மதீனாவின் வீதிகளில் ரோந்து சென்று கொண்டிருந்தார் உமர் கத்தாப் (ரலி). ஒரு வீடடிலிருந்து பெண்ணொருத்தி பாடும் கவிதை
அவர் காதில் விழுந்தது.
‘சிறிதளவு மது கிடைக்க வழியுள்ளதா?
நஸ்ர் இப்ன் ஹஜ்ஜாஜை அடைய வழியுள்ளதா?’
நள்ளிரவு நேரத்தில் பெண்ணொருத்தி மதுவையும் ஆண் ஒருவனின் நெருக்கத்தையும் விழைந்து பாடுவது கேட்டு அதிர்ந்து விட்டார் உமர். அந்தப் பாடல் அதன் அர்த்தத்துடன்தான் பாடப்படுகிறதா, அல்லது வெறுமனே கற்பனைப் பாடலா என்று உமருக்குச் சந்தேகம் எழுந்தது. எப்படியிருப்பினும் இது ஃபித்னா. இதையெல்லாம் அனுமதிக்க முடியாது. கிள்ளியெறிய வேண்டும் என்று முடிவெடுத்தார்.
மறுநாள் பொழுது விடிந்ததும், “நஸ்ர் இப்னு ஹஜ்ஜாஜாம். யார் அது? உடனே அழைத்து வாருங்கள்,” என்று கட்டளையிட்டார் உமர்.
நேர்த்தியான முடியுடன் இருந்த மிக அழகிய இளைஞனை அழைத்து வந்தார்கள். “இதோ நஸ்ர் இப்னு ஹஜ்ஜாஜ்.“
அறப்போருக்காக வீரர்கள் போர்க் களத்திலிருக்க, தனிமையில் இருக்கும் அவர்கள் வீட்டுப்பெண்களுக்கு மதீனாவில் பாதுகாப்பும் அமைதியும் உத்தரவாதமாய் கிடைத்துக் கொண்டிருந்தன. பொதுமக்களின் பொது நலன் மட்டுமல்ல அவர்களது குடும்ப நலனும் மிக முக்கியம், அதையும் நிர்வகிப்பது கலீஃபாவின் பொறுப்பு என்ற தீர்மானம் கொண்டவர் உமர். கண்டிப்பும் கரிசனமும் சரிசமக் கலவை அவர். புதிதாய் முளைத்துள்ள இத்தகைய ஃபித்னாவிற்குக் கண்டிப்பான அணுகுமுறையே சரிபட்டுவரும் என்ற முடிவுடன்,
“மழியுங்கள் அவனது தலைமுடியை” என்று கட்டளையிட்டார்.
மழித்தால், அவனது மொட்டைத் தலை அவனை மேலும் அழகாய்க் காட்டியது. “அவனுக்குத் தலைப்பாகை ஒன்றை மாட்டிவிடுங்கள்” என்றார் உமர். ம்ஹும், அதுவும் சரிவரவில்லை. அவனது தோற்றத்திற்கு அதுவும் அழகாகவே இருந்தது.
அடுத்து யோசித்தவர், “இவனை பஸ்ராவிற்கு அனுப்புங்கள்” என்று உத்தரவிட்டுவிட்டார்.
பஸ்ரா! நமக்கெல்லாம் இப்பொழுது நன்கு அறிமுகமாகியுள்ள ஈராக்கிலுள்ள பஸ்ரா. பாரசீகர்களுடன் போரில் அனல் பறந்து கொண்ருந்தது அங்கு. மதீனாவில் சொகுசாய், உல்லாசமாய் இளைஞன் நஸ்ர் சுற்றிக் கொண்டிருப்பது சரியில்லை. அவனையும் களத்திற்கு அனுப்பி, “போ, போய் ஆண்மையைப் பார், வீரத்தைப் பார், வாழ்க்கையின் இலட்சியத்தை உணர்,” என்று காட்டினால்தான் சரிப்படும்.
பஸ்ராவிற்கு அனுப்பிவைக்கப்பட்டான் நஸ்ர் இப்னு ஹஜ்ஜாஜ்.
இதனிடையே அன்றிரவு இப்பாடலைப் பாடிய பெண்ணிற்கு அச்சம் ஏற்பட்டுவிட்டது. தனக்கும் கண்டனம் வரும் என்று நினைத்தாளோ என்னவோ, விறுவிறுவென்று மற்றொரு பாடலொன்றை எழுதி கலீஃபா உமருக்கு தன்னிலை விளக்கமாய் அனுப்பி வைத்தாள்.
