தோழர்கள் – 21 உக்பா பின் ஆமிர் (ரலி)

by நூருத்தீன்
21. உக்பா பின் ஆமிர் (عُقْبَةَ بْنِ عَامِرٍ الجهني)

ஹிஜ்ரி 13ஆம் ஆண்டு. ரோமர்கள் ஆண்டு கொண்டிருந்த சிரியா நாட்டின் முக்கிய நகரமான டமாஸ்கஸை இஸ்லாமியப் படைகள் முற்றுகையிட்டிருந்தன. படையின் தலைவர் அபூஉபைதா இப்னுல்-ஜர்ரா. அப்படையிலுள்ள பிரிவுகளின் தலைவர்களாக இடம்பெற்றிருந்த முக்கியமான இரு தோழர்கள் காலித் பின் வலீத், அம்ரு இப்னுல்-ஆஸ் ரலியல்லாஹு அன்ஹுமா. ஏறக்குறைய எழுபது நாட்கள் முற்றுகை நீடித்தது. இறுதியில் வெற்றிகரமாய் அந்நகரம் முஸ்லிம்கள் வசமானது. ரோமப் பேரரசின் ஆதிக்கத்தைப் பெயர்த்து நகர்த்தி, இஸ்லாமியப் படையெடுப்பை அடுத்தக் கட்டத்திற்கு இட்டுச் சென்ற போர் அது. இஸ்லாமியப் படையெடுப்பில் ஒரு மைல் கல்.

மதீனாவிலுள்ள கலீஃபா உமர் இப்னுல் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹுவுக்கு இந்த முக்கியச் செய்தியை அறிவிக்க யாரை அனுப்பி வைக்கலாம் என்று தனது படையை நோட்டமிட்ட அபூஉபைதா, அந்தத் தோழரை அழைத்தார். அப்போரில் உற்சாகமாய்ப் பங்கெடுத்துக் கொண்ட வீரர் அவர். “மதீனா சென்று நம் கலீஃபாவிடம் டமாஸ்கஸ் நகரம் நமது வசமான நற்செய்தி பகருங்கள்”

மதீனாவிற்கு வடக்கே அமைந்துள்ள டமாஸ்கஸ் நகரம் ஆயிரத்து ஐம்பத்தைந்து கிலோமீட்டர் தூரம். பேருவைகயுடன் கிளம்பினார் அத்தோழர். போரில் போராடிக் களைத்த அலுப்பெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டாய் இருக்கவில்லை. பள்ளியில் ஏதாவது ஒரு போட்டியில் மாணவன் ஒருவன் முதல் பரிசு பெற்றுவிட்டால் கோப்பையைத் தூக்கிக் கொண்டு பெருமையும் மகிழ்வுமாய் மூச்சிரைக்க வீட்டிற்கு ஓடோடி வருவானே அதைப்போல் அந்த நற்செய்தியைச் சுமந்து கொண்டு கிளம்பிய அவர் நிற்கவில்லை, தாமதிக்கவில்லை, எட்டு நாள், இரவும் பகலுமாய் விடாமல் பயணித்து மதீனா வந்து சேர்ந்து கலீஃபாவின் மடியில் அந்தச் செய்தியைக் கொட்டிவிட்டுத்தான் நின்றார்; மூச்சு வாங்கினார்.

oOo

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தன் தோழர் அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹுவுடன் மதீனா புலம்பெயர்ந்ததையும் அவர்களை ஸுராக்கா இப்னு மாலிக் துரத்திக் கொண்டு வந்ததையும் படித்துக் கொண்டே பாரசீகத்திற்குச் சென்று அப்படியே குஸ்ரோ, ஹுர்முஸான், முஜ்ஸா … என்று வெகு தூரம் சென்று விட்டோம்.

இப்போதைக்கு மீண்டும் மதீனா.

அப்படியே இந்தப் பக்கம் ஸிரியா, எகிப்து என்று சற்று எட்டிப்பார்த்துக் கொள்வோம்.

யத்ரிபில் இடையர் ஒருவர் இருந்தார். அவருக்குச் சொத்து என்று சில ஆடுகள் இருந்தன. ஆடுகள் மட்டுமே இருந்தன. அதற்கு இலை, தழை, தீவனம் வாங்கிப் போடுமளவிற்குக்கூட அவரிடம் வசதியிருக்கவில்லை. அறுத்தால் எலும்பும் தோலும் மட்டுமே தேறும் என்ற நிலையிலிருந்தன ஆடுகள். அதை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றும் நாளாகிவிட்டிருந்தது. இப்படியே இருந்தால் ஆடுகள் இறந்துவிடும், முதலுக்கே மோசமாகிவிடும் என்று தோன்றியது அவருக்கு.

அக்காலத்தில் கால்நடைகள் மேய வசதியான மேய்ச்சல் நிலம் வெகு தாராளமாய் யத்ரிப் நகருக்கு வெளியே இருந்தது. ஆளரவமற்ற நிலம். மக்கள் கால்நடைகளை அங்கு ஓட்டிச்சென்று மேயவிடுவது வழக்கம். அங்குத் தனது கால்நடைகளை ஓட்டிக் கொண்டு கிளம்பினார் அவர். அப்பொழுது யத்ரிபில் நிகழவிருந்த வானிலை மாற்றம் அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தனது ஆடுகளுடனும் கவலையுடனும் அந்தப் பகுதிக்குச் சென்றுவிட்டார் அவர்.

இங்கு யத்ரிபோ மதீனாவாக மாறுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தது.

முஹம்மது நபி மக்காவிலிருந்து புறப்பட்டுவிட்டார்; அவர் எந்த நொடியும் யத்ரிப் வந்துவிடுவார் என்று தகவல் வந்தடைய, அந்நகரிலுள்ள வீடுகளிலெல்லாம் பரபரப்பு. மக்கள் முகங்களில் பேராவல். வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தனர் மக்கள். “குபாவுக்கு வந்துவிட்டார்; இதோ வந்துவிடுவார்” என்று தகவல்கள் உறுதியாகிவிட அன்றைய தினம் நகருக்கு வெளியே தெருக்களிலும் வீட்டின் கூரைகளிலும் மக்கள் கூட்டம்.

