மனிதர்களுக்குப் பொதுவே செல்வ வளமும் உடல் ஆரோக்கியமும் மன மகிழ்வைத் தரும் முக்கிய அம்சங்கள். அதிலும் பணம்? அது ரொம்ப ரொம்ப முக்கியம்!
வாழ்க்கையே அதைப் பெருக்கிக் கொள்ளும் நோக்கில்தான் நகர்கிறது. எனில், செல்வச் செழிப்பு மட்டும்தான் மன மகிழ்வா என்றால், “இல்லை” என்பதே பதில்! ஆனால் பணம், மன மகிழ்விற்கான ஒரு முக்கிய காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
“நான் பணத்தின் பின்னால் ஓடுவது இல்லை ஸார்”என்று யாராவது சொல்லலாம்.
உங்களுடைய ஒன்பதேகால் மாதக் குழந்தையின் எல்.கே.ஜி. அட்மிஷனுக்காக, நன்கொடை அளிக்க ஆயிரக்கணக்கில் பணம் எடுத்துக்கொண்டு, பதட்டத்துடன் வியர்க்க விறுவிறுக்க இன்டர்வியூ அறைக்குள் நீங்கள் நுழைகிறீர்கள். அந்தப் பிரின்ஸிபல் உங்களைப் பார்த்து, “ஸார் குலுக்கல் முறையில் உங்கள் பெயரைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். நயாபைசா டொனேஷன் இல்லாமல் உங்கள் வாரிசுக்கு அட்மிஷன்,” என்று சொன்னால் உங்கள் மனம் என்ன செய்யும்? துள்ளிக் குதித்து மகிழ்வுறாது?
குழந்தைக்கு அட்மிஷன் கிடைத்தது ஒருபுறம் என்றால் மொய்யழத் தயாராய் இருந்த பணம் மீந்த திருப்தி மனதிற்கு உற்சாகமளிக்காது? பணத்தின் பின்னால் நீங்கள் ஓடாமல் இருந்தாலும் பணம் உங்கள் பின்னால் ஓடிவந்தால் மனதிற்கு மகிழ்ச்சி தானே? நேரடியாய் இல்லாவிட்டாலும் மறைமுகமாய்ப் பணம் உங்கள் மன மகிழ்விற்கு முக்கியப்பங்கு ஆற்றுகிறது. அதனால் மனதை பாடாய்ப்படுத்தும் இந்தச் செல்வம் சார்ந்த தகவல்களைச் சற்று இங்கு பார்த்துவிடுவோம்.
கவனமாய் மனதில் கொள்ளுங்கள், முப்பது நாளில் ஆங்கிலம் கற்றுக்கொள்ளுங்கள் என்பது போல் முப்பது நாளில் பணம் சம்பாதிக்க வழி சொல்லும் எண்ணம் எதுவும் இந்தத் தொடருக்கு இல்லை. எனவே அது சம்பந்தமான கேள்விகளை தயவுசெய்து இந்நேரத்திற்கு அனுப்ப வேண்டாம்.
முந்தைய அத்தியாயங்களில் நாம் தெரிந்து கொண்டபடி ஒருவருக்கு ஆக்கபூர்வ சிந்தனை இருக்கிறது; கடின உழைப்பு இருக்கிறது; ஆரோக்கியமான சுயபிம்பம் இருக்கிறது. “அவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு என்ன செய்ய? மாதக் கடைசியில் மளிகைக் கடைக்காரருக்குக் கடன் சொல்ல வேண்டியிருக்கிறது. என் சுயபிம்பத்தை எழுதிக் கொடுத்தாலும் சரி, வரைந்து கொடுத்தாலும் சரி, அதெல்லாம் பணத்திற்குப் பதிலாய் வாங்கிக்கொள்ள மாட்டாராம். வரும் பணமோ கைக்கும் பத்தலே, வாய்க்கும் பத்தலே!“
இப்படி யாராவது குறைபட்டுக் கொண்டால் அவர் தம்மிடம் இருக்கிறது என்று நினைக்கும் மேற்சொன்ன தகுதிகளில் குறையிருக்கிறது; அவரது மனம் மாற்றத்திற்கு தயாரில்லை என்று அர்த்தமாகிறது.
