22 – கற்பனை செய் மனமே!

by நூருத்தீன்

நாம் பிறந்து அழ ஆரம்பித்து, அதற்கடுத்தச் செயலாய் தாயின் முலைக்காம்பில் பால் குடித்த நொடியிலிருந்து ஆறு ஆண்டுகளில் நமக்குத் தேவையான எழுபது

சதவீத விஷயங்களைக் கற்றுக் கொண்டு விடுகிறோம் என்று ஆய்ந்து சொல்கிறார்கள் ஆய்வாளர்கள். மீதம் உள்ள முப்பது சதவீதத்தைத்தான் சொச்ச வாழ்நாளுக்கும் மாய்ந்து மாய்ந்து கற்றுக் கொள்கிறோமாம்!

‘இதென்ன கணக்கு? அப்படியானால் மன்மோகன் சிங் தமது ஆறாவது வயதிலேயே எழுபது சத பிரதமரா?’ என்று என்னிடம் சண்டைக்கு வராதீர்கள். சதவீதம், இடஒதுக்கீடு போன்ற அரசியலுக்குள் எல்லாம் நுழையாமல் இந்த ஆய்வு சொல்லும் செய்தியை மட்டும் எடுத்துக் கொண்டு நாம் ஓடிவிடுவோம்.

“குழந்தைப்பருவத்தில் இருக்கும் அந்த ஆரம்பக் காலங்களில் ஒருவிஷயத்தை உட்கிரகிக்கும் நம் மனோசக்தி அத்தனை வலுவானது; அந்தப் பருவத்தில் நமது கற்பனைத் திறன் அந்தளவு செழிப்பானது!“ என்பதே அந்த ஆய்வின் அடிநாதச் செய்தி.

குழந்தைகளிடம் உள்ளதெல்லாம் மாசுமருவற்ற கற்பனைத் திறன். அல்பம், அபத்தம், மேதாவித்தனம் என்ற பாகுபாடெல்லாம் வகுத்துக் கொள்ளாமல் தம்மிஷ்டத்திற்கு அவர்களால் கற்பனை செய்ய முடியும்.

அவர்களுக்கு முன் தீர்மானங்கள் இருப்பதில்லை; கயமைத்தனம், களவாணித்தனம், குதர்க்கம், சூதுவாது இன்னபிற கெட்ட வார்த்தைகள் எதுவும் தெரிந்திருப்பதில்லை. கற்றுக் கொள்கிறார்கள்! காண்பது, கேட்பது என்று எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறார்கள். நல்லது, கெட்டது என்று இனம்பிரிக்காமல் கற்று உள்வாங்கிக் கொள்கிறார்கள்!

இதையெல்லாம் நாம் குழந்தைகளிடம் காணும்போது நமது மனதிற்குப் பிடித்தால் , “ஜுஜ்ஜும்மா… புஜ்ஜுக்குட்டி” என்று உச்சி முகர்ந்து கொஞ்சுகிறோம்; பிடிக்காவிட்டால் முதுகில் சாத்துகிறோம்.

ஆக, குழந்தைகளிடம் மண்டியிட்டு ஆய்ந்த ஆய்வாளர்கள் கண்டு கொண்டது, “கற்பனைத் திறன் கற்பதற்கு முக்கியம்!”

சிறந்த கற்பனைத் திறன் விரைவாகவும் எளிதாகவும் எதுவொன்றையும் கற்பதற்கு உதவி புரிகிறது. கற்பனையை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும்; ஆக்கபூர்வக் கற்பனைக்கே இடமளிக்க வேண்டும். அத்தகைய ஆக்கபூர்வக் கற்பனையைத் தூண்டித் தூண்டி வளர்க்க வேண்டும். அப்படிச்செய்தால்?

நல்லது! அறிவிற்கும் மனதிற்கும் மகிழ்விற்கும் நல்லது!