இஸ்லாமிய வரலாற்றின் சூறாவளித் திருப்புமுனை ஏற்படுத்தப்போகும் அந்த நொடி நிகழ்வுற்றது. அடக்கமும் அமைதியும் எளிமையுமாக நபியவர்களும் அபூபக்ரும் வந்தடைய, “லா இலாஹா இல்லல்லாஹ்! அல்லாஹு அக்பர்!” என்று மகிழ்ச்சிப் பேரொலி ஒலித்தது மதீனத்து வீதிகளில்.

சிறுமிகள் கஞ்சிரா இசைக்கருவிகளைச் சுமந்து கொண்டு ஓடி வந்தார்கள். கண்களிலெல்லாம் ஒளி மின்னல். கைகள் கஞசிரா இசைக்க, விழிகள் ஆனந்த நீர் சுரக்க, உற்சாகமாய் வெளியானது ஒரு பாடல்.

طلع البدر علينا
من ثنيات الوداع
وجب الشكر علينا
علينا ما دعى لله داع
أيها المبعوث فينا جئت
جئت بالأمر المطاع
جئت شرفت المدينة
مرحباً يا خير داع

பாலைமணலில் பாதம் பதித்து
நடந்து வந்தது, முழுநிலா
ஃதனியாத்தில் விதாவைக்
கடந்து வந்தது – எங்களுக்காக!

கடப்பாடு எங்கள்மீது
கடமையானது
அல்லாஹ்வின் பாதைக்கு
எங்களை அழைத்ததனால்!

அருளை அள்ளிக்
கொட்டுவதற்கென்றே
அணுகி வந்தவரே,
எங்களிடம் அனுப்பப் பட்டவரே,

கண்ணியம் பெற்றது மதீனா – உங்கள்
கால்தடம் பதியப் பெற்றதனால்.
நனிசிறந்த அழைப்பாளரே,
நல்வரவு உங்களுக்கு!

மதிப்பும் மரியாதையும் உற்சாகமுமாய் மக்கள் கூட்டம் நபியவர்களைச் சூழ்ந்து கொண்டது. மெதுமெதுவாய் அந்த நம்பிக்கையாளர்களின் கூட்டத்தினூடே அவர்கள் நடக்க, மக்கள் ஆனந்தக் கண்ணீருடன் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். யதுரிப் நபி புகுந்த பட்டணமாக – மதீனாவாக மாறியது.

இந்தப் பாடல் ஒலியோ, ஆனந்த இரைச்சலோ, களேபரமோ கேட்காத தொலைவில், பாலைவனப் பிரதேசத்திற்கு அருகில் தனது ஆடுகள் மேய்வதைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார் அவர். அதைத் தவிர அப்பொழுது அவருக்கு வேறு ஏதும் ஜோலி இல்லை. வீடு திரும்ப வேண்டும், மனைவி மக்கள் காத்திருப்பார்கள் என்ற அவசரம் இல்லை. தம் வாழ்வு பெரியதொரு மாற்றத்திற்கு உட்படப் போவதையோ, அதற்கான முன்நிகழ்வு அக்கணம் மதீனாவில் நடைபெற்றுக் கொண்டிருப்பதையோ அறியாமல் அமைதியாய்க் கழிந்து கொண்டிருந்தது அவருடைய பொழுது.

மெதுவே, மெதுமெதுவே அவர் இருந்த பகுதிக்கு மதீனாவின் செய்தி வந்தடைந்தது. “வந்துவிட்டாரா? உண்மையாகவா?” என்று குதித்து எழுந்தவர், அவரது ஒரே சொத்து என்று பார்த்தோமே சில ஆடுகள், அவற்றை அப்படியே விட்டுவிட்டு மதீனாவிற்கு ஓட்டமும் நடையுமாய் விரைந்தார். மதீனா வந்தடைந்து, “எங்கிருக்கிறார்கள; அவர்கள்?” என்று நேரே நபியவர்களைச் சென்று சந்தித்தார்.

“என்னுடைய சத்தியப் பிரமாணத்தை ஏற்றுக் கொள்வீர்களா?”

அவரை உற்று நோக்கிய முஹம்மது நபி, கேட்டார்கள். “தாங்கள் யார்?”

தன் பெயரைக் கூறினார் அவர்.

“என்ன விதமான பிரமாணம் செய்ய விரும்புகிறீர்? பதுஉ-க்கள் செய்யக் கூடிய பிரமாணம் போன்றா, முஹாஜிர்கள் செய்யக் கூடியது போன்றா?” பதுஉக்கள் அளிக்கும் பிரமாணம், வெறும் பிரமாணம் மட்டுமே. முஹாஜிர்கள் அளித்தது, “இதோ அனைத்தும்,” என்று கல்லில் செதுக்கிய சிற்பம்.

“நான் முஹாஜிர்கள் அளித்ததைப் போன்ற பிரமாணம் அளிக்கவே விரும்புகிறேன்” என்று தெரிவித்து அப்படியே செய்து தந்தார். பிறகு அன்றைய இரவை மதீனாவில் கழித்துவிட்டு மறுநாள் காலைதான் தாம் அப்படியே விட்டுவிட்டு வந்த தமது ஆட்டு மந்தைக்குத் திரும்பினார் அவர்.

உக்பா இப்னு ஆமிர் அல்-ஜுஹனீ ரலியல்லாஹு அன்ஹு.

oOo

உக்பா போல் அவ்விடத்தில் பன்னிரண்டு இடையர்கள் இருந்தார்கள். மதீனாவைவிட்டுத் தொலைவில் இருந்த அந்த இடம்தான் அவர்களுக்குக் கால்நடைகளை மேய்க்க வசதிப்பட்டது. தினமும் ஊருக்குள் வந்து செல்வது இயலாதாகையால் அங்கேயே தங்கிக் கொண்டார்கள் அவர்கள் அனைவரும். இப்பொழுது அவர்கள் அனைவரும் இஸ்லாத்தை ஏற்று முஸ்லிம்களாக மாறியிருந்தார்கள்.

