இஸ்லாத்தின் இரண்டாம் கலீஃபா உமர் இப்னுல் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காலம். மதீனா நகரம்தான் அப்பொழுது இஸ்லாமிய
ஆட்சியின் தலைநகர். அந்நகரினுள் வணிகம் புரிய வெளியூரிலிருந்து வணிகர்கள் சிலர் வந்திருந்தனர். விடுதிகள் போன்ற வசதிகள் இல்லாத காலம் அது. பகலில் வணிகத்தில் ஈடுபவார்கள். இரவில் நகரிலுள்ள பள்ளிவாசல் ஒன்றின் அருகில் அவர்கள் தங்கிக் கொள்வார்கள். தங்களின் மனைவி, பிள்ளைகள், வாகனம், வணிகச் சரக்கு, இதர பண்டங்களுடன் அப்படி அங்கு அவர்கள் தங்கியிருந்தனர்.
கலீஃபா உமர் தோழர் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபை அழைத்தார். “நமது நகருக்கு வந்து வணிகர்கள் தங்கியுள்ளார்களே, இன்றிரவு நாம் சென்று அவர்களுக்குப் பாதுகாவலாய் காவல் புரிவோம், வருகிறீர்களா?”
வணிகர்கள் பாதுகாவல் கேட்டும் கலீஃபாவை அணுகவில்லை; கலீஃபாவும் பணியாட்கள், சேவகர்கள் என்று அழைத்து, ”சென்று அவர்களுக்குக் காவலிருங்கள்” என்று அனுப்பவில்லை. தாமே வெளியூர்வாசிகளுக்குப் பாதுகாவல் அளிக்க்க் கிளம்பிச் செல்கிறார். அது என்னவோ, அப்படித்தான் அவர் ஆட்சி புரிந்து கொண்டிருந்தார்!
பெருமைக்குரிய தோழர் உமரை ஒரு தோழராய், மாவீரராய், கலீஃபாவாய் பல பரிமாணங்களில் நாம் அறிந்திருந்தாலும் அவரது ஆட்சியும் அப்பொழுது அவர் செயல் புரிந்தவிதமும் இக்கால அரசியல் கூத்துகளையும் அரசாங்கங்களின் அழிச்சாட்டியத்தையும் காணும் நமக்கு வெகு புதுமையாக இருக்கும். ஆனால்,
அது மேன்மை! அது உன்னதம்!
வரலாற்றுக் கதைகளிலும் மன்னர் தொடர்பான நகைச்சுவைகளிலும் மன்னரின் இரவு நகர்வலம் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம், படித்திருக்கிறோம். அவையெல்லாம் உண்மையோ, கற்பனையோ – ஆனால் இஸ்லாமிய வரலாற்றில் அப்படியொன்று நிஜமாகவே நிகழ்ந்தது. கலீஃபா உமர் இரவு நேரங்களில் மதீனா நகரில் சுற்றிச் சுற்றி ரோந்து புரிந்து பாதுகாவலளித்தது, சுவையான தகவல்கள் அடங்கிய தனி வரலாறு. நமக்குப் பல படிப்பினைகளை அளிக்கும் வரலாறு அது.
நண்பர்கள் சேர்ந்து சொகுசாய் ஊர் சுற்றக் கிளம்புவார்களே, அப்படி அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபும், ”“ஓ போகலாமே!” என்று கிளம்பிவிட்டார்.
வணிகர்கள் தங்குயிருந்த பள்ளிவாசலுக்குக் கிளம்பிச் சென்றார்கள் இருவரும். அந்த வெளியூர் வணிகர்கள் தங்களுக்குப் பாதுகாவலாய் நாடாளும் கலீஃபாவும், மற்றொரு உன்னத நபித்தோழரும் வந்திருக்கிறார்கள் என்பதெல்லாம் தெரியாமல் உறங்க ஆரம்பித்துவிட்டனர். பாதுகாவலுக்குச் சென்ற இருவரும் தூக்கம் வராமலிருக்க பேசிப் பொழுதைக் கழிக்காமல், பின்னிரவுத் தொழுகை தொழ ஆரம்பித்துவிட்டார்கள். தொழுகை, அதுவும் இரவுத் தொழுகை அவர்களுக்கு அனைத்தையும்விட மிக மிக முக்கியமானது. அவர்களுக்கு ஆன்ம பலத்தை அள்ளியளித்த மகா உன்னத இறை வழிபாடு அது.
தொழுகை நிகழ்ந்து கொண்டிருந்தது.
அப்பொழுது குழந்தையொன்று அழும் ஒலி கேட்டது. விடாது அழும் ஒலி. தாங்க முடியவில்லை. தொழுகையை முடித்த உமர் இருட்டில் அந்தக் குழந்தையின் அருகில் சென்று அதன் தாயிடம், “அல்லாஹ்விற்குப் பயந்து கொள்ளுங்கள். குழந்தை இப்படிக் கதறி அழுகிறதே. சரியாகக் கவனித்துக் கொள்ளுங்கள்,” என்று அறிவுறுத்திவிட்டு வந்துவிட்டார்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் குழந்தை அழும் ஒலி கேட்டது. தாய் சமாதானப்படுத்தவில்லையோ, குழந்தை கேட்கவில்லையோ தெரியாது, ஆனால் கடுமையான அழுகை ஒலி. வேகமாய்க் கிளம்பி குழந்தையின் அருகில் சென்ற உமர் அதன் தாயிடம், “என்ன அம்மா நீ? உன் குழந்தை ஏன் இரவு முழுக்க அழுது கொண்டிருக்கிறது? நீ அதைச் சமாதானப்படுத்தாமல் இருக்கிறாயே. என்னாச்சு உனக்கு?” என்றார் கோபத்துடன்.
