45 – ரிலாக்ஸ் ப்ளீஸ்!

by நூருத்தீன்

தொண்டையில் நிற்கிறது வரமோட்டேன் என்கிறது’; ‘இவரை எங்கேயோ பார்த்திருக்கிறேன், எங்கேன்னு ஞாபகம் வரலை’ என்று மூளையைக் கசக்கிக்

கொள்வோம் தெரியுமா? அப்படிச் சிரமப்படும்போதோ,

ஒரு பிரச்சினையை, சிக்கலை, வேலையை, முடித்தே தீரவேண்டும் என்று பதறும்போதோ அது நடைபெறாமல் மேலும் சிக்கலாகி, எரிச்சல் அதிகமாகி, கோபம், ஆத்திரம், மகிழ்வு இழத்தல்.. இத்தியாதி…..!

சிக்கலான நேரங்களில் அந்தப் பிரச்சினையை ஒத்திவைத்து, அதன் போக்கிற்கு விட்டுவிட்டு நாம் ரிலாக்ஸ்டாக இருந்தால் போதும்; எங்கிருந்தோ திடீரென ஒரு பொறி பறந்து வந்து ஒரு விடை தரும்; நம் பிரச்சினைக்குத் தீர்வு தென்படும். குளியலறை, கழிவறை, படுக்கையறை போன்ற இடங்களில் நாம் இயல்பாய் நம் இறுக்கம் தளர்த்தியுள்ள தருணங்களில் அவை நடைபெறும் என்று உளவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். கழிவறையில் மலச்சிக்கல் இல்லாமல் இருக்கும்போது புது ஐடியாக்கள் சாத்தியம் என்றுதான் தோன்றுகிறது. அப்பொழுது மறவாமல் செல்ஃபோனையும் வெளியே விட்டுவிட்டுச் செல்ல வேண்டும்.

அறிவியல் ரீதியாய் இதற்கு விளக்கம் சொல்கிறார்கள். நாம் ‘அப்பாடா’ என்று ரிலாக்ஸ்டாக இருக்கும்போது நம் மூளையின் சந்தம் நிதானமான வகையில் செயல்படுகிறதாம். அந்நேரம் நம் திறமையும் சிந்தனா சக்தியும் அதிகரித்து, அவை உற்சாகமாய்ச் செயல்பட, பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு காண முடிகிறது; புதிதாய் ஏதேனும் திட்டம் உருவாகிறது.

அதற்காகக் கணிதத் தேர்வு சிக்கலாக இருக்கிறது, சட்டென்று விடை யோசிக்க முடியவில்லை எனச் சொல்லி இடையில் கிளம்பிச் சென்று சிறிது தூங்கிவிட்டு, குளித்துவிட்டு வருகிறேன் என்றால் சரிவராது. நன்றாகப் படித்துவிட்டுத் தேர்வுக்குச் செல்வது ஒன்றே வழி.

நாம் நமது உடலின் இறுக்கங்களைத் தளர்த்திக்கொள்ளும்போது இயற்கையாகவே நம் உடல் ஒரு சமநிலைக்கு வருகிறது; ரத்த அழுத்தம் குறைந்து நமது சுவாசம் ஆழமாகவும் எளிதாகவும் மாறுகிறது. உடல் உறுப்புகள் இணக்கமுறுகின்றன. மனமும் டென்ஷன் குறைந்து இலேசாகிறது. அப்படி ஆகும்பொழுது எப்பொழுதுமே சிடுசிடு என்று இருப்பவர்கூடச் சற்று சிரிக்கிறார்; வழக்கத்திற்கு மாறாய் ஜோக் சொல்கிறார்.

ஆனால் –

முயற்சி எடுத்து முழுமூச்சாய்க் காரியம் ஆற்றுவதற்கும் நம்மைத் தளர்த்திக் கொண்டு விட்டுப்பிடித்துச் செயல்படுவதற்கும் இடையில் உள்ள நுண்ணிய வித்தியாசத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். ரயிலைப் பிடிக்கச் சாவகாசமாய்ப் போனால், வண்டி தாம்பரம் தாண்டிவிடும். அதைப்போல் நம்மை மீறிய செயல்களுக்கு மண்டையை உடைத்துக் கொண்டு கண்விழித்து ஆகப்போவது ஒன்றுமில்லை. எனவே இந்த வித்தியாசத்தைச் சரியாக உணர்ந்து செயல்பட்டால் நம் மனதின் மகிழ்ச்சிக்குப் பங்கம் வராது.

இதையும் இயற்கையிடமிருந்து கற்க முடியும். கடந்த அத்தியாயங்களில் பார்த்தோமே, ‘குழந்தைகள், அவர்களுடன் விளையாடுவது’ அவையெல்லாம் இத்தகு ரிலாக்ஸ் நிலைக்கு உதவுகின்றன.

பறவைகளும் மிருகங்களும் என்ன செய்கின்றன? இருபத்து நாலு மணி நேரமும் அவை ஓடி ஓடி உழைப்பதில்லை. அன்றைய கோட்டா முடிந்ததா, ஓய்வும் ஏகாந்தமும் உறக்கமும் அதன்பாடு. நாளைய உணவு? அது நாளைய பிரச்சினை! சிட்டுக் குருவிகளிடம் இரவில் அப்பாயின்டமெண்ட் கேட்டுப்பாருங்கள் – தாட்சண்யமின்றி மறுத்துவிடும். ஆந்தையார் ‘டே மாட்ச்’ பார்க்க மாட்டார்! இவ்விஷயங்களில் ஐந்தறிவு ஜீவன்கள் ஆறறிவாளர்களான நம்மைவிடத் தெளிவானவை.

