41 – குறையற்ற மனம் – அளவற்ற மகிழ்வு

by நூருத்தீன்

நாம் என்ன செய்தாலும் அதில் மகிழ்வடைகிறோமா; மனம் மகிழ்வடைகிறதா என்பது முக்கியம். அந்தச் செயல் தப்புச் செயலாய் இருக்கக்கூடாது என்பது

அதைவிட முக்கியம். “ஜட்ஜய்யா! கொலை செய்வது மகிழ்வளித்தது; அதனால் கழுத்தை அறுத்தேன்” என்றால் நீதிபதி கழுத்திற்குத் தீர்ப்பு எழுதி விடுவார்.

ஒருவர் உத்தியோகம் செய்கிறார்; ஆனால் அதில் அவருக்கு அறவே விருப்பமில்லை; அவருக்குச் சம்பந்தமில்லாத வேலை. இன்னொருவர் – அவரது தகுதிக்கேற்ற ஊதியமில்லை; விருப்பத்திற்கேற்ப ஓய்வோ விடுமுறையோ கிடைப்பதில்லை. மனம் லயிக்கும் கலை, விளையாட்டு எதையும் கற்க இயலவில்லை; மனதிற்குப் பிடித்த காரியம் எதுவும் செய்ய முடியவில்லை; இல்லை… முடியவில்லை… என்று ஏகப்பட்ட ‘லை’ களுடன் ஒவ்வொருவருக்கும் தனிமை; மன அழுத்தம்; விரக்தி.

ஒருவர் இத்தகைய பரிதாபகர நிலைக்கு ஆட்பட்டுவிடுவதற்கு ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன.

பட்டியல்!

அவர் மனதில் உருவாக்கி வைத்திருக்கும் பட்டியல்!

சென்ற அத்தியாயம் கேளுங்கள் ராசாவே பற்றி பின்னூட்டமும் நண்பர்களின் மின்னஞ்சலும் ஆச்சரியம் பகிர்ந்து கொண்டன. சில விளக்கங்கள் பார்ப்போம் –

முதலாவது ‘கேட்பதும்’ ‘கொடுப்பதுவும்’ ‘மறுப்பதுவும்’ நமது மனங்களில் தவறான பரிமாணத்தில் பதிந்துள்ளன. அதனாலேயே  கேட்கும்போதும் சரி; மறுக்கும்போதும் சரி – பெரும்பாலும் நாம் முற்கூட்டியே மனதில் ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு preconceived notion-டனேயே உரையாடிக் கொள்கிறோம். இது தவறு. Preconception என்பதே தனியொரு நீளமான டாபிக். அது இங்கு வேண்டாம்.

அடுத்தது, கேட்பதிலும் கொடுப்பதிலும் மறுப்பதிலும் உண்மையும் நேர்மையும் வேண்டும். உள்நோக்கம் தவறு. நியாயமான ‘கேட்டல்’ தாட்சண்யமின்றி மறுக்கப்பட்டால், அது கேட்டவரின் குற்றமல்ல. கேட்டவர் கூச்சப்பட ஒன்றுமில்லை. கௌரவத்திற்கும் இழுக்கில்லை. மறுத்தவரின் கீழ்மையைப் பார்த்து அவர்தான் பரிதாபப்பட வேண்டும்.

மாறாய், மறுப்பவர் நியாயமான காரணத்துடன் மறுத்து அதைக் கேட்பவர் உள்நோக்கம் கற்பித்துக் கொண்டால் அது மறுப்பவரின் குற்றமாகாது. கேட்டவரின் கீழ்மை.

இவை இவ்வாறிருக்க எதை யாரிடம் கேட்பது என்பது இயல்பாய் நம் மனங்களில் பதிந்திருக்கும் பொது அறிவு. ‘மக்களின் தேவை எங்களின் சேவை’ என்று வங்கியொன்று விளம்பரம் செய்கிறது என்பதற்காக அதன் கிளையொன்றில் நுழைந்து, “செலவிற்குப் பணமில்லை. இரண்டாயிரத்து நூற்றி இருபத்தஞ்சு ரூபாய் கொடுங்கள்” என்று யாரும் கேட்கப்போவதில்லை. மேலாளர் போலீஸிற்கோ கீழ்ப்பாக்கத்திற்கோ போன் செய்வார்.

கணக்குத் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும்போது ஆசிரியரிடம் சந்தேகம் கேட்கக் கூடாது. அவர் குட்டினால் வலிக்கும். அது மிகச் சரி. ஆனால் வகுப்பறையில்? “போடா மண்டு. எத்தனைமுறை சொன்னாலும் உனக்குப் புரியாது” என்று அவர் மாணவனின் மண்டையில் தட்டினால் அனேகமாய் மாலையில் அவர் தனி வகுப்பு நடத்தி சம்பாதித்துக் கொண்டிருக்கும் சாத்தியம் அதிகம்.

தொழில், திருமணம், கார் போன்றவை எல்லாம் வெற்றிகரமாய் அமைவதற்கும் கேட்பதற்கும் என்ன சம்பந்தம்?

குளிப்பதற்கு சோப்பு வேண்டும் என்றால் நேராய்க் கடைக்குச் சென்று வாங்கி வந்துவிடலாம். எந்தப் பிரச்சினையும் இல்லை. கார் வாங்க வேண்டுமென்றால்? அதற்கான ஆலோசனைகளை விபரங்களை கடன் உதவிகளை யார் யாரிடமெல்லாம் கேட்பீர்கள் என்று நீங்களே நினைத்துப் பாருங்கள்; புரியலாம்.

