மனம் மகிழுங்கள் – 5. மாத்தியோசி

மது மனது எப்படி இருக்கிறதோ அப்படித்தான் அது உலகத்தை உணர்கிறது. மனது உலகத்தை எப்படி உணர்கிறதோ அப்படித்தான் உலகம் நம்மைப் பிரதிபலிக்கிறது.

குழப்புகிறதோ?

ரொம்ப சிம்பிள்.

நீங்கள் உற்சாகமாய், “குட் மூடில்“ இருக்கிறீர்கள் என்றால் நீங்களும் மற்றவர்களிடம் அன்பாய், இனிமையாய், நகைச் சுவையாய்ப் பேசுவீர்கள்.. பதிலுக்கு அவர்களும் உங்களிடம் அப்படியே பிரதிபலிப்பர். நீங்கள் சிரித்து நண்பரின் முதுகைத் தட்டினால் அவர் கத்தி எடுத்துக் கொண்டு உங்களைக் குத்த வரப்போவதில்லை. பதிலுக்கு அவரும் சிரித்தாக வேண்டும். உலகமே அன்று உங்களுக்கு மகிழ்ச்சியாய், இனிதாய்த் தோன்றும்.

நீங்கள் உற்சாகம் குன்றி, வருத்தத்திலும் அழுது வடியும் முகத்துடனும் இருந்தால்? பொறுமைசாலியான நண்பராய் இருந்தால், ஒரு சிங்கிள் டீ வாங்கிக் கொடுத்து உங்கள் சோகக் கதையைக் கேட்டுவிட்டு எஸ்கேப் ஆகலாம். அல்லது, தூரத்திலிருந்தே உங்களைப் பார்த்துவிட்டு ஓடும் பஸ்ஸில் ஃபுட்போர்டில் தாவி ஏறி ஓடிவிடலாம். அதைக் கண்டால் மேலும் சோகம் பெருகி, மேலும் வருத்தப்பட்டு… கஷ்டம்.

நம்மைப் பற்றி நம் மனதிலுள்ள சுயபிம்பம் தான், நாம் எப்படி நடந்துகொள்ளப் போகிறோம் என்பதை நிர்ணயிக்கிறது. அதன் அடிப்படையில் தான் நாம் யாரிடம் பழகப் போகிறோம், என்ன செய்யப் போகிறோம், அல்லது செய்யாமல் இருக்கப் போகிறோம் என்பது நிர்ணயிக்கப்படுகிறது..

சரி, நம்மைப் பற்றிய பிம்பம் நமக்குள் எப்படி உருவாகிறது?

அது நமது அனுபவங்களின் கலவை. நாம் சந்தித்த வெற்றி, தோல்வி, நம்மைப் பற்றி நாம் நினைப்பது, மற்றவர்களைப் பற்றி நம் மனதில் ஏற்படும் அபிப்ராயம், மற்றவர்கள் நம்மிடம் நடந்து கொள்ளும் முறை, இவையெல்லாம் நம்முடைய சுயபிம்பம் உருவாகும் காரணிகள். அதை மனம் நம்புகிறது. அந்த பிம்பத்தின் கட்டுமானததிற்குள்ளேயே நம்முடைய வாழ்க்கையை அது அமைத்துக் கொள்கிறது.

அந்த சுயபிம்பம் தான், இந்த உலகத்தை நாம் எந்தளவு நேசிக்கப் போகிறோம், அதில் வாழ என்னென்ன முயற்சி எடுக்கப் போகிறோம் என்பதையும், நாம் வாழ்க்கையில் எதை சாதிக்கப் போகிறோம் என்பதையும் நிர்ணயிக்கிறது.

நாம் யார் என்று நினைக்கிறோமோ அது தான் நாம்!

அந்த சுயபிம்பம் நம்மை எப்படி வடிவமைகிறதோ அது தான் நாம்!

பள்ளியில், கல்லூரியில் ஏதாவது ஒரு பாடம் படு்த்தியெடுக்கும். ஒருவர் பௌதிகத்தில் வீக்காக இருப்பார். “என்னதான் தலைகீழாக நின்றாலும் இது என் மண்டையில் ஏறாது” என்ற முடிவிற்கே வந்துவிடுவார். ஆரம்பத்தில் ஏதாவது ஒரு பெளதிக விதி சற்றுப் புரியாமல் ஆகி, அதைத் தொடர்ந்து அந்தத் தேர்வில் சற்றுக் குறைந்த மதிப்பெண் பெற்றிருக்கலாம். அதுவே பின்னர் அலர்ஜியாக உருப்பெற்று, ”ம்ஹும்! காப்பி அடிக்கலாமா? பிட்டு அடிக்கலாமா?” என்று குறுக்குவழிக்கு மனம் தயார்பட ஆரம்பித்திருக்கும்.

மனம் மேலும் மேலும் அந்தப் பாடத்தில் அவரைப் பின்தங்க வைக்கும். அப்படியே தப்பித் தவறிச் சற்று நல்ல மதிப்பெண் கிடைத்துவிட்டாலும், ”ஹ! எல்லாம் குருட்டு அதிர்ஷ்டம்” என்று தான் மனம் நம்பும். அடுத்த தேர்வில் தோல்வி வந்தால், ”அதான் அப்பவே தெரியுமே!” என்றுதான் மனம் நிம்மதி அடையும்.