“அண்ணல் நபி வந்தார், ஏகத்துவம் சொன்னார், சரி என்று தோன்றியது ஏற்றுக்கொண்டோம், வா சென்று பிழைப்பைப் பார்க்கலாம்” என்று இருக்க முடியவில்லை அவர்களால். “மக்காவிலிருந்து கிளம்பி இதோ நமது நகரை வந்தடைந்து நமக்கே நமக்காக நம்மிடையே அமர்ந்திருக்கிறார் அந்த மாமனிதர். விண்ணைத் தாண்டி அவரிடம் வந்து இறங்குகிறது இறைச் செய்தி. நாமோ இங்கு ‘தேமே’ என்று விண்ணைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறோம். இப்படி நமது பிழைப்பே கதி என்று கிடந்தால் சரிப்பட்டு வராது. அந்த இறைத் தூதரிடம் சென்று நெருக்கமாய் அமர்ந்து கொள்ள வேண்டும். இறை வசனத்தையும் மார்க்கத்தையும் அப்படியே புத்தம் புதுசாய் அவரிடமிருந்து கிரகித்துக் கொள்ள வேண்டும், அதுதான் சரி, அதுதான் உருப்படுவதற்கான வழி” என்று அவர்கள் அனைவருக்கும் தோன்றியது.

ஆனால் கால்நடைகள்? அவற்றை என்ன செய்வது? கூடி அமர்ந்து யோசித்தார்கள். இறுதியில் உக்பாவிற்கு ஓர் உபாயம் தோன்றியது, தெரிவித்தார். “ஒவ்வொரு நாளும் நம்மில் ஒருவர் நகருக்குச் சென்று நபியவர்களிடம் அமர்ந்து பேசிப் பயின்று வர வேண்டும். அவரது கால்நடைகளை மற்றவர்கள் பார்த்துக் கொள்வர்கள். அடுத்து நாள் மற்றொருவர். இப்படி ஆளுக்கு ஒருநாள். நபியவர்களிடம் அன்றைய தினம் சென்று வந்தவர், தாம் பயின்று வந்ததை மற்றவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும்.”

அனைவருக்கும் அது பிடித்துப் போனது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாள் சென்றுவர உக்பாவிற்கு அவரது முறை வரும்போது மட்டும் தாம் செல்லாமல் அடுத்தவரை அனுப்பிவிடுவார். யோசனையை முன்மொழிந்தது என்னவோ அவர்தான். ஆனால் அவருக்குத் தமது கால்நடைகளை விட்டுவிட்டுச் செல்வதில் ஏகத் தயக்கம் பாக்கியிருந்த்து. அவைதான் அவருக்கு எல்லாமாய் இருக்க அவற்றை எப்படி மற்றவர்கள் பொறுப்பில் விட்டுச் செல்வது? தம் நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாள் சென்றுவர, அவர்களது ஆடுகளைப் பத்திரமாய்ப் பார்த்துக் கொண்டார் உக்பா. அவர்கள் திரும்பிவந்து தாங்கள் நபியவர்களிடம் கண்டதையும் கற்றதையும் விவரிக்க விவரிக்க அவற்றைத் தானும் கவனமாய்க் கேட்டுக் கொண்டார்; கற்றுக் கொண்டார்.

இப்படியே சில நாள்கள் கழிந்தன.

ஒருநாள் பொழுது விடிய, அன்றைய தினம் உக்பாவின் மனதிற்குள் ஏகப்பட்ட கேள்விகள். “இதென்ன செய்கிறாய் உக்பா? என்ன ஏற்பாடு இது? உன் நண்பர்கள் எல்லாம் முறைபோட்டு நபியவர்களிடம் சென்று வர, நீ மட்டும் உனது கால்நடைகளே உசத்தி என்று இங்கு அமர்ந்திருக்கிறாயே இது முட்டாள்தனமில்லையா? ஒரு சில கால்நடைகள் உனக்கென்ன பெரும் நன்மையை அளித்துவிடப் போகின்றன? அல்லாஹ்வின் திருத்தூதரிடம் நீ அண்மியிருக்கவிடாமல் அவை உன்னைத் தடுப்பதா? அவர்களிடமிருந்து நேரடியாய் நீ ஏதொன்றையும் கற்கவிடாமல் அவை உன்னைத் தடுப்பதால் எத்தகைய நல்வாய்ப்பையெல்லாம் நீ இழக்கிறாய் என்பதை யோசி”

நெற்றியைத் தட்டித் தட்டி யோசித்துக் கொண்டிருந்தவர், சடாரென எழுந்தார். கால்நடைகளையெல்லாம் அப்படியே விட்டுவிட்டு, அனைத்தையும் உதறிவிட்டு, அப்படியே கிளம்பி மதீனாவிலுள்ள நபியவர்களிடம் ஓடினார். ரபீஆ பின் கஅப் வரலாற்றில் படித்தோமே “திண்ணை”, நினைவிருக்கிறதா? அங்குச் சென்று உட்கார்ந்து கொண்டார் உக்பா. “இனி இதுதான் எனக்கு வீடு, வாசல், கல்விச்சாலை எல்லாம்” என்று நபியவர்களுக்கு அருகே அவர் தன் ஜாகையை அமைத்துக் கொள்ள, அவரது வாழ்க்கையின் புதிய அத்தியாயம் அங்குத் தொடங்கியது.

அந்தத் திண்ணைத் தோழர்களெல்லாம் பிற முஸ்லிம்களின் விருந்தினர்கள். எவ்வித வருமானமும் இல்லாதவர்கள். எனவே அவர்களுடன் நபியவர்களும் இதர தோழர்களும் உணவு பகிர்ந்து கொண்டார்கள். எந்நேரமும் நபியவர்களின் அண்மை, அந்த மாநபியின் அன்பு, அக்கறை, இவையெல்லாம் திண்ணைத் தோழர்கள் பெற்ற நற்பேறு. குர்ஆனும் அதன் போதனையும் நேரடியாய் அவர்களுக்குக் கிடைக்க வாய்த்தது. நபியவர்களின் செயற்பாடுகளைக் கண்டு, களித்து, பிரமித்து என்று அனைத்தையும் உள்வாங்கி தங்களது வாழ்வை புடம்போட்டுக் கொண்டார்கள் திண்ணைத் தோழர்கள்.

