கிளி ஜோஸ்யம் தெரியுமா?
அதிர்ச்சியெல்லாம் வேண்டாம். இத்தொடரின் பேசுபொருளை மாற்றும் உத்தேசமெல்லாம் இல்லை. கிளி
ஜோஸ்யம் பார்த்திருக்கிறீர்களோ இல்லையோ, அந்தக் கிளியை எல்லோருக்கும் தெரியும். தத்தித் தத்தி வெளியே வந்து, லொட லொடவென்று கஸ்டமரிடம் இஷ்டத்திற்கு அளந்து கொண்டிருக்கும் தன் எஜமானனின் பேச்சையெல்லாம் பொருட்படுத்திக் கொள்ளாமல், கடனே என்று ஒரு சீட்டை எடுத்துக் கொடுத்துவிட்டு, ஓரிரு நெல்மணிகளைலஞ்சமாகப் பெற்றுக்கொண்டு சமர்த்தாய்க் கூண்டிற்குள் சென்றுவிடும். அடைபட்டுள்ள கூட்டிலிருந்து வெளியே வந்தால் கூட அந்தக் கிளிக்குத் தப்பிப் பிழைத்துப் பறந்துபோகத் தோன்றுவதேயில்லை. அட, இறக்கையை வெட்டியிருந்தாலும் தாவிக் குதித்தாவது தப்பியோட முயல வேண்டுமே! ம்ஹும்! கூண்டு, சீட்டு, நெல், கூண்டு, சுபம், சுகம் என்று வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்டது.
ஏன் இப்படி? அதன் மனது அப்படிப் பழக்கப்பட்டு, அதுதான் வாழ்க்கை என்று அதன் மனதிற்குள் முடிவாகிவிட்டது. அதுதான் விஷயம்!
அதைப் போல், நமது சுயபிம்பம் நமக்குள் நம்மைப் பற்றிய ஒரு மனக் கருத்தைக் கட்டமைக்கிறது. அந்த மனக் கருத்துக் கட்டமைப்பு நமது உள்ளுணர்வில் படர்ந்திருக்கிறது. அந்த உள்ளுணர்வு நமது நடத்தையை நிர்ணயிக்கிறது; அந்த உள்ளுணர்வே நமது செயல்பாடுகளுக்கான திட்டங்களை வகுத்துவிடுகிறது. ஆக இவையனைத்தும் நம்முடன் பின்னிப் பிணைந்து விடுகின்றன. புரியலையோ?
எல்லோருக்கும் புரிகிற மாதிரி பார்த்துவிடுவோம்.
நம்மைப் பற்றியே நாம் தப்பான அல்லது தாழ்வான மனக் கருத்தில் இருந்தால், அது அப்படியே நமக்கு உள்ளுணர்வாகப் படிந்துவிடுகிறது. நம் மேல் நமக்கே வெறுப்பு ஏற்படுகிறது. அதனால் நம்மை நாமே மேலும் வெறுக்க ஆரம்பித்து, சிகரெட், தண்ணி, என்று கெட்ட சமாச்சாரங்களுடன் நமக்கு உறவு ஏற்படுகிறது. அல்லது அதற்குப் பதிலாக ஓர் ஒழுங்கு முறையின்றிக் கண்டதையும் உண்பது, கண்ட நேரத்தில் உறங்குவது, வண்டி ஓட்டிக் கொண்டு போனால் ஏதாவது விபத்தை நிகழ்த்துவது, அல்லது அவ்வப்போது “எனக்கு உடம்புக்கு முடியலப்பா”” என்று படுத்துக் கொள்வது, இப்படியான நடத்தைகள்.
மனம் போன போக்கிலெல்லாம் ஒருவன் தட்டுக்கெட்டு அலைய முடியாது. அவ்விதம் கெட்டு அலைய அவன் உள்ளுணர்வு தான் திட்டமிட்டு அலைக்கழித்திருக்கும் என்கிறார்கள் உளவியலாளர்கள். இதற்குமுன் மன வடிவமைப்புகளைப் பற்றி விளக்கியபோது அதைப் பார்த்தோம். அதன்படித் திரும்பத் திரும்ப ஒருவர் விபத்தில் ஈடுபடுவதெல்லாம் யதேச்சையில்லை; அவரது உள்ளுணர்வு அவருக்கு அளிக்கும் தண்டனையாம். அதற்காக அடுத்த முறை, ப்ளாட்பாரத்தில் நடந்து கொண்டிருப்பவர் மேல் பைக்கை ஏற்றிவிட்டு, “ப்ச்! என் உள்ளுணர்வு என்னைத் தண்டிக்குது பிரதர்”” என்றால் செல்லுபடியாகாது, ஜாக்கிரதை!
ஆக உளவியலாளர்கள் சொல்வது யாதெனில், “பிரதானமாய் நீங்கள் உங்களைப் பற்றி ஆக்கபூர்வமாகவே நினையுங்கள். நல்லன நினையுங்கள்! அதற்காக உங்களது அனைத்துச் சக்திகளையும் பிரயோகப்படுத்துங்கள்; மனம் மகிழ்வீர்கள்“ என்பதாகும்.
