28 – நன்றியும் மகிழ்வும்

by நூருத்தீன்

“எந்நன்றி கொன்றார்க்கும்” எனத் தொடங்கும் திருக்குறள் தெரியுமில்லையா? பள்ளியில் கோனார் நோட்ஸெல்லாம் வைத்துக்கொண்டு

விரிவாய்ப் படித்திருப்பீர்கள். அதன் பொருள் பொத்தாம் பொதுவாய் உங்களுக்குத் தெரிந்திருக்கும். நன்றி மறந்தால் அவனுக்கு ‘உய்வில்லை’ என்று அதட்டியிருப்பார் வள்ளுவர்.

“நன்றி கெட்ட மாந்தரடா, நானறிந்த பாடமடா” என்று தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஒருவர் மிகவும் வருந்தி எழுதிய பாடலையும் கேட்டிருப்பீர்கள்.

‘நன்றி மறத்தல் தகாது’; ‘நன்றியுணர்வு வேண்டும்’ என்றெல்லாம் நாம் அனைவரும் அடிப்படையில் புரிந்து வைத்துள்ளோம். ஆனால் என்ன பிரச்சனையென்றால் இயல்பு வாழ்க்கையில் அது அவ்வளவு வீரியத்துடன் நம்மிடம் வெளிப்படுவதில்லை; அல்லது சுயநலத்தில் மறைந்துபோய் விடுகிறது.

நான் நன்கு அறிந்திருந்த ஊரில் ஒருவர் இருந்தார். அவர் மிகப் பெரிய பணக்காரர் இல்லையென்றாலும் நன்கு வசதி படைத்தவர். நன்றாக உழைத்து முன்னுக்கு வந்தவர். ஆசைக்கும் ஆஸ்திக்குமென்று ஒரே மகன். தம் மகன் விரும்பிக் கேட்பது, கேட்காதது என்றெல்லாம் வாங்கிக் கொடுப்பவர். அதற்காகக் கதைகளில் வரும் அப்பிராணி அப்பா எனவும் நினைத்து விடக்கூடாது. நிறைய நியாய உணர்வு உள்ளவர். அதனால் தம் பாசம் தம் கண்ணை மறைக்கக் கூடாது என்பதில் அவருக்குத் தெளிவு இருந்தது. தம்முடைய அன்பு, செல்லம் இதெல்லாம் தம் மகனைக் கெடுத்துவிடக் கூடாது என்பதிலும் அவருக்குக் கவனம் அதிகம். எதையும் யோசித்தே செய்து பழகியவர்.

ஒரு நாள் மகன் ஏதோ ஒரு பொருள் வாங்கித் தரும்படி கேட்க, அது அவசியமற்றது என்பது அவருக்குத் தெரிந்ததால் நாசூக்காய் மறுத்தார். மகனின் கோரிக்கை அடங்கவில்லை. அதட்டிப் பார்த்தார். மகனுக்கு ‘அடம்’ அதிகமானது. தந்தைக்குச் சகிக்கவில்லை. கோபம் பொத்துக் கொண்டு வந்தது. இழுத்து வைத்து முதுகில் நாலு சாத்து சாத்தத் தோன்றியது. சட்டென்று அவருக்கு அந்த எண்ணம் மாறி வேறு யோசனை தோன்றியது.

“இதோ பார். உனக்கு அரை மணி நேரம் அவகாசம் தருகிறேன். ஒரு பேப்பர், பென்சில் எடுத்துக் கொள். உன் அறைக்குள் செல். நிதானமாய் அமர்ந்து உன்னிடம் ‘உனக்கே உனக்கென்று’ என்னென்ன பொருட்கள் உள்ளன என்பதை எழுதி எடுத்துக் கொண்டுவா. பிறகு பேசுவோம்”என்றார்.

முணுமுணுத்துக் கொண்டு தன் அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டான் மகன். அரை மணி நேரம் கழித்து அவன் அளித்த பேப்பரை வாங்கிப் பார்த்த தந்தை அசந்து விட்டார். தன்னிடம் என்னென்ன இல்லை என்று அந்தப் பட்டியல் ஒரு வால்போல் நீண்டிருந்தது.