சில குழந்தைகளுக்கு அசாத்தியக் கற்பனைத் திறன் இருக்கும். நானறிந்த ஒரு பெண் குழந்தை — ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும். படு சரளமாய்க் கற்பனை மொழியொன்றில் பேசுவாள். “தத்தக்கா.. பித்தக்கா.., தட்டுத் தடுமாறி“ என்பதைப் போலெல்லாம் இல்லாமல், கேட்பவர்களுக்கு அவள் உண்மையிலேயே ஏதோ ஓர் அன்னிய மொழியில் பேசுவதைப் போலிருக்கும். அவ்வளவு துல்லியமான கற்பனை. கேட்டு அசந்திருக்கிறேன்.

குழந்தைகளின் இத்தகு கற்பனையைக் காணும் சில பெற்றோர்கள் என்னவோ ஏதோவென்று வருந்துவார்கள். வேறு சில பெற்றோர்கள் அதைச் சரியாகப் புரிந்துகொண்டு, குழந்தையை அதற்கேற்ப ஊக்குவித்து வளர்க்க……. வளர்ந்ததும் சாதனையாளன் அல்லது சாதனையாளி.

கற்பனைத் திறன் கற்பதற்கும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் உதவும் ஓர் அசாதரண உபகரணம்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் காலம், வெளி (time, space) ஆகியனவற்றைப் பற்றிய தமது அறிவியல் தீர்மானத்திற்குத் தம்மை விண்ணைத் தாண்டிக் கற்பனை செய்து கொண்டார். கோளங்களுக்கு இடையே கற்பனையிலேயே பயணம் செய்தார். தம்மைக் குழந்தைபோல் பாவித்து அவர் செய்து கொண்ட கற்பனைகள்தாம் அவர் சிறந்த அறிவியலாளராக உருவாக உதவின.

தவிர, வளமான கற்பனை சிறப்பான நினைவாற்றலுக்கும் முக்கியம் ஆகும்.

வயதானவர்களுக்கு நினைவாற்றல் குறைந்திருப்பது, அவர்கள் தங்களுடைய கற்பனைத் திறனைத் தேயவிடுவதால் என்கிறார்கள் உளவில் வல்லுநர்கள்.. “காப்பி சாப்பிட்டாச்சா?” என்றால் கண்ணெதிரே ஈரம் உலராமல் கப் இருக்க அவர்கள் பதிலுக்கு யோசிக்கக்கூடும்.

நம்முடைய நினைவு வங்கிகளில் தகவல்களைச் சேமித்து வைக்க, நாம் படங்களாகவே கற்பனை செய்து பதிகிறோம். “காண்டாமிருகம்” என்று நினைத்துப் பாருங்கள், கச்சாமுச்சாவென்ற சருமத்துடன் அசந்தர்ப்பமாய் மூக்கிற்கு மேலே கொம்புடன் ஒரு மிருகம்தான் மனதில் ஓடுமே தவிர “கா..ண்..டா..மி..ரு..க..ம்” என்ற எழுத்துகள் அல்ல. எவ்வளவு சிறப்பாகப் படத்தை நாம் மனக்கண்ணில் உருவாக்குகிறோம் என்பதைப் பொறுத்தே அத்தகவலை நினைவிலிருந்து மீட்பது எளிதாகிறது. கற்பனைவளம் குறைவாய் இருப்பவர்கள் மனதில் செய்திகள், தகவல்கள் பச்சக்கென்று படம் போல் ஒட்டிக் கொள்வதில்லை.

இவ்விடத்தில் நினைவில் நிறுத்த வேண்டிய முக்கியமான விஷயமொன்றுண்டு.. கற்பனை என்பது ஆரோக்கியமானதாய் இருக்க வேண்டும். இல்லையெனில் கெட்டுக் குட்டிச்சுவராகப் போக வேண்டியதுதான்.

குற்றத்திற்கும் கொடுங்கோலுக்கும் கற்பனையைப் பிரயோகித்தால், கற்பது களவு, இழப்பது மகிழ்வு! நாள்தோறும் நடைபெறும் குற்றங்களைப் பாருங்கள் – கொள்ளையாகட்டும், கொலையாகட்டும், களவொழுகுவதாகட்டும் – ஒவ்வொரு கிரிமினலும் விதவிதமாய்க் கற்பனை செய்துதானே குற்றமிழைக்கிறான்?