பிற்காலத்தில் திண்ணை அனுபவங்களின் நிகழ்வொன்றை உக்பா பகிர்ந்து கொண்டார். ஒருநாள் நபியவர்கள் திண்ணைத் தோழர்களிடம் வந்தார்கள். “ஒவ்வொரு நாளும் நகர்வெளிக்குச் சென்று அழகிய இரு கருப்பு ஒட்டகங்கள் பெற்று வரவேண்டுமென்றால் உங்களில் யார் அதை விரும்புவீர்கள்?”

மக்களுக்குத் தெரிவிக்க விரும்பும் செய்தியை இவ்விதம் கேள்விகள் வாயிலாக அறிவுறுத்துவதும் நபியவர்களின் வழமையாக இருந்தது. பளிச்சென்று மனதில் பதியுமல்லவா? கருப்பு ஒட்டகங்கள் என்பது அரேபியர்களுக்கு மிகப் பெரும் பரிசுப் பொருள். இரண்டு சுருக்குப்பை நிறைய தங்கக் காசுகள் என்றால் நமக்கெல்லாம் புரியும். ஊருக்குள் சென்று இனாமாய் இதைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றால் யாருக்குக் கசக்கும்?

“எங்கள் அனைவருக்கும் அதில் விருப்பமுண்டு அல்லாஹ்வின் தூதரே,” என்றார்கள் அனைவரும்.

“நீங்கள் ஒவ்வொருவரும் பள்ளிவாசலுக்குச் சென்று குர்ஆனின் இரண்டு வசனங்களைக் கற்றுக் கொண்டால் அவை அத்தகைய இரண்டு ஒட்டகங்களைவிட மேலானது. மூன்று வசனங்கள் கற்றுக் கொண்டால் அவை மூன்று ஒட்டகங்களைவிட மேல். நான்கு வசனங்கள் நாலு ஒட்டகங்களைவிட…”

உலக வாழ்க்கையிலும் செல்வத்திலும் மக்களுக்கு உள்ள மோகத்தைக் கல்வி தாகத்திற்கும் இறை உவப்பிற்கும் திசை திருப்பியது அந்த அறிவுறை. உண்மையின் நிதர்சனம் எதில் அடங்கியுள்ளது என்பது தெளிவாகப் புரிய வைக்கப்பட்டது. இந்தக் குறிப்பிட்ட அறிவுரையும் அதன் மேன்மையும் அன்று அவர்களுக்குத் தேவைப்பட்டதைவிட இன்று நமக்கு எவ்வளவு முக்கியம்?.

வேறு சில சந்தர்ப்பங்களில் திண்ணைத் தோழர்கள் தாங்களாகவே நபியவர்களிடம் கேள்வி கேட்டு “ஞானம் தாருங்களேன்” என்று பருகுவதும் நடக்கும். உக்பா ஒருநாள் நபியவர்களிடம் கேட்டார், “விமோசனம் என்றால் என்ன?”

சுருக்கமாய், தெளிவாய் வந்தது பதில். “நாவைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களது வீட்டை விருந்தினர்களுக்கு விசாலமாக்குங்கள். தவறிழைப்பதை வெறுத்து ஒதுக்குங்கள்.”

இவை மூன்றும் சிறிய ஆனால் எவ்வளவு மேன்மையான செயல்கள்? விமோசனமடைவது ஒருபுறமிருக்கட்டும். ஒரு சமூகத்தில் எத்தகைய மாற்றங்களையெல்லாம் இவை ஏற்படுத்தும்? அதையெல்லாம் எழுத்துக்கு எழுத்துப் புரிந்து கொண்டு வாழ்ந்தார்கள் – மாறியது அவர்களது சமூகம்.

இப்படியான அற்புத வாழ்க்கையைச் சுவைக்க ஆரம்பித்த உக்பாவிற்கு தமக்கிருந்த ஒரே வாழ்வாதாரமான தனது கால்நடைகளை இழந்துவிட்டு ஓடிவந்ததோ, அதெல்லாம் ஒரு தியாகம் என்பதாகக்கூடவோ தோன்றவில்லை; பின்னர் பன்மடங்கு உயர்வான ஒருநிலைக்குத் தாம் இறைவனால் உயர்த்தி வைக்கப்படுவோம் என்பதை யூகிக்கவும் அவருக்கு நேரமிருக்கவில்லை. அதற்கான திட்டங்களையெல்லாம் ஏற்படுத்திக் கொண்டா திண்ணைக்கு வந்தார்? அப்பொழுது அவரது சிந்தையில் இருந்ததெல்லாம் கலப்படமற்ற ஒரே முடிவு: இஸ்லாத்தை இறைத் தூதரிடமிருந்து இறைவனுக்காகக் கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வளவே! அந்த எண்ணமும் செயல்களும் வரலாற்றில் அவர் பங்கை நிர்ணயித்தது.

தீனில் மூழ்கிப் போனவர் அடுத்த சில ஆண்டுகளில் தோழர்கள் மத்தியில் மிகச் சிறந்த மார்க்க அறிஞராக உருமாற ஆரம்பித்தார். குர்ஆனை அதன் ஊற்றிலிருந்து நேரடியாய்ப் பருக ஆரம்பித்தவர் வெகுவிரைவில் மிகச் சிறந்த குர்ஆன் ஓதுவாராக – காரீ – ஆகிப்போனார்.

