இரா உலா – 3 நானுறங்கத் துணையில்லை…!

by நூருத்தீன்

ஒருநாள் இரவு மதீனாவின் வீதியில் இரா உலா (ரோந்து) சென்று கொண்டிருந்தார் உமர் (ரலி). ஒரு வீட்டிலிருந்து பெண்ணின் அவல ஒலியொன்று

பாடலாய்க் கசிந்து கொண்டிருந்தது.

‘இரவோ நீண்டுள்ளது
உறக்கமோ என்னை நீங்கியுள்ளது
நானுறங்கத் துணையில்லை
அல்லாஹ்வின் மீதாணையாக
அவன் அச்சம் மட்டும் இல்லாதிருப்பின் இந்தக்
கட்டில் குலுங்கியிருக்கும்.’

அபூபக்ரு (ரலி) ஆட்சியில் தொடங்கிய போர் பிறகு உமர் கத்தாப் ஆட்சிக்கு வந்ததும் அரேபிய எல்லை தாண்டி இருபுறமும் படுவீரியத்துடன் நடக்க ஆரம்பித்தது. ஒருபுறம் ரோமர்கள், மறுபுறம் பாரசீகர்கள் என்று கடுமையான போர். அதன் தாக்கம் மிகப் பிரம்மாண்டம். ரோமர்களும் பாரசீகர்களும் இக்கால் அமெரிக்கா, ரஷ்யா போல அக்கால வல்லரசுகள். அவர்களைப் பாலைவனத்திலிருந்து கிளம்பிய இஸ்லாமியப் படை கதிகலங்கடித்துக் கொண்டிருந்தது.

இப்படியெல்லாம் அரேபியர்கள் பாலைவனத்திலிருந்து கிளம்பிவந்து தங்களை அசைத்துவிடப் போகிறார்கள் என்று கனவிலும் கூட அந்த இரு வல்லரசுகளும் நினைத்துப் பார்த்ததில்லை. ஆடுகளையும் ஒட்டகங்களையும் மேய்த்துத் திரியும் கூட்டம் என்ற இளக்காரத்தில் தங்களது ஆக்கிரமிப்பில் அரபு நாட்டை ஒரு கொசுறுப் பிரதேசமாகக்கூட அவ்விரு வல்லரசுகளும் கருதியதில்லை.

இந்நிலையில் ஆடு மேய்த்த புனிதர் ஒருவரின் தலைமையில் பிறந்த சத்தியப் பேரொளி, அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளில் வல்லரசுகளின் உச்சியைப் பிடித்துக் குலுக்கிக் கொண்டிருந்தது.

நடைபெறுவது சிறு அளவிலான சண்டையோ சச்சரவோ இல்லையல்லவா? போர்க்களத்திற்குப் பெருமளவில் கிளம்பிச் சென்றிருந்தனர் முஸ்லிம்கள். பல்லாயிரக்கணக்கில் முஸ்லிம் வீரர்கள் போரில் ஈடுபட்டிருக்க பலருடைய மனைவியரும் உடன் சென்றிருந்தனர். மருத்துவத் தேவைகளை அந்த வீராங்கணைகளின் குழு கவனித்துக் கொண்டது.

ஆனால் அனைத்து வீரர்களின் மனைவியரும் செல்வது எப்படிச் சாத்தியம்? போரோ பல மாதங்களாய் நீடித்துக் கொண்டிருக்க, சென்றவர்கள் உயிர் மீதமிருந்து வருவார்களா என்று தெரியாது. அப்படி வந்தால் எப்பொழுது வருவார்கள் என்பதும் தெரியாது. எந்தப் பெண்ணிற்கும் அது கடுமையானதொரு நிலை.

இத்தகையச் சூழ்நிலையில் இருந்த ஒரு படைவீரரின் மனைவிதான் தன் தனிமையின் அவலத்தைப் பாடலாய் நள்ளிரவொன்றில் பாடிக்கொண்டிருக்க அதை உமர் கேட்க நேரிட்டது.