நல்ல வளமான கற்பனையே நமது உடலையும் மனதையும் மகிழ்வாய் வைத்துக்கொள்ள உபயோகப்படும்!

மெரீனா பீச்சில், கடலலை எதிரே அமர்ந்து, கால் நீட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டே சுண்டலும் மிளகுவடையும் தின்பதை உங்களால் உள்ளார்ந்து கற்பனை செய்ய இயலுமென்றால் உங்களால் உங்கள் மனதைத் தளர்ச்சியின்றி, பதட்டமின்றி வைத்துக் கொள்வது எளிது. அத்தகைய கற்பனையெல்லாம் ஒருவருக்குக் கடினமாய் இருப்பின் அவர் தம்மைத் தாமே ரிலாக்ஸ் செய்து கொள்வது கடினமாம்.

ஆகவே உடற்பயிற்சி போல் கற்பனைக்கும் பயிற்சியளிக்கச் சொல்கிறார்கள். கற்பனை எந்தளவு வளர்கிறதோ அந்தளவு பிரச்சனைகளைத் தீர்க்கும் சாமர்த்தியமும் நினைவாற்றலும் பெருகும்.

கற்பனையுடன் இணைந்த மற்றொரு சமாச்சாரம் இருக்கிறது – இட்லியும் சட்னியும் போல! கனவு!

கனவென்றால் பகல் கனவு, தூக்கத்தில் கானும் கனவு, வெட்டிக் கனவு அல்ல. ஆரோக்கியக் கனவு! வேறுவிதமாய்ச் சொல்வதென்றால் இலட்சியக் கனவு! கனவும் கற்பனையும் பின்னிப் பினைந்தவை.

பிராணிகள் குலத்தில் எப்படியோ தெரியாது; ஆனால் மனிதகுல வரலாற்றில் இதற்கு நிறைய முன்மாதிரிகள் உள்ளன. லியானார்டோ டாவின்ச்சி தெரியுமா? அவருக்குத் தமது பன்னிரெண்டு வயதில் கனவொன்று இருந்தது. என்னவென்று? “நான் ஒருநாள் உலகின் தலைசிறந்த ஓவியனாக உருவாவேன். அரசர்கள், இளவரசர்கள் ஆகியவர்களுக்கு இணையாய் வாழ்வேன்.” விளைவு? உலகம் வியக்க மோனோலிசா புன்னகைத்துக் கொண்டிருக்கிறாள்.

சிறுவன் நெப்போலியனுக்குக் கனவு இருந்தது. ஐரோப்பாவை மனக் கண்ணாலேயே கைப்பற்றுவான். தனது படையை எப்படி நிர்வகிப்பது, வழிநடத்துவது என்று அவன் மனதில் கனவு ஓடிக்கொண்டேயிருக்கும். அக்கனவுகள் இன்றைய பள்ளிக்கூடப் புத்தகத்திலெல்லாம் பாடமாகிவிட்டது.

அன்றைய ரைட் சகோதரர்களின் கனவு இன்று உலோகம் இறக்கைக் கட்டிப் பறக்கிறது.

ஐன்ஸ்டீன் சொன்னாராம், ”கற்பனை என்பது அறிவைவிட முக்கியமானது.”

இதைப் பெரிய திரை, சின்னத் திரை படைப்பாளிகளெல்லாம் அப்படியே ஏற்றுக் கொண்டதுதான் பிரச்சனையாகிவிட்டது. அவர்களது ஆக்கங்களில் இருப்பது கற்பனை மட்டுமே!

மனம் மகிழ, தொடருவோம்…

இந்நேரம்.காம்-ல் 12 நவம்பர் 2010 அன்று வெளியான கட்டுரை

<–முந்தையது–> <–அடுத்தது–>

<–ம. ம. முகப்பு–>

Related Articles

Leave a Comment