வேதங்களின் அக்கிரமம் – 1

by பா. தாவூத்ஷா

“நிச்சயமாகவே ஆண்டவன் அக்கிரமக்காரர்களை நேசிக்கமாட்டான்”—(குர்ஆன்)

தோழர்காள்! சுவாமி தயானந்தர் தம்முடைய புத்திக்கு வேண்டுவனவே போல் ச.பி 14-ஆவது அத்தியாயம் 35-ஆவது வாக்கியத்தில் எமது குர்ஆனே மஜீதைப் பற்றிக் கண்ட கண்டவாறெல்லாம் ஆக்ஷேபஞ் செய்து அறைகிறதாவது:

“உன்னிடம் சண்டை செய்பவர்களிடம் அல்லாஹ்வின் பாதையில் சண்டை செய். எங்குப் பார்த்தாலும் அவர்களைக் கொன்றுவிடு. கொல்லுவதைவிடக் குப்று கெட்டதாயிருக்கிறது. குப்றெல்லாம் தொலைந்து, தீன் (மார்க்கம்) அல்லாஹ்வுக் காகும்வரை சண்டைசெய். அவர்கள் எவ்வளவு துன்பப்படுத்துகின்றார்களோ அவ்வளவே நீயும் அவர்களை துன்பப்படுத்து—(2:190, 191, 192, 193).”

“குர்ஆனில் இவ்விஷயங்கள் இல்லாவிடில், முகம்மதியர்கள் பிற மதத்தாரிடம் இவ்வளவு கொடுமையுடன் நடந்திருக்க மாட்டார்கள்; பல நிரபராதிகளை முகம்மதியர்கள் மதத்தின் பெயரால் கொன்றனர். யாதொரு குற்றமுமின்றி ஒருவனைக் கொல்லுவது மஹா பாபமாயிருக்கிறது; அவர்களிடம் இஸ்லாத்தை ஒப்புக்கொள்ளாமலிருப்பது குப்றாயிருக்கும். குப்றானவர்களை எல்லாம் கொல்வது நல்ல நியாயம் என்று கருதுகிறார்கள் போலும். அஃதாவது, ‘யார் எமது மார்க்கத்தைக் ஒப்புக்கொள்ளவில்லையோ, அவரை நாங்கள் கொன்று விடுவோம்,’ என்று கூறுகின்றனர்; இப்படியே அவர்கள் செய்தும் வருகின்றனர். இங்ஙனம் இவர்கள் கடவுட் சண்டையிட்டு அரசியல் செல்வாக்கையும் இழந்து நாசப்படுத்தி விட்டனர்.1 இவர்களது மார்க்கம் அன்னிய மார்க்கங்களின்மீது கொடுமை புரிவதையே போதிக்கின்றது. இவர்களிடத்தில் ஒன்று கேட்க வேண்டும்: நமது வீட்டில் புகுந்து திருடியவர் வீட்டில் நாமும் புகுந்து திருடவேண்டுமா? ஓர் அறியாதவன் நம்மை ஏசுவானாயின், நாமும் அவனை ஏசவேண்டுமா? இது தான் அறவழியோ? இவ்விதம் கடவுளும் அவரது தீர்க்கதரிசிகளும் கூறுதல் கூடுமா? இங்ஙனம் சுயநலப் பிரியர்களும் முட்டாள்களுமே அல்லவா கூறுவார்கள்?”

51, 52, 8, 5-ஆவது வாக்கியங்களில் மேற்கூறிய ஆக்ஷேபங்களையல்லாமல், மேலும் அவர் சொல்லுவதாவது:— “இத்தகைய போதனைகள் அகற்றத்தக்கவையாகும். இத்தகைய புத்தகமும், இத்தகைய தீர்க்கதரிசியும், மதமும் யாருக்கும் நன்மையைத் தாரா. உலகத்தில் தீமையை வளர்க்கும் இவர்கள் இல்லையேல் உலகத்திற்கு நன்மை. அறிஞர்கள் இத்தகைய சிறுமை மதங்களைத் தள்ளி வேதமதத்தைக் கைப்பற்றல் நலம். அதில் ஆரியமார்க்கம், அதாவது, நல்லோர்களின் நேரான வழியின்மீது நடப்பதற்குண்டான நேர்வழி கற்பிக்கப்படுகின்றது. மேலும், கெட்டொர்களின் கூட்டுறவினின்றும் அப்புறமாயிருக்கும்படியாய் உபதேசிக்கிறது.” இன்னமும் இதுவே சகல மதங்களினின்றும் மேலானதாயிருக்கிறது. இதுமாத்திரமன்று.

