தமிழில் ஒரு பழமொழி உண்டு; கேள்விபட்டிருப்பீர்கள்; “அடிக்க அடிக்க அம்மியும் நகரும்.”
அதை ஏன்
போட்டு அடித்துக் கொண்டிருக்க வேண்டும்? துணைக்கு ஒருவரை அழைத்து நகர்த்தி வைத்துவிட்டுப் போனாலென்ன? இங்கு தூக்கி வைப்பதன்று பிரச்சினை. விடாமுயற்சி! அதுதான் பேச்சு இங்கு!
விடாமுயற்சி என்றால் என்ன? அது வேறொன்றுமில்லை; ‘சாதனையின் ஆணிவேர்!‘
ஒருவருக்கு ஏகப்பட்ட திறமைகள் இருக்கலாம். ஆனால் அவை மட்டுமே அவரை சாதனையாளராக உருவாக்குவதில்லை. உலகில்
திறமையாளர்களுக்கா பஞ்சம்? சொந்தத்தில், உங்கள் தெருவில், எதிர் வீட்டில், பக்கத்து வீட்டில் என்று எத்தனையோ திறமையாளர்கள் இருக்கலாம். அந்த அவர்கள் அத்தனைப்பேரும் சாதிக்கிறார்களா? இல்லையே!
ஒருவர் சிறந்த அறிவாளியாக இருக்கலாம். ஆனால் அது மட்டுமே அவரது சாதனைக்கு உதவாது. அன்று புலவர்கள் பலர் தங்களது அறிவை மன்னனைப் புகழ்ந்து பாடப் பயன்படுத்தினார்கள் என்றால் இன்று அரசியல் தலைவரை. ……
என்ன பிரயோசனம்?
ஒருவர் கல்வியில் சிறந்து விளங்கலாம். ஒரு முழ நீளத்திற்கு அவரது பெயருக்குப் பின்னால் அவர் படித்துப் பெற்ற பட்டங்கள் ஒட்டிக் கொண்டிருக்கலாம். அத்தனைக் கல்வியாளர்களும் சாதனையாளர்களா? சொல்லப்போனால் மாணவருக்குக் கற்றுத்தரும் ஆசிரியரே கல்வியறிவில் சிறப்பானவர் தாமே? அவர், ‘ஏணி, தோணி, வாத்தியார்…’ என்று அப்படியேதானே இருக்கிறார்?
குறிப்பிட்ட சாதனை என்ற ஒன்றைப் புரிய வேண்டுமெனில், இலட்சியமொன்றை அடைய வேண்டுமெனில், தேவை விடாமுயற்சி. தகுதிகளும் திறமைகளும் எண்ணற்ற வகையில் அமையப் பெற்றிருந்தாலும் விடாமல் முயற்சி செய்தால் தவிர எந்தக் காரியமும் முதல் முயற்சியிலேயே வெற்றி அடைவதில்லை.
உலகின் சாதனையாளர்கள் இந்த இரகசியத்தை நன்றாக அறிந்து வைத்துள்ளார்கள். ருசியான சமையலுக்கு உப்பு, காரம் போல விடாமுயற்சி தமது இலட்சியத்திற்கு முக்கியமான ஓர் ஆக்கக்கூறு என்று உணர்ந்து கொள்கிறார்கள்.
‘அதெல்லாம் ச்சும்மா’, ‘எனது அறிவும் திறமையுமே சாதனையை எனது வீட்டிற்கு இட்டு வந்து என் தோளில் ஆளுயர மாலையைப் போtடச்செய்யும்’ என்று நம்புபவர்கள் வாழ்க்கையில் அசுவாரசியமாகிப் போகிறார்கள்.
மேற்படிப்பு, தொழில், ஆராய்ச்சி என்று ஏதோ ஒரு புதிய திட்டம் உங்களுக்குத் தோன்றுகிறது. அல்லது ஏதோ ஓர் ஏடாகூட சிந்தனை தோன்றி, குதிரை ஏற்றம் கற்றேத் தீருவது என்று முடிவெடுக்கிறீர்கள். அந்த ஆர்வத்தில், உற்சாகத்தில் பரபரவென அதற்கான முதற்கட்ட ஆயத்தம் செய்தாகிவிட்டது. அடுத்த கட்டமாய் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவும் ஆரம்பித்து விடுகிறீர்கள். அதுவரை எல்லாம் ஓக்கே!