‘இப்படியொரு திருப்தியற்ற மகனா?’ என்று கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்துவிட்டார்.

இதைப் படிக்கும் தந்தைகள் பலருக்கு இத்தகைய அனுபவம் நிகழ்ந்திருக்கலாம். ‘நன்றி கொன்ற பிள்ளைகள்’ என்று ஏதாவது ஒரு சூழ்நிலையில் வருத்தம் ஏற்படத்தான் செய்கிறது. ஆனால் நாம் என்ன செய்கிறோம்?

”நான் என் மகனைப் போல் இல்லை; என் பெற்றோரைக் கண்ணுக்குக் கண்ணாய்ப் பார்த்துக்கொண்டேன்,” என்று சொல்லலாம். இங்கு நாம் அறியவிருப்பது பெற்றோர் – பிள்ளை சென்டிமென்ட் கதையில்லை; மனதிற்கும் நன்றியுணர்வுக்கும் இருக்க வேண்டிய தொடர்பு!

நம்மிடம் என்ன உண்டு என்பதைவிட நம்மிடம் என்ன இல்லை என்பதுதான், நாம் அறிந்தோ அறியாமலோ, நம் மனதை என்றும் எப்பொழுதும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. நம்மிடம் இருக்கும் பலவற்றை உணர்ந்து மகிழ்வதை விட்டுவிட்டு இல்லாத ஒன்றிற்காக எப்பொழுதும் கவலை; ஏகப்பட்ட தொல்லை. இதனால் நிம்மதியானது நம்மிடம் வரப்பயந்து கொண்டு எங்கோபோய் ஒளித்துக் கொள்கிறது.

மேற்கொண்டு தொடரும் முன் இங்கு ஒன்றை நன்றாக நினைவில் கொள்ள வேண்டும். அது –

‘இலட்சியக் கனவிற்கும் ஆசைக்கும் உள்ள வித்தியாசம்; குறிக்கோளும் பேராசையும் எவை என்ற தெளிவு.’

நல்லதொரு இலட்சியம் நம் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு மிக அவசியம்; ஆனால் அது வேண்டும், இது வேண்டும் என்று பார்ப்பதற்கெல்லாம் ஆசைப்படுவது தப்பு!

மனமானது எப்படி இயங்குகிறது? நாம் எதை விரும்புகிறோமோ அதை நோக்கி!

நம்மிடம் உள்ள நிறைகளை மறந்துவிட்டுக் குறையுடனேயே வாழ்ந்து வந்தால், மனதில் என்ன எண்ணம் படியும்? “நீ ஒன்றுமற்றவன்; உனக்கு வாழ்க்கையில் எந்த நல்லதும் வாய்க்காது…” இத்யாதி எண்ணங்கள். அனைத்தும் நெகட்டிவ் எண்ணங்கள்.

அத்தகைய எண்ணங்கள் என்ன செய்யும்?

உங்கள் மனதைக் குலைத்து, உங்களை அழுமூஞ்சியாக்கி, நீங்களே “நானொரு தண்டம்“ என்று எண்ணுமளவிற்கு இட்டு்ச் சென்று விட்டுவிடும்.

எனவே, உங்களிடம் என்ன உள்ளது என்பதை உள்ளார்ந்து உணர்ந்து, மேடைப் பேச்சாளர் மறக்காமல் சொல்வது போல், ‘அதற்காக முதற்கண்’ நன்றியுணர்வு கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.

காலுக்கு ரெண்டு ஜோடி செருப்பு, மூன்று ஜோடி ஷு மட்டுமே இருக்கிறது; நேற்றுப் புதிதாய் வாங்கிய டிரஸ்ஸிற்கு மேட்சாய்க் காலணி இல்லை என்று வருத்தமான வருத்தத்தில் இருக்கும் ஒருவர் கால் ஊனமுற்ற அல்லது காலே இல்லாத ஒருவரைக் கண்டால் என்ன சொல்வார்?