உமரை கலீஃபா என அறிந்திராத அந்தத் தாய் பதில் அளித்தார். சற்று விசித்திரமான பதில். “ஓ அல்லாஹ்வின் அடிமையே! குழந்தை தாய்ப்பால் கேட்கிறது. நான் கொடுக்காமல் அவன் கவனத்தைத் திசை திருப்பப் பார்க்கிறேன். அதை ஏற்காமல் அழுது கொண்டிருக்கிறது. வேறொன்றுமில்லை.”
பசிக்கும் குழந்தைக்கு தாய்ப் பாலூட்ட மறுக்கிறாரா? என்ன அநியாயம்? “ஏன்?” என்றார் உமர்.
“கலீஃபா உமர் சட்டமிட்டிருக்கிறார். பால்குடி மறக்காத குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்கப் படுவதில்லையாம். அதனால்தான் நான் அவனுக்குப் பால்குடி மறக்கப் பழக்கப்படுத்துகிறேன்.”
அப்பொழுதெல்லாம் அரசின் கருவூலமான பைத்துல்மாலிலிருந்து மக்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. உதவித்தொகை பெறத் தகுதியுள்ள குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் அது வழங்கப்பட்டது. ஆனால் கைக்குழந்தைகள் இருப்பின் அந்தக் குழந்தைக்குத் தாய்ப்பால் மறக்கச் செய்யப்படும் வரை தனிநபராகக் கணக்கிடக் கூடாது என்று சட்டமியற்றி இருந்தார் உமர். அதனால் ஏழு பேர் உள்ள குடும்பத்தில் ஒன்று பால்குடி வயதிலுள்ள குழந்தை ஒன்று இருந்தால் அதற்கு உதவித் தொகையில் பங்கு கிடையாது.
“அது தானே சட்டம்? இருக்கட்டும் விரைவில் என் குழந்தைக்கு நான் தாய்ப்பால் மறக்கச் செய்கிறேன். அவனுக்கும் ஒரு பங்கு கிடைக்கும்” என்பது அந்தத் தாயின் திட்டம்.
திகைத்துப்போன உமர், “”உன் குழந்தைக்கு என்ன வயதாகிறது?”
சில மாதங்கள் ஆகியிருந்தன அந்தக் குழந்தைக்கு. தெரிவித்தார் தாய்.
“என்ன கேடு உனக்கு? ஏன் இப்படி பால் நிறுத்த அவசரப்படுகிறாய்? அப்படிச் செய்யாதே” என்று தெரிவித்துவிட்டுச் சென்றுவிட்டார்.
இரவு முடிந்து ஃபஜ்ரு தொழுகைக்காகத் தமது பள்ளிவாசலுக்குத் திரும்பிவிட்டார் உமர். தொழ ஆரம்பித்து ஓத ஆரம்பித்தவர், அழ ஆரம்பித்துவிட்டார்! நாடாளும் கலீஃபா, வீரர் உமர் தொழுகையில் அழ ஆரம்பித்துவிட்டார்! அடக்க மாட்டாமல் விம்மியதில் அவருக்குப் பின்னால் தொழுகையில் நின்றிருந்த தோழர்களுக்கு அவர் ஓதியது கூட சரிவரக் கேட்கவில்லை.
தொழுது முடித்தவர் மக்களிடம் திரும்பி, “உமருக்குக் கேடே! இப்படி எத்தனை முஸ்லிம் குழந்தைகளை அவர் கொன்றிருக்கிறாரோ தெரியவில்லையே?” என்று மாய்ந்து அங்கலாய்த்தவர் தனது பணியாள் ஒருவரை அழைத்தார்.
சகலமானவருக்கும் அறிவிக்கவும், “குழந்தைகளுக்குப் பால்குடி மறக்கச் செய்வதில் யாரும் அவசரப்படக் கூடாது. குடும்பங்களில் பிறந்துள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் இனி உதவித் தொகை வழங்கப்படும்.”
செய்தி அறிவிக்கப்பட்டது. உத்தரவு எழுத்தில் வடிக்கப்பெற்று அனைத்துப் பகுதி நிர்வாகிகளுக்கும் ஆளுநர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அன்றிலிருந்து ஒவ்வொரு குழந்தையைப் பற்றிய தகவலும் அரசாங்கப் பதிவுகளில் குறித்துக் கொள்ளப்பட்டு, அனைவருக்கும் பைத்துல்மாலிலிருந்து நிதி உதவி அளிக்க ஏற்பாடானது.
அவையெல்லாம் தேர்தல் வாக்குறுதித் திட்டங்களல்ல. இறை பயத்தில், இறை உவப்பிற்காக மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டவை. எனவே நீதி தழைத்தது. மக்கள் செழித்தனர்!
-நூருத்தீன்
சமரசம் – 16-30 நவம்பர் 2010 இதழில் வெளியான கட்டுரை
அச்சு வடிவில் வாசிக்க இங்கே க்ளிக்கவும்
<<உலா முகப்பு>> <<உலா – 2>>