பிறகு 77, 79, 81, 87, 125, 139, 140, 142, 144-இலும் மற்றும் அனேக இடங்களிலும் மேற்கூறியபடி பலவாறாய் வாயால் சொல்லத் தகாதவைகளையெல்லாம் கையால் வரைந்து தம்முடைய புத்தியின் போக்கையும், நோக்கையும், தமது விளக்கத்தையும், ஒழுக்கத்தையும், மரியாதையையும், மேதையின் பக்தியையும், உண்மையையும், உயர் நியதியையும், உலகத்தினர் முன்னிலையில் காட்டிவிட்டார். எனவே, மேற்கூறிய சுவாமி அவர்களின் உண்மைகளையெல்லாம் இனிமேல் நம் நண்பர்கள் மிக நன்றாகத் தெரிந்து கொள்வார்கள். ஆதலின், உண்மையில் வேதமும், வேததர்மத்தின் ரிஷிகளும், அறிஞர்களும், மேதாவிகளும் இந்த சுவாமிஜீயின் புத்தியின் பிரகாரமே இருந்திருப்பார்களாயின், அவர்கள் நம்மை எவ்வளவு அக்கிரமாகாத் தாக்கியபோதிலும், அது மிக்க நன்றே என்று நாம் பொறுத்துக்கொள்வது நம்மீது கடமையாகும்.

நேயர்காள்! சுவாமிஜீ குர் ஆனே மஜிதிலிருந்து எடுத்தெழுதிய வாக்கியம் தங்கள் கண்முன் இருக்கின்றது. அதில் காணப்படுவதாவது: “அல்லாஹ்வின் பாதையில் யுத்தஞ்செய்ய வேண்டும். யாருடனெனின், அவர்கள் நுங்களை (இஸ்லாமாயிருக்கும் காரணத்தை முன்னிட்டு)க் கொன்றும், அடித்தும் வருவார்கள். (இதனால் உங்களுக்கும் அனுமதி இருக்கின்றது. அஃதாவது) அவர்களை நீங்கள் எவ்விடத்தில் கண்டுகொள்வீர்களோ, அவ்விடத்திலேயே கொலை செய்யுங்கள்.(அஃதாவது, எந்த இடத்தில் எப்பொழுது அவர்கள் உங்களை எதிர்த்துக் கொல்ல முயல்வார்களோ, அப்பொழுது தற்காப்புக்காக நீங்களும் அவர்களைக் கொல்ல முயற்சிப்பீர்களாக).”

பதின்மூன்று ஆண்டுகள்வரை முஸல்மான்கள் விக்ரஹ ஆராதனைக்காரர்களான வேதமத மனிதர்களிடம் கணக்கற்ற கஷ்டங்களைச் சகித்துக் கொண்டிருந்தனர்; மேலும் கொல்லப்பட்டும் வந்தார்கள். ஆனால், ஒரு மயிரளவும் எதிர்த்து இடர் செய்யாமலிருந்தனர்.

ஏனெனின், இந்தக் கட்டளையைப் பெறுவதற்குமுன் பதின்மூன்று ஆண்டுகள்வரை முஸல்மான்கள் விக்ரஹ ஆராதனைக்காரர்களான வேதமத மனிதர்களிடம் கணக்கற்ற கஷ்டங்களைச் சகித்துக் கொண்டிருந்தனர்; மேலும் கொல்லப்பட்டும் வந்தார்கள். ஆனால், ஒரு மயிரளவும் எதிர்த்து இடர் செய்யாமலிருந்தனர்.

“கொல்லுவதை விடக் குப்று கெட்டதாயிருக்கிறது.” ஒரு சமயம் சுவாமிஜீயின் வேதங்களில் குப்று கொல்லுவதைக்காண மேலானதாய் இருக்கலாம்! இதற்காகவே யஜூர் 5.22-இல் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது: “ஏ மனிதனே! எவ்விதமாக நான் கெட்டவர்களின் கழுத்தை வாங்குகிறேனோ, அதேபோல் நீயும் வாங்குவாயாக.” (என்ன குற்றம் செய்ததற்காக? வேத தர்மத்தின் பிரகாரம் காபிறாய் இருப்பதா?) மேலும் யஜூர் 17.7ம் பார்க்க: “எனக்கு வேண்டுவதாவது, நான் முயற்சி செய்து கெட்டவர்களின் வேரையே அடியோடு கல்லி எடுத்து விடவேண்டும். மேலும் யார் வேததர்மத்தை விட்டு நீங்கியிருக்கின்றார்களோ (அஃதாவது, எந்த ஆரியன் வேத தர்மத்தின்படி இல்லையோ அவன் அவ் வேதத்தின்படி காபிறாவான்) அவர்கள் அநியாயக்காரர்களாகவும், பகைவர்களாகவும் இருக்கின்றனர். இவர்களை நல்ல விதமாய் அடி வேரோடு கல்லிவிட வேண்டும்.”