நபியவர்களுடன் நிழலாய்த் தொடர ஆரம்பித்தார் உக்பா. எங்கெல்லாம் அவர்கள் செல்கிறார்களோ இவரும் கூடவே உடன் செல்வது என்பது வாடிக்கையாகிப் போனது. கோவேறு கழுதையில் முஹம்மது நபி பயணித்தால், அதன் கடிவாள வாரைப் பிடித்து இழுத்துக் கொண்டு அவர்கள் சொல்லும் இடத்திற்கு இட்டுச் செல்வது அவருக்கு உவப்பை அளிக்கும் பணி. அவ்வப்போது நபியவர்கள் உக்பாவைத் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொள்வார்கள். அடிக்கடி அது உக்பாவிற்கு அமைந்தது. எந்தளவென்றால் “அல்லாஹ்வின் தூதருடன் பயணிப்பவர்” என்று மக்கள் அவரை பட்டப்பெயர் அளித்துவிடும் அளவிற்கு நிகழ்ந்தது. ஒருகணம் கண்மூடி சிந்தித்துப் பாருங்கள், அல்லாஹ்வின் தூதர், உத்தம நபி, ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அவர்களுடன் ஒட்டி உரசிப் பயணிப்பது எத்தகைய பாக்கியம், எத்தகைய நற்பேறு? சிலிர்க்கவில்லை?

அத்தகைய பயணங்களில் மற்றொன்றும் சில சமயங்களில் நடைபெறும். நபியவர்கள் கீழிறங்கிக் கொண்டு உக்பாவை மட்டும் அமர்த்தி அழைத்துச் செல்வார்கள். தலைவன்-தொண்டன், எசமானன்-அடிமை, குரு-சீடன், போன்ற மனோபாவங்களின் சுவடுகூட இருந்ததில்லை நபியவர்களிடம் – ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அதனால்தான் அவர்களுடன் இருந்தவர்களெல்லாம் சீடர்கள் அல்லர்; தோழர்கள் – ரலியல்லாஹு அன்ஹும்.

ஒருமுறை நபியவர்கள் கோவேறு கழுதையில் பயணிக்க, அவர்களை மதீனாவின் தோப்புகளினூடே உக்பா அழைத்துச் சென்று கொண்டிருந்தார். “உக்பா, நீர் இதில் அமர்ந்து வர விரும்புகிறீரா?” என்று கேட்டார்கள் முஹம்மது நபி.

‘நபியவர்கள் நடந்து வர நாம் வாகனத்தில் அமர்ந்து வருவதா?’ அது எவ்வளவு சங்கடமும் கூச்சமும் அளிக்கும் செயல். மறுப்புச் சொல்ல வாயெடுத்த உக்பா, உடனே பயந்தார். இறைத் தூதரின் கேள்விக்கு மறுத்துப் பதிலளிப்பது அவர்களுக்குக் கீழ்படியாத பணிவற்றச் செயலாய் அமைந்து விடுமோ என்ற பயம்.

அதனால், “அப்படியே ஆகட்டும் அல்லாஹ்வின் தூதரே” என்று மட்டும் பதில் வந்தது.

இப்படியெல்லாம் தூதரின் ஒரு சிறு சொல்லுக்கும் மறுத்துப் பேசாத உத்தமர்களாய் உருவானதால்தான் அந்த உள்ளங்கள் தங்களது உயிர்களை உள்ளங்கையில் ஏந்தி அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் அப்படியே அளித்து விட்டன. நமக்கெல்லாம் பயனற்ற வியாக்கியாணத்திற்கே பொழுதுகள் போதவில்லையே!

நபியவர்கள் கீழிறங்கிக் கொண்டு உக்பா ஏறிக் கொள்ள, நபியவர்கள் உடன் நடக்க தொடர்ந்தது பயணம். சிறிது நேரத்திற்குப்பின் பின் உக்பா இறங்கிக் கொள்ள நபியவர்கள் ஏறிக் கொண்டார்கள். மீண்டும் தொடர்ந்தது பயணம். அப்பொழுது நபியவர்கள், “உக்பா நான் உமக்கு குர்ஆனின் இரண்டு சூராக்களைக் (அத்தியாயங்கள்) கற்றுத் தருகிறேன். அதற்கு நிகரான ஒன்றை இதற்குமுன் நீர் அறிந்திருக்க முடியாது.”

“சொல்லித்தாருங்கள் அல்லாஹ்வின் தூதரே!”

குர்ஆனின் இறுதி இரண்டு சூராக்களான அல்-ஃபலக், அந்-நாஸ் இரண்டையும் அவருக்கு அறிவித்தார்கள் நபியவர்கள். கேட்டுக்கொண்டார் உக்பா. அடுத்து, தொழுகை நேரம் நெருங்கியதும் நபியவர்கள் அவருக்கு முன்னின்று தொழுகை நிகழ்த்தி அதிலும் இந்த இரண்டு சூராக்களையே ஓதினார்கள். தொழுகையெல்லாம் முடிந்த பிறகு, “இவற்றை தூங்கும் முன்னரும் பின்னர் எழுந்ததும் தவறாமல் ஓதி வரவும்,” என்று மேலும் அறிவுறுத்த, அன்றிலிருந்து காலையும் இரவும் அந்த சூராக்களை ஓதுவது அப்படியே ஓர் இயல்பாகிப்போனது உக்பாவிற்கு.

தன்னுடைய ஆற்றல் அனைத்தையும் இரண்டு முக்கிய விஷயங்களுக்குச் செலவிட்டார் உக்பா. ஒன்று இஸ்லாமியக் கல்வி ஞானம்; மற்றொன்று ஜிஹாத். அவரது உள்ளமும் உயிரும் இவ்விரண்டையும் முழுநேரப் பணியாக்கிக் கொண்டன. மற்றத் தோழர்களின் வரலாற்றில் இதற்கு முன்னரே நாம் கண்டதுபோல் குர்ஆன், ஹதீஸ் என்று கற்றுணர்ந்து மார்க்க அறிஞர்களாய் உருவான அவர்கள் போர், சண்டை, இரத்தம், காயம், மரணம் என்பதெல்லாம் பணிக்கு ஆள் அமர்த்தி வேலை வாங்கும் செயல் என்று கருதவில்லை. வாளும் வில்லும் அம்பும் ஈட்டியும் என்று சுமந்து கொண்டு யுத்தகளத்தில் அணிவகுத்து நின்றார்கள். குர்ஆன் குடியமர்ந்து வாழ்ந்த நெஞ்சங்கள் அவை.

