25 – அச்சந் தவிர்

by நூருத்தீன்

நம் மனமானது எதை நினைக்கிறதோ அதை நோக்கி நகரக்கூடிய தன்மையுடையது. இதைப் பற்றி முந்தைய அத்தியாயம் ஒன்றில் படித்தோம். அதைச் சற்று

விரிவாக இங்கு பார்ப்போம்.

“வறுமையில் உழல்வதே என் தலையெழுத்து.”

“என் உடம்பிற்கு ஏதாவது ஒரு நோய்; பாடாய்ப் படுத்திக் கொண்டேயிருக்கும். முழுசாய் ஒருவாரம் நான் ஆரோக்கியமாய் இருந்ததில்லை; மருந்துக் கடைக்கு மொய் எழுதாத நாள் இல்லை.”

இப்படிப்பட்ட எதிர்மறையான எண்ணங்களுடன் நோயைப் பற்றியே பேசி, எந்நேரமும் அதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருப்பவர்களை, அவர்கள் அறியாமலே அவர்களின் ஆழ்மனது அத்தகைய சூழ்நிலையின் பக்கம் இழுத்துச் சென்று விடுகிறது;அவர்களை நோயாளிகளாகத் தயார்படுத்துகிறது.

ஆனால் வெற்றியாளர்கள் எந்நேரமும் வெற்றியைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்களா, அதனால் அவர்களது ஆழ்மனது வெற்றியை நோக்கி அவர்களை இட்டுச் சென்று விடுகிறது. வெற்றியாளர்கள் வெற்றியை நோக்கி ஓடுகிறார்கள் என்றால், தோல்வியாளர்கள் தோல்வியிலிருந்து விலகி ஓட முயல்கிறார்கள்.

தோல்வியாளர்களை வெற்றியை நோக்கித் திசை திருப்ப மிக எளிய உபாயம் ஒன்று உண்டு. அது, “உங்களுக்கு எது தேவையோ அதைச் சிந்தியுங்கள்,” என்பதை உணர்த்துவது.

அப்படியெனில்?

எது வேண்டாம் என்று நினைத்துக் கொண்டேயிருக்கிறீர்களோ அதை நோக்கித்தான் உங்கள் மனது நகரும். அதைப்போலவே எது வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை நோக்கியும் மனம் நகரும். மனதிற்கு எதிர் திசையில் நகரும் ஆற்றல் இல்லை. அதனால், “உங்களுக்கு எது தேவையோ அதைச் சிந்தியுங்கள்.”

தேவையில்லாத சிந்தனைகள் விட்டொழிக்கப்பட வேண்டும்.

உதாரணத்திற்கு, காலையில் எழுந்து, பல் துலக்கி, தலை சீவி, சட்டையை மாட்டிக் கொண்டு தெரு முனையில் உள்ள மளிகைக் கடைக்குச் சென்று, “எனக்கு ஒரு கிலோ சர்க்கரை வேண்டாம், கால் கிலோ டீத்தூள் வேண்டாம், ஒண்ணேகால் கிலோ உளுத்தம் பருப்பு வேண்டாம்…” என்று சொல்வீர்களோ? கடைச் சிப்பந்தியும் மற்றவர்களும் உங்களை எந்தக் கோணத்தில் பார்ப்பார்கள், எப்படிச் சிரிப்பார்கள் என்பதெல்லாம் வேறு விஷயம்.

நம்மில் பெரும்பாலானவர்கள் தங்களிடம் என்ன இல்லையோ அதையே அங்கலாய்த்துக் கொண்டிருப்பார்கள்; என்ன தேவையில்லையோ அதையே பேசிக் கொண்டிருப்பார்கள். இவையெல்லாம் போகாத ஊருக்கு வழி!

நமக்கு எது தேவையோ அதை, அதை மட்டும் சிந்திக்கப் பழக வேண்டும்.

இதைப் போல் நம்மிடம் மற்றொரு தன்மை உண்டு. அது “இழப்பு பயம்.”

இழந்து விடுவோமோ என்று ஏதாவது ஒன்றை நாம் நினைத்து பயந்தால் அந்த ஒன்றை நாம் இழப்பதற்கு நம் மனம் நம்மைத் தயார்படுத்திவிடுகிறது; அதற்கான சாத்தியக் கூறுகளை அதிகப்படுத்தி விடுகிறது. அந்த ஒன்று, கணவன், மனைவி, பர்ஸ், கிரிக்கெட் மட்டை, செருப்பு என்று எவராகவும் எதுவாகவும் இருக்கலாம்.

