04 – மனதார நம்புங்கள்

பொதுவாய் மனிதனுக்கு இருவகையான மனோ வடிவமைப்புகள் உள்ளன. அவையே அவனது குணங்களின் அடிப்படை ஆகும்.

 

ஒன்று ஆக்கபூர்வமானது (positive),

மற்றொன்று எதிர்மறையானது (negative).

இவை இரண்டும் அடிப்படையான மனித குணங்கள். இவை, நாம் போகிற போக்கில் ‘நானும் வரட்டுமா?’ என்று வந்து சேர்ந்து கொண்டவை இல்லை. மாறாய், மனிதன் பிறந்ததலிருந்தே அவை அவனுள் உருவாகி, வடிவாகி, நிலைபெறுகின்றன

பிறகு?

அவை விடாப்பிடியாக அவனுடன் ஒட்டிக் கொள்கின்றன. அவனிடமிருந்து போக மறுக்கின்றன.

மனிதன் பிறந்ததிலிருந்தே என்பது ஒரு பேச்சுக்கு சொன்னதில்லை. உண்மையிலேயே அவன் இவ்வுலகில் பிறந்ததிலிருந்து தான்.

எப்படி?

ஒரு விளக்கம் சொல்கிறார்கள்…

பிறந்த குழந்தையின் முதல் தகவல் பரிமாற்றம், ‘அன்பார்ந்த அம்மா, அப்பாவே!’ என்று ஆரம்பிப்பதில்லை.

அழுகை!

பசியா? அழுகை!

தாகமா? கத்தி அழுகை!

அப்படி ஆரம்பித்து, ‘சூச்சா, மூச்சா’ போய் ஈரமாய் இருந்தால், பொம்மை வேண்டும் என்றால், ச்சும்மா போரடிக்குது, எரிச்சலாக இருக்கிறது என்றால், அடாசு சீரியலை விட்டு அம்மா எழுந்து வரவேண்டும் என்றால்… அனைத்திற்கும் அழுகை.

கைக்குழந்தை அழுதால், அம்மாக்களுக்கு முதலில் தோன்றுவது, ‘அச்சோ! குழந்தை பசியால் கத்துது பார்!’ அதனால், உடனே பால் புகட்டப்படும். அதிலும் அழுகை அடங்கவில்லை என்றால் தான், பாட்டிகள் சொல்லலாம், “கொஞ்சம் உட்வர்ட்ஸ் க்ரைப் வாட்டர் கொடேன்; நீ கொழந்தையா இருக்கச்சே நானும் அதத்தாங்கொடுத்தேன்”.

ஆக, குழந்தையுடன் முதல் பதில் தகவல் பரிமாற்றம், பால், உணவு, தின்பண்டம். மற்ற நேரத்திற்கு வாயில் ‘நிப்பிள்’! சிறு வயதிலிருந்தே இப்படி உணவை ஊட்டி வளர்க்கும் பழக்கம் தான், பின்னர் சிலருக்கு வளர்ந்தபின் அதிகமாய் உணவு உண்ணும் வழக்கமாய் ஆகிவிடுகிறது என்கிறார்கள். நம்ப முடிகிறதா?

நானறிந்த வரையில் சிலருக்கு உணவு வகையைப் பொறுத்து வயிற்றின் கொள்ளளவு மாறுபடுவதை கண்டிருக்கிறேன். சிலருக்கு இடியாப்பம், பாயா, சிலருக்கு பிரியாணி! வேறு சிலருக்கோ அயிரை மீன் குழம்பு என்று எழுதிக் காண்பித்தாலே போதும். அவையெல்லாம் ஒருவர் வளர வளர, நா உண்டுணர்ந்து, மனம் பகுத்துணர்ந்து பரிணாமம் அடைந்ததாய் இருக்கலாம்.

மனோவியலாளர்கள் சொல்கிறார்கள், ‘பொதுவாய்க் குழந்தைப் பருவத்தில் அழுகையை நிறுத்தப் பாலும், உணவும் ஊட்டப்பட்டு வளர்த்ததால் சிலருக்குப் பிற்காலத்தில் அவர்களுடைய எரிச்சல், தனிமை, மன அழுத்தம் ஆகியனவற்றுக்குப் பரிகாரத்தை மது பாட்டிலிலும் சிகரெட்டிலும் காண மனம் உந்துகிறது’ என்று.

அடுத்து,

ஒருவருடைய நிகழ்காலக் குணாதிசயம் என்பது அவருடைய குழந்தைப் பருவ அனுபவங்களின் அடிப்படையைக் கொண்டே வடிவம் கொள்கிறது என்கிறார்கள். குழந்தைகளுக்கு இருப்பதெல்லாம் ‘திறந்த மனது’, ‘காலியான மூளை’. தவறாய் விளங்கிக் கொள்ளக்கூடாது. க்ளீன் சிலேட்போல என்று பொருள். குழந்தைகளுக்கு எவ்விதமான முன் தீர்மானங்களும் இருப்பதில்லை என்பதைத் தான் அப்படி விவரிக்கிறார்கள். நாம் பிஞ்சு மனம் என்கிறோமே அது! நஞ்சு கலக்ககாத பிஞ்சு மனம்! ஆனால் அது படு கூர்மையானது. பஞ்சு நீரை உறிஞ்சுவதைப் போல் அது விஷயத்தைச் சடுதியில் பிடித்துக் கொள்ளும்.

