதைக் கண்டு வாய்மூடி மவுனியாய்விட்டாள்.
சிறிதுநேரம் சென்றது.
“உன் பெயரென்ன, குழந்தை?” என்று கேட்டுக் கொண்டே ஒரு கற்கண்டுத் துண்டை அவளிடம் அந்த முதல் பேர்வழி நீட்டினான்.
அவள் வாய் திறக்கவுமில்லை. கைநீட்டி அக்கற்கண்டை வாங்கிக்கொள்ளவுமில்லை. விம்மிவிம்மி விசித்துக்கொண்டிருந்தாள்.
“நீ பேசப்போகிறாயா, இல்லையா?” – இது மற்றவனின் கடிய கட்டளை.
“என்…பெயர்…எத்தீம்!” என்று விம்மிக் கொண்டே விடை பகர்ந்தாள்.
“என்ன, எத்தீமா? நீ யார் என்பதைக் கேட்கவில்லை; உன் பெயரைக் கேட்டேன்.”
இதுவரை இரும்பைப்போலிருந்தவள் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
“ஏ மிருகமே! என் அபூவைக் கொன்று என்னை அநாதை ஆக்கியதுமல்லாமல், என்னைப் பரிகாசமும் பண்ணுகிறாயா? நீ கேட்கிற கேள்விக்கு நான் இங்கே பதில் சொல்ல மாட்டேன். காஹிராவுக்கு நாம் போய்ச் சேர்ந்ததும், சொல்லுகிறேன்.”
ஏழு வயதுச் சிறுமி, அதிலும் திக்கற்று அனாதையாயிருப்பவள் இப்படித் துணிச்சலாகவும் துடுக்காகவும் பேசியதைக் கேட்டு, அவன் அதிசயித்துப் போயினான். தன் பிளந்த வாயை மூடாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
“நீ என்னை முறைத்துப் பார்ப்பதில் பயனில்லை. என்னை என்ன செய்தாலும் சரிதான்; நான் என் பெயரைச் சொல்லவே மாட்டேன்.”
“மாட்டாயா?”
“மாட்டவே மாட்டேன்.” இது மிகவும் அழுத்தந்திருத்தமான குரலில் தீர்க்கமாய்ப் பிறந்த பதில்.
அப்பால் அவர்கள் ஏதும் பேசாமலே பிரயாணத்தைத் தொடர்ந்து நடத்தினார்கள். குதிரையின் குளப்படிச் சப்தம் மட்டுமே அம் மௌனத்தைக் கலைத்துவந்தது. அச்சிறுமியின் வதனம் ஆத்திரத்தாலும் அழுந்துக்கத்தாலும் வீங்கியது. ஏதோ மிகவும் ஆழமாக யோசித்துக்கொண்டிருந்தாள்.
அந்த இரண்டு கள்வர்களுள், நம் அநாதைச் சிறுமியைத் தூக்கிக் குதிரைமீது வைத்துக்கொண்டவன் கொஞ்சம் இளகிய உளத்தினன். எனவே, தன் நண்பனைப்போல் குரூரமாய் நடந்துகொண்டால், இவளிடம் எந்தப் பிரயோஜனத்தையும் பெற்றுக்கொள்ள முடியாதென்பதைத் தெரிந்துகொண்டு, அவன் மிக லலிதமாகப் பேச்சுக்கொடுத்து, இவளை நயப்படுத்தினான். வீண்பேச்சுக் கொடுக்காமலும், இவளுடைய துக்கத்தையும் துயரத்தையும் கிளப்பாமலும், பல இனிய பண்டங்களைப் பொறுமையாய் நீட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தான். முதலில் ‘எத்தீம்’ மறுத்தபோதினும், பசிக்கொடுமை தாளாது சிறிதுசிறிதாக வாங்கிச் சாப்பிட்டாள். ஆனால், அடிக்கடி முத்துப் போன்ற கண்ணீர்த் துளிகள் மட்டும் தளும்பி, சங்கு கன்னத்தின் வழியே வழிந்து கொண்டேயிருந்தன.
