46 – அறியாத மனசு – மகிழ்வே பரிசு!

‘மனம் மகிழ வேண்டும் என்று கடந்த நாற்பத்து சொச்சம் வாரங்களாய் என்னென்னவோ படித்து விட்டோம்; உரையாடிக் கொண்டோம். இறுதியில் மனம்

என்றால் என்ன; எப்படியிருக்கும் என்ற கேள்வி அப்படியே இருக்கிறது. அதற்கு ரத்தம், சதை, தோல் உண்டா; அதன் உணர்வுகளுக்கு நிறம் உண்டா என்றெல்லாம் யோசித்தால், இல்லை என்று சொல்வதா; தெரியாது என்பதா?

  • நாம் மனதால் நினைப்பதை எப்படிக் கவர்ந்து இழுக்கிறோம்?
  • நாம் பயப்படுவது எப்படி நம்மை வந்தடைகிறது?
  • மனம், ஆழ்மனம் என்பதையெல்லாம் எங்கு காண்பது?
  • என் மனம் உற்சாகமாயிருக்கிறது; எனது உடல் ஆரோக்கியமாய் இருக்கிறது என்று நம்பும்போது நம்மிடம் ஏற்படும் மாற்றங்கள் எப்படி நிகழ்கின்றன? அதனுடைய பலனை எப்படி விவரிப்பது?
  • நம்முடைய சிந்தனைகள் எப்படி நம்முடைய வாழக்கையை அமைக்க உதவுகின்றன; அல்லது மாற்றி அமைக்கின்றன?
  • CTScan-ஆல் செய்ய இல்லாவிட்டால் போகட்டும். நமது சிந்தனைகளை ஐஃபோனாவது படம்பிடித்துக் காண்பிக்குமா?

இப்படி விடாமல் சுற்றிவளைத்து எப்படிக் கேள்வி கேட்டாலும் தர்க்க ரீதியாய்ப் பார்க்கப் போனால் அதற்கு விளக்கங்கள் குறைவு; அல்லது இல்லை.

ஒரு விஷயத்தை உணர்வதும் அது எப்படிச் செயல்படுகின்றது என்பதைப் புரிந்து கொள்வதும் இரு வேறு விஷயங்கள். மனமும் அதன் உணர்வுகளும் எப்படிச் செயல்படுகின்றன என்பது நமக்குத் தெரியாது! அறிவியல் அதைத் தெளிவுபடுத்தவில்லை. சொல்லப்போனால் அறிவியல் எதையுமே தெளிவுபடுத்தாது. அதன் வேலையெல்லாம் ஏதாவது ஒரு காரணம் கண்டுபிடித்துச் சொல்லவேண்டும்; அவ்வளவுதான்!

உள்ளுணர்வு என்கிறார்கள்; மனதிற்குக் காந்தசக்தி உண்டு, ஈர்ப்பு விசை இருக்கிறது என்கிறார்கள்.. இதையெல்லாம் ஏதோ ஒருவிதமாய்ப் பொத்தாம் பொதுவாய் உணர்ந்து கொள்கிறோம்; மண்டையையும் ஆட்டிக் கொள்கிறோமே தவிர அவற்றையெல்லாம் எப்படிப் புரிந்து கொள்வது?

அதனால்தான் உண்மையான அறிவியலாளர்கள் தங்களது அறியாமையைப் பெருமையுடன் ஒப்புக் கொள்வார்கள். ஐன்ஸ்டைன் ஒருமுறை, “எவ்வளவுக்கு எவ்வளவு அதிகம் அறிந்து கொள்கிறேனோ, அவ்வளவுக்கு அவ்வளவு எனக்கு அறியாமை அதிகம் என்பதை உணர்கிறேன்” என்றார். அறிவின் தரம் என்பதே, அறிவு வளர வளர ‘நமது அறிவு எத்தகு சிற்றறிவு; எவ்வளவு அற்பம்’ என்பதை உணர்ந்து கொள்வதுதான்!

‘அறிவு விருத்தியடைபவன் தனக்கு அறிவில்லை என்று உணர்கிறான்; அப்படியானால் அறிவில் சிறந்தவன் என்று தன்னை நினைத்துக் கொள்பவனுக்கு அறிவு இல்லை என்றாகிறதே; ஆக மொத்தத்தில் யாருக்கும் அறிவில்லையா’ என்ற கேள்வி எழுகிறது. க்ளைமேக்ஸில் வில்லனைப் பார்த்துப் பக்கம் பக்கமாய் வசனம் பேசும் கதாநாயகன் போல் இப்பொழுது நம் க்ளைமேக்ஸில் அதை விவாதித்துக் கொண்டிருக்க முடியாது. அது இங்கு முக்கியமும் இல்லை. நாம் மனதைத் தொடருவோம்.