மனித உறவுகளினிடையே இந்த பயம் மிகவும் பலமுள்ளதாய்ச் செயல்படுகிறது என்கிறார்கள் உளவியலாளர்கள். ஒருவர் உங்களிடம் பாசமாய் இருக்கிறார். ஆனால் அவருடைய அன்பையும் பாசத்தையும் இழந்து விடுவோமோ என்று அச்சங்கொள்ள ஆரம்பித்தால் அத்தகைய ஆபத்திற்கு நம் மனது நம்மைத் தயார்படுத்தி விடுகிறதாம். அதற்கு மாறாய் “உங்கள் உறவுகளிடம் நீங்கள் அனுபவித்துவரும் அன்பையும் பாசத்தையும் உணர்ந்து, மகிழுங்கள். அதை இழந்துவிடுவோம் என்று ஒருபோதும் சிந்திக்கவே செய்யாதீர்கள்,” என்று அறிவுறுத்துகிறார்கள்.

நாளை நமக்கு இழப்பு ஏற்பட்டுவிடுமோ என்று கற்பனையாய் பயந்து நடுங்குவதைக்காட்டிலும் இன்று நம்மிடம் உள்ளதை உள்ளார்ந்து அனுபவிக்கப் பழக வேண்டும். ஒருவித பயத்திலேயே குடியிருந்தால் அது நமது தலையில் வந்து விழத்தான் செய்யும்.

சில நேரங்களில் அர்த்தமற்ற பயம் வாழ்க்கையில் நமக்கு மற்றொரு பாடத்தையும் கற்றுத்தரும். எப்படி?

எதை நினைத்து நீங்கள் பயந்தீர்களோ அது உங்களுக்கு நிகழ்ந்துவிட்டால், நீங்கள் அறியா உங்கள் உள்மன சக்தி அந்த அபாயத்தை எதிர்கொள்ளும் ஒருவித தைரியத்தை உங்களுக்குத் தந்துவிடுகிறது. ஒருவருக்கு வாழ்வா சாவா என்பது போன்று ஒரு சோதனை வந்து சேர்கிறது! உடனே அவர் என்ன செய்வார்? சரி செத்துப் போகலாம் என்று உறவினர்களுக்கெல்லாம் எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டுக் கால் நீட்டியா படுத்துக் கொள்வார்? தம்மாலான அனைத்து முயற்சிகளையும் காட்டுத்தனமாய் நிறைவேற்றிப் பார்ப்பாரா இல்லையா?

அதனாலேயே சில பயங்கள் எதிர்கொண்டு முறியடிக்கப்பட வேண்டியதாகின்றன. அப்படி எதிர்கொள்ளும்போது அதுவரை நம் மனதில் குடி கொண்டிருந்த பயம் அர்த்தமற்றதாகி மனம் இலேசாகிவிடும். அந்த பயம் காற்றில் கரைந்துவிடும்.

சொல்லக்கூடாத விஷயமொன்று நிகழ்ந்து விட்டது. அதற்காக பயந்து, அதை மறைத்துப் பொய் பேசுவதைவிட உண்மையைச் சொல்லிப் பாருங்கள், பிரச்சனை சுமுகமாய்த் தீரும்.

ஒரு கணவனுக்குத் தன் மனைவி தன்னை உதாசீனம் செய்து மரியாதையின்றி நடந்து கொள்வாளோ, எதிர்த்துப் பேசிவிடுவாளோ என்று பயமொன்று இருந்து கொண்டேயிருந்தது. அதனால் அவளுடன் பேசும்போதெல்லாம் மிரட்டல் தொணி அவனது பேச்சில் இயல்பாகிப் போனது. காலையில் எழுந்ததும், “நான் காபி குடித்து வருவதற்குள் குளிப்பதற்கு வெந்நீர் தயாராக இருக்க வேண்டும், இல்லையென்றால் நடக்கிறதே வேறே!” என்று மிரட்டல் அனல் பறக்கும். காலையில் எழுந்து காலில் வெந்நீர் கொட்டியதைப் போல் பரக்கப் பரக்க வேலை பார்த்துக் கொண்டிருக்கும் மனைவிக்குக் கணவன் என்ன செய்து விடுவாரோ என்று வெந்நீர் பயம். இப்படியே தினந்தோறும் நிகழ்ந்து கொண்டிருக்க, பொறுக்க முடியாத அந்த மனைவி ஒருநாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு திருப்பிக் கேட்டாள், “இன்னிக்கு என்னால் வெந்நீர் வைக்க முடியாது. என்ன செய்வீர்கள்?”

அதிர்ந்து போன கணவன் அமைதியாகப் பதில் சொன்னான், “நானே வைத்துக் கொள்வேன்.”

மனம் மகிழ, தொடருவோம்…

இந்நேரம்.காம்-ல் 03 டிசம்பர் 2010 அன்று வெளியான கட்டுரை

<–முந்தையது–> <–அடுத்தது–>

<–ம. ம. முகப்பு–>

Related Articles

Leave a Comment