நாடு, ஏழ்மை, பொருளாதாரம், உலகமயமாக்கல், பண வீக்கம், வாந்தி, பேதி, மயக்கம் என்பதையெல்லாம் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு இயல்பு வாழ்க்கையின் பொருளாதாரம் ஒரு மனிதனுக்கு எப்படி மகிழ்வளிக்க முடியாமல் போகிறது; அதில் அவரது மனதின் பங்கு என்ன என்பதை மட்டும் இங்கு சற்றுத் தெரிந்து கொள்வோம்.
மனதும் அதன் நம்பிக்கையும் தான் ஒரு மனிதனின் வாழ் நிலைக்குக் காரணம் என்கிறார்கள் உளவியலாளர்கள். “அப்படியானால் இறை சக்தி?“ என்று ஆன்மீகவாதிகள் கேள்வி கேட்கலாம். ஒன்றும் குழப்பமில்லை. இறைசக்தி செயலுக்கு ஏற்ற எதிர்விளைவை அண்டங்களை உருவாக்கும்போதே நிர்ணயித்துவிட்டது. நாம் நமது மனதை எந்தச் செயலுக்குத் தயார்படுத்துகிறோமோ அதற்கேற்பவே நாம் செயல்படுகிறோம். அதற்கேற்பவே எதிர்விளைவுகள் உண்டாகின்றன. “நான் நாலு காசு பார்த்துவிடுவேன், பணக்காரனாவேன்“ என்று நீங்கள் வலுவாய் நினைத்தால் அப்படியே உருவாகும். “என் தலைவிதி, நான் ஏழையாத்தான் இருந்து மடியனும்“ என்று நினைத்தால் ஏழ்மை என்றும் உங்களது தோழனே!
கைக்கும் வாய்க்கும் போதாமல் வாழ்பவர்களின் மனோநிலையை உளவியலாளர்கள் வர்ணிக்கிறார்கள்.
கோபால் லோயர் மிடில் க்ளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய தந்தையும் சகோதரரும் ஒரு சாதாரண உத்தியோகம் பார்த்துச் சம்பாதித்துக் கொண்டுவரும் பணத்தில் குடும்பம் தள்ளாடி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் வளர்ந்து வரும் கோபாலுக்கு “நாம் லோயர் மிடில் க்ளாஸ்காரன்” என்ற பிம்பம் அவர் மனதில் உருவாகிறது. எனவே அவர் ஒட்டி உறவாடுவது, அத்தகைய பொருளாதாரச் சூழ்நிலையில் அமைந்த மக்களுடனேயே. அவர்களும் தங்களது சோகக் கதை, அவல நிலை இதையெல்லாம் பேசிப்பேசி, இவரும் கேட்டுக் கேட்டு, மனம் அவருடைய அந்தப் பிம்பத்தைப் பத்திரப்படுத்திக் கொள்கிறது. ஒருநாள் அவர் வேலைக்குச் செல்லத் தயாராகும் தருணத்தில் அவர் தேர்ந்தெடுத்து விண்ணப்பிப்பது எல்லாம் குறைந்த ஊதியம் அளிக்கும் ஒரு சாதாரண வேலைக்காக மட்டுமே இருக்கும். “நாமெல்லாம் அதற்குதான் லாயக்கு” என்ற மனோபாவம் இயற்கையாய் அவர் மனதில் படர்ந்திருக்கும். அவரது மனது அவரை ஓர் எல்லையை மீறிச் சிந்திக்க இயலாமல் தடுத்துச் சோர்வடைய வைத்துவிடுகிறது.
மனதை எப்படித் தயார் செய்கிறோமோ அதுதானே வாழ்க்கை? எனக்கு எப்பவுமே பணம் பற்றாக்குறை என்று கோபாலின் மனது தயாராகிவிட்டதால் அதுதான் அவரது வாழ்க்கை. அவரது மூளையின் ஒரு மூலையில் ஒரு சின்ன கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் போல் ஒன்று அமர்ந்துகொண்டு, “உனக்குப் பணமே சேராது. நீ வறியவன். இதுதான் உன் தலைவிதி“ என்று சொல்லிக் கொண்டே இருக்கும்.
விளைவு? தப்பித்தவறி ஏதேனும் உபரியாகப் பணம், போனஸ் வடிவத்திலோ அல்லது கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டும்போதோ, “அதெப்படி? நமக்குத்தான் பண ராசி கிடையாதே,” என்று அவரது மனது அவரை ஏகத்துக்கு அதட்டி அந்த உபரிப் பணத்தை வெற்றாய்ச் செலவழிக்க வைத்துவிட்டுத்தான் மறுவேலை பார்க்கும். என்ன செய்தார், ஏது செய்தார் என்று தெரியாது. பர்ஸ் காலி. மனதை ஆற்றாமை தாக்கும்.