‘மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய இமாமிடம் சொல்லுங்கள்
எனக்கென்ன தேவையுள்ளது மதுவிடமும் நஸ்ர் இப்னு ஹஜ்ஜாஜிடமும்?
அபூ ஹஃப்ஸைப் பற்றிய என் பாடலில் உருவகக் குறியீடு இட்டேன்
எனக்கான தேவையெல்லாம் பாலும் ஓய்வுமே’
அப்பெண்ணிற்குப் பதில் அனுப்பினார் கலீஃபா. “நான் உன்னைப் பற்றி விசாரித்தவகையில் நல்லவற்றையே அறிய வந்தேன். நஸ்ரை உன் பொருட்டால் நான் விரட்டவில்லை. அவன் பெண்களுடன் தேவையின்றிப் பேசிப் பழகக் கூடியவனாய் இருக்கிறான் என்பதை அறிந்தேன். அது முறையற்ற செயலுக்கு வழிவகுக்கும். எனவே அதைத் தடுக்க அவனை அனுப்பி விட்டேன்.”
மதீனாவிலிருந்து பஸ்ராவிலுள்ள ஆளுநருக்குக் கடிதத் தூதுவர் சென்றிருந்தார். சிலநாள் கழிந்து அவர் மதீனா பயணப்படும் நாள் நெருங்கியதும் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டது, “உங்களது தபால் தூதுவர் மதீனா கிளம்புகிறார். யாரெல்லாம் கடிதம் அனுப்ப விழைகிறீர்களோ அவர்கள் அனுப்பலாம்.”
நஸ்ர் இப்னு ஹஜ்ஜாஜ் காதிலும் அது விழுந்தது. கலீஃபா உமருக்குக் கடிதம் எழுதினான். “யாரோ ஒரு பெண் பாடலில் என் பெயரைக் குறிப்பிட்டாள் என்பதற்காக என்னை மதீனாவிலிருந்து வெளியேற்றி விட்டீர்களே” என்று ஆதங்கப்பட்டு நீண்டிருந்தது கடிதம்.
அதையெல்லாம் கண்டு உமர் அசருவதாய் இல்லை. “நான் இங்கு ஆட்சியாளனாக நீடிக்கும்வரை அவன் இங்கு மீண்டும் திரும்ப முடியாது.” வேறு பேச்சிற்கு இடமில்லை. தீர்ந்தது விஷயம்.
அது அப்படியே நடந்து. உமர் இறந்து பிறகுதான் நஸ்ர் இப்னு ஹஜ்ஜாஜ் மதீனா திரும்ப முடிந்தது.
மற்றொரு நிகழ்வும் இதைப்போன்றே இதன் தொடர்பில் அமைந்துள்ளதால் அந்த இரா உலாவையும் இதனுடன் சேர்த்தே பார்த்து விடுவோம்.
பிறிதொரு இரா உலாவில் பெண்கள் சிலர் அழகிய இளைஞன் ஒருவனைப் பற்றிப் பேசுவதைச் செவியுற்றார் உமர் இப்னு கத்தாப். அவர்கள் பேச்சிலிருந்து அவன் பெயர் அபூ துஐப் என்பது தெரிந்தது. மறுநாள் அவனைப் பற்றி விசாரித்து அழைத்துவரச் செய்தார், அந்த அழகிய இளைஞனும் பெண்களிடம் தேவையின்றி பழகுபவனாக இருந்தான். அவனைப் பார்த்த உமர், “நீ அபூ துஐப் இல்லை, அப்பெண்களுக்கு திப் (ஓநாய்). ஓடிப்போ, இனி நான் இருக்கும் அதே நகரில் நீ இருக்கக் கூடாது.”
“அப்படியானால் என்னை என்னுடைய உறவினன் இருக்கும் ஊருக்கு அனுப்பி விடுங்கள்.”
யார் அந்த உறவினன்? நஸ்ர் இப்னு ஹஜ்ஜாஜ் தான். அவர்கள் இருவரும பனூ ஸுலைம் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்.
“நல்லதாய்ப் போச்சு” என்று அவனையும் பஸ்ராவிற்கே அனுப்பி வைத்தார் உமர்.
ஃபித்னாவின் தடுப்புச் சுவர் அல்ல அரண் உமர் (ரலி) அவர்கள்.
-நூருத்தீன்
சமரசம் – 16-31 ஜனவரி 2011 இதழில் வெளியான கட்டுரை
அச்சு வடிவில் வாசிக்க இங்கே க்ளிக்கவும்
<<உலா முகப்பு>>