அடுத்து –

பற்றற்ற தன்மை. இது சில நேரங்களில் முக்கியம். சில விஷயங்களில் முடிவைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல் காரியமாற்றுவது நல்லது. எதிர்பார்ப்பு ஏதும் இன்றி நாம் ஒரு விஷயத்தில் லயித்துச் செயல்படும்போது அது நாம் இயல்பாய் இருக்க உதவுகிறது. உற்சாகமும் மகிழ்வும் தானாய் இணைந்து கொள்ளும். பிறரது கவனத்தைக் கவர வேண்டும், திருப்திப்படுத்த வேண்டும், பாராட்டுப் பெறவேண்டும் என்பதற்காகச் செயல்புரிய ஆரம்பித்தால் அப்பொழுது தொற்றுகிறது அனாவசிய இறுக்கம். அதன் விளைவு – நம் இயல்பு காணாமல் போய்விடுகிறது.

செய்யும் செயலை விரும்பிக் கவனத்துடன் செய்யப் பழகினால் போதும். மகிழ்வும் செயலின் பலனும் தாமாகவே நம்மை அடையும்.

வெண்டைக்காய் விதைத்துவிட்டு அரைமணிக்கு ஒருமுறை மண்ணைத் தோண்டி விதை முளைக்க ஆரம்பித்துவிட்டதா என்று பார்த்துக் கொண்டேயிருந்தால் என்னவாகும்? ‘சர் தான் போ!’ என்று சொல்லிவிடும் விதை. அதைவிடுத்து, விதைத்த மண்ணில் தண்ணீர் ஊற்றிவிட்டுப் புத்தகம் வாசிப்போம், மனைவிக்குப் பாத்திரம் தேய்த்துக் கொடுப்போம் என்று நம் வேலையைப் பார்த்துக் கொண்டால், தானாய்ச் செடி முளைக்கும். வெண்டைக்காயும் காய்க்கும். பறித்து, காம்பைக் கிள்ளாமல் நறுக்கிப் பொரியல் சமைக்கலாம்.

அடுத்து –

மாற்றம்! இது இயற்கையின் ஓர் அம்சம். காலம் நகர்கிறது. செடி கொடிகள் வளர்கின்றன; மடிகின்றன. நாம் தவழ்கிறோம்; வளர்கிறோம்; முடி நரைக்கப் பெறுகிறோம்; பிறகு ஒருநாள் இந்தப் புவியிலிருந்து காணாமல் போகிறோம். எதுவும் எப்பவும் அப்படி அப்படியே இருப்பதில்லை. பழையன கழிதல்; புதியன புகுதல். அதுதான் வாழ்க்கை. அதுதான் விதி!

அனைத்தும் அனைவரும் எல்லாமும் செதுக்கி வைத்த சிற்பம் போல் தினந்தோறும் ஒரே மாதிரி இருந்தால் எப்படியிருக்கும்? இரண்டு நாள் தொடர்ந்து டிபனுக்கு உப்புமா என்றாலே நமக்கெல்லாம் சகிப்பதில்லை. தினந்தோறும் ஒரே மாதிரி பொழுது விடிந்து சாய்ந்தால் என்னவாகும்? ஒரே வாரத்தில் போரடித்து எங்கு ஓடுவது என்று தெரியாமல் ஓட ஆரம்பித்துவிடுவோம். தொலைக்காட்சி, பத்திரிகைக்காரர்கள் எல்லோரும் ஆபீஸை இழுத்து மூடிவிட வேண்டியதுதான்.

என்ன ஒன்று, நமக்கான மாற்றங்கள் ஆரோக்கியமாய் அமைய வேண்டும். ஆரோக்கியமான மாற்றங்கள் வரவேற்கப்பட வேண்டியவை.

கவலைகளை மனதிலிருந்து நீக்கிவிட்டுப் பாருங்கள்; புதிய நல்லவைகளை மனம் காந்தம்போல் உள்ளிழுக்கும். தேவையற்ற பழையதைக் கழித்துக் கட்டும்போது அங்கு வெறுமை ஏற்படுகிறது. அந்த வெறுமையை நிரப்பப் புதியன வந்து புகுந்துவிடுகின்றன. அதைப்போல் தேவையற்ற பழைய கவலைகளை, பிரச்சினைகளைத் தூக்கி வீசிவிட்டால் மனதில் அந்த இடம் காலியாகி அதை நிரப்பப் புதிய மகிழ்ச்சிகள் காத்திருக்கும். மனம் என்ன பரணா – தேவையற்ற குப்பைகளைச் சேர்த்து வைப்பதற்கு?

உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் காலா காலத்தில் உரிய நேரத்தில் வெளியேறாவிட்டால் என்னவாகும் யோசித்துப் பாருங்கள்! கழிவுகள் நீங்கினால்தான் பசி; பசித்தால்தான் அடுத்தவேளை புது உணவு!

மனம் மகிழ, தொடருவோம்…

அடுத்த இதழில் நிறைவுறும்!

இந்நேரம்.காம்-ல் 22 ஏப்ரல் 2011 அன்று வெளியான கட்டுரை

<–முந்தையது–> <–அடுத்தது–>

<–ம.ம. முகப்பு–>

Related Articles

Leave a Comment