சிறு சிசுக்களுக்கும், உயரிய அழகிய பெரிய குதிரைகளுக்கும் திடீரென்று கொடிய வியாதி வருவது வழக்கம். அஃதே போல், அக் கொள்ளைக்காரர்களுள் இரண்டாமவனின் குதிரை சட்டென்று சாய்ந்து படுத்தது; நான்கு கால்களையும் உதைத்துக்கொண்டது. இதைக் கவனிக்காமல் அந்த முதல் திருடன் அப்பெண் குழந்தையுடன் கொஞ்சிக்கொண்டும் குலவிக் கொண்டும் முன்னேறிப் போய்க்கொண்டேயிருந்தான்.
கீழே படுத்த குதிரையிலிருந்து விழுந்தவன் சட்டென்று எழுந்து, “ஏ யூசுப்! நிறுத்து, நிறுத்து! என் குதிரை செத்துப் போகிறதடா! ஓடாதே! நில், நில்!” என்று கத்தினான்.
அப்போதுதான் அந்த யூசுபும், அநாதையும் திரும்பிப் பார்த்தார்கள்.
அவள் கொல்லென்று சிரித்தாள். “ஆண்டவன் நன்றாய்த் தண்டித்தான்!” என்று தன்னையறியாமலே கத்தினாள்.
இச்சந்தர்ப்பத்தில் அந்த யூசுப் என்கிறவனுக்குத் திடீரென்று ஞானோதயம் பிறந்தது. ‘கொலை செய்யப்பட்டவனிடம் களவாடிய தீனார்கள் என்னிடமே இருக்கின்றன. இப்பெண்ணும் என்னுடனே இருக்கிறாள். இப்போது நான் இந்தக் குதிரையைத் திருப்பி, அவனைக் காப்பாற்றுவதில் எனக்கு நஷ்டந்தான் நேருமேயொழிய, பிரயோஜனம் சிறிதும் விளையப்போவதில்லை. இந்தச் சிறுமியும் அவனை வெறுக்கிறாள்.’ இவ்வாறாய எண்ணம் பிறந்தவுடனே லகானை இழுத்துத் தட்டிவிட்டான். குதிரை கொக்காய்ப் பறந்தது!
கீழே விழுந்தவனுக்கு முதல் ஏமாற்றம் அவனுடைய குதிரை செத்துப்போனது; இரண்டாவது ஏமாற்றம் தன் நண்பன் திரும்பிப் பார்த்துவிட்டுக் கடிய வேகத்தில் ஓடிப் போனது; மூன்றாவது ஏமாற்றம் கொள்ளைப்பொருள் இவனிடமில்லாமல் ஓடுகிறவனிடமே இருந்தது; இறுதி ஏமாற்றம் இந்தச் சிறுமியும் அவனோடே போவது. பார்த்தான்; கோபம் பொங்கியெழுந்தது. ஓட்டமாயோடினான். குதிரையைப் பிடிக்க மனிதனாலாகுமோ? அப்படியே அயர்ந்து நின்றுவிட்டான். நேரே போகிற குதிரை கண்ணுக்கு மறைகிறவரை அத்திக்கையே பார்த்துக்கொண்டு நின்றான் பனமரம் போலே.
யூசுபின் குதிரையோ, காற்றினும் கடிய வேகத்தில் நாற்காற் பாய்ச்சலில் வையாளி விட்டுப் பறந்துகொண்டிருந்தது. இன்றளவும் குதிரைச் சவாரி எப்படியிருக்கும் என்பதையே அறிந்திராத அச்சிறுமி தான் மரணத்தை நோக்கி ஆகாயத்தில் பறப்பதாகவே நினைத்துக்கொண்டாள். அக்கள்வனை இதுவரை அவள் மிகவும் வெறுத்துவந்தும், தன்னையறியாமலே அவனை இறுகப் பற்றிக்கொண்டாள்; கண்களை மூடிக்கொண்டு, மூர்ச்சித்தும் போயினாள்.
அவள் தன் நினைவு வந்ததும், கண்விழித்துப் பார்த்தாள். தான் எங்கிருக்கிறாளென்பதையே அவளால் அறிய முடியவில்லை. நெருப்புக் காற்றுக்கு மாறாய்க் குளிர்ந்த தென்றல் வீசியதை அவள் ஸ்பரிசித்தாள். குதிரையையும் காணோம்; திறந்த பாலைவனத்தையும் காணோம். ஒரு சிறு வீட்டுக்குள்ளே ஒரு பேரீச்சநார்க் கட்டிலின்மீது தான் படுத்திருந்ததை உணர்ந்தாள். உடனே கைகால்களை உதறிக்கொண்டு எழுந்து அமர்ந்தாள். சுற்றுமுற்றும் பார்த்தாள். யாரையும் காணவில்லை. மீண்டும் பயம்வந்து பற்றிக்கொண்டது. அந்தக் கட்டிலிலேயே தொப்பென்று விழுந்தாள்.
