35 – இடரார்ந்த வாழ்க்கை!

by நூருத்தீன்

முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோமே…… குழந்தைகள் எந்தவொரு செயலுக்கும் எதைப்பற்றியும் யோசிப்பதில்லை;

தோன்றிவிட்டதா, செய்து முடிக்க வேண்டும். கட்டிலிலிருந்து குதிப்பது, படிக்கட்டுக் கைப்பிடிச் சுவரில் வழுக்கிக் கொண்டே வருவது, மரத்திலுள்ள மாங்காய் மீது கல்லெறிகிறேன் என்று யார் மண்டையையாவது உடைப்பது, எத்தனைமுறை அதட்டியிருந்தாலும் திருட்டுத்தனமாய்ச் செங்கல் தூள் உண்பது – இன்னதுதானென்று வரையறுத்துச் சொல்ல முடியாத செயல்கள்.

என் நண்பர் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்டமுறை செல்ஃபோனை மாற்றியதாக நினைவு. என்ன என்று கேட்டதற்கு, “என் மகன் டாய்லெட்டில் ஃபோனை போட்டுவிடுகிறான்” என்றார் சிரித்துக் கொண்டே. அவர் மகனுக்கு ஃபோனை ஃப்ளஷ் செய்து பார்ப்பது பிடித்தமான விளையாட்டு போலிருக்கிறது.

பிள்ளைகளின் செயலின் தன்மைக்கேற்ப வால்தனம்; லூட்டி; ரௌடித்தனம் என்று பெரியவர்கள் நாம் வகைப்படுத்திக் கொள்கிறோம் பக்கத்துவீட்டுப் பிள்ளையென்றால் ரௌடித்தனம், நம் பிள்ளையென்றால் வால்தனம் என்பது நம் சண்டித்தனம். அது வேறு விஷயம்.

வாழ்க்கையில் நம் குறிக்கோளை எட்டுவதற்கு இடர்களைக் கடக்க வேண்டியது தவிர்க்க முடியாதது. இடரற்ற வாழ்க்கை என்பதே இல்லை. இந்த இடர்களோ எப்பொழுதுமே நம் மன மகிழ்வைக் குறிவைப்பவை. இனிமையான இடர் என்று ஏதாவது உள்ளதா என்ன? “அப்பாடா! இன்றைக்கு லாரி ஸ்ட்ரைக்! சரக்கு அனுப்ப வேண்டிய தொல்லையும் இல்லை; இன்று தொழில் நடத்தவேண்டிய ரோதனையும் இல்லை” என்று எந்த முதலாளி சிரிக்கப் போகிறார்?

எல்லாமே கஷ்டம், அசௌகரியம், உளைச்சல், அலைச்சல இத்தியாதி. “நான் எந்தவொரு இடரையும் ஏற்க முடியாது. நான் நினைத்தது அப்படியே நடக்க வேண்டும்” என்று யாராவது நினைத்தால் என்னவாகும்? ஒன்றும் ஆகாது. அவர் நினைத்த குறிக்கோள் ‘வேலைக்காவாது’. இப்புவியின் விதியானது ‘இடருக்குப் பிறகே வெகுமதி’.

குழந்தைகள் ஒரு செயல் புரிய அதுசார்ந்த இடர், துன்பம், அபாயம் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. குழந்தைகளாய் இருக்கும்போது நினைத்ததை அடைய எந்தவித இடரையும் யோசிக்காமல் கொள்ளாமல் எதிர்கொள்ளும். நாம் வளர வளர மாறிப்போகிறோம். இடித்துக் கொள்வோம், விழுந்து விடுவோம் என்றெல்லாம் தயங்காமல் தட்டுத் தடுமாறி நடை பழகிக்கொள்ளவில்லை? ஆனால் பெரியவர்களாக ஆனதும் அடுத்த அடி எடுத்துவைக்க யோசிக்கிறோம். எச்சரிக்கையும் பாதுகாப்புணர்வும் மிகவும் மேலோங்கிவிடுகிறது. கையில் ரிமோட்டைத் தூக்கி வைத்துக் கொண்டு சானல் மாற்றிச் சானல் பார்த்து ரசித்துவிட்டு நமது வாழ்க்கை அப்படியே எழுதிவைத்த திரைக்காட்சி போல் ஒரே சீராய் ஓடவேண்டும் என்று விரும்புகிறோம்.

இங்கு இடர்கள் என்றால் என்ன என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். வலியச் சென்று துன்பத்தை விலைக்கு வாங்குவதன்று இடர். வயதிற்கேற்ற பக்குவமும் எச்சரிக்கையும் இயற்கை. அனாவசியங்களை விட்டு, துர்ச்செயல்களை விட்டு, ஆபத்தான காரியங்களை விட்டு ஒதுங்கப் பாதுகாப்புணர்வு அவசியம், முக்கியம்.