பௌதிகம், உதாரணம் மட்டுமே! வாழ்க்கையில் ஒருவர் இப்படி ஏதாவது ஒரு விஷயத்தில் பின்னடைந்து இருக்கலாம், வீக்காக இருக்கலாம்.

சைக்களில் டபுள்ஸ் அடிக்கும் போது ஒருமுறை விழுந்திருப்பார். அதன் பிறகு தம்மால் டபுள்ஸ் அடிக்க முடியாது என்று முடிவெடுத்து அதையே நம்ப ஆரம்பிப்பார். தாம் மனதளவில் அதைப் பலமாய் நம்புவது மட்டுமில்லாது, பார்ப்பவரிடமெல்லாம் அதைப் பறை சாற்றிககொள்ளவும் செய்வார்.. எதிர் வீட்டு மாமா, அடுத்த வீட்டு வேலைக்காரி, காலையில் பால் சப்ளை செய்பவர் என்று யாரிடமெல்லாம் சகஜமாய்ப் பேசுவாரோ அத்தனைப் பேரிடமும் அவரது பலவீனம் விளம்பரம் ஆகும். எவ்வளவுக்கு எவ்வளவு அவர் அப்படிச் சொல்லிக் கொள்கிறாரோ மற்றவர்களும் அந்த அளவுக்குஅதை நம்ப ஆரம்பித்து விடுகிறார்கள். அதைக் கொண்டு மனம் மேலும் தன்னை அப்படியே நம்ப, அவரது பலவீனமான சுயபிம்பம் வலுவடைந்து விடுகிறது.

இதை மாற்ற, நம்மைப் பற்றிய உயர்ந்த சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்

அதற்கு என்ன செய்யலாம்.

மாத்தியோசி!

நம்முடைய பாஸிட்டிவ் தன்மைகளை உணர்ந்து நம்மால் நம் குறைகளைக் களைந்து முன்னேற முடியும் என்ற தன்னம்பிக்கை முதல்படி. தம்முடைய சக்தியையும் வலிமையையும் உணர்ந்து கொள்ள ஆரம்பித்துவிட்டால், அதுவே ஒருவரை வேகமாய் முன்னேற வைக்கும்.

“என்னதான் ஸ்பின் போட்டால்லும் என்ன? துரத்துகிறேன் பார் அதைப் பவுண்டரிக்கு” என்று நினைத்தால் அதுதான் தன்னம்பிக்கை. அம்பயர் கையை வேகமாய் வலமும் இடமும் ஆட்ட வேண்டியது தான்.

மாறாக “இந்த ஸ்பின்னெல்லாம் தாங்குவேனா” என்று நினைத்தால் அம்பயர் ஒற்றைக் கையின் ஒற்றை விரலை மேலே நீட்டி விடுவார்.

“வர வருமானத்திலே எப்படித் தான் குப்பைக் கொட்டுவதோ” என்று நினைத்தால் மாசா மாசம் பற்றாக்குறை தான்.

“எப்படியும் சமாளிச்சுடலாம்” என்று நினைத்துப் பாருங்களேன். மாயம் நிகழும்.

இது இப்படியிருக்க,

தமது வாழ்க்கையில் ஓரளவு தான் நல்லது நடக்கும் என்று சிலரது மனம் தேவையில்லாமல் ஒரு வரைமுறை வைத்திருக்கும். அவரது வாழ்க்கையில் நல்லதே நடந்து கொண்டிருக்கிறது என்று வையுங்கள், ”அதெப்படி எல்லாமே இவ்ளோ சூப்பரா நமக்கு நடந்து கொண்டிருக்கிறது” என்று அவரது மனம் ஆச்சரியமும், இனந்தெரியா பதட்ட நிலையையும் அடைய, அடுத்து ஏதாவது ஒரு தீயது நிகழலாம்.

“அதானே பார்த்தேன். அப்படி நமக்கு எல்லாமே ஒழுங்கா நடந்துட்டாலும்?” என்று அப்பொழுதுதான் மனம் சமாதானம் அடையும்.

மனதை இன்பமாக வைத்துக் கொள்ள வரைமுறை தேவையில்லை. நம்மை விட வாழ்க்கையில் உயர்ந்தவர்கள் எத்தனைக் கோடி உள்ளார்களோ அதே போல் நமக்கும் கீழே உள்ளவர் கோடி.

எனவே நமது சுயபிம்பத்தை சிறப்பானதாக ஆக்கிக்கொள்ள நமது வாழ்க்கையின் தரம், அமைதி, நோக்கம் இவற்றைத் தரமானதாக ஆக்கிக் கொள்ளவேண்டும்.

இங்கு ஒன்றை மிகக் கவனமாய் மனதில் கொள்ள வேண்டும். நம்மைப் பற்றிய உயர்வான சுயபிம்பம் என்பதற்கும் கர்வம், அகந்தை தலைக்கணம் போன்ற சொற்களுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசத்தை உணர வேண்டும்.

இல்லையென்றால் என்னாகும்?

தரமான சுயபிம்பம் மனமகிழ்வுடன் நாம் வாழ்க்கையில் உயர வழிவகுக்கும்.

மற்றவை? சட்டசபை, நாடாளுமன்றம், என்று எங்காவது நம்மை அனுப்பி வைக்கலாம்.

மனம் மகிழ, தொடருவோம்…

இந்நேரம்.காம்-ல் 09 ஜூலை 2010 அன்று வெளியான கட்டுரை

Related Articles

Leave a Comment