கல்வியாளர் என்ற கோணத்தில் உக்பாவைப் பார்த்தால்,

அலுப்போ களைப்போ எதுவுமேயின்றி அல்லாஹ்வின் தூதரிடமிருந்து அள்ளி அள்ளிப் பருகிக் கொண்டிருந்தார். குர்ஆன் முழுவதும் மனனமானது; நபியவர்களின் நிழலைப் போலவே வாழ்ந்து கொண்டிருந்ததால் ஹதீதுக்கலை திறன் அமைந்தது; இஸ்லாமியச் சட்டக்கலை நிபுணத்துவம் வாய்த்தது; இஸ்லாமியச் சொத்துரிமைச் சட்டம் அத்துப்படியானது. இவையெல்லாம் தவிர இலக்கியப் புலமையும் நாவன்மையும் தனது இதரத் தகுதிகள் என்று கக்கத்தினுள் அடக்கி வைத்துக் கொண்டிருந்தார்.

குர்ஆனை ஓதுவதில் அவருக்கு மிக அற்புதமான குரல் வளம் இருந்தது. இரவு படர்ந்து மக்கள் உறங்க ஆரம்பித்ததும், குர்ஆன் வசனங்களை அழகாய், மிக அழகாய், அற்புதமாய் ஓதுவது அவருக்கு வழக்கம். இதரத் தோழர்களும், “ஓடிவா, உக்பா ஓத ஆரம்பித்துவிட்டார்” என்று சம்மணமிட்டு அமர்ந்துகொண்டு அவர் ஓதுவதைக் கேட்பது அவர்களுக்குப் பேரானந்தம், வாடிக்கை. இறைவனின் அற்புத வசனங்களும் அதற்குண்டான சரியான ஏற்றம் இறக்கம் என்று அவர் ஓத ஓத, கடுங்குளிரின்போது கடினமான ஆடை, போர்வை இவற்றையெல்லாம் துளைத்து உள்ளிறங்குமே குளிர் ஒன்று, அதைப்போல் அவர்களது நெஞ்சங்களில் அது புகும். பணிவிலும் அடக்கத்திலும் நெஞ்சம் மறுக, அல்லாஹ்வின் மாட்சிமையை நினைத்துக் கண்களெல்லாம் பொலபொலவென்று கண்ணீர் சிந்த அமர்ந்திருப்பார்கள் தோழர்கள்.

உமர் இப்னுல் கத்தாப் கலீஃபாவாய் இருக்கும்பொழுது ஒருநாள் உக்பாவை கூப்பிட்டு அனுப்பி, “அல்லாஹ்வின் வசனங்கள் சிலவற்றை எனக்கு ஓதிக் காண்பியுங்கள் உக்பா” என்று வேண்டுகோள் விடுத்தார்.

“உங்களுடைய கோரிக்கைக்கு அடிபணிகிறேன் அமீருல் மூஃமினீன்” என்று ஓத ஆரம்பித்தார் உக்பா. அதை மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்த கலீஃபா உமரால் பொறுக்க முடியவில்லை, அடக்க முடியவில்லை. அழ ஆரம்பித்து விட்டார். கண்களெல்லாம் கண்ணீர் வழிந்து தாடியை நனைத்துக் கொண்டிருந்தது.

உக்பா தம் கைபட எழுதிய குர்ஆன் பிரதியொன்று இருந்தது. அந்தக் குர்ஆனின் இறுதியில், “உக்பா பின் ஆமிர் அல்-ஜுஹனீ எழுதிய பிரதி” எனும் கையொப்பம். அவரது மரணத்திற்குப் பிறகும் பலகாலம்வரை எகிப்தின் கைரோ நகரிலுள்ள உக்பா பின் ஆமிர் ஜாமிஆ பள்ளிவாசலில் வைக்கப்பட்டிருந்தது. பிறகு? விலைமதிப்பற்ற ஆவணங்களுள் ஒன்றான அது காணவில்லை. தொலைந்து போய்விட்டது. அதன் அருமையுணர்ந்து காப்பாற்ற இயலாமற் போனது இஸ்லாமிய சமூகத்தின் கைச்சேதம்! வேறென்ன சொல்வது?

போர்வீரர் என்ற கோணத்தில் உக்பாவை அணுகினால்,

உஹதுப் போரில் நபியவர்களுடன் கலந்து கொண்டு களம் காண ஆரம்பித்தார். அதன் பின்னர் நிகழ்வுற்ற ஒவ்வொரு போரிலும் தவறாது ஆஜர். துணிவும் வீரமும் கொண்ட போர் வீரர் என்பது உக்பாவின் மறு அடையாளம்.

oOo

கலீஃபா உமரின் ஆட்சிக் காலத்தில் சிரியா நாட்டின் முக்கிய நகரமான டமாஸ்கஸை அபூஉபைதா இப்னுல்-ஜர்ரா ரலியல்லாஹு அன்ஹு தலைமையிலான இஸ்லாமியப் படை வெற்றிகரமாய்க் கைப்பற்றியது. அப்படையில் இடம்பெற்ற முக்கியத் தோழர்களுள் உக்பாவும் ஒருவர். இஸ்லாமியப் படையெடுப்பில் மிகப் பெரும் மைல்கல் அந்தப் போர்.

போரில் அடைந்த வெற்றியை மதீனாவிலுள்ள கலீஃபாவிற்கு அறிவிக்க யாரை அனுப்பி வைக்கலாம் என்று தனது படையை நோட்டமிட்ட அபூ உபைதா, உக்பாவை தேர்ந்தெடுத்தார். “மதீனா சென்று நம் கலீஃபாவிடம் டமாஸ்கஸ் நகரம் நமது வசமான நற்செய்தி பகருங்கள்.”

