64. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (عبد الله ابن مسعود)
மரத்தின்மீது ஏறி நின்றிருந்தார் அவர். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தோழர்களும் சூழ்ந்து அமர்ந்திருக்க, பழங்களைப் பறிப்பதற்காக அவர் மரமேறியிருந்தார். நபியவர்கள்தாம் அவரை மரமேறச் சொல்லியிருந்தார்கள்; ‘ஆகட்டும்’ என்று உடனே பழம் பறிக்கச் சென்றுவிட்டார் அந்தத் தோழர். நபியவர்களுடன் நிழல் போல் தொடர்ந்து நபியின் ஒவ்வொரு தேவையையும் பார்த்துப் பார்த்துக் கவனமுடன் நிறைவேற்றி அந்த இனிய சேவகத்திற்குத் தம்மை உட்படுத்தியிருந்தவர் அவர்.
அவருக்கு மிக மெலிந்த உருவம். அதற்கேற்பக் கால்களும் மிக ஒல்லியானவை. உயரமும் அப்படியொன்றும் பெரியதன்று. சராசரி அல்லது அதற்கும்கீழ். மொத்தத்தில் வனப்புமிக்கத் தோற்றமற்றவர். அப்படியான அவர் மரத்தின்மேல் நின்றிருந்தபோது அவரது கீழாடை விலகி மெல்லிய கால்கள் வெளிப்பட்டன. அவ்வளவு ஒல்லியான கால்களைக் கண்டதும் சில தோழர்கள் சிரித்துவிட்டனர்.
அதைக் கவனித்த நபியவர்கள், “அவரது கால்களைக் கண்டு சிரிக்கிறீர்களா? வெகு நிச்சயமாக, மறுமையில் அல்லாஹ்வின் எடையில் அவை உஹது மலையைவிடப் பளுவானவை” என்று அறிவித்தார்கள்.
என்ன? மலையளவு பளுவான கால்களா?
நபியவர்கள் உரைத்தால் அது ஐயத்திற்கு அப்பாற்பட்ட மெய் என்பது ஒருபுறமிருக்க இம்மையிலேயே அந்தக் கால்களுக்குப் பெரும் சிறப்பை நல்கியிருந்தான் இறைவன். பத்ருப் போரில் நிகழ்ந்த அதைப் பார்க்கும் முன், பின் நோக்கி நகர்ந்து மக்காவின் வெளிப்புறத்திலுள்ள மலையடிவாரத்திற்குச் செல்ல வேண்டியுள்ளது. செல்வோம்.
oOo
கடுமையான வெயில். சுட்டெரிக்கும் பகல் நேரம். மக்காவின் அரவமற்ற மலையடிவாரம். ஆடுகளை மேய விட்டுவிட்டு அமர்ந்திருந்தார் ஒரு சிறுவர். குரைஷிப் பெருந்தலை உக்பா இப்னு அபூமுயீத் என்பவனுக்குச் சொந்தமான ஆடுகளை மேய்ப்பது அவரது பணி. அவனுக்கு அடிமையாக அவன் கொடுப்பதை உண்டுவிட்டு, கிடைத்ததை உடுத்திக்கொண்டு, ஆடு, வீடு, மலை என்று அந்தச் சிறுவரின் பொழுது ஓடிக் கொண்டிருந்தது.
அதிகாலை எழுந்து ஆட்டு மந்தைகளை ஓட்டிச் சென்றால் இரவு நேரத்தில்தான் ஊருக்குத் திரும்புவார். மீண்டும் பொழுது முழுவதும் விடிவதற்குள் ‘பா’ என்று ஆடுகளை ஓட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார். அதனால் ஊரினுள் நடைபெறும் எந்த நிகழ்வும் அவரைப் பாதிப்பதில்லை; அதற்காக அவர் அலட்டிக் கொள்வதும் இல்லை. தாம்உண்டு; தம் ஆடுகள் உண்டு என்று கழிந்து சென்று கொண்டிருந்தது அவரது பொழுது. ஆனால் அன்றைய பொழுது புது விதி வகுத்தது.
வெகு தூரத்தில் இருவர். அவர்கள் அவரை நோக்கி வந்தனர். சிறுவரும் கவனித்துவிட்டார். அவர்களும் அருகே நெருங்கிவிட, பார்த்தால் அவர்களது முகத்தில் பெரும் களைப்பு. பெரும் தாகத்தில் அவர்கள் தவிப்பது அவர்களது முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
அவரிடம் வந்தவர்கள், “சிறுவரே! இந்த ஆடுகளிடம் இருந்து பால் கறந்து, எங்களது தாகத்தைத் தணிப்பீராக! எங்கள் உயிர் பிழைக்கும்” என்றார்கள்.
சற்றும் யோசிக்காமல் உடனே பதில் வந்தது. “என்னால் முடியாது. இவை எனக்குச் சொந்தமல்ல. அவற்றின் பொறுப்பு மட்டுமே என்னுடையது.”
‘களைப்பு வாட்டுகிறது. தாகத்தால் உயிர் போகிறது. நியாயமா பேசுகிறாய்?’ என்று வலிமையற்ற அந்தச் சிறுவரை அவர்கள் இருவரும் எளிதாய் மீறி, நினைத்ததைச் சாதித்திருக்கலாம். தட்டினால் கேட்பதற்குக் கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஆள் அரவமும் இல்லை. ம்ஹும்! அதற்கு மாறாய், குறைந்தபட்சம் ஏற்படக்கூடிய எரிச்சல், கோபத்திற்கு நேர்மாறாய், அந்தப் பதில் அவ்விருவருக்கும் திருப்தியை அளித்தது.
அவர்களுள் ஒருவர், “அப்படியானால் குட்டியை ஈனாத, பால் சுரக்காத ஓர் ஆட்டை எனக்குக் காண்பி” என்றார்.
“அதோ”
அருகிலிருந்த ஓர் ஆட்டைக் காண்பித்தார்.
அந்த மனிதர் அந்த ஆட்டை நெருங்கித் தடவிக்கொடுத்தார். அல்லாஹ்வின் பெயரை உச்சரித்து அதன் மடியைத் தடவினார்.
“குட்டி ஈனாத ஆடு பால் கொடுக்குமா? அது எப்போதிலிருந்து?” என்று ஆச்சரியத்துடன் வினவினார் அந்தச் சிறுவர்.
