‘காசுக்கேற்ற தோசை’ என்றொரு சொலவடை உண்டு; நமக்கெல்லாம் தெரியும். மனவியலாளர்கள் வேறொன்று கற்றுத் தருகிறார்கள்
– “வார்த்தைக்கு ஏற்ற வாழ்க்கை”!
அது என்னவென்று மேற்கொண்டு பார்ப்பதற்கு முன் ஒரு வார்த்தை! இங்கு வார்த்தை என்பது நாம் பிறரை நோக்கிச் சொல்வதைப் பற்றியில்லை; நமக்கு நாமே சொல்லிக் கொள்வதைப் பற்றி!
நமது சிந்தனைகள் எப்படி நமது சுற்றத்தையும் நட்பையும் உருவாக்குகின்றன என்பதை முன்னர் பார்த்தோம். அதைப்போல் நாம் உதிர்க்கும் வார்த்தைகள் நமது மனப்பான்மையை உருவாக்குகின்றன. நாம் எதைப் பெறப்போகிறோம் என்பதை அவை நிர்ணயிக்கின்றன.
நாம் மனம் மகிழ வேண்டும் என்பதை மனதார, உண்மையாகவே விரும்பினால் அதற்கு முதல் வேலையாக நமது வாயைக் காத்துக்கொள்ள வேண்டும். எப்படி? வாயை ப்ளாஸ்திரி போட்டு ஒட்டிக்கொண்டா? அப்படியில்லை! நம்மைப் பற்றிய நல்ல விஷயங்களைப் பேசவேண்டுமேயன்றி, ‘நான் ஒரு மொள்ளமாரி, கேப்மாரி, பேமானி’ என்றெல்லாம் சொல்லித் திரிவது தகாது. உண்மையிலேயே ஒருவர் சிலாக்கியமற்றவராக இருந்தாலும் இங்கு வார்த்தையைக் காப்பது என்பதை ‘நான் ஒரு யோக்கிய சிகாமணி’ என்று பாவ்லா செய்வதாக அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது.
நாம் நம்மைப் பற்றிய குறைகளையே முணுமுணுத்துக் கொண்டிருந்தால் சரிவராது என்பது ஒருபுறம் இருக்கட்டும்; நமக்கே நம்மைப் பற்றிய நல்ல சிந்தனை இல்லாது இருந்தால் ஊரும் உலகும் நம்மைப் பற்றி என்ன அபிப்ராயம் கொள்ளும்? யோசித்துப் பாருங்கள்!
உளவியலாளர் ஒருவரை அவரது நண்பர் சந்தித்தார். அந்த நண்பருக்கு ஏகப்பட்ட மன அழுத்தம். மகிழ்ச்சி என்றால் என்ன என்பதே அவருக்கு மறந்து போய்விட்டது. உளவியலாளரிடம் கேட்டார், “மகிழ்ச்சியற்று, மன அழுத்தத்துடன் இருந்து, இருந்து எனக்கு அலுத்துப் போய்விட்டது. எனது குடும்பத்திற்கு நான் ஒரு பெரும் சுமையாகி விட்டேன். நான் மகிழ்வாய் இருக்க வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?”
“நல்ல முடிவு. நீங்கள் மன மகிழ்வாய் இருக்க வேண்டும் தானே? அது ரொம்ப ஸிம்பிள். வாயைத் திறக்காதீர்கள். நல்லதாக, ஆக்கபூர்வமாக ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் மட்டும் வாய் திறந்து வார்த்தையை உதிருங்கள். மற்றபடி ‘கப்சிப்’ உங்களது மொழி. எப்படி மாற்றம் ஏற்படப் போகிறது என்று பாருங்கள்.”
ஒருவாரம் கழிந்தது. யதேச்சையாக இருவரும் மீண்டும் சந்தித்தனர். அந்த நண்பர் இன்னமும் சரியாகாமல் இருந்தார். “நான் மகிழ்வாய் இருக்கவே விரும்புகிறேன். ஆனால் என்னிடம் மகிழ்வில்லை. என்னதான் செய்வது?”
“அதான் சென்ற வாரம் நல்லதொரு அறிவுரை கூறினேனே?”
“ம்ஹும்! அப்படியும் மகிழ்வில்லை.”