டமாஸ்கஸ் நகரிலிருந்து ஆயிரத்து ஐம்பத்தைந்து கிலோமீட்டர்கள் தூரமுள்ள மதீனாவிற்கு பேருவைகயுடன் கிளம்பினார் உக்பா. போரில் போராடிக் களைத்த அலுப்பெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டாய் இருக்கவில்லை. அந்த நற்செய்தியை சுமந்து கொண்டு கிளம்பிய அவர் நிற்கவில்லை, தாமதிக்கவில்லை, எட்டு நாள், இரவும் பகலுமாய் விடாமல் பயணித்து மதீனா வந்து சேர்ந்து கலீஃபாவின் மடியில் அந்தச் செய்தியைக் கொட்டிவிட்டுத் தான் நின்றார்; மூச்சு வாங்கினார்.

ரோமப் பேரரசின் பகுதிகள் வசமாகிக் கொண்டேவர, முன்னேறிக் கொண்டிருந்த இஸ்லாமியப் படை, எகிப்தின் வாசலை அடைந்தது. அக்காலத்தில் நாகரீகத்தின் மணிக்கல் எகிப்து. கதவுகளைத் தட்ட உள்ளிருந்து ஓடி வந்தனர் போர் வீரர்கள். அம்ரிப்னுல் ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு தலைமையிலான படைகளுடன் கடும் போர் மூண்டது. எகிப்தின் பகுதிகளை ஒவ்வொன்றாகக் கைப்பற்ற ஆரம்பித்தனர். இந்தப் போர்களிலெலாம் முஸ்லிம் படைப் பிரிவுகளின் தலைவர்களுள் ஒருவர் உக்பா.

பின்னர் முஆவியா பின் அபீஸுஃப்யானின் ஆட்சியின்போது, “உக்பா, நீங்கள் எகிப்தின் ஆளுநர்,” என்று பதவியளித்தார் முஆவியா. மூன்று ஆண்டுகள் கழிந்திருக்கும். அதன் பின்னர் மத்திய தரைக்கடலில் உள்ள ரோட் தீவுகளில் (Island of Rhodes) நடைபெறும் யுத்தத்திற்கு, “கடல் தாண்டிய போர்! சென்றுவர முடியுமா?” என்று முஆவியா கேட்க, “எப்பொழுது கிளம்புகிறது கப்பல்?” என்று ஆயுதங்களுடன் துறைமுகத்திற்கு விரைந்தார் உக்பா.

அறப்போர்களில் அவருக்கிருந்த அளவற்ற ஆர்வத்தால் ஜிஹாத் பற்றிய நபியவர்களின் அனைத்து ஹதீதுகளும் உக்பாவிற்கு அத்துபடி. அத்துடன் மட்டும் நிற்காமால், அவற்றைத் தாமே முஸ்லிம்களுக்குக் கற்றுத் தருவதில் மிகப் பெரும் பிரயாசை எடுத்துக் கொண்டார்.

மார்க்க ஞானி அவர், பேனாவும் பேப்பருமாய் இருப்பார் என்று ஒரு குறுகிய வரையறைக்குள் அவரை நாம் கற்பனை செய்ய முடியாது. குறி பார்த்து அம்பெய்வது அவரது தினசரி பயிற்சி. வில்லம்பு எய்யும் கலைதான் அவருக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு அம்சம். இவ்விதமாய் நாளின் ஒவ்வொரு நொடியும் இறைவனுக்காக வாழ்ந்து கொண்டிருந்தார்கள் அவர்கள். இம்மையிலும் மறுமையிலும் அவர்களை உயர்த்தி வைத்தான் இறைவன்.

ஒருகாலத்தில் ஒரு சில கால்நடைகளைப் பாலைவனத்தில் மேய்த்துக் கொண்டிருந்த உக்பாவிற்கு டமாஸ்கஸ் நகரம் வசமானபின் அந்நகரின் பிரசித்திப்பெற்ற “பாப் துமா” (தாமஸ் வாயில் – Saint Thomas’s Gate) அடுத்துள்ள தோட்டத்தில் இல்லம் அமைந்தது. பின்னர் எகிப்திற்கு ஆளுநராக அவர் இருந்தபோது, நைல் நதிக்குக் கிழக்கே கைரோ நகரின் எல்லையை ஒட்டியுள்ள புகழ்வாய்ந்த முக்கத்தம் மலையடிவாரத்தில் அவரது வீடு.

oOo

நாலாபுறமும் இஸ்லாமிய ஆட்சி விரிவடைந்துக் கொண்டிருக்க, இஸ்லாத்தில் இணைந்து கொண்டிருந்த மக்களுக்கெல்லாம் கல்வி கற்றுத் தரவேண்டிய கட்டாயமும் நெருக்கடியும் ஏற்பட்டன. “கலிமா சொல்லியாகி விட்டதா, ஐந்து வேளை தொழுதுகொள், நோன்பு நோற்றுக் கொள், செல்வம் இருந்தால் ஜகாத் கொடு, முடிந்தால் ஹஜ் நிறைவேற்று. பிறகு உன் வேலையைப் பார், சொத்து சுகம் சேர்த்துக் கொள், நிலம் நீச்சு வளைத்துப் போடு, ஆண்டு மாண்டு முடி,” என்று தோழர்களும் விட்டுவிடவில்லை; மக்களும் அமைதியடையவில்லை. உள்ளே வந்தவர்கள் எல்லாம் இஸ்லாம் ஒரு வாழ்வியல் நெறி என்பதை அறிந்து உணர்ந்து வந்தார்கள். எனவே அதைக் கற்க ஆவலுடன் பள்ளிவாசலுக்கு ஓடி வந்தார்கள். குர்ஆனும் ஹதீஸும் சட்டமும் திட்டமும் இன்னபிறவும் என்று கற்றுத் தெளிய வரிசை கட்டி நின்றார்கள். அந்தந்தப் பகுதி ஆளுநர்கள் கலீஃபாவிற்குத் தகவல் அனுப்ப, கல்வியில் சிறந்த அறிஞர்களை மிகவும் கவனமாய்த் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு பகுதிக்கும் அனுப்பி வைக்க ஆரம்பித்தார் உமர் ரலியல்லாஹு அன்ஹு. இஸ்லாமியப் பாடசாலைகள் ஒவ்வொரு பகுதியிலும் உருவாக ஆரம்பித்தன.