அவர் பதில் அளிக்கவில்லை. சில நிமிடங்களில் அந்த ஆட்டினுடைய மடி பெருகி, சுரந்தது பால். அவருடன் வந்திருந்தவர் அங்குக் கிடந்த குழியான ஒரு கல்லை எடுத்து வந்தார். அதில் பாலைக் கறந்து இருவரும் திருப்தியாக அருந்தினர். அந்தப் பாலகரை அழைத்து, ‘இந்தா குடி’ என்றும் அவருக்கும் பால் வழங்கப்பட்டது. ஆச்சரியத்தில் கண்கள் விரிய அந்தச் சிறுவரும் வயிறு நிறையுமளவு பருகினார். அனைவரும் போதிய அளவு அருந்தி முடித்தபின், அந்த மனிதர் “சுருங்கவும்” என்றதும் ஆட்டின் மடி பழைய நிலைக்குத் திரும்ப, அந்த ஆடு எதுவுமே நிகழாதது போல் மேய்வதற்கு ஓடியது.
ஆச்சரியம் விலகாத அந்தச் சிறுவர் அந்த மனிதரிடம், “நீங்கள் உரைத்த வார்த்தைகளை எனக்கும் கற்றுத் தாருங்கள்” என்றார்.
“அந்த வார்த்தைகளை நீ ஏற்கனவே அறிவாயே சிறுவனே” என்று பதில் அளித்தார் அந்த மாமனிதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். அருகில் நின்று கொண்டிருந்தார் அணுக்கத் தோழர் அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு.
முஹம்மது என்பவருக்கு நபித்துவம் அருளப்பட்டுள்ளது என்பதையும் அதைத் தொடர்ந்து நிகழும் செய்திகளையும் அந்தச் சிறுவர் மேம்போக்காக ஓரளவு அறிந்திருந்தார். ஆயினும் அது அவரிடம் பெரிய தாக்கத்தையோ, மாறுதலையோ ஏற்படுத்தவில்லை. மிக இள வயதும் மக்காவின் குடிமக்கள் மத்தியில் ஐக்கியமாகாமல் விலகியிருக்க நேர்ந்த அவரது பணியும் அதற்கு ஒருவகையில் காரணம் என்று சொல்லலாம். ஆனால் இன்று இப்படி அந்த நபியுடன் ஓர் அறிமுகம் நிகழும் என்று அவர் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை.
அது அவருடைய வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. ஆடுகளை மேய்த்தபடி, மக்களால் ஒரு பொருட்டாகக்கூட மதிக்கப்படாமல் வாழ்க்கையைத் துவக்கியவர், அன்று அந்த நிகழ்விற்குப்பின் முற்றிலுமாய் வேறு திசைக்குத் திரும்பி, காலந்தோறும் மக்கள் வியந்து பேசும் ஒருவராகப் பரிணமித்தது இறைவனின் அற்புதம். குரைஷியரின் தொந்தரவுக்கும் தொல்லைகளுக்கும் தப்பி மலையடிவாரத்திற்கு வந்த நபியவர்களும் அபூபக்ரும் களைப்பிலும் தாகத்திலும் அந்தச் சிறுவரை நெருங்கியதால் உருவானார் ஒரு மேதை. அதென்னவோ, இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக நிகழ்த்தப்படும் அக்கிரமங்களும் கொடுமைகளும் இப்படியான எதிர்வினையைத்தான் நிகழ்த்துகின்றன – இன்றுவரை.
‘உம்மு அப்துவின் மகனே!’ என்று அழைக்கப்பட்ட அந்தச் சிறுவர் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத், வெகு விரைவில் இஸ்லாத்தினுள் நுழைந்தார். ரலியல்லாஹு அன்ஹு.
‘நீயுமாச்சு. உன் ஆடுகளும் ஆச்சு’ என்று உக்பா இப்னு அபூமுயீத்திடம் ஆடுகளை விட்டுவிட்டு நபியவர்களிடம் வந்து அண்மிக்கொண்டார் இப்னு மஸ்ஊத். நபியவர்களை நிழல்போல் தொடர்வது, அவர்களது பயணத்தில் உடன் செல்வது, அவர்களது இல்லத்திலேயே தங்கிக்கொள்வது, நபியவர்களை எழுப்புவது, அவர்கள் நீராடும்போது திரையிட்டு மறைத்துக் கொள்வது, காலணிகள் எடுத்து வருவது, பல் துலக்கும் மிஸ்வாக் குச்சியை எடுத்துத் தருவது என்று ஆசையும் ஆர்வமுமாகக் குதூகலத்துடன் பணிபுரிந்து கிடந்தார் அப்துல்லாஹ்.
அந்த அணுக்கமும் நெருக்கமும் இஸ்லாமியக் கல்வி ஞானம் வெகு இயல்பாய் அவருக்கு அமைய வழி அமைத்துவிட்டன. இறைவனின் வார்த்தைகள் வஹீ அருளப்பெற்ற நபியவர்களிடமிருந்து மாசற்ற தூய ஞானம் அவருக்கு நேரடியாகப்பாய குர்ஆன், அதன் விளக்கங்கள், இஸ்லாமியச் சட்டங்கள் என அவருடைய அறிவு ஆழமாகவும் உன்னதமாகவும் உருப்பெற்று வளர்ந்தது.
நபியவர்களுக்கும் அப்துல்லாஹ்வின்மீது பெரும் வாஞ்சை. தம் அறையினுள் அவர் நுழைவதற்கு அனுமதி அளித்திருந்தார்கள். அவரிடம் எவ்விஷயத்தையும் மறைப்பதில்லை. அவரது நம்பிக்கையும் நாணயமும்தாம் முதல் சந்திப்பிலேயே தெளிவாக வெளிப்பட்ட விஷயங்களாயிற்றே. அதனால் ரகசியமான தகவல்களைக்கூடத் தயக்கமில்லாமல் பகிர்ந்து கொண்டார்கள். அத்தகைய ரகசியங்கள் அவரிடமிருந்து அணுவளவும் கசியாது. அதையெல்லாம் கவனித்து வந்த தோழர்கள் ‘அல்லாஹ்வின் தூதருடைய ரகசியங்களைக் காப்பவர்’ எனும் அடைமொழியையே அவருக்கு அளித்துவிட்டார்கள்.
இப்னு மஸ்ஊதுக்கும் நபியவர்கள்மீது அலாதி அக்கறை. ஒருமுறை படுத்துறங்கி எழுந்த நபியவர்களின் உடலில் பாயின் தழும்புகள். அது ஈச்சை மர ஓலையால் பின்னப்பட்ட பாய். கட்டில், பஞ்சு, மெத்தை போன்றவையெல்லாம் இறைத்தூதரது வாழ்க்கையில் அன்னியமானவை. அவர்களது எளிமையையும் உலகப் பற்றற்ற தன்மையையும் நன்கு உணர்ந்திருந்தவர்தாம் அப்துல்லாஹ். இருந்தாலும் அக்கறையுடன், “அல்லாஹ்வின் தூதரே! பாயின்மேல் ஏதாவது விரித்துத் தங்களுக்குச் சௌகரியமாக ஆக்கி வைக்க, தாங்கள் எனக்குக் கட்டளையிட விழைகிறேன்” என்றார்.