இத்தகைய மனோபாவம், மனதினுள் நிகழும் சுய உரையாடல் ஆகியவை எல்லாமாய்ச் சேர்ந்து பணப் பிரச்சனையே அவரது வாழ்க்கையின் முக்கியமான பிரச்சனை என்றாக்கிவிடும்.
தம்மைச் சுய ஆய்வு செய்து கொள்ளும் கோபால், மனதிடம், “நான் ஒழுங்காய்ப் படித்திருந்தால் நல்ல வேலைக்குச் சென்று கைநிறையச் சம்பாதித்து இந்தத் தரித்திரத்திலிருந்து மீண்டிருப்பேன். செல்வச் செழிப்பு எனக்கும் வாய்த்திருக்கும்.”எனப் புலம்பலாம்.
அது தப்பு. ஏன்? படிப்பு மட்டும் தகுதியெனில், ஊரில் உலகத்தில் ஏழை வாத்தியார் என்று எவரும் இருக்கக்கூடாதே? அத்தனை பேரும் கோடீஸ்வரர்களாக அல்லவா இருக்கவேண்டும்? அதேபோல் அத்தனை படிக்காதவர்களும் ஏழை ஓட்டாண்டியாகவல்லவா இருக்க வேண்டும்? ஆனால், கையெழுத்தைச் சரியாக இடத் தெரியாதவர்களிடம் பணம் கொட்டிக் கிடக்கவில்லை? நடைமுறையில் எல்லா ஊரிலும் படிக்காத செல்வந்தர்களும் உண்டு! படித்த ஏழைகளும் உண்டு! எனவே அது தப்பு.
எனில்,
“என் உத்தியோகம் சரியில்லை. அதனால்தான் இப்படி,” என்று வேறு ஓர் எண்ணம் அவருக்கு ஓடலாம். சரியான உத்தியோகம் இல்லை என்பதெல்லாம் சால்ஜாப்பு. குடும்பநிலை காரணமாய் ஆரம்பத்தில் கிடைத்த ஏதாவது ஒரு வேலையில் அமர்ந்தாலும் அதை வாழ்க்கையைத் தொடங்குவதற்கு ஒரு வாய்ப்பாய் மட்டுமே ஆக்கிக்கொண்டு, கழுதையைப் பிடித்தோ, காலைப் பிடித்தோ வேலை மாறி, ஊர் மாறி, நாடு மாறி, தங்களது இலக்கை அடைய நினைப்பவர்கள் அடைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே அதுவும் தப்பு.
”நேரம் போதலை. அதைச் செய்யலாம், இதைச் செய்யலாம் தான். என்ன செய்ய? நேரம் போதலை” என்று கோபால் நினைக்கலாம்.
நேரமாகப்பட்டது எல்லோருக்கும் பொது. கருப்பையிலிருந்து வெளியே வந்து விழுந்தவுடனேயே பிறப்புச் சான்றிதழுடன் ஒவ்வொவருக்கும் ஒருநாளைக்கு 24 மணி நேரம் என்ற இயற்கையின் உத்தரவாதத்தை அளித்து டிஸ்சார்ஜ் செய்துவிடுகிறார்கள். அம்பானிக்கும் 24, குடியரசுத் தலைவருக்கும் 24, கூலிவேலை செய்பவருக்கும் 24. எனவே நேரம் போதலை என்பதும் தப்பு.
”பணவசதி பெருக வேண்டும். ஆசைதான். ஆனால் அதற்காக என்னால் ராப்பகலாய்க் கடினமாய் உழைக்க முடியாது. என் உடம்பில் அதற்கு வலுவில்லை” என்று கோபால் நினைத்தால் அதுவும் தப்பு. ராப்பகலாய்க் கடினமாய் உழைத்து ஏழையாகவே இருக்கும் லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர்! அதேபோல் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் அலுவல் புரிந்து கைநிறையப் பணம் ஈட்டும் மக்களும் இருக்கின்றனர்.
ஒரு பரோட்டாக் கடையில் நாளொன்றுக்கு 500 பரோட்டா இடுபவர், கடினமாய் உழைத்து 750 பரோட்டா இட ஆரம்பித்தால், மிகப்பெரிய பொருளாதார மாற்றம் ஏதும் நிகழ்ந்து அடுத்த மாதம் அவர் காரில் வேலைக்கு வரப்போவதில்லை. கடின உழைப்பு என்பது முன்னேற்றத்திற்கான ஓர் அம்சம்தானே தவிர அதுவே முன்னேற்றம் இல்லை.