அந்த நண்பர் தமது வார்த்தைகளை அடக்கியாள்வதாக நினைத்துக் கொண்டிருந்தார். ‘இல்லை’ என்பதை உளவயிலாளர் அவருக்கு இப்படிச் சொன்னார் –
“புரிகிறது! நீங்கள் மகிழ்வாய் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி இன்னமும் தீவிரமான தீர்மானத்திற்கு வரவில்லை. என்றிலிருந்து அப்படித் தீவிரமாக நம்புகிறீர்களோ அன்று முதல் நீங்கள் மகிழ்வடைய ஆரம்பிப்பீர்கள்.”
அவரவர் வாயை அவரவர்தாம் அடக்க வேண்டும். அதை முதலில் நாம் சிந்தித்து உணர வேண்டும்.
நமக்குள் உருவாகும் சிந்தனைகளுக்கு நாம் தானே பொறுப்பு. “இன்னிக்கு ஓர் அரை மணி நேரம் இதைச் சிந்தியுங்கள்,” என்று பக்கத்து வீட்டுக்காரர் சொல்லியா செய்கிறோம்? எனவே நமது மண்டைக்குள் என்ன சிந்தனை உதிக்க வேண்டும் என்பதை நாம் கட்டுப்படுத்த ஆரம்பிக்க வேண்டும். அந்தக் கட்டுப்பாட்டினால் நாம் மகிழ்வாய் இருக்க வேண்டும் என்ற தீவிர சிந்தனை நம்முள் உருவாகி வலுப்பெறும்.
நாம் என்ன சிந்திக்கப் போகிறோம், என்ன பேசப் போகிறோம் என்பதற்கான ஓர் ஒழுங்கை நாம் கடைப்பிடிக்க ஆரம்பித்துவிட்டால் போதும்; மகிழ்ச்சி நெருங்கிவர ஆரம்பித்துவிடும். ‘இதற்குமேல் என்னால் நொந்து போகமுடியாது’ என்ற அளவிற்கு ஒருவர் மோசமான நிலையை அடைந்து விட்டாலும்கூட அவர் தமது மனோபாவத்தை மாற்றிக் கொண்டால் போதும்! அதன் பயனாய் அவருடைய பேச்சும் தொனியும் நல்லவிதமாய் மாறிவிடும்.
“நல்வார்த்தை சொல், இல்லையென்றால் எதிராகச் சொல்லாதே என்றீர்கள்; அதற்குச் சிந்தித்து தீர்மானம் எடு என்றீர்கள். பிறகு இதென்ன மனோபாவம்?” என்று உங்களுக்குள் கேள்வி எழும்.
“மகிழ்ச்சியாய் இருப்பதற்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார். ஆனால் என்னை மட்டும் நான் மாற்றிக் கொள்ள முடியாது.” இப்படி ஒருவர் சொன்னால் எப்படி இருக்கும்? அதுதான் அவருடைய மனோபாவம். அவருடைய இம்மனோபாவம் எப்படி மன மகிழ்ச்சிக்கு உதவும்?
அதைத்தான் , மனோபாவத்தை மாற்றிக் கொண்டால் போதும். “பூட்ட கேஸு“ என்று நினைப்பவரும் மாறிவிட முடியும் என்கிறார்கள். சற்று ஒழுக்கமுடன் முறையாய் முயற்சி மேற்கொண்டால் போதும். இதுவும் மிக எளிது.
மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம். இங்கு வார்த்தைகள் என்ற தலைப்பில் பார்த்துக் கொண்டிருப்பது நாம் நம்மைப் பற்றிப் பிரயோகிக்கும் வார்த்தைகள்.
நமது வார்த்தைகள் நமது சக்தியைப் பாதிக்கும் ஆற்றல் கொண்டவை. நாம் உதிர்க்கும் வார்த்தைகள் நமது ஆழ்மனதிற்குள் புகுந்து படர்ந்து அவையே நமது நடத்தையையும் குணாதிசயத்தையும் உருவாக்குகின்றன. “நாம் எந்த லட்சணத்தில் உள்ள மனிதர்” என்பதை நமது வார்த்தைகள் பிறருக்குப் படம் பிடித்துக் காண்பிக்கின்றன.
நம்முடைய சில வார்த்தைகள் நமது முன்னேற்றத்தை தடுக்கும் ஆற்றல் கொண்டவை. ஒவ்வொருமுறையும் “பார்ப்போம்”, “முயல்கிறேன்” என்று நீங்கள் கூறிக் கொண்டே இருந்தால் உங்களது செயல்பாடுகள் உங்களது கட்டுப்பாட்டில் இல்லை என்று அர்த்தமாகிறது.