சிறிது நேரத்திற்கெல்லாம் ஒரு முரட்டுப் பெண் அங்கே வந்தாள். அந்தக் கட்டிலருகே போய்க் குனிந்து பார்த்தாள். அச் சிறுமியின் எழில்மிகு வதனத்தைக் கண்டதும், அப்படியே மெய்ம்மறந்து நின்று, கன்னத்தில் மெல்ல முத்தமிட்டாள். அந்த ‘எத்தீம்’ அதுகாலைக் கண்களைத் திறந்து பார்த்து விட்டுச் சட்டென்று துள்ளியெழுந்தாள்.
“கண்மணி! பயப்படாதே! நீ மிகவும் பந்தோபஸ்தான இடத்திலேதான் இருக்கிறாய்.”
“என்ன, பந்தோபஸ்தான இடமா? அந்தக் குதிரையும் முரட்டு யூசுபும் எங்கே?”
“மகளே! அந்த யூசுபின் வீடுதான் இது. நான்தான் அவருடைய சகோதரி. என் பெயர் பர்கானா. உன் பெயர் என்ன, அம்மா?”
“எனக்குத் தாகமாயிருக்கிறது. குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்.”
உடனே நறுமணமூட்டப்பட்ட குளிர்ந்த தண்ணீர் அவளுக்குக் கொடுக்கப்பட்டது; அதை வாங்கி, ஒரே மிடற்றில் குடித்துத் தீர்த்தாள்.
“இன்னங் கொஞ்சம் கொண்டுவரட்டுமா?”
“வேண்டாம்; போதும்.”
“ஆகாரம் ஏதாவது சாப்பிடுகிறாயா? என்ன வேண்டும்? தைரியமாய்க் கேள்.”
நம் சிறுமிக்குத் தைரியம் பிறந்தது. எழுந்து நடந்தாள். அந்த அறையின் சிறு கிடிக்கி வழியே எட்டிப் பார்த்தாள். வெளியில் ஒரே நீலநிறத்தில் பெரிய கடல்போல் தெரிந்தது.
“அதோ தெரிகிறதே, அது என்ன?”
“அதுதான் நீலநதி. ‘பஹ்ருன்னீல்’ என்று அழைப்பார்கள்.”
“அப்படியானால், இந்த ஊர் காஹிராவா?”
“ஆமாம் கண்ணே! நீ இதற்கு முன்னால் இந்த ஊருக்கு வந்ததில்லையோ?”
‘எத்தீம்’ இதற்குப் பதில் சொல்லாமல், தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்துவிட்டாள். அவளுடைய அவலக் கண்ணீரைக் கண்ட பர்கானாவுக்கும் மனமுருகிவிட்டது. அவளுடைய துக்கத்தை அதிகமாக்காமல் இருக்கும்பொருட்டு வெளியே மெல்ல நழுவிவிட்டாள் அவ்வீட்டு நங்கை.
அங்குள்ள சாளரவழியே உற்றுப் பார்த்துக்கொண்டே அச் சிறுமி கூறுகிறாள்:- “ஏ, நீலநதியே! உன்னைத் தரிசிக்கும் பாக்கியம் என் தந்தைக்குக் கொடுத்து வைக்கவில்லையே! ஏ, காஹிரா நகரமே! உன்மீது காலடி வைக்கும் பாக்கியத்தை என் அபூ பெற்றுக்கொள்ளவில்லையே! ஏ, மிஸ்ர் தேசமே! நான் ஏற்கெனவே கெட்டு மெலிந்ததெல்லாம் போதாதென்றா உன்னிடம் வந்து சேர்ந்தேன்? ஏ இறைவனே! நீ இன்னும் என்ன செய்யப்போகின்றாய்? ‘பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்’ என்பார்களே, அதை மெய்ப்பிக்கவா போகின்றாய்?”
(தொடரும்)
மறுபதிப்பு: சமரசம் – 1-15 செப்டம்பர் 2011
<<அத்தியாயம் 1>> <<அத்தியாயம் 3>>