செரிமானம் என்பதை எடுத்துக் கொள்ளுங்கள். செரிமானத்திற்கு அறிவியல் சொன்ன விளக்கங்கள் தெரியும்; இஞ்சி மறப்பா சாப்பிட்டால் செரிமானம் ஆகும் என்பதும் தெரியும். ஆனால் இரண்டு இட்லி, வடை, தட்டு நிறைய சாம்பார், என்று வழித்துச் சாப்பிட்டுவிட்டு, அதை எப்படிச் செரிமானம் செய்வது என்று நமக்குத் தெரியுமா; உடலுக்குச் சொல்கிறோமா?

தர்க்கம், மதிநுட்பம் என்பனவெல்லாம் உபகரணங்களே தவிர ஓர் அளவிற்குமேல் நம் அறிவிற்கு உதவாது. கையை பிளேடால் வெட்டிக்கொண்டால் தானாகக் காயம் ஆறி அனைத்து செல்களும் மீண்டும் அங்கு ஒருங்கிணைந்து சீராவதை என்ன அறிவார்ந்த விளக்கம் சொல்லி விளக்க முடியும்? மீண்டும் கவனத்தில் கொள்ள வேண்டும். அறிவியல் சொல்வது முழு விளக்கமன்று. அது ஏன் அப்படி ஆகிறது; அந்த செல்களுக்குக் கட்டளையிட்டது யார் என்றால் பதில் கிடைக்காது.

மனம் என்பதை உணர்கிறோமே தவிர அது என்னவென்று தெரியாது. அதன் உணர்வு நிலை, அதன் ஆற்றல் முழுவதும் நமக்குத் தெரியாது. பிறந்த நொடியிலிருந்து அது செயலுக்கு வந்துவிடுகிறது. மூளையை, இதயத்தை எல்லாம் அறிவியல் கூறு போட்டுப் பார்த்திருக்கிறதே தவிர அதில் மனம் எங்கு ஒளிந்து கொண்டுள்ளது என்று மைக்ரோஸ்கோப் காண்பிக்கவில்லை.

மன உணர்வுகளும் எண்ணங்களும் நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் பின்னிப்பிணைந்துள்ளன. கையில் அடிபட்டால் வலிக்கிறது; மூளை உணர்கிறது. வலி எங்கே என்றால் மற்றொரு கையால் அடிபட்ட கையைக் காண்பிக்க முடிகிறது. மனதில் உணர்வுகள் வலித்தால் எங்கே எப்படிக் காண்பிப்பது? ஓர் எண்ணம் என்று மனதில் தோன்றினால் அது எங்கு எப்படித் தோன்றுகிறது? அதை தோற்றுவிப்பது என்ன? யாருக்கும் சொல்லத் தெரியவில்லை.

அனுபவத்தாலும், இதுநாள்வரை கூர்ந்து நோக்கிப் பயின்றதாலும் கற்றுணர்ந்ததையே உளவியலாளர்கள், இத்துறையின் நிபுணர்கள் நமக்குப் பக்கம் பக்கமாய், புத்தகம் புத்தகமாய் எழுதித் தெரிவிக்கிறார்கள். நாம் என்ன செய்ய வேண்டும்? நன்றி சொல்லி அந்தத் தகவல்களை எல்லாம் பெற்று வைத்துக் கொண்டு மனம் மகிழ வேண்டும். அவ்வளவே!

ரத்தம், சதை, சுவாசம், காதல், காமம், பொறாமை என்று வாழ்க்கையின் அடிப்படை அம்சங்கள் அனைவருக்கும் பொதுவானவை. அந்த வாழ்க்கை போரடிக்கிறதா, விறுவிறுப்பாய் அமைகிறதா என்பது நம்மிடம் உள்ளது; நம் மனதிடம் உள்ளது.

கடந்த ஆண்டுகளில் உங்களுக்கு ஏற்பட்ட சிந்தனையும் அதைத் தொடர்ந்து நீங்கள் செயல்பட்டதும்தான் இன்று இந்த நீங்கள்!

அதைப்போல் இன்று இந்த நொடி நீங்கள் என்ன அனுபவிக்கிறீர்கள், சிந்திக்கிறீர்கள், செயல்படுகிறீர்கள் என்பதைக் கொண்டுதான் நாளைய நீங்கள்!

நாளை என்பதோ அனைவருக்கும் கேள்விக்குறி. ஆகவே,

இன்றும் இந்த நொடியும் என்று ஒவ்வொரு நொடியும் மனம் மகிழ்ந்து கொள்வதே நலம்! உற்சாகம் தொற்றிக் கொள்ளும் இயல்புடையது. உங்களின் மகிழ்வு உங்கள் வீட்டினரைத் தொற்றும்.

வீடுயர? நாடுயரும்!

மனம் மகிழுங்கள்!

இந்நேரம்.காம்-ல் 29 ஏப்ரல் 2011 அன்று வெளியான கட்டுரை

<–முந்தையது–>

<–ம. ம. முகப்பு–>

Related Articles

Leave a Comment