“இவ்வுலகில் எனக்கு என்ன வேண்டியிருக்கிறது? இந்த உலகைப் பொருத்தவரை பயணி ஒருவர் மரத்திற்கு அடியில் இளைப்பாறி, பின்னர் அதிலிருந்து விலகிப் பயணத்தைத் தொடர்வது போன்றே என்னை நான் உணர்கிறேன்” என்று பதில் அளித்துவிட்டார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
கூடவே இருந்து ஒவ்வொரு விஷயத்தையும் உன்னித்துப் பார்த்துத் தம்முடைய ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் நடை, உடை, பாவனைக்கும் எளிமைக்கும் நபியவர்களை அப்பட்டமான முன்மாதிரியாக ஆக்கிக் கொண்டார் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்.
எந்தளவு?
‘தம்முடைய தோற்றத்திலும் நடத்தையிலும் நபியவர்களைப் போலவே திகழ்கிறார் அவர்’ என்று மக்கள் தயக்கமின்றிக் கூறிவிடுமளவு.
கல்வியாளராகவும் பக்திமானாகவும் அடக்கமானவராகவும் உருவானதால் அவர் பயந்த சுபாவம் கொண்டவர், அதட்டினால் நடுங்கி விடுவார் என்று தப்பான பிம்பம் கூடாது. அசாத்திய வலிமையும் மனவுறுதியும் அவரிடம் அமைந்திருந்தன. இஸ்லாமிய மீளெழுச்சியின் துவக்கக் காலங்களில் மக்காவில் முஸ்லிம்கள்மீது நிகழ்த்தப்பட்ட அழிச்சாட்டியங்களை இத்தொடரில் நெடுகப் பார்த்திருக்கிறோம். அச்சமயத்தில் குர்ஆனைப் பொதுவெளியில் ஓதியது நபியவர்கள் மட்டுமே. அடுத்ததாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்.
குறைந்த அளவிலான மக்கள் இஸ்லாத்தை ஏற்றிருந்த காலம் அது. அப்பொழுது தோழர்கள் சிறு குழு மட்டுமே. எண்ணிக்கையில் குறைவாக இருந்த அவர்களால் தங்களுக்கு நிகழ்த்தப்படும் கொடுமைகளிலிருந்து தங்ளைத் தற்காத்துக் கொள்ள முடியாத சூழல். ஒருநாள் அவர்களுக்குள் பேசிக் கொண்டிருக்கும்போது ஒருவர் அந்தக் கேள்வியை எழுப்பினார். “குரைஷியர் செவியுறும் வகையில் குர்ஆனை ஓத வேண்டும். யார் அதைச் செய்வீர்கள்?”
“நான் செய்கிறேன்” என்று ஆவலுடன் கையைத் தூக்கிக்கொண்டு முன்வந்தார் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்.
தோழர்களுக்குக் கவலை ஏற்பட்டது. “உமக்காக அச்சப்படுகிறோம்” என்றார்கள். “அவர்களுடைய தீங்கிலிருந்து பாதுகாக்கும் அளவிற்குக் குல வலிமையும் ஆதரவும் உள்ளவர் ஒருவர் செல்வதையே நாங்கள் விரும்புகிறோம்.”
“நானே செல்கிறேன்” என்று உறுதியாய்ச் சொன்னார் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத். “அல்லாஹ் என்னைப் பாதுகாப்பான். அவர்களுடைய தீங்கிலிருந்து என்னை விலக்கி வைப்பான்.”
தோழர்களைச் சம்மதிக்கவைத்து கஅபாவிற்குச் சென்றார். கஅபா கட்டத்திலிருந்து சில அடித் தொலைவில் ‘மகாமு இப்ராஹீம்’ எனும் பகுதி இருக்கிறதே அங்குச் சென்று நின்றுகொண்டு ஓத ஆரம்பித்தார்.
அது நண்பகலுக்கு முந்தைய பரபரப்பான பகற்பொழுது. குரைஷியர் கஅபாவைச் சுற்றி அமர்ந்திருந்தார்கள். அவர்களது கவனத்தை அப்துல்லாஹ்வின் கணீரென்ற குரல் ஈர்த்தது.
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால். இக் குர்ஆனை அளவற்ற அருளாளன் கற்றுக் கொடுத்தான். அவனே மனிதனைப் படைத்தான். அவனே மனிதனுக்கு (பேச்சு)விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான்.
என்று குர்ஆனின் 55ஆவது அத்தியாயமான சூரா அர்ரஹ்மானின் வசனங்களை ஆரம்பித்து ஓதினார் அப்துல்லாஹ். இதென்ன சொல்கிறார் இவர் என்று முதலில் அவரை முறைத்துப் பார்த்தார்கள் அந்தக் குரைஷி மக்கள். அவர்களுக்குப் புரியவில்லை. “உம்மு அப்துவின் மகன் என்ன சொல்கிறார்?” என்று ஒருவருக்கொருவர், கேட்டுக்கொண்டார்கள்.
பிறகுதான் அவர்களுள் ஒருவனுக்குப் பொறி தட்டியது. “நாசமாகப் போக! முஹம்மது அறிவித்த வார்த்தைகளை அவன் ஓதுகிறான்.”
அவ்வளவுதான். கூட்டமாக எழுந்து ஓடி அவரை மொய்த்து, சரமாரியாக அவரது முகத்தில் அடி, அறை. ஆனால் அதற்கெல்லாம் அசந்து அவர் நிறுத்துவதாக இல்லை. தொடர்ந்து ஓதிக் கொண்டிருந்தார். இறுதியில் வலி உக்கிரமானதும்தாம் தோழர்களிடம் திரும்பினார். முகமெல்லாம் ரத்தம்.
வழியும் குருதியைப் பார்த்துப் பரிதாபம் மேலோங்க, “இதற்காகத்தான் நாங்கள் உம்மை நினைத்து அச்சமுற்றோம்” என்றார்கள் தோழர்கள்.
“அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன்! அல்லாஹ்வின் எதிரிகளை நினைத்து எனக்கு அச்சமே இல்லை. நான் இக்கணம் எவ்வளவு மகிழ்ச்சியில் உள்ளேனோ அதைவிட எந்தளவும் அல்லாஹ்வின் எதிரிகள் மகிழ்ச்சியில் இருக்கவே முடியாது. நீங்கள் விரும்பினால் நாளையும் செல்வேன். இன்னும் அதிகம் ஓதுவேன்.”
“வேண்டாம். இது போதும். நீர் அவர்களுக்கு ஓதிக் காண்பித்துவிட்டீர். அவர்கள் அதைச் செவியுறுவதைக் கடுமையாக வெறுக்கிறார்கள்.”