டிவியில் லேட்டஸ்ட் ஹிட் பாட்டுக்கு, நடிகை துக்கடா டிரெஸ்ஸுடன் இடுப்பொடித்து ஆடும் டான்ஸைப் பார்த்துவிட்டு, குட்டி ஜட்டியுடன் குழந்தை ‘தத்தக்கா பித்தக்கா’ என்று பாடி ஆடும்போது பெற்றோர்களுக்கு வாயெல்லாம் பல். போதாததற்கு வீட்டிற்கு வரும் விருந்தாளிகளின் முன்னிலயிலும் மகளை ஆடவிட்டுப் புளங்காகிதம்தான். அதே குழந்தை வளர்ந்தபின், அதே நடிகைகளைப் போல், ஜட்டியை விட ஒரு இன்ச் பெரிய குட்டைப் பாவடையுடன் காலேஜ், ஷாப்பிங் என்று போக ஆரம்பிக்கும் போதுதான், ‘என்ன ஃபேஷன் கர்மம் இது?’ என்று தலையில் அடித்தக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.

அதற்கடுத்து –

சிறு வயதில் பெற்றோர்களுடன் ஏற்படும் உறவு தான், ஒருவர் வளர்ந்ததும் அவர் அமைத்துக் கொள்ளும் வாழ்க்கை, பிறருடனான உறவு ஆகியவற்றுக்கு அடித்தளமாய் அமைகிறது. பாதி அவர் அறிந்து; பாதி அவர் அறியாமலேயே!

வளர்ச்சியடைந்த ஒரு மனிதனால் தன் பெற்றோர் போல் குணாதிசயம் கொண்ட மனிதர்களுடன் இயல்பாய் உறவு ஏற்படுத்திக் கொள்ள முடிகிறதாம். தன் அப்பாவைப் போல் அக்கறையான கணவன் அமைய வேண்டும் என்று ஒரு பெண் விரும்புவதும் தன் தாயைப் போல் பாசமான மனைவி அமைய வேண்டும் என்று ஆண் எண்ணுவதும் இதன் அடிப்படையில் தான் என்கிறார்கள்.

மற்றோருடன் அன்பாய்ப்ப் பேசி, நட்புறவு கொள்பவர்களாய்ப் பெற்றோர் இருந்தால், பிள்ளைகளுக்கும் அந்த குணம் வந்து அமைகிறது. வசவுச் சொல்லே செந்தமிழாய்ப் பேசும் பெற்றோரைக் கண்டு வளரும் வாரிசும் அப்படியே!

சென்னையில் பேட்டையில் வாழும் சிறுவர்களைப் பார்த்திருப்பீர்கள் – ‘ஆத்தா’ எனும் ‘தாய்’ சொல், கெட்டு குட்டிச்சுவராகியிருக்கும்.

எதற்கெடுத்தாலும் குழந்தைகளைத் திட்டி, குற்றம் சொல்லி, ‘நீ உருப்படாமத் தான் போகப் போறே போ!’ என்று பெற்றோர்கள் வளரும் குழந்தைகளுக்கு நல்லாசி வழங்கியவாறு இருந்தால், அந்தப் பிள்ளைகள் பூரண சுயசிந்தனையுடன் தங்களை உருப்படாமல் ஆக்க உதவும் சிறுவர்களைத் தேர்ந்தெடுத்து நட்பு ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

அதற்கு மாறாய், அன்பும், நற்சொல்லும் கேட்டு வளரும் சிறுவர்கள் இயல்பாகவே நல்லொழுக்கம் படர்ந்தவர்களாய் வளர்கிறார்கள். அத்தகையோருடன் உறவும் வளர்த்துக் கொள்கிறார்கள்.

எங்கும் எதிலும் விதிவிலக்கு இருக்கலாம். ஆனால் இதுதான் பொது நியதி!

மனதின் வடிவமைப்பு, அதன் பல அம்சங்கள் என்று இங்கு இதுவரை கண்டதெல்லாம் மேலெழுந்த சமாச்சாரங்களே. பிரச்சனைகளைப் புரிந்து கொண்டாலே பாதிப் பிரச்சனை தீர்ந்தது போல் தானே! ஆகவே நாம் எந்தவகை என்று தெரிந்து கொண்டால் திருத்திக் கொள்ளலாம். அல்லது…

மேலும் திருத்திக் கொள்ளலாம்.

மன மகிழ்விற்கு முதல் கட்டமாய் மனதார ஒன்றை நம்ப வேண்டும். இதுவரை நாம் பார்த்ததில் அது மிக முக்கியம்.

என்ன அது?

விடாப்பிடியாய்த் தொடரும் எந்தக் கெட்ட குணத்தையும் நம்மால் வெல்ல முடியும்!

ஒவ்வொருவரும் தம்மைப் பற்றி உயர்வாகவே கருத வேண்டும்; . நல்லவற்றையே சிந்திக்க வேண்டும். தமது செயல்களை ஆக்கபூர்வமாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

அதற்குத் தடை வரும். உடைத்தெறியப்பட வேண்டிய தடைகள்!

தாண்டினால்?

உள்ளுக்குள் எங்காவது பல்பு எரியும்! நெஞ்சுக்குள் எங்காவது மணி அடிக்கும்! மனதில் மகிழ்ச்சி எட்டிப் பார்க்கும்! புத்துணர்வு உள் நுழையும்!

அப்படியானதும், அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, மேம்படுத்தி வளர்த்துக் கொள்ளச் சான்றோர்களுடன் உறவு ஏற்படு்த்திக் கொள்ளச் சொல்கிறார்கள் வல்லுநர்கள்.

நான் நமது அரசியல்வாதிகளின் அறிக்கைகளைப் படிக்காமல் இருக்க உபதேசிப்பேன்.

மனம் மகிழ, தொடருவோம்…

இந்நேரம்.காம்-ல் 02 ஜூலை 2010 அன்று வெளியான கட்டுரை

<–முந்தையது–> <–அடுத்தது–>

<–ம. ம. முகப்பு–>

Related Articles

Leave a Comment