அதை விட்டு, ”நான் பூட்ட கேஸ்! எனக்கு நல்லா வேணும்’,” என்று நினைத்தால் உங்களது உள்ளுணர்வு உங்களுக்கு நாசவேலை நிகழ்த்த ஆரம்பித்துவிடும். மனதிலிருந்து மகிழ்ச்சி விடைபெறும். தப்பித்தவறி அப்படியே நல்ல விஷயம் ஏதாவது நடக்க நேர்ந்தாலும், “எனக்கு அதற்கு ஏது கொடுப்பினை?” என்று மனம் முணக, அந்த நல்ல காரியம் நடைபெறாது! நடைபெறாமல் உங்கள் உள்ளுணர்வு உங்களை உந்தி, நீங்கள் தன்னிச்சையாய்ச்செயல்பட்டு அதைத் தடுத்திருப்பீர்கள்.
எனவே நமது மனதை ஆக்கபூர்வமாக, எப்பொழுதுமே ‘பாஸிட்டிவ்’வாக வைத்துக் கொள்ள முயலவேண்டும்.
மளிகைக் கடை லிஸ்ட்டெல்லாம் பார்த்திருப்பீர்களே! கொஞ்சம் அலுப்புப் பார்க்காமல் கீழ்க்கண்ட லிஸ்டைப் படித்துப்புரிந்து கொண்டால் நமது மனதிற்கு நல்லது. அதிலுள்ள ஒன்றோ அதற்கும் மேற்பட்ட சங்கதிகளோ நம்மிடம் இருந்தால், நிச்சயம் நாம் திருந்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.
- பொறாமை
- நம்மைப் பற்றியே நாம் தவறாய்ப்பேசிக் கொள்வது, எண்ணிக் கொள்வது
- குற்ற உணர்ச்சியிலேயே இருப்பது
- மற்றவர்களைப் பாராட்ட மறுப்பது
- பிறர் அளிக்கும் பாராட்டை ஏற்க மறுப்பது
- நம்முடைய சுய தேவைகளை உதாசீனப்படுத்துவது
- அடிப்படைத்தேவைகளைக்கேட்டுப்பெறாமல் இருப்பது
- அன்பு, பாசம் ஆகியனவற்றைப் பிறரிடம் வெளிப்படுத்த இயலாமற் போவது
- அன்பு, பாசம் ஆகியனவற்றைப் பிறர் அளிக்கும் போது அதை உணர்ந்து மகிழாமலிருப்பது
- மற்றவர்களிடம் குறை காண்பது
- மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருப்பது
- அடிக்கடி நோய்வாய்ப்படுவது
இதையெல்லாம் தாண்டி மீண்டுவர, “மாற்றம்” வேண்டும். ஆனால் அந்த மாற்றம் நமக்குள் நிகழ நாம் முயன்றால் எப்படித்தடை ஏற்பட்டுக்கஷ்டப்படுத்தும் என்று முன்னரே பார்த்தோம்.
தரமற்ற சுயபிம்பத்திற்கான குணம் ஒன்று உண்டு. அந்த மனிதனிடம் உருவாகியுள்ள ஆக்கபூர்வமற்ற குணத்தை (negative attitude) மாறவிடாமல் பொத்திப் பாதுகாக்கும். அதிலிருந்து மீண்டு வரவேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். முன்னெடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் மனமானது பழையதையே நினைத்து, புலம்பி, அரற்றிப்பின்னுக்கு இழுக்கப் பார்க்கும். கஷ்டம்தான், ஆனால் செய்யத்தான் வேண்டும்.
எனவே நமக்கு உதவச்சில வழிகளை உரைக்கிறார்கள் உளவியலாளர்கள்.
·பாராட்டை ஏற்றுக் கொள்ளுங்கள் – உங்களைப் பாராட்டுபவர்கள், வாழ்த்துபவர்களிடம் நன்றி பகர்ந்துவிட்டு அவற்றை ஏற்று மனதில் நிரப்பிக்கொள்ளுங்கள்.
·பாராட்டுங்கள் – பைசா செலவழிக்காமல் மனம் உற்சாகமடைய, மற்றவர்களிடம் தென்படும் நல்லவைகளைப் பார்த்து மகிழ்ந்து அவர்களைப் பாராட்டுங்கள், வாழ்த்துங்கள். அவர்களது முகம் மலரும்போது, உங்கள் மனதிற்குள் என்ன நிகழ்கிறதென்று உணருங்கள்.
·உங்களைப் பற்றி நீங்களே நல்லவிதமாகப் பேசுங்கள் – அப்படி ஒன்றுமே இல்லையென்று நினைக்கிறீர்களா; வாயைப் பொத்திக் கொள்ளுங்கள்.