ஒருவருக்கு ஒரு ஜோடி செருப்பே கூட இல்லாது போகட்டும். அதற்காகச் செருப்பில்லையே என்று அவர் வருந்திக் கிடந்தால் மன மகிழ்வைத் தொலைத்துவிட்டு, மனம் ஊனமாகிச் செயலற்றுப் போய்விட நேரிடும். அதையே அவர் ‘எனக்கென்ன குறை? ஓடியாட இரண்டு கால்கள் இருக்கின்றன!’ என்று உரத்துச் சொல்லி எழுந்து நின்றால் போதும்; பூமியின் நிறமே மாறிக் கண்ணெல்லாம் பிரகாசம் ஒளிரும்.

“எதுவொன்றும் எனக்கு நடப்பதில்லை; எப்பப் பாரு பணக் கஷ்டம்; என்னைக் கண்டால் யாருக்குமே பிடிப்பதில்லை; எனக்கென்று எந்த வேலையும் சரியாய் அமைவதில்லை; வாழ்க்கையை ஓட்டுவது ஒரு பெரிய பிரச்சனையாகவே இருக்கிறது,” என்றெல்லாம் ஒருவர் புலம்பலும் மூக்குச் சிந்தலுமாக இருந்தால் அவருக்கு என்ன அமையும் என்று நினைக்கிறீர்கள்?

இத்தொடரைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர் அனைவரும் இந்தக் கேள்விக்குத் தவறான பதில் அளிக்கவே முடியாது.

அந்த மனிதரின் உள்மனம் ‘நீ ரொம்ப பாவம்!” என்று அதையெல்லாம் அப்படியே நம்பி அவர் தன்னைத் தானே ‘ஒரு தண்டம்’ என்று உறுதிப்படுத்திக் கொண்டால் அவருக்கு வாய்ப்புகள் கைநழுவும்; நட்புறவு அமையாது; கையில் வரும் பணம் தங்காது! அவர் மன மகிழ்வற்று வாழ அவர் உள்மனமே மாய்ந்து மாய்ந்து உழைக்கும். அவர் நம்பிக்கையின்படியே அவர் வாழ்க்கை அமைய சகல முயற்சிகளும் செய்து தந்துவிடும். ஆகவே மேலும் அழுகை; மேலும் மூக்கு சிந்தல்!

உலகில் இறைவன் அமைத்துத் தந்த விதி பொதுவானது; மிகவும் நீதியானது.

ஒரு மனிதன் தான் பெற்றிருப்பதை அல்லது அடைந்து விட்டதை நினைத்து நன்றியோடு இல்லாமல் தன்னிடம் இல்லாததைப் பற்றியே நினைத்துக்கொன்டிருந்தால் அவனுக்கு இல்லாமையே அதிகரிக்கும்.

நல்ல நட்புறவு கொண்டுள்ள மக்களை உற்றுக் கவனித்துப் பாருங்கள்; அவர்கள் மக்களிடம் உண்மையான நட்பு கொண்டவர்களாகவும் நன்றியுணர்வு கொண்டவர்களாகவுமே இருப்பர். சிடுமூஞ்சிகள் எத்தனை பேரிடம் நல்ல நண்பர்களைப் பார்த்திருக்கிறீர்கள்?

அதைப்போல் உற்சாகமான மனிதர் ஒருவரைப் பாருங்கள். அவர் ஒன்றும் உலக மகாச் செல்வந்தராகவோ, அனைத்துவித வசதிகளும் அடையப் பெற்றவராகவோ இருக்க மாட்டார். தம்மிடம் உள்ளதைக் கொண்டு திருப்தியுற்றவராக மன மகிழ்வுடன் வலம் வந்து கொண்டிருப்பார்.