கண்ணில் நீர் வழிந்தால் நெஞ்சில் உதிரம் கொட்டலாம். உதிரத்தைக் கொட்டி தீனைச் சுமந்தவர்களைக் கண்டால்?
oOo
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தோழர்களும் சூழ்ந்து அமர்ந்திருக்க, நபியவர்கள் சொன்னார்கள் என்பதற்காகப் பழங்களைப் பறிக்க மரமொன்றில் ஏறியிருந்தார் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத். மெலிந்த உருவம், ஒல்லியான கால்கள், சராசரிக்கும் குறைவான உயரம். அப்படியான அவர் மரத்தின்மேல் நின்றிருந்தபோது அவரது கீழாடை விலகி மெல்லிய கால்கள் வெளிப்பட்டன. அவ்வளவு ஒல்லியான கால்களைக் கண்டதும் சில தோழர்களுக்கு இயல்பாகச் சிரிப்பு எழும்ப, சிரித்தும்விட்டனர்.
அதைக் கவனித்த நபியவர்கள், “அவரது கால்களைக் கண்டு சிரிக்கிறீர்களா? வெகு நிச்சயமாக, மறுமையில் அல்லாஹ்வின் எடையில் அவை உஹது மலையைவிடப் பளுவானவை” என்று அறிவித்தார்கள்.
நபியவர்கள் உரைத்தால் அது சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட மெய் இல்லையா? ஆயினும் இம்மையிலேயே அந்தக் கால்களின் மேன்மைக்குச் சான்று பகரும் சிறு நிகழ்வு பத்ரு யுத்தத்தில் அமைந்தது.
வலிமையற்ற தோற்றமுடையவரைப் பற்றிய பிம்பம் சாந்த சொரூபி போல்தானே நமக்குள் ஏற்படும்? மாறாக வீரமும் அவருக்குள் சரிவிகிதத்தில் கலந்திருந்தது. தோழர்களின் வரலாற்றைக் கவனித்தால் பொதுவான இந்த அம்சத்தை அனைவரிடமும் காண முடியும். அசைக்க இயலாத இறை நம்பிக்கையும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் அப்பட்டமான அடிபணிதலும் குடிகொள்ளும் அவர்களது நெஞ்சம், கூடவே வீரத்தையும் சுமக்கத் தவறுவதில்லை. சொல்லப்போனால் வீராவேசம் இன்னும் வீரியமுடன் அவர்களிடம் உருப்பெற்று வளர்ந்தது.
ஆனால் அது அல்லாஹ்வின் விரோதிகளிடம் மட்டுமே தீவிரமாக வெளிப்பட்டது என்பது நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம். சக முஸ்லிம்களிடம் அவர்களுக்கு இருந்ததெல்லாம் கனிவும் அன்பும்.
பத்ருப் போர் நிகழும்போது அல்லாஹ்வின் விரோதி அபூஜஹ்லைக் குறி வைத்தனர் இரு சகோதரர்கள். முஆத், முஅவ்வித் எனும் அவ்விருவரும் அஃப்ரா பின்த் உபைத் என்பவரின் மகன்கள். துடிப்பின் உச்சத்தில் இருந்த இளைஞர்கள். அவர்களுக்கு அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்தாம் அபூஜஹ்லை அடையாளம் காண்பித்தார். அவ்வளவுதான். வல்லூறைப்போல் பாய்ந்துசென்ற அவர்கள் அதே வேகத்தில் அபூஜஹ்லைத் தாக்கினார்கள். ஒருவர் அவன் காலைத் தம் வாளால் பலம்கொண்டு வெட்ட, பாதாம் கொட்டை உடைந்தால் வரும் ஓசை போன்ற சப்தத்துடன் வெட்டுண்ட அந்தக் கால், உடைந்த கொட்டையிலிருந்து அந்தப் பருப்பு பறப்பதைப்போல் காற்றில் பறந்து விழுந்தது. அந்தத் தாக்குதலில் கால் இழந்து, தரையில் வீழ்ந்தான் அவன். அதற்குள் அவனுடைய மகன் இக்ரிமா அந்தச் சகோதரர்கள் இருவரையும் கொன்றதால் அவ்விருவருக்கும் உயிர் தியாகிகள் ஆகும் வாய்ப்பு அமைந்தது.
போர் முடிவு நேரம். அயோக்கியன் அபூஜஹ்லு என்ன ஆனான் என்பதை அறிந்துகொள்ள விரும்பிய முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். “அபூஜஹ்லு என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்?” என்று கேட்க, உடனே கிளம்பி ஓடினார் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு.
அவலமாகத் தரையில் கிடந்தான் அபூஜஹ்லு. அந்நிலையிலும் தன்னுடைய வாளால் தற்காத்துப் போராடிக் கொண்டிருந்தவனை அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் பார்த்துவிட்டார். “அல்லாஹ்வின் எதிரியே. உன்னைச் சிக்க வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” என்றார்.
“என்னுடைய குலத்தவரால் நான் கொல்லப்படுவதை நினைத்து நான் அவமானமடையப் போவதில்லை” என்றான் அவன்.
அவனது கைகளைத் தனது வாளால் சரியான முறையில் அவர் தாக்க அவனது வாள் தரையில் விழுந்தது. அதையும் எடுத்துக்கொண்டு அவனைத் தாக்கினார். அதுநாள் வரை குலம், கோத்திரம் என்று அகந்தையிலும் பெருமையிலும் இறுமாப்பிலும் கழுத்து உயர்த்தி, நெஞ்சு நிமிர்த்தித் திரிந்தவனின் கழுத்து, அடிமையின் மகன் என்று இழிவாகக் கருதப்பட்ட அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதின் காலடியில் கிடந்தது. அதை நசுக்கியபடி அவர் அவன்மேல் ஏறி நின்றிருந்தார். அந்த இறுதித் தருணத்திலும் அபூஜஹ்லின் ஆணவம் குறையவில்லை.
“உன் தகுதியை மீறி அதிக உயரம் ஏறிவிட்டாய் ஆட்டிடையனே”. தான் தாழ்ந்து விட்டோமே என்றுகூட அவன் மனம் ஒப்புக்கொள்ளவில்லை.
போதும் உன் ஆட்டம் என்று அத்துடன் அவனது கழுத்தை வெட்டி எறிந்தார் அப்துல்லாஹ். அவன் உயிர் பிரிந்து உடல் சில்லிட்டதும் நபியவர்களிடம் சென்று நடந்ததை விவரித்தார். “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை” என்று புகழ்ந்தார்கள் நபியவர்கள். அபூஜஹ்லு இறந்து கிடந்த இடத்திற்கு இப்னு மஸ்ஊதுடன் சென்று, “அல்லாஹ்வின் விரோதியே! உன்னைச் சிக்க வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். நம் சமூகத்தின் ஃபிர்அவ்ன் இவன்” என்றார்கள்.