·உங்களைப் புகழ்ந்து கொள்ளுங்கள் – ஏதேனும் ஒரு நற்காரியம் செய்துவிட்டீர்களானால் உங்களை நீங்களே முதுகில் தட்டிக் கொடுத்துக் கொள்ளுங்கள். பசியுடனிருக்கும்ஏழையொருவருக்கு நீங்கள் பன்னும் டீயும் வாங்கித் தந்திருக்கலாம்; பார்வையற்ற ஒருவர் சாலையைக் கடக்க உதவியிருக்கலாம்; மனைவி எழும் முன் குளித்து முடித்து, ஈரத்தலையுடன் நீங்கள் காப்பி போட்டு உங்கள் மனைவிக்குக் கொடுத்திருக்கலாம். எதுவாயிருந்தாலும் உங்களுக்கு நீங்களே சபாஷ் போட்டுக் கொள்ளுங்கள்.
·உங்களையும் உங்கள் செயல்களையும் வேறுபடுத்திக் கொள்ளுங்கள் – ஏதேனும் தவறாய்ச் செய்துவிட்டால், நிகழ்த்திவிட்டால், அந்தச் செயலை மட்டும் வெறுக்கக் கற்றுக் கொள்ளுங்கள். மறுமுறை அந்தத் தவறை எப்படித் தடுப்பது என்று மட்டும் சிந்தியுங்கள். அந்தத் தவறுக்காக உங்களை நீங்களே திட்டி, மாய்த்துக் கொள்ளாதீர்கள். அது உங்களது சுயபிம்பத்தைக் கெடுக்கும். திருத்தப்பட வேண்டியது உங்களது செயல் தான்.
·உங்களது உடலைப் பேணுங்கள் – புடவையா, சுடிதாராஅல்லது வேட்டியா, சட்டையா விதம் விதமாய் ஏகப்பட்டது இருக்க, அவற்றையெல்லாம் அணிவதற்கு உங்களிடம் இருப்பது ஒரே உடல். அதை ஆரோக்கியமாகவும், திடகாத்திரமாகவும் வைத்துக் கொள்ளுங்கள். உடல் நலமில்லாமல் போனால் எப்படிமனம் மகிழும்?
·நீங்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று மக்களிடம் தெரிவித்துவிடுங்கள் – தெரிவித்து விடுங்கள் என்றால் “மச்சான் நீ கேளேன்,” “மாமா நீ கேளேன்,” என்று அலைந்து அலைந்து சொல்வதில்லை. மாறாக, நீங்கள் உங்களை எப்படி நடத்திக் கொள்கிறீர்களோ, அதைப் போல் மற்றவர்களையும் நடத்துங்கள். அது அவர்களுக்கு வேண்டிய தகவலை தெரிவித்துவிடும்.
·சான்றோருடன் சங்காத்தம் வைத்துக் கொள்ளுங்கள் – நீங்கள் விரும்பும் பெண்ணின் தம்பியை, அந்த வீட்டு வேலைக்காரியை , அவர்களுக்கு சவாரி வரும் ஆட்டோக்காரரை எல்லாம் இதில் சேர்க்கக்கூடாது. அவர்கள் நெசமாலுமே சான்றோராக இருப்பின் அது வேறு தரம்!
·புத்தகம் வாசியுங்கள் – அடாசு டிவி நிகழ்ச்சிகள், சீரியல்கள் இவற்றிலிருந்து விடுதலை பெற்று நல்ல புத்தகங்கள் வாசிக்க ஆரம்பிக்கலாம்.
·என்னவாக ஆக விரும்புகிறீர்களோ அதையே நினையுங்கள் – எப்பொழுதுமே உங்கள் மனதில் நீங்கள் என்னவாக ஆக விரும்புகிறீர்களோ அதையே நினையுங்கள். தானாய் அதை நோக்கி நகர்வீர்கள். மனதிற்கு ஈர்ப்புச் சக்தி உண்டு என்பதை உணர்வீர்கள். ஆனால் கவனம் முக்கியம். எந்த ஊரில் சீட்டுக் கம்பெனி ஆரம்பிக்கலாம் என்றெல்லாம் நினைக்கக் கூடாது.
பின்குறிப்பாய் ஒன்று — இந்நேரத்தில் வெளியாகும் இத்தொடரை வாசிப்பவர்கள், இது பிடித்துப்போய்ப் பிற தளங்களிலும் வலைப்பூக்களிலும்லும் மீள்பதிவு செய்வதைக் காண முடிகிறது. மிக்க மகிழ்ச்சி. கூடவே, மேலே பாடத்தில் கூறியுள்ளதைப் போல் இந்நேரத்திற்குக் குட்டியாய் நன்றியொன்று சொல்லிவிட்டுப் பதிந்தால் அந்த வாசகர்கள் வீடுகளில் தங்குதடையின்றி மின்சாரம் கிடைக்க இந்நேரம் சிறப்பு வாழ்த்து நல்கும்.
மனம் மகிழ, தொடருவோம்…
இந்நேரம்.காம்-ல் 30 ஜூலை 2010 அன்று வெளியான கட்டுரை
<–ம. ம. முகப்பு–>