“ஒருவேளை நான் மிகவும் வயதில் சின்னவன். அதனால் அப்படி” அல்லது,
“என் பெண்டாட்டிப் பிள்ளைகளுக்குச் செலவழிக்கவே சரியாக இருக்கு,” அல்லது,
“எனக்குன்னு கல்யாணமாகி அழகாகவும் சமர்த்தாகவும் பொண்டாட்டி அமைஞ்சிருந்தா இதையெல்லாம் சரியாகப் பார்த்துக்கொள்வாள்.”
இப்படி சூழ்நிலைக்கேற்ப மனது ஏதாவது ஒரு சப்பைக் காரணத்தைக் கூறலாம்.
ஆனால் உண்மை யாதெனில், நீங்கள் தயாரித்து வைத்திருக்கும் மனது மாற வேண்டும். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சரியான திட்டமிட்ட மாற்றம் உங்களிடம் நிகழவேண்டும். பணம் வாழ்க்கையின் இன்றியமையாத வஸ்துவாகி, மன மகிழ்விற்குத் தொடர்புடையதாய் இருப்பதால், நமக்கு நாமே மனதில் உருவாக்கிக்கொள்ளும் தடைகளை நீக்கிக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதே இங்கு நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
இவை ஒருபுறம் இருக்க, பணம் மட்டுமே மன மகிழ்வன்று. ஏகப்பட்ட பணம், செல்வம், வசதி என்று அனைத்தும் இருந்தும் மன உளைச்சலுடன் வாழ்பவர்கள் பலர்; அடுத்த வேளை உணவு கேள்விக்குறியாய் உள்ள நிலையிலும் மகிழ்வுடன் வாழ்பவர்களும் பலர்.
ஒரு தொழில் அதிபருக்கு அவரது பிஸினஸில் முக்கியப் பிரச்சனை. அவசரமான மீட்டிங்கிற்காகத் தலைநகருக்குச் சென்றிருந்தார். ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்க ஏற்பாடாகி இருந்தது. பிரச்சனையின் மன உளைச்சலாலும் மறுநாள் நடக்கவிருந்த மீட்டிங்கின் சிந்தனையாலும் பலவித குழப்பத்தில் இரவு தூக்கம் வராமல் தம் அறையில் உலாவிக்கொண்டிருந்தவர் சன்னலருகே வந்து நகரை நோட்டமிட கீழே இருந்த ஆட்டோ ஸ்டாண்ட் கண்ணில்பட்டது. அங்கே ஓர் ஆட்டோ ஓட்டுநர் சுகமாய்த் தூங்கிக் கொண்டிருந்தார். தூக்கத்தில் நல்ல கனவு போலிருக்கிறது. அவரது முகமெல்லாம் புன்னகை. பர்க்கப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது தொழில் அதிபருக்கு.
மறுநாள் காலை அங்கிருந்து கிளம்பும்போது அந்த ஸ்டாண்டில் அதே டிரைவர் நின்றுக் கொண்டிருப்பதைப் பார்த்து, அவரை அணுகித் தமது சந்தேகத்தைக் கேட்டார்.
“அதெப்படி, சாலை இரைச்சல், கொசுத் தொல்லை, பண வசதி குறைவான தொழில் என்றிருக்கும்போது ஆனந்தமாய் உன்னால் தூங்க முடிகிறது? கனவில் என்ன நடிகையா? தூங்கும் முகத்தில் சிரிப்பையும் பார்த்தேன்.”
”ஓ அதுவா ஸார்? இந்த மாதிரிப் பெரிய ஹோட்டலில் என் வசதிக்குத் தங்க முடியுமா? கனவில் நான் இந்த ஹோட்டலில் தங்கியிருப்பது போலவும் அதோ போகிறானே அந்தச் சிப்பந்தி எனக்குப் பணிவிடை செய்வது போலவும் அடிக்கடி கனவு வரும். மத்தபடி தினமும் சம்பாதிக்கிற பணத்துல சந்தோஷமா இருக்கேன் ஸார்.”
எல்லாம் மனதில் இருக்கிறது.
இந்நேரம்.காம்-ல் 27 ஆகஸ்டு 2010 அன்று வெளியான கட்டுரை
<–ம. ம. முகப்பு–>