நபியவர்களின் காலத்தில் போர்களில் கலந்து கொண்டதுடன் இப்னு மஸ்ஊத் ஓய்வு பெற்றுவிடவில்லை. அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாக இருந்தபொழுது, மதீனா நகரைப் பாதுகாப்பதற்கு முஸ்லிம்களின் பாதுகாப்புப் படையை உருவாக்கினார். அவர்களுக்கு வீரம் வாய்ந்த நபித் தோழர்கள் தலைவர்கள். அலீ இப்னு அபீதாலிப், ஸுபைர் இப்னுல் அவ்வாம், தல்ஹா இப்னு உபைதுல்லாஹ், ஸஅத் இப்னு அபீவக்காஸ், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ஆகியோருடன் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத். ரலியல்லாஹு அன்ஹும்.
பின்னர் யர்மூக் யுத்தம் வரை அவரது போர்க்களப் பங்களிப்பு நீண்டது.
oOo
நபியவர்களிடம் நேரடியாகப் பயில ஆரம்பித்தார் என்று மேலே பார்த்தோமில்லையா? அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதின் அடையாளம் குர்ஆனாகவே ஆகிப்போனது. அதற்குச் சான்றுகள் ஒன்று, இரண்டு என்றில்லாமல் ஏகப்பட்டவை. உமர் இப்னுல் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாக ஆட்சி செலுத்திய காலம். ஹஜ்ஜில் அரஃபாவில் அவரிடம் ஒருவர் வந்தார். அவர் இராக் நாட்டைச் சேர்ந்தவர்.
“அமீருல் மூஃமினீன்! நான் கூஃபா நகரிலிருந்து வருகிறேன். அங்கு ஒருவர் நகல் எடுப்பவர்களிடம் குர்ஆன் முழுவதையும் மனனமாக ஒப்புவித்து பிறரை எழுதச் சொல்கிறார். அத்தனை ஆயத்துகளும் எழுத்துகளும் தமக்கு அத்துப்படி என்று அவர் கூறிக்கொள்கிறார்.”
குர்ஆனின் அச்சுப் பிரதிகள் உருவாகாத காலம். அபூபக்ரின் கிலாஃபத்தின்போது குர்ஆன் தொகுக்கப்பட்டு முடிந்திருந்ததே தவிர அதன் கையெழுத்துப் பிரதிகள் பரவலாக ஆகியிருக்கவில்லை. இந்நிலையில் தொகுக்கப்பட்டுள்ள குர்ஆனைப் பார்த்துப் பிரதியெடுத்தால் பிழையின்றி இருக்கும். அப்படியின்றி ஒருவர் மனனமாகச் சொல்கிறார் என்று எழுத ஆரம்பித்தால், அதில் பிழையிருந்துவிட்டால் எதைக்கொண்டு சரிபார்ப்பது? உமருக்குக் எக்கச்சக்கக் கோபம் ஏற்பட்டுவிட்டது.
உரத்த குரலில், “அடக் கேடே! யார் அவர்?”
“அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்” என்று பதில் அளித்தார் அந்த மனிதர்.
நெருப்பின்மேல் நீர் ஊற்றியதுபோல் உமரின் கோபம் அப்படியே தணிந்து, மிகவும் சாந்தமாகி, “அல்லாஹ்வின்மீது ஆணையாக! அத்தகைய பொறுப்புக்கு அவரைவிடத் தகுதிவாய்ந்த யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. வாரும். உமக்கு ஒரு செய்தி சொல்கிறேன்” என்று குறை சொல்ல வந்தவருக்கு நிறை சொல்ல ஆரம்பித்தார் உமர்.
“ஒருநாள் இரவு நபியவர்கள் அபூபக்ருவிடம் முஸ்லிம்களைப் பற்றிய கவலையைப் பகிர்ந்துகொண்டிருந்தார்கள். அச்சமயம் நானும் அவர்களுடன் இருந்தேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் எழுந்தார்கள். வெளியே சென்று நடக்க ஆரம்பித்தார்கள். நாங்களும் அவர்களைப் பின் தொடர்ந்தோம். அப்பொழுது பள்ளிவாசலில் ஒருவர் தொழுது கொண்டிருந்தார். இருள் படர்ந்திருந்ததால் அவர் யார் என்று எங்களுக்கு அடையாளம் தெரியவில்லை. அல்லாஹ்வின் தூதர் அங்கு நின்று தாமதித்து, அந்த மனிதர் குர்ஆன் ஓதுவதைச் செவியுற்றவாறே இருந்தார்கள். எங்களிடம், ‘உங்களில் யாரேனும் குர்ஆனை அது முதன் முதலில் அருளப்பட்டதைப் போன்ற அதே தூய்மையுடன் ஓத விழைந்தால் அவர்கள் உம்மு அப்துவின் மகனாரைப் போல் ஓதட்டும்’ என்று கூறினார்கள்.“
‘உம்மு அப்துவின் மகன்’ என விளிக்கப்பட்டவர் என மேலே படித்தோமே, அந்த அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்கள்தாம் அந்த இரவில் பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தார்.
“பின்னர் அங்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அமர்ந்து இறைவனிடம் இறைஞ்ச ஆரம்பித்ததும் இங்கு நபியவர்கள், ‘கேளும். அது உமக்கு அருளப்படும்; கேளும். அது உமக்கு அருளப்படும்’ என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.”
“மறுநாள் காலை அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதிடம் சென்று அவர் இறைவனிடம் இறைஞ்சியது நிறைவேறும் என்று அல்லாஹ்வின் தூதர் அறிவித்ததை முதல் ஆளாக நான் தெரிவிக்க முடிவெடுத்தேன். அதற்காக நான் அவரிடம் சென்றால் அங்கு எனக்குமுன் அபூபக்ரு வந்து, அந்தச் செய்தியை அவரிடம் சொல்லிவிட்டிருந்தார். எப்பொழுதெல்லாம் நற்காரியங்களில் அபூபக்ருவுடன் நான் போட்டியிடுகிறேனோ அப்பொழுதெல்லாம் அவர் என்னை விஞ்சிவிடுவார்.” என்று உமர் ரலியல்லாஹு அன்ஹு விவரித்தார்.