அடுத்து அந்தச் செயலின் ‘ப்ராக்டிக்கலான இன்னல்கள்’ முகத்தில் வந்து அறையும். பிரச்சினைகள், சவால்கள், என்று ஒன்று மாற்றி ஒன்று உங்களை ஆக்கிரமிக்கும்.
குதிரையில் ஏறி அமர்ந்தால் அது கார் ஸீட் போல் சொகுசாய் இருக்காது என்பது ஒருபுறமிருக்க, “ஹை ஹை” என்றால் அந்த ஜந்துவோ உங்களைக் கீழே தள்ளிவிட்டுத்தான் மறுவேலை என்று அடம்பிடிக்கும்.
அடக்கி, ஆண்டு, விடாது அயராது பயிற்சி எடுத்து முடித்தபிறகே ஒருவழியாய்க் குதிரை ஏற்றம் பிடிபடும். அதற்குள் பாதி அல்லது முக்கால்வாசி இளைத்திருப்பீர்கள்.
உலகிலுள்ள ஒவ்வொருவரிடமும் இப்படி ஏதாவது ஓர் ஆவல், முயற்சி இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதில் பெரும்பாலானவர்கள், ‘விட்டதடா ஆசை’ என்று பாதியிலேயே ‘ஜகா’ வாங்கிவிடுகிறார்கள். அதுதான் சோகம். மீதமுள்ள மிகச் சிலர் மட்டுமே தாங்கள் நினைத்ததை விடாது முயன்று, சாதித்து முடிக்கிறார்கள்.
‘விடாது முயற்சி செய்’ என்று எழுதுவதும் வாசிப்பதும் எளிது. ஆனால் நாம் நினைத்ததை அடைய எதிர் கொள்ளும் சோதனைகளும் பிரச்சினைகளும் இருக்கின்றனவே, அவை எப்பொழுதுமே இலேசானதாக அமைவதில்லை. இலட்சியத்திற்கு, திட்டத்திற்கு ஏற்ப அவற்றின் வீரியமும் பரிமாணமும் பெரிசாகவே இருக்கும். தாண்ட வேண்டும்! அதையெல்லாம் ‘விட்டேனா பார்’ என்று எதிர்கொண்டு தாண்ட வேண்டும்.
எந்த நாடாக இருந்தாலும் சரி, எந்த ஊராக இருந்தாலும் சரி, அங்கெல்லாம் உள்ள எந்த ஒரு சாதனையாளரையும் எடுத்துக் கொண்டு அவரது வாழ்க்கை வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். அடிநாதமாய் விடாமுயற்சி என்பது பரவி ஊடுருவி இருப்பதைக் காணலாம்.
சொல்லப்போனால் அத்தகைய வரலாற்றைப் படிக்கவே நீங்களும் விரும்புவீர்கள். சாதிக்காமல் தோற்றுப் போனவர்களின் வரலாறு என்ன ஆவலை உங்கள் மனதில் ஏற்படுத்தும்?
ஆனால் –
விடாமுயற்சிக்கும் வீண் பிடிவாதத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்! இல்லையென்றால் பலன் எதிர்மறை!
ஆற்றைக் கடக்கப் படகில் சென்று கொண்டிருக்கும்போது படகில் ஓட்டை விழுந்துவிட்டால், “ம்ஹும்! அதெல்லாம் முடியாது; நான் குதிக்க மாட்டேன்” என்று சொன்னால்?
நீங்கள் வெறுக்கும் உத்தியோகத்தில் விடாப்பிடியாய் ஒட்டிக் கொண்டிருப்பதைவிட நல்லதொரு வாய்ப்பு அமையும்போது மாறிக் கொள்வதே சாமர்த்தியம். சில சமயங்களில் சில விஷயங்களைக் கை கழுவுவதே வெற்றிக்கு வழி வகுக்கும்.
அதை சரியாக உணர்ந்து கொண்டு விடாமுயற்சியுடன் இலட்சியத்தைப் பின் தொடர்ந்தால் – மன மகிழ்வே!
மனம் மகிழ, தொடருவோம்…
இந்நேரம்.காம்-ல் 11 மார்ச் 2011 அன்று வெளியான கட்டுரை
<–ம.ம. முகப்பு–>