அதைக் கேட்ட உமர், “அல்லாஹ்வின் கருணை உன் மேல் பொழியட்டுமாக,” என்று கூறிக் கொண்டார். இதெல்லாம் புறந்தள்ளக் கூடிய பிரச்சனையில்லை உமருக்கு. யோசித்தார்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மனைவியும் தம் மகளுமான ஹஃப்ஸா (ரலி) வீட்டிற்கு விரைந்து சென்று கதவைத் தட்டினார் உமர். கதவைத் திறந்த அன்னை ஹஃப்ஸா திகைத்துப் போய், “ஓ அமீருல் மூஃமினீன், என்ன இது, இந்த அகால நேரத்தில்?” என்றார்.

“மகளே! ஒரு பெண் தன் கணவனைப் பிரிந்து எத்தனை நாள் பொறுமை காக்க முடியும்?”

“அவளுடைய பொறுமை ஒரு மாதம், இரண்டு, மூன்று மாதங்கள் வரை இருக்கும். நான்காவது மாதம் அப்பொறுமையை அவள் இழக்க நேரிடும்.”

அடுத்தநாள் –

பிரிவுத் துயரில் வாடிய – பாடிய அப்பெண்ணிற்கு உடைகளும், பணமும் கருவூலத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டன. போர்க் களத்திலிருநத அவளது கணவனுக்குக் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டது. “உடனே கிளம்பி வருக.“

அது தவிர போர் வீரர்களுக்கு சட்டமொன்று இயற்றினார் உமர். “போர் வீரர்கள் தம் மனைவியைப் பிரிந்து நான்கு மாதங்களுக்குமேல் களத்தில் இருக்கக் கூடாது.” இந்தச் சட்டமும் போர்க் களங்களுக்கு அரசாணையாய் அனுப்பி வைக்கப்பட்டது.

அடுத்து, நான்கு மாதங்களுக்குமேல் வீடு திரும்பாமல் நீண்ட காலமாய்ப் போரில் ஈடுபட்டு, தத்தம் மனைவியருக்குப் பணமும் அனுப்பிவைக்க இயலாதிருக்கும் வீரர்களின் பட்டியல் தயாரானது. அவர்களின் படைத் தலைவர்களுக்கு மற்றொரு கடிதம் அனுப்பினார் உமர்.

“அந்த வீரர்கள் தம் மனைவியரிடம் திரும்பட்டும். பணம் அனுப்பிவைக்காதவர்கள் உடனே பணம் அனுப்பி வைக்கட்டும். தொடர்ந்து போரில் ஈடுபட விரும்புபவர்கள், தம் மனைவியரை மணவிலக்கு செய்து விடட்டும். அப்படி மணவிலக்கு செய்பவர்கள் பணம் அனுப்பிவைக்காத காலம் முழுமைக்குமான பணத்தை அனுப்பிவைக்க வேண்டும்.”

வீடு திரும்ப இயலாத கணவன் தன் மனைவியின் தேவைகளை நிறைவேற்றாது பரிதவிக்க விடுவதைவிட, அவளுக்கு மணவிலக்கு அளித்தால் பிறிதொரு ஆண் முறைப்படி அவளைத் திருமணம் செய்து வாழ்வளிக்க முடியும் என்பதே உமரின் நிலை.

பெண்களின் எந்த உரிமையும் அலட்சியமில்லை, உதாசீனமில்லை. உமர் தமது ஆட்சியில் எந்த ஃபித்னாவிற்கும் அனுமதி அளித்ததில்லை. இயற்கை பெண்ணுக்கு அமைத்துத் தந்துள்ள அனைத்துத் தேவைகளும் இறைவன் நிர்ணயித்த வரம்பிற்குள் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் உமரின் நடவடிக்கை அபாரமானது.

இத்தகைய ஃபித்னா சார்ந்த பிரச்னையை அவர் சந்திக்க நேர்ந்த மற்றொரு உலாவை அடுத்து பார்ப்போம் இன்ஷாஅல்லாஹ்.

-நூருத்தீன்

சமரசம் – 1-15 ஜனவரி 2011 இதழில் வெளியான கட்டுரை

அச்சு வடிவில் வாசிக்க இங்கே க்ளிக்கவும்

<<உலா – 2>> <<உலா – 4>>

<<உலா முகப்பு>>

Related Articles

Leave a Comment