குர்ஆனை ஓதுவதில் இப்னு மஸ்ஊதுக்கு இருந்த திறமைக்கு அந்த ஒரு நிகழ்வு மட்டுமன்றி வேறு சில நிகழ்வுகளும் பெரும் சான்றுகளாய் அமைந்திருந்தன. நபியவர்கள் தம் தோழர்களுக்கு அறிவுரை கூறும்பொழுது, “நீங்கள் குர்ஆனை நான்கு பேரிடமிருந்து கற்றுக் கொள்ளலாம் – அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத், ஸாலிம் மவ்லா அபீஹுதைஃபா, உபை இப்னு கஅப், முஆத் இப்னு ஜபல்” என்று தெரிவித்துள்ளார்கள்.
வேறென்ன வேண்டும்?
ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் இதைவிட வேறு சிறந்த அங்கீகாரம் என்ன இருக்க முடியும் என்று தோன்றுமல்லவா? அப்படியான ஒன்றும் அப்துல்லாஹ்வுக்கு அமைந்தது. எப்படி?
ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதிடம், “குர்ஆன் ஓதுங்கள். நான் செவியுறுகிறேன்” என்றார்கள்.
“குர்ஆன் அருளப்படுவதே தங்கள் மீது. அதை நான் தங்களுக்கு ஓதிக் காண்பிப்பதா?” என்று திகைத்துப்போய்க் கேட்டார் அப்துல்லாஹ்.
“பிறர் ஓதுவதையும் நான் செவியுற விரும்புகிறேன்” என்று பதில் அளித்தார்கள் நபியவர்கள்.
சரியென்று, குர்ஆனின் நான்காவது அத்தியாயமான சூரா அந்-நிஸாவை ஓத ஆரம்பித்தார் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத். “எனவே (நபியே!) ஒவ்வொரு கூட்டத்தினரையும் (அவர்களுடைய)சாட்சியுடன் நாம் கொண்டுவரும்போது, நாம் இவர்கள் மீது சாட்சியாக உம்மையும் கொண்டு வந்தால் (உம்மை நிராகரிக்கும் இவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்?” என்ற 41ஆம் வசனத்தை ஓதும்போது “நிறுத்துங்கள்” என்றார்கள் நபியவர்கள். அவர்களது கண்களில் கண்ணீர் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
குர்ஆனை ஓதுவதிலும் அதன் ஞானத்திலும் மிகச் சிறப்பானவர் என்ற தகுதியும் அங்கீகாரமும் நபியவர்களிடமிருந்து அவருக்குக் கிடைத்திருந்த போதிலும் தாம் நபியவர்களின் சிறந்த தோழர் என்ற நினைப்பு அவருக்கு இருந்ததில்லை. அப்படி அவர் கருதியதும் இல்லை.
ஒருமுறை பிரசங்கத்தில், “அல்லாஹ்வின் தூதரிடமிருந்து எழுபது சூராக்களை நேரடியாக நான் கற்றறிந்து உள்ளேன். அல்லாஹ்வின் அருள்மறையை நான் நன்கு கற்றறிந்தவன் என நபியவர்களின் தோழர்களும் அறிவார்கள். எனினும், அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன். நான் தோழர்களுள் சிறப்பானவன் அல்லன்.”
கடைசி வாக்கியம் எவ்வளவு ஆச்சரியம்? அது மட்டுமன்று. மற்றொன்றும் அவர் கூறியுள்ளார்.
“இணையற்றவனும் வணக்கத்திற்கு உரிய ஒரே ஒருவனுமான அந்த அல்லாஹ்வின்மீது ஆணையாக! குர்ஆனில் ஒவ்வொரு சூராவும் எந்த இடத்தில் அருளப்பட்டது என்பதை நான் அறிவேன். அவ்விதம் நான் அறியாத சூரா குர்ஆனில் இல்லை. ஒவ்வொரு ஆயத்தும் எதைக் குறித்து யாரைக் குறித்து அருளப்பட்டது என்பதையும் நான் அறிவேன். ஆயினும் என்னைவிட குர்ஆனை நன்கு அறிந்த ஒருவர் இருந்து, அவர் இருப்பது ஒட்டகப் பயணத்தில் நான் எட்டிவிடும் தொலைவு எனில், நிச்சயமாக நான் பயணம் மேற்கொண்டு அவரிடம் சென்று கற்று அறிவேன்.”
மெய்ஞனாத்திற்குச் சில குணங்கள் உண்டு. அது தன்னடக்கத்தை அதிகப்படுத்தும். ஞானத் தேடலை மேலும் அதிகரிக்கும். அவை அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதிடம் உருவாகியிருந்தன.
oOo
இப்னு மஸ்ஊதுடன் வினாடி வினா நிகழ்ச்சி நடத்துவதைப் போன்ற இனிய வாய்ப்பும் கலீஃபா உமருக்கு ஒருமுறை ஏற்பட்டது..
உமர் இப்னுல் கத்தாப் தம் தோழர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தார். அடர்ந்த இருள். ஒரு வணிகக் கூட்டம் எதிர்ப்பட்டது. கரிய இருளானதால் அவர்கள் யார், யார் என்று முக அடையாளம் தெரியவில்லை. அந்த வணிகக் கூட்டத்தினருள் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதும் இருந்தார்.
அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று தம்முடன் இருந்தவர்களை விசாரிக்கச் சொன்னார் உமர்.
“ஆழ்ந்த இடுக்கிலிருந்து வருகிறோம்” என்று பதில் வந்தது. பதில் அளித்தவர் அப்துல்லாஹ்.
“எங்குச் செல்கிறீர்கள்?” என்று கேட்டார் உமர்.
“பண்டைய வீட்டிற்கு” என்றார் அப்துல்லாஹ்.
உருவகமாய்ப் பதில் வருவதைக் கண்டதுமே உமருக்குப் பொறிதட்டி விட்டது.
“அவர்களுடன் அறிஞர் ஒருவர் இருக்கிறார்” என்று தம்முடன் இருந்தவர்களிடம் தெரிவித்தவர், மேற்கொண்டு சில கேள்விகளைக் கேட்கச் சொன்னார்.
“குர்ஆனில் எந்த வசனம் மிகவும் உயர்ந்தது?”
இரண்டாம் அத்தியாயத்தில் 255ஆவது வசனமான ஆயத்தல் குர்ஸீயை ஓதினார் அப்துல்லாஹ்.
“குர்ஆனின் எந்த வசனம் அதிகமான நீதியைக் கொண்டுள்ளது?”
நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு வழங்கி வாழுமாறும் (உங்களை) ஏவுகிறான். (16:90)
அடுத்து, குர்ஆனின் எந்த வசனம் அதிகமான கருத்து உட்கொண்டது என்று கேட்கச் சொன்னார் உமர்.
எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அ(தற்குரிய பலன)தை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவர் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பலன)தையும் அவர் கண்டு கொள்வார் (99:7-8)
“குர்ஆனின் எந்த வசனம் மிகவும் அச்சுறுத்தத் தக்கது?“
(முஃமின்களே!) மறுமையில் நீங்கள் விரும்பியபடியோ, அல்லது வேதத்தையுடையவர்கள் விரும்பியபடியோ நடந்து விடுவதில்லை – எவன் தீமை செய்கிறானோ, அவன் அதற்குரிய தண்டனை வழங்கப்படுவான்;. இன்னும் அவன் (அங்கு) அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் (தனக்குப்) பாதுகாவலனாகவோ, உதவி செய்பவனாகவோ காண மாட்டான். (4:123)
”குர்ஆனின் எந்த வசனம் மிகவும் நம்பிக்கை அளிக்கிறது?”
“என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறித் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் எடுத்துரைப்பீராக! (39:53)
அனைத்தையும் கேட்ட உமர், அடுத்து கேட்கச் சொன்னார், “உங்களுடன் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் இருக்கிறாரா?”
“ஆம்! இருக்கிறார்” என்று பதில் வந்தது.
இப்னு மஸ்ஊதின் ஞானத்தின்மீது உமருக்கு இருந்த அளவற்ற மதிப்பையும் மரியாதையையும் தெரிவிக்கும் மற்றொரு செய்தியும் உண்டு. ஸைது இப்னு வஹ்பு என்பவர் தெரிவித்துள்ள தகவல் அது.. “ஒருமுறை உமர் மக்கள் மத்தியில் அமர்ந்திருந்தார். நானும் மக்களுள் ஒருவனாய் அமர்ந்திருந்தேன். அப்பொழுது சிறிய மெல்லிய தேகம் கொண்ட ஒரு மனிதர் வந்தார். அவரைப் பார்த்த உமரின் முகத்தில் மகிழ்ச்சி ததும்பியது. ‘ஞானம் நிரம்பிய ஒரு பாத்திரம், ஞானம் நிரம்பிய ஒரு பாத்திரம், ஞானம் நிரம்பிய ஒரு பாத்திரம்’ என்று கூறினார். அங்கு வந்த மனிதர் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ஆவார்.”
“குர்ஆனை அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதிடம் கற்றுக் கொள்ளுங்கள்” என்று நபியவர்கள் சொன்னார்கள் இல்லையா? ஒருமுறை தோழர்களுடன் அவர்கள் அமர்ந்திருக்கும்போது, “நான் இன்னும் எத்தனை காலம் உங்களுடன் இருப்பேன் எனத் தெரியாது. என்னைத் தொடர்ந்துவரும் இருவரை நீங்கள் பின் தொடருங்கள்” என்று அபூபக்ருவையும் உமரையும் நோக்கிக் குறிப்பிட்டார்கள். தொடர்ந்து, “அம்மாரின் அறிவுரைகளுக்கு ஆதரவளியுங்கள். இப்னு மஸ்ஊத் என்ன சொல்கிறாரோ அதில் நம்பிக்கை கொள்ளுங்கள்” என்று தெரிவித்தார்கள்.
இதை நன்கு அறிந்திருந்த உமர் தமது ஆட்சியின்போது விரிவடைந்த இஸ்லாமியப் பகுதிகளுக்கு, தோழர்களுள் சிறந்தவர்களை ஆசான்களாகவும் மார்க்க அறிஞர்களாகவும் அனுப்பி வைத்தார். அவரது பட்டியலில் வெகு முக்கியமான ஒருவர் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத். இராக்கிலுள்ள கூஃபா நகருக்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதையும் அம்மாரையும் அனுப்பிவைத்தவர், அந்நகர மக்களுக்குக் கடிதம் ஒன்று எழுதி அனுப்பினார்.
“கூஃ.பா நகர மக்களே! நீங்கள் அரபியர்களின் தலையும் கபாலமும் ஆவீர்கள். எம்மை இங்கிருந்தோ, அங்கிருந்தோ தாக்குபவர்களை எதிர்த்து நான் தொடுக்கும் அம்புகள் நீங்கள். நான் உங்களிடம் அம்மாரை ஆளுநராகவும் அப்துல்லாஹ்வை ஆசானாகவும் ஆலோகராகவும் அனுப்பியுள்ளேன். அல்லாஹ்வின் தூதருடைய மூத்த தோழர்களுள் அவர்கள் மிகச் சிறந்தவர்கள். அவர்களுக்குச் செவிமடுத்து அவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள். என்னைவிட உங்களுக்கு முன்னுரிமை அளித்து அப்துல்லாஹ்வை உங்களிடம் அனுப்பிவைத்துள்ளேன்.”
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதின் சேவை மதீனாவில் உமருக்குத் தேவைப்பட்ட போதிலும் அவரை அங்கு அனுப்பி வைத்ததை அழுத்தமாகத் தெரிவித்திருந்தார் உமர். கூஃபா நகரின் மக்களுக்குக் கல்வி சேவை புரிவது மட்டுமின்றி, நீதிபதி பதவியும் பைத்துல்மாலின் நிர்வாகப் பொறுப்பும் அவருக்கு அளித்தார் உமர். அதற்காக அவருக்கு அளிக்கப்பட்ட ஊதியம் நாளொன்றுக்கு கால்வாசி ஆடு. மாதம் 100 திர்ஹம்.
அல்லாஹ்வின் செய்தியை நன்கு புரிந்துகொண்டு அறிவுத் திறனுடன் கொண்டுசெல்லும் அடுத்தத் தலைமுறையை உருவாக்கக் கடுமையாக உழைத்தார் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத். அவரிடம் பயின்றவர்கள், அவருடன் நேரத்தைச் செலவிட்டவர்கள் ஆகியோரின் மனத்தில் அவர் ஏற்படுத்திய தாக்கம் வெகு ஆழம். அந்நகருக்கு வருகை புரியும் வெளியூர்க்காரர்கள் தங்குவதற்கு இடமில்லாவிட்டால் அவர்கள் அனைவரும் அவரது வீட்டின் விருந்தாளிகள்.
மக்களுக்குச் சலிப்போ, அயர்வோ ஏற்பட்டு விடக்கூடாது என்று கவனமுடன் வாரம் ஒருநாள் வியாழன்று மட்டுமே தமது உரை நிகழ்வுகளை அமைத்துக் கொண்டார் இப்னு மஸ்ஊத். ஆனால் மக்களோ அறிவு செறிந்த அவரது பேச்சில் காந்தமாய்க் கவரப்பட்டு மேலும் மேலும் என்று ஏங்கினர். ஒருவர் கேட்டே விட்டார். “தாங்கள் தங்களது அறவுரைகளை எங்களுக்கு நாள்தோறும் நிகழ்த்த வேண்டுகிறேன்.”