உலகிலுள்ள அனைத்து வியாபார நிறுவனங்களுக்கும் அதன் உரிமையாளர்களுக்கும் ஒரு பொதுத் தன்மை உண்டு. நாடு, இனம், மொழி என்ற எந்தப் பாகுபாட்டிலும் சிக்காத ஒரே குறிக்கோள். மக்கள் அனைவரும் ஒரு நிலையிலேயே இருக்க வேண்டும்!

“மக்கள் அனைவரும் தம்மிடம் இருப்பவற்றை மறந்து, புதுப்புதுப் பொருட்களின்மீது மோகம் கொண்டலைய வேண்டும்!”

நமது கண்களையும் சிந்தையையும் வந்து தாக்கும் ஒவ்வொரு விளம்பரமும் நம்மிடம் சொல்ல வரும் செய்தி என்ன? ‘இதோ பார் புது கார்’, ‘இதோபார் புது டிஸைன் தோசைக் கல்’, ‘இதோபார் புது ரக டாய்லெட் பேப்பர்’ என்று நம்மைத் தொடர்ந்து ஆசைப்பட வைக்க வேண்டும். ஏதோ அந்தப் பொருள் இல்லாவிட்டால் நமது வாழ்க்கையே சூன்யமாகிவிட்டதைப் போன்ற ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஏக்கம் ஒன்று மனதில் உருவாகி, ஆசையாக வலுப்பெற்று, மனமானது ‘வேண்டும், வேண்டும்’ என்று அலறி அது நாம் அறியாமலேயே நமது இதயத் துடிப்பாக மாறிவிடுகிறது.

விளைவு?

நம்மிடம் உள்ளவற்றையெல்லாம் மனமானது மறந்துவிட்டு, மகிழ்ச்சியைத் தொலைத்துவிட்டு, ஒரு காமாந்தகனைப் போல் அலைய ஆரம்பித்து விடுகிறது.

பத்து விஷயங்கள் உருப்படியாய் உங்களிடம் இருந்தாலும் உருப்படாமல் போன ஏதாவது ஒரு விஷயத்தையே உங்கள் மனம் நினைத்துக்கொண்டிருக்கிறது.

சுண்டு விரல் ஓரத்தில் நகம் பெயர்ந்து இலேசாய் இரத்தம் கசிந்தால், மனமானது அதையே நினைத்து மாய்ந்து போகிறதே தவிர, எனது இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது, எனது கை கால்கள் நன்றாக இயங்குகின்றன, என் தலையில் வலியில்லை, என் நுரையீரல், கிட்னி, குடல் எல்லாம் ஆரோக்கியமாய் உள்ளன என்று மகிழ மறந்துவிடுகிறதே!

ஒரு சிந்தனையாளர் கூறினாராம் – ‘நீங்கள் வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கிடைக்காமல் போன ஒன்றை நினைத்து மன மகிழ்வைத் தொலைப்பதைவிட, இது மட்டும் எனக்கு நடக்கவே கூடாது என்று நீங்கள் நினைத்து அப்படி கிடைக்காமல் போனதை நினைத்து மகிழ்வடையக் கற்றுக் கொள்ளுங்கள்.’

புரியவில்லையோ? நாம் யாராவது புற்று, இதய நோய், விபத்து இதெல்லாம் வேண்டும் என்று ஆசைப்படுவோமா? வேண்டாம் எனும் அவையெல்லாம் நமக்குக் கிடைக்காததை நினைத்து மகிழுங்கள் என்கிறார் அவர்.

எதுவொன்றிற்கும் பாஸிட்டிவ்வான மறுபக்கம் உண்டு. நம்மிடம் இருப்பதைக் கொடுத்திருப்பதற்காக இறைவனுக்கு நன்றியுரைத்து மனம் மகிழுங்கள்.

மனம் மகிழ, தொடருவோம்…

இந்நேரம்.காம்-ல் 24 டிசம்பர் 2010 அன்று வெளியான கட்டுரை

<–முந்தையது–> <–அடுத்தது–>

<–ம. ம. முகப்பு–>

Related Articles

Leave a Comment