“என்ன பெரிய இடர், ஆபத்து! ஒருகை பார்க்கிறேன்” என்று வாகனங்கள் பறக்கும் சாலையின் நட்டநடுவே சென்று நின்றுகொண்டால் என்னாவது? உயிர் பாக்கியிருந்தால் உடம்பில் கையோ காலோ மீந்திருக்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

கட்டடத்தில் தீப்பற்றிக் கொள்கிறது; தீ கடுமையாய்ப் பரவிக் கிடக்க வாசல் வழியாக வெளியேற வாய்ப்பில்லை; அப்பொழுது இரண்டாவது மாடியில் இருப்பவர் என்ன செய்வார்? கைகால் உடைந்துவிடும் என்றெல்லாம் தயங்கப் போவதில்லை. கண்ணை மூடிக்கொண்டு குதித்து விடுவார். இங்கு உயிர் முக்கியம். எனவே ஆபத்தைக் கடக்க உள்ள ஒரு வாய்ப்பைப் பயன்படுத்தியே ஆகவேண்டும். அதற்காக லிஃப்ட் இயங்கவில்லை என்பதற்காக மாடியிலிருந்து குதித்தால்?

சில சாதனைகளுக்காக, குறிக்கோளுக்காக, முன்னேற்றத்திற்காக மேற்கொள்ள வேண்டிய செயல்களுக்கு இடர்கள் ஏற்படுமே என்று பயந்து, சுணங்கிப் போகாமல், செயலற்றவராய் இல்லாமல் செய்ய வேண்டிய செயல்களை, செய்து முடிக்க வேண்டும். முழுக்க முழுக்கப் பாதுகாப்பும் அபாயமற்ற நிலையும் கவலையற்ற வாழ்வும் என்பதெல்லாம் எவரொருவருக்கும் இவ்வுலகில் அமைந்திருக்கவில்லை என்பதை உணர்ந்து நாம் இடர்களை எதிர்கொள்ள வேண்டும்.

உழைப்புக்கேற்ற பலன். அதைப்போல் துன்பம் சுமந்து, இடர்களை எதிர்கொண்டு செயலாற்றி முடிக்கும்போது கிடைக்கிறதே நிறைவு அது பலன். மகிழ்வளிக்கும் பலன்.

லாபம் ஈட்ட வேண்டும் என்றுதான் தொழில் தொடங்குகிறோம். நட்டமும் ஏற்படலாம். அதற்காக நட்டம் ஏற்பட்டால் என்ன செய்வது என்று நான் தொழிலே செய்வதில்லை என்று ஒருவர் சொன்னால் என்ன நினைப்பீர்கள்?

தொழிலில் ஏற்படும் இடர்களை எதிர்கொண்டால் தானே லாபம். கட்டிலில் இழுத்துப் போர்த்திப் படுத்துக் கொண்டால் பணியாற்றும் ஊழியர்களா லாபம் ஈட்டி நம் காலடியில் வைத்துவிட்டுச் செல்வார்கள்?

வாழ்க்கையை இரண்டுவிதமாக வாழலாம். பிறந்து விட்டோம், வாழ்ந்து கிடப்போம் என்பது ஒருவகை. அடுத்தது ஓர் உன்னதக் குறிக்கோளுடன் உண்மையிலேயே வாழ்வது.

‘தேமே’ என்று வாழ்வதில் சுவையுமில்லை, மகிழ்வுமில்லை. அது அஃறிணை வாழ்க்கை.

பின்னதில் இடர் உண்டு; துன்பம் உண்டு; துயர் உண்டு.

தோல்வி அடைபவர்களைவிட, சாதனை புரிபவர்கள்தாம் அதிகம் இடர்களை எதிர்கொள்கிறார்கள். அதிகப்படியாய் இன்னல்களை எதிர்கொள்பவரால்தான் அதிகமான சாதனைகள் புரிய முடிகிறது.

ஒருவர் வரலாற்றில் இடம்பெறுவது அவர் புரிந்த சாதனையினால்தானே தவிர அவர் அதுவரை பட்ட துன்பத்தினால் அன்று. முந்தைய அத்தியாயத்தில் பார்த்தது போல், எடிசனை நாம் அறிந்து கொள்வது அவர் கண்டுபிடித்த லைட் பல்பிற்காகத்தானே தவிர அவர் ஆயிரம்முறை அடைந்த தோல்விகளினால் அல்ல.

மொத்தத்தில்,

தெருவைக் கடப்பதிலிருந்து, இல்வாழ்க்கை அமைத்துக் கொள்வதிலிருந்து, ஹோட்டலில் பூரி கிழங்கு உண்பதிலிருந்து – அனைத்திலும் இடருண்டு; ஆபத்துண்டு. அதையெல்லாம் எதிர்கொண்டு வாழ்ந்து நமது இலட்சியத்தையோ குறிக்கோளையோ அடைவதில்தான் சாதனை உள்ளது; மனதிற்கு நிறைவான மகிழ்வும் உள்ளது.

மனம் மகிழ, தொடருவோம்…

இந்நேரம்.காம்-ல் 11 பிப்ரவரி 2011 2011 அன்று வெளியான கட்டுரை

<–முந்தையது–> <–அடுத்தது–>

<–ம.ம. முகப்பு–>

 

Related Articles

Leave a Comment