அரசாங்கத்தின்மீது குறை; மனைவி மீது குறை; தம் குழந்தைகளின் மீது குறை; நாள் நட்சத்திரத்தின் மீது குறை; முதலாளி மீது குறை; பொருளாதாரம், தம் துரதிருஷ்டம், குறைவான கல்வித் தகுதி, மாமன், மச்சான், மாமனார் என்று குறை… குறை… கூடை நிறையக் குறை.

குறைகளில் நியாயம் இருக்கலாம்; அநியாயத்திற்கு அபத்தக் களஞ்சியமாக இருக்கலாம். அதன் அலசல் இங்கு கருப்பொருளன்று.

இந்தக் குறைகளெல்லாம் சேர்ந்து சேர்ந்து அவரது மனதில் ஒரு தீர்மானம் ஏற்பட்டு விடுகிறது. வாழ்க்கையின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம். ‘குறைகள் என் வாழ்க்கையில் வற்றாத ஊற்று என்றாகிவிட்டது. எனவே நான் வாழ்க்கையில் துயருற்றுக் கிடக்க எனக்குப் போதுமான நியாயம் இருக்கிறது…’ என்று விரக்தி! கன்னத்தில் கை!

தப்பு! இது பெரும் தப்பு! நமது எண்ணத்திற்கு ஏற்பவே வாழ்க்கை அமைகிறது. செயலுக்கு ஏற்பவே முடிவு அமைகிறது.

முழ நீளத்திற்கோ, சென்னையின் நூறடி ரோடு அகலத்திற்கோ உங்களிடம் குறைகளின் பட்டியல் இருக்கலாம். அவை வெற்று லிஸ்ட்! இணைய விரும்பும் கட்சியுடன் தொகுதி உடன்பாடு ஏற்படாமல் இருக்க, தன்னிஷ்டத்திற்குத் தயாரித்துக் கொள்ளும் வேட்பாளர் பட்டியல் போல் அது உபயோகமற்ற பட்டியல். நீங்கள் விரும்பியவாறு உங்களால் உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள இயலாவிட்டால், விரும்பிய செயல் புரிய இயலவிலலை என்றால், எத்தகைய சாக்குப்போக்குச் சொல்லியும் பயனில்லை.

ஏன்?

தலையைச் சுற்றிப் பாருங்கள்; அல்லது ஊரைச் சுற்றிப் பாருங்கள். நொடிதோறும் எத்தனை பேர் எத்தனை சவால்களை வென்று கொண்டிருக்கிறார்கள்?

கல்வித் தகுதி இல்லாதவர் கூடச் சாதனையின் விலாசத்தைச் சுமந்து கொண்டு திரிகிறார்.

‘உலகப் பொருளாதாரமே சுணங்கிக் கிடக்கிறதாம்; அதனால் நான் இன்று வேலைக்குப் போக மாட்டேன்’ என்றெல்லாம் மனைவியிடம் வம்பு பண்ணாமல் சிரமப்பட்டு உழைத்துச் சம்பாதிப்பவர் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

ஏகப்பட்ட பிள்ளை குட்டிகளுடன் இருப்பவர் உற்சாகமாய் இருக்கிறார்;

மனைவியுடன் சண்டைக் கோழியாய் வாழ்ந்தவர் ஒரு சந்தர்ப்பத்தில் சூட்சுமத்தைப் புரிந்து கொண்டு அணுதினமும் காதல் என்று இல்லறத்தை மகிழ்வாய் மாற்றிக் கொண்டுவிட்டார்.

தெருவுக்குத் தெரு இப்படி நிறைய உதாரணங்கள் காணலாம்.

இவர்களெல்லோரும் நமக்கு என்ன உணர்த்துகிறார்கள்? வாழ்க்கையில் அவர்கள் அவர்களுக்கான தேவைகளைச் சாதிக்க நினைத்தார்கள். அதைச் சாதிப்பது முக்கியம் என்று தங்களது மனவோட்டத்தை ஒருமுகப்படுத்திக் கொண்டார்கள். அதில் லயித்துச் செயல்பட்டார்கள். அவ்வளவுதான்!

சூழ்நிலைகளையும் மக்களையும் நாம் குறை சொல்லிக் கொண்டேயிருந்தால் நமது மனோபாவம் மாறிவிடும் அதற்கேற்ப நமது மன மகிழ்வின் விகிதாச்சாரம் நேரெதிராய் அமைந்துவிடும். எந்த அளவு குறையோ அந்த அளவிற்கு மன மகிழ்வு குறையும்.

நமக்கு வாழ்க்கை என்பது ஒரு முறையே. அந்த ஒரேயொரு வாய்ப்பில் ‘என்னால் ஏன் மன மகிழ்வுடன் இருக்க முடியவிலலை’ என்று குறைகளின் பட்டியலைப் பக்கம் பக்கமாய் எழுத ஆரம்பித்தால், விஷயம் ஒன்று மட்டுமே!

நீங்கள் மன மகிழ்வடைய முயலவில்லை.

அதையெல்லாம் ஓரமாய் ஒதுக்கிவிட்டு மகிழ்வுடன் வாழ்வதற்கான வழிவகைகளைத் தேடினால் போதும். உங்கள் மனம் தயாராகிவிடும். கொஞ்சம் முயன்று பாருங்கள். “அட! மனம் மகிழத் தயார்” என்பதை உணர்வீர்கள்.

மனம் மகிழ, தொடருவோம்…

இந்நேரம்.காம்-ல் 25 மார்ச் 2011 அன்று வெளியான கட்டுரை

<–முந்தையது–> <–அடுத்தது–>

<–ம.ம. முகப்பு–>

Related Articles

Leave a Comment