“அந்த வேலையை நல்லவிதமாக முடிக்கப் பார்க்கிறேன்”…
“நாளைமுதல் நேரத்தோடு வர முயல்கிறேன்”…
“மகிழ்வாய் இருக்க முயல்வேன்”…
என்பனவெல்லாம் நீங்கள் உங்களது கட்டுப்பாட்டில் இல்லை என்று அறிவிக்கின்றன.
அதையே சற்று மாற்றி,
“அந்த வேலையை நல்லவிதமாக முடிக்கப் போகிறேன்”…
“நாளைமுதல் நேரத்தோடு வரப் போகிறேன்”…
“மகிழ்வாய் இருக்கப் போகிறேன்”…
என்று சொல்லிப் பாருங்கள். சிறு மாற்றம்தான். ஆனால் உங்கள் ஆழ்மனது தானாகவே அந்த வார்த்தைகளின் வலிமையை உணரும்.
இவையெல்லாம் தவிர, வார்த்தைகளுக்கும் நமது நினைவாற்றலுக்கும் சம்பந்தம் இருப்பதாகவும் அறிவிக்கிறார்கள். மோசமான நினைவாற்றல் என்று எதுவும் இல்லையாம்!
ஆராய்ச்சியாளர்கள் அதை இப்படி விளக்குகிறார்கள் –
“நீங்கள் உண்மையிலேயே எதையும் மறப்பதில்லை. தகவல்கள் உங்கள் மண்டையில் பத்திரமாய்ப் புதைந்திருக்கின்றன. பிரச்சனை அந்தத் தகவலை வெளியில் எடுப்பதில் மட்டுமே.”
ஒருவரை நீண்ட நாள் கழித்துச் சந்திக்கிறீர்கள். அவரது பெயர் சட்டென்று உங்களது நினைவிற்கு வரவில்லை; மறந்து போய்விட்டது! மறுநாள் குளித்துக் கொண்டிருக்கும்போது சோப்பு நீர் கண்ணில்பட்டு எரிச்சல் ஏற்பட, திடீரென்று நினைவிற்கு வந்துவிடுகிறது அவரது பெயர்.
அந்தப் பெயர் உங்கள் தலையிலிருந்து விலகிப்போய் பிறகு இன்று காலை சூரியன் உதயமாகும்போது வந்து புகுந்து கொண்டதா என்ன? எல்லாம் மண்டைக்குள்தான் இருந்தது. உங்களால் அதை உடனே வெளியில் எடுக்க முடியவில்லை.
“என் நினைவாற்றல் மோசம்” என்று நீங்கள் சொல்லிக் கொண்டு இருந்ததாலேயே இப்படி நிகழ்கிறதாம்.
வார்த்தைகள் நமது செயல் திறனை உருவாக்கும் ஆற்றல் கொண்டவை. வார்த்தைகள் நமது ஆழ்மனதைத் தாக்க வல்லவை. ஆழ்மனதும் நினைவாற்றலும் என்றாலே அவை பக்கா தோஸ்த்துகள் தாம்.
எனவே தொடர்ந்து நீங்கள் உங்களது ஆழ்மனதிடம் “நான் நினைவாற்றலில் சிறந்தவன்” என்று சொல்லிக் கொண்டேயிருந்தால் போதும். உங்களது ஆழ்மனது நீங்கள் பெயர், போன் நம்பர் போன்ற தகவல்களை நினைவில் நிறுத்தப் போகிறீர்கள் என்று நம்ப ஆரம்பித்துவிடும். அது உங்கள் நினைவிலிருந்து தகவல்களை கம்ப்யூட்டர் போல் வெளியில் எடுத்துப் போட்டுவிடும்.
இவை அனைத்துடன் சேர்த்து மனைவிக்கு ஏதும் வாக்குறுதி கொடுத்திருந்தால் அதையும் “நிச்சயம் நினைவில் வைத்துக் கொள்வேன்.” என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லிக்கொள்வது உத்தமம்.
மனம் மகிழ, தொடருவோம்…
இந்நேரம்.காம்-ல் 10 டிசம்பர் 2010 அன்று வெளியான கட்டுரை
<–ம. ம. முகப்பு–>