42 – இயற்கை மனம்

இந்தப் புவியும் அண்டமும் அதற்கும் அப்பால் இருக்கின்ற அண்டங்களும் நிர்ணயிக்கப்பட்ட விதியின்படி, ஓர் ஒழுங்குமுறைப்படி ஒவ்வொரு

நொடியும் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை முன்னரே ஒரு முறை பேசிக் கொண்டோம்.

உதாரணமாய், புவி ஈர்ப்பு விதி! அது நம் எல்லோருக்கும் தெரியும். கடையிலிருந்து வாங்கி வந்த மளிகைப் பையை மேசையின்மீது வைக்காமல் பொத்தென்று போட்டால் அது மிதக்கவோ, மேல் நோக்கிச் செல்லாமலோ நம் காலில் நச்சென்று விழுந்து, அடுத்த நொடி “ஆ!”

பருவகாலம், வெயில், மழை, இலை, தழை, அதை மேயும் ஆடு, கம்பத்தைப் பார்த்ததுமே பின்னங்கால்களுள் ஒன்றைத் தூக்கும் நாய் என்று அனைத்திலும் ஒரு விதி உள்ளது. இயற்கையான இந்த ‘இயற்கை விதி’களை இயற்கையாகவே நாம் உணர்ந்து வைத்திருக்கிறோம்.

நெருப்பில் விரல் நீட்டினால் சுடும் என்பது விவரம் அறியாத வயதுவரை தானே? அதன் பிறகு?

சுவரில் இருக்கும் மின்விசைத் துளையில் சுண்டுவிரலைச் செருகினால் என்னாகும், இரும்பு காந்தத்தை நெருங்கினால் என்னாகும், தெருவோரக் கடையில் தேநீர் அருந்திக்கொண்டு நிற்கும் வாலிபனை, தாவணிப் பெண்ணொருவள் ஓரப்பார்வை பார்த்துவிட்டு நகர்ந்தால் நிகழ்வுறப்போகும் ரசாயண மாற்றம் என்ன என்பதெல்லாம் நமக்குத் தெரிந்திருக்கிறது.

கண்களால் காண இயலாவிட்டாலும் இதிலுள்ள விதிகளை நம்பும் நாம் வெற்றி தோல்விகளுக்கு நம்முடைய செயல்களுடன் உள்ள தொடர்பை மட்டும் எளிதில் நம்ப மறுக்கிறோம். மரத்தடி கிளி, வானில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் கிரகம், ஏதோ அவசரத்தில் நம் எதிரே ஓடிய பூனை என்று ஏதாவது ஒரு காரணம் தேவைப்படுகிறது.

இறைவன் நிர்ணயித்த விதியின்படி உங்களது செயல்களுக்கு ஏற்ப முடிவுகள் அமைகின்றன; செயல்கள் உங்களது மன எண்ணங்களுக்கு ஏற்ப நிகழ்வுறுகின்றன.

பணததை எடுத்துத் தொழிலில் போட்டு இரா, பகல் என்று திட்டமிட்டு உழைத்தால் லாபம். ஊரார் பணத்தை எடுத்து நம் பையில் போட்டுக்கொண்டால் தர்ம அடியோ, திஹார் ஜெயிலோ நிச்சயம். எடுத்த பணத்திலுள்ள பூஜ்யங்களின் எண்ணிக்கை அதை நிர்ணயிக்கும்.

மனதையும் அதன் எண்ணங்களையும் சக்தியையும் அவரவரும் அவரவர் மொழியில் வியாக்கியானம் செய்கிறார்கள். ப்ளாட்டோ (Plato) எனும் கிரேக்க தத்துவஞானி, ‘இயல்பு என்பதை உருவாக்குவது நம் மனம்தான். நாம் நமது மனதை மாற்றிக் கொள்வதன் மூலம் இயல்பையே மாற்றிவிடலாம்’ என்கிறார். மார்கஸ் அரிலியஸ் (Marcus Aurelius) என்ற கிரேக்க சக்ரவர்த்தியோ, “ஒரு மனிதனின் வாழ்க்கை என்பது அவனது எண்ணங்கள் அதை உணர்ந்து கொள்வதைப் பொறுத்து” என்று எழுதி வைத்துவிட்டார்.

விஞ்ஞானிகளுக்குத் தத்துவத்திற்கெல்லாம் நேரமில்லை அல்லவா? அதனால் அவர்கள் தங்கள் மொழியில் விவரிக்கிறார்கள். உங்கள் வீடு, கார், பல் குத்தும் குச்சி, கன்னத்தில் மிச்சமிருக்கும் உங்கள் மனைவியின் லிப்ஸ்டிக் இவையெல்லாம் என்ன? உடைத்துக் கொண்டே போனால் அணுவும் அணுத்துகளும்! கண்ணுக்குப் புலப்படா அணுவும் அதன் அதிர்வுகளுமே நாம் காணும் பற்பல பிம்பங்கள். அணுவின் தொகுப்பு அவை அதிரும் சக்திகளுக்கேற்பவே திடப்பொருள்கள் அமைகின்றன.

புரிவதைப்போல் இருக்கிறது என்று நாம் தலையாட்டினால் தொடர்கிறார்கள். அதனால் உங்களுக்குள் எண்ணம் என்று ஒன்று ஏற்படும்போது மூளையிலிருந்து ஒரு சக்தி உருவாகிறது. அந்த சக்திக்கு அதிர்வு உண்டு. ஒவ்வொரு வினைக்கும் அதற்கேற்ப எதிர்வினை உண்டு என்றுதானே விஞ்ஞானம் கூறுகிறது. அதனால் உங்கள் மனதில் ஏற்படும் சக்தியின் அதிர்வுக்கு ஏற்ப எதிர்வினை ஏற்படுகிறது என்று நம்மை எங்கேயோ அழைத்துச் சென்றுவிடுகிறார்கள்.

“ஆத்தா வெய்யும்; சந்தைக்கு போவனும்; ஆள விடு” என்று ஓடிவர வேண்டியிருக்கிறது.

இங்கு அடிப்படையாய் நாம் புரிந்து கொள்ளவேண்டியது என்னவெனில் –

நம் வாழ்க்கையின் நிகழ்வுகளுக்கும் இயற்கையின் விதிகளுக்கும் தொடர்பிருக்கிறது என்பதே. எனவே இயற்கையின் விதிகளில் நம் மன மகிழ்விற்குத தேவையான பாடங்கள் அமைந்துள்ளன. அவற்றிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். செயற்கை முறை எல்லாம் இல்லாமல் இயற்கையான ஆரோக்கியமான பாடங்கள் அவை என்கிறார்கள். என்னென்ன என்று அடுத்தடுத்த அத்தியாயங்களில் பார்ப்போம்.

மனம் மகிழ, தொடருவோம்…

இந்நேரம்.காம்-ல் 01 ஏப்ரல் 2011 அன்று வெளியான கட்டுரை

<–முந்தையது–> <–அடுத்தது–>

<–ம.ம. முகப்பு–>

Related Articles

Leave a Comment