“என்னைத் தடுப்பது ஒன்றுமட்டுமே. நான் தங்களுக்குச் சலிப்பு ஏற்படுவதை வெறுக்கிறேன். நபியவர்கள் எங்களுக்குப் போதிக்கும்போது நாங்கள் சலிப்பேற்படாமல் குறிப்பிட்ட நேரங்களைத் தேர்ந்தெடுத்து நிகழ்த்தியதுபோலவே நான் உங்களுக்குச் செய்கிறேன்.”
அவரிடம் இஸ்லாம் சம்பந்தமான கேள்விகளும் சந்தேகங்களும் கேட்கப்பட்டால், அவரது அறிவுக்கு உட்பட்டு மிகவும் துல்லியமான பதில் வரும். அப்படிப் பதில் தெரியவில்லையா, மிகத் தெளிவாக ‘எனக்குத் தெரியாது’ என்று சொல்லிவிடுவார். “யாருக்கு ஒரு விஷயத்தைப் பற்றிய ஞானம் உள்ளதோ அவர் அதைப் பற்றிப் பேசலாம். அவருக்குத் தெரியாதபோது, ‘அல்லாஹ்வே முற்றும் அறிந்தவன்’ என்று சொல்லிவிட வேண்டும்’ என்பது அவரது கருத்து.
நபியவர்களின் ஹதீதை அறிவிக்கும்போது “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை, சொன்னதை நான் கேட்டேன்” என்று சொல்லும்போது அவரிடம் ஏற்படும் நடுக்கமும் கவலையும் அப்பட்டமாகத் தெரியும். அப்படி அறிவிக்கும் தருணங்களில் அவரது முன்நெற்றி வியர்த்ததைத் தாம் கண்டதாக அம்ரு இப்னு மைமூன் என்பவரின் அறிவிப்பும் உள்ளது.
ஏன் அப்படி? அச்சம்! ஏதும் மறதியினால் நபியவர்களின் வாசகத்தை எழுத்து மாற்றியோ, வார்த்தை மாற்றியோ சொல்லிவிடுவோமோ என்ற பேரச்சம். இன்று ஹதீத்களை நாம் கையாளும் முறை வேடிக்கையாக இல்லை?
oOo
முஸைலமாவின் பிரச்சினையை கலீஃபா அபூபக்ரு முடித்து வைத்தார் என்று பார்த்தோமல்லவா? உதுமான் இப்னு அஃப்பான் ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாக இருந்தபோது, கூஃபா நகரில் சிலர் மீண்டும் அந்தப் பிரச்சினைக்கு உயிர் கொடுக்கப் பார்த்தனர். இஸ்லாத்திலிருந்து வெளியேறிய அவர்களை மடக்கிப் பிடித்தார் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத். மதீனாவில் உள்ள கலீஃபாவுக்குக் கடிதமெழுதி விஷயத்தைத் தெரிவித்தார். பதில் அனுப்பினார் கலீஃபா.
அவர்களுக்கு இஸ்லாத்தின் உண்மையை எடுத்துச் சொல்லி மீண்டும் வாய்ப்பு அளியுங்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை, முஹம்மது அவனுடைய தூதர் என்று ஏற்று, முஸைலமாவைப் பொய்யன் என்று நிராகரித்து அவர்கள் மீண்டும் இஸ்லாத்தினுள் முழுமையாக நுழைந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். மாறாக முஸைலமாவின் பொய்யை மெய் என்பதில் நிலைத்திருந்தால் அவர்களது தலை கொய்யப்பட வேண்டும்.
அந்தக் குழப்பக்காரர்களிடம் சென்றார் அப்துல்லாஹ். இதைத் தெளிவாகக் கேளுங்கள் என்று அவர்களுக்கு விஷயத்தை அழகாக எடுத்துச் சொன்னார். சிலருக்குத் தெளிவு ஏற்பட்டது. மீண்டனர். மற்றவர்கள்? முண்டங்களாகி மாண்டனர்.
தமது இறுதிக் காலத்தில் கூஃபாவிலிருந்து மதீனாவுக்குத் திரும்பிவிட்டார் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத். மெதுமெதுவே அவரது உடல்நிலை சுகவீனம் அடைந்து தமது ஆயுளின் இறுதிக் கட்டத்தில் இருந்தவரை நலம் விசாரிக்க அவரது இல்லத்திற்குச் சென்றார் கலீஃபா உதுமான்.
“ஏன் இந்தப் பிணி?” என்று விசாரித்தார்.
“எனது பாவங்களினால்” என்று பதில் வந்தது அந்தத் தோழரிடமிருந்து. நபியவர்களுடன் ஒட்டி உறவாடி வாழ்ந்து, குர்ஆனையும் நபிவழியையும் சுவாசமாகவே ஆக்கிக் கொண்ட அவர், என் பிணி என் பாவங்களினால் என்கிறார். எனில் நாமெல்லாம்?
“உமக்கு என்ன உதவி வேண்டும்?”
“என் இறைவனின் கருணை.”
“உம்முடைய உதவிச் சம்பளத்தைப் பெறாமல் நீர் நிராகரித்து அது பல ஆண்டுகளாக அரசுக் கருவூலத்தில் கிடக்கிறதே. அதை நான் உமக்கு அளிக்க விடாமல் ஏன் தடுக்கிறீர்?”
தேவைக்குமீறி வசதிகளை அமைத்துக் கொள்ளாமல் தன்னிறைவுடன் எளிய வாழ்க்கை வாழ்ந்த இப்னு மஸ்ஊத், “எனக்கு அதன் தேவை ஏற்படவில்லை” என்றார்.
“ஆனால் அவை உம்முடைய மகள்களுக்காவது சொத்தாகச் சென்று சேருமே”
“என்னுடைய மகள்கள் வறுமையில் பீடிக்கப்படுவார்கள் என்று அஞ்சுகிறீர்களா? நான் அவர்களைச் சூரா அல்-வாகியாவை ஒவ்வோர் இரவும் ஓதும்படி அறிவித்திருக்கிறேன். ஏனெனில் நபியவர்கள், ‘ஒருவர் ஒவ்வோர் இரவும் அல்-வாகியா சூராவை ஓதிவந்தால் அவர் வறுமையை அனுபவிக்கமாட்டார்’ என்று கூறியதை நான் செவியுற்றிருக்கிறேன்” என்று அதையும் நிராகரித்தார் அவர்.
ஹிஜ்ரி 32ஆம் ஆண்டு. இவ்வுலகில் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதின் வாழ்க்கை முடிவிற்கு வந்தது.
ரலியல்லாஹு அன்ஹு.
oOo
இன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்!
-நூருத்தீன்
சத்தியமார்க்கம்.காம்-ல் 04 ஆகஸ்ட் 2015 அன்று வெளியான கட்டுரை
Photo by Malik Shibly on Unsplash