என்ன மஹா ராஜாவே! இப்பொழுது உண்மையை உரைப்பீராக. எந்த மனிதர்கள் தங்களைக் கொல்லுவதற்காக ஒரு விரலையும் உயர்த்தவில்லையோ, தங்களுக்கு யாதொரு கஷ்டத்தையும் கொடுக்க முன்வரவில்லையோ, அந்த மனிதர்கள் வேததர்மத்துக்கு மாத்திரம் முரணாயிருக்குங் காரணத்திலே அவர்களைத் தங்கள் பகைவர்களாகக் கருதி, அவர்களுடைய கழுத்துக்களை வெட்டுவதுமின்றி, மற்றவர்களுக்கும் அவ்வாறு தலைகளை அறுக்கும்படியாய் உத்தரவும் கொடுத்துவிட்டீர்கள். இஃது ஒரு சமயம் நீதமாயிருக்கலாம். ஏனெனின், இதை ஈசுவரன் வாக்கென்று சொல்லுகிறீர்கள். (வெட்கமற்ற தன்மையென்பது உலகத்தில் இதைக்காட்டினும் வேறு ஏதாவது ஒரு பொருள் உண்டாயிருக்கிறதா?)

பரிசுத்தக் குர்ஆனின் கட்டளையின் பிரகாரம் எந்தக் காபிர் முஸல்மானைக் கொல்லுவானோ, அவனையே முஸல்மானும் கொல்ல வேண்டும். ஆனால், வேதத்திலோ, வேதத்தையுடையவனைக் கொல்லுவானேயாயின், அப்பொழுதுதான் அவனை வேதத்தையுடையவன் கொல்ல வேண்டுமென்ற குறிப்புக் கிடையாது. வேத தர்மத்துக்கு மாத்திரம் அவன் முரண்பட்டவனாயிருப்பின், அதுவே போதும். அவன் கொன்றிருக்கவும், துன்பத்தை இழைத்திருக்கவும் வேண்டிய அவசியமில்லை. வேத தர்மத்துக்கு முரண்பட்டால், உடனே அவன் தலையை வீசியெறிய வேண்டியதுதான்.

“பின்பு அவர்களிடம் குப்ரில்லாமற் போய் தீன் அல்லாஹ்வுக்காகும் வரை சண்டை செய்துகொண்டே இருங்கள். அவர்கள் எவ்வளவு துன்பத்தைக் கொடுப்பார்களோ, அதேபோல் நீங்களும் அவர்களுக்குக் கொடுப்பீர்களாக.” ஆண்டவனே! சகல தூய்மையும் உனக்கே உண்டாகுக. ஆ! என்னவிதமாகக் கருணாநிதியும், அருளாளனும் அன்புடையோனுமாகிய நீதத்தையுடைய ஒப்பும் உயர்வுமற்ற அல்லாஹ் அருளிச் செய்திருக்கிறான்!

“நிச்சயமாகவே அவன் சச்சரவு செய்பவர்களை நேசிக்க மாட்டான்.”

“நிச்சயமாகவே அவன் வரம்பு கடப்பவர்களை நேசிக்க மாட்டான், சினேகிதர்களாயினும், பகைவர்களானாலுஞ் சரியே.”

“உண்மையாகவே அவன் அநியாயக்காரர்களிடம் பிரியங் கொள்ளுகிறானில்லை.”

அஃதாவது, எந்த மனிதனையும், அவன் மார்க்கத்துக்கு மாத்திரம் முரணாயிருக்கும் காரணத்தாலும், அல்லது அவன் மார்க்கமற்றவனாய் இருப்பானாயினும், அல்லது பகைவனாய் இருப்பானாயினும், இவைகளின் காரணத்தினாலும் கொல்லாதீர்கள், என்பதேயாம். அவனுக்கு அநியாயத்தையும், கொடுமையையும், சச்சரவையும் இழைக்காதீர்கள்.

ஆனால், யஜூர் 15.17-ஐப் பார்க்க: “நாம் யாரிடத்தில் பகைமை வைக்கிறோமோ அவரை, நம்மீது யார் பகைமை கொள்கிறாரோ அவரைப் புலியின் வாயுள் போட்டுவிட வேண்டும். மேலும் அரசனும் அவனைப் புலியின் வாயில் போட்டுவிடக் கடவான்.”

ஆஹா! என்ன விதமான நீதம்! பகைமையின் காரணத்தினால் மட்டும் ஒருவன் கொல்லப்பட வேண்டுமாம்; அதுவும் சாதாரணமாயன்று; புலியின் வாயில் இடப்பட்டுக் கொல்லப்பட வேண்டும். இதில் கவனிக்க வேண்டியதும், இன்பம் தரத் தக்கதுமான விஷயம் யாதெனின், யார் நம்மிடம் பகைமை கொள்ளுகிறானோ அவனைப் புலியின் வாயில் தள்ளிவிட வேண்டுமென்பதும், நாம் யாரிடம் பகைமை கொள்ளுகிறோமோ அவனையும் புலியின் வாயில் போட்டுவிட வேண்டும் என்பதுமேயாம்.

-பா. தாவூத்ஷா

அத்தியாயம் 2 தொடர்கிறது…

படம்: அபூநூரா

தட்டச்சு: யூனுஸ் அஹ்மது 


1. ஹிந்து அரசாங்கங்களுங்கூட இதனாலேயே அழிந்திருக்கலாமன்றோ? கபீர்.


 

<<முந்தையது>>     <<அடுத்தது>>

<<நூல் முகப்பு>>

 

Related Articles

Leave a Comment