அந்தப் பாடசாலைகளும் மூத்தத் தோழர்களும் மக்களுக்குக் குர்ஆன் ஓதக் கற்றுத் தந்தால் போதும்; முடித்ததும் இனிப்பு வழங்கி அனுப்பி வைக்கலாம் என்று பணி புரியவில்லை. அதுவல்ல இஸ்லாமியக் கல்வி. அன்று உருவான பாடசாலைகளை இக்கால மொழியில் சொல்வதென்றால் இஸ்லாமியப் பல்கலைக் கழகங்கள் அவை. தோழர் முஆத் பின் ஜபல் வரலாற்றினிடையே சிரியாவின் பகுதிகளுக்குக் கலீஃபா உமர் அனுப்பிவைத்த தோழர்களைப் பற்றி வாசித்தது உங்களுக்கெல்லாம் நினைவிருக்கும். ஹிம்ஸ் பகுதிக்கு உபாதா இப்னு ஸாமித், டமாஸ்கஸ் பகுதிக்கு அபூதர்தா, யமன், ஸிரியா பகுதிகளுக்கு முஆத் இப்னு ஜபல் என்று அந்தப் பகுதி மக்கள் கல்வி மழையில் நனைந்து கொண்டிருந்தனர்.

இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு மக்காவிலுள்ள மக்களுக்குக் கல்விச் சேவை புரிந்து கொண்டிருந்தார். உவமையெல்லாம் இல்லாமல் நிசமாகவே அவர் தெருவில் மக்கள் வரிசை கட்டி நின்றது சுவையான தனிச்செய்தி. இன்ஷா அல்லாஹ் ஒருநாள் அவரது வரலாற்றில் பார்ப்போம்.

மதீனா நகரமோ கல்வியின் தலைமையகமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. ஸைத் இப்னு தாபித்ரலியல்லாஹு அன்ஹு அங்கிருந்த பல்கலையின் கல்வியாளர். இவரது கல்வி ஞானமும் நமக்கு மிகப் பரிச்சயம்.

உத்பா இப்னு கஸ்வான் உருவாக்கிய பஸ்ரா நகருக்கு அபூமூஸா அல் அஷஅரீ, கூஃபா நகருக்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் என்று நியமித்தார் உமர்.

இப்பொழுது எகிப்து வசமானதும் அங்கு உருவாகிய பாடசாலைக்கு உக்பா பின் ஆமிர் கல்வியின் மையமாகிப் போனார். எகிப்தியர்களுக்கும் உக்பாவை மிகவும் பிடித்துப் போய்விட்டது. அவருடன் மிக நெருக்கமாகிப்போய் அவர் மூலமாய்க் கற்றுணர்ந்து பற்பல ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்கள் அவர்கள். ஸஅத் இப்னு இப்ராஹீம் என்பவர், “கூஃபா நகர மக்கள் எப்படி அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதிடமிருந்து ஹதீத் பயின்று அறிவித்தார்களோ அதைப்போல் எகிப்து மக்கள் உக்பா இப்னு ஆமிரிடமிருந்து ஹதீத் பயின்று அறிவித்தார்கள்,” என்று தெரிவித்துள்ளார்.

அபுல்ஃகைர் முர்ஃதித் இப்னு அப்துல்லாஹ் அல்-யஸனி ( أبو الخير مرثد بن عبد الله اليزني ) என்ற தோழரிடமிருந்தும் எகிப்து மக்கள் கல்வி பயின்றார்கள். இந்த அபுல்ஃகைருக்கு ஆசான்களாக இருந்தவர்களோ உக்பா, ஆம்ரு இப்னுல் ஆஸ், அப்துல்லாஹ் இப்னு ஆம்ரு ரலியல்லாஹு அன்ஹும்.

எகிப்தில்தான் உக்பாவை அவரது இறுதித் தருணங்கள் நெருங்கின. உடல்நலம் மோசமடைந்தது. தன் மகன்களையெல்லாம் வரவழைத்தார்.

“என் பிள்ளைகளே, நான் உங்களுக்கு மூன்று விஷயங்களைத் தெரிவிக்கிறேன். அதை நீங்கள் என்றென்றும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக ஹதீத் என்று ஒன்று உங்களுக்கு அறிவிக்கப்பட்டால் நம்பிக்கையான ஒருவர் மூலம் அது உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டாலொழிய நீங்கள் அதை நம்பவே கூடாது;

உடுத்துவதற்கென்று சரியான ஆடையற்ற வறுமை உங்களைச் சூழ்ந்த போதும் கடன் வாங்கவே வாங்காதீர்கள்;

எக்காலத்திலும் கவிதை புனையாதீர்கள், அது உங்களைக் குர்ஆனை விட்டு திசை திருப்பிவிடும்.”

அத்துடன் இவ்வுலகில் அவரது பயணம் முடிவிற்கு வந்தது. உக்பாவின் மகன்கள் அவரை அந்த முக்கத்தம் மலையடிவாரத்திலேயே நல்லடக்கம் செய்தார்கள். பிறகு வீட்டிற்குத் திரும்பி வந்தவர்கள் தம் தந்தை சொத்து என்று ஏதாவது விட்டுச் சென்றிருக்கிறாரா என்று பார்த்தார்கள். 70க்கும் மேற்பட்ட வில்லும் அவை ஒவ்வொன்றுடன் அம்பறாவில் நிரப்பப்பட்ட அம்புகளும் மட்டுமே இருந்தன. அதற்குரிய உயில் எழுதி வைக்கப்பட்டிருந்தது – “இவற்றை முஸ்லிம்கள் ஜிஹாதிற்கு உபயோகிக்க வினியோகிக்கவும்.“

ரலியல்லாஹு அன்ஹு!

oOo

சத்தியமார்க்கம்.காம்-ல் 07 டிசம்பர் 2010 அன்று வெளியான கட்டுரை

உதவிய நூல்கள்

Related Articles

Leave a Comment