வேதங்களின் துர்ப்போதனை – 4

“ஆரியா கெஜட்”டின் மாஜீ ஆசிரியரான மிஸ்டர் ஷௌபாத்லால் எம். ஏ., என்பவர் உபநிஷத்துக்களுக்கு மொழிபெயர்ப்புச் செய்துகொண்டு வரும்போது இவ்வாறு எழுதுகிறார்: பிரஹதாரண்யக உபநிஷத்தின் 6-ஆவது பிரமாணத்தின் 4-ஆவது உட்பிரிவின் 3-இல் இருந்து 5 வரையும், 7-இல் இருந்து 12-வரையும்,

18-இல் இருந்து 19, 21, 23 வரையும் உண்டான மந்திரங்களை மொழிபெயர்ப்பதென்றால், அவற்றின் அசங்கதமான அசுசியின் காரணத்தால் கையும் நடுங்குகின்றது; இதனால் அவை அடியோடு விட்டு விடப்பட்டன. ஆங்கில மொழிபெயர்ப்பாளிகளுங்கூட இந்த இடங்களுக்கருகில் வந்தவுடன் அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்காமல் லத்தீன் பாஷையில் மொழிபெயர்த்துள்ளார்கள்.1 இன்னமும், ஹிந்தி பாஷையில் மொழி பெயர்த்த ஹிந்துக்களும் இந்த இடத்தில் ஸம்ஸ்கிருதத்தில் உள்ளவண்ணமே மூலத்தை எழுதிவிடுகிறார்கள். இவ்விதமாகவே உர்துபாஷையில் மொழிபெயர்ப்பவர்களுங்கூட, பார்ஸி பாஷையில் அந்த ஸ்லோகங்களை எழுதி யிருக்கிறார்கள். இவ்வண்ணமே நாமும் அம்மந்திரங்களை மொழிபெயர்க்காது விட்டுவிட்டோம். அவற்றை மொழி பெயர்ப்பதற்கு மனமும் நாணுகின்றது; கண்களும் கூசுகின்றன; கைகளும் நடுங்குகின்றன. அவற்றை அறிந்துகொள்ள விரும்புவோர் மேற்கூறிய ஸம்ஸ்கிருத உபநிடதத்தை வாங்கிப் படித்துக்கொள்வார்களாக. அவற்றையெல்லாம் மொழிபெயர்க்க ஆளுஞ்சாதியாரின் ஆங்கிலப் பீனல்கோடும் இடந்தரமாட்டாதென் றஞ்சுகின்றோம்.

இன்னமும், ஷௌபாத்லால் யஜுர் வேதம், 28:32-இன் பிரகாரம் ஒரு தேவி செய்த காரியங்களை வரைந்துள்ளார். அவற்றையும் நீங்களே பார்த்துக்கொள்வீர்களாக. மேலும் அதே வேதத்தின் சாந்தோக்ய பிரபாடகத்தின் 4-ஆவது காண்டம், 4-ஆவது உட்பிரிவு 1-இல் இருந்து 6 வரையுள்ள மந்திரங்களுக்கு மஹரிஷி சுவாமி தயானந்த்ஜீயே பாஷ்யம் செய்திருக்கிறார். அதன் சாராம்சத்தையும் ஒரு நமூனாவாகக் கருதி ஹிந்தி பாஷையிலுள்ளதைத் தாங்களே நேருக்கு நேராகப் பார்த்துக்கொள்ளுங்கள். மற்றும் ருக், சாமம், அதர்வண வேதங்களின் பொக்கிஷங்களை உங்கள்முன் நன்றாக நாம் திறந்துவைக்க விரும்பவில்லை. ஏனெனின், பெரும்பாலும் யஜுர் வேதத்தினின்று நாம் எடுத்தெழுதி யிருப்பதே இச்சிறு அத்தியாயத்தின் எல்லையைக் கடந்து விட்டதென்று அஞ்சுகிறோம். இன்னமும், இப்படிப்பட்ட விஷயங்களில் நம்முடைய ஒப்பும் உயர்வுமற்ற காலங்களைக் கழிப்பதும் எமக்கு வீணென்றே புலப்படுகிறது.

ஆனால், சுவாமி தயானந்த சரஸ்வதி சாஹிப் தம்முடைய வேதங்களேதாம் மிகப் பரிசுத்தமானவை யென்றும், உலகத்திலுண்டான ஏனை மதங்களும் அவற்றின் அறிஞர்களும் அசுத்தமானவர்களென்றும் அறியாதவர்களென்றும் அநியாயக்காரர்களென்றும் கண்மூடித்தனமாய்க் கழன்றுவருவதால், பொது ஜனங்களாகவுள்ள நூற்றுக் கணக்கான ஹிந்துக்களும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் சீக்கியர்களும் பௌத்தர்களும் ஜைனர்களும் தயானந்தரின் வலையில் சிக்குண்டு திக்குமுக்கடைந்து வெளியில்வர வழிதெரியாமல் தடுமாற்றமுறுவார்கள் என்றஞ்சியே நாம் நமது மேலான நோக்கங்களை வீணாகக் கழிக்காமல் இதில் சிறிது காலத்தைப் போக்கத் தலைப்பட்டோம்.

அருமந்த சோதரர்காள்! எம்முடைய ஆருயிரனைய அரிய சினேகிதர்காள்! இன்னமும், மேற்கூறப்பட்டனவே போன்ற அனேக மந்திரங்களை எடுத்து வரைந்து தங்கள் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த முடியும்; ஆனால், அப்படிச் செய்வதென்றால் ஒரு பெரிய கிரந்தமாகவே அது வந்து முடியும். ஆயினும், ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறே பதமென்பதேபோல் வேதங்களினின்றும் அந்தப்புர இரகசியமான ஏதோ சிலவற்றைமட்டும் மாதிரிக்காக இந்நூலின்கண் எடுத்தெழுதினோம். இப்பொழுது நியாயம் எவ்விடத்திலிருக்கிற தென்பதைப்பற்றி வினவுவோமாக. மஹரிஷி தயானந்தர் தம்முடைய மனம்போனபடியெல்லாம் குர்ஆனெ மஜீதைக் கொடியதென்றும் பரிசுத்தமற்றதென்றும் துர்ப்போதனை யுடையதென்றும் மற்றும் பலவாறாகவும் தமது “சத்தியார்த்த பிரகாச”த்தில் முடிவு கட்டிவிட்டு முஸல்மான்களின் ஹிருதயங்களைக் கண்டதுண்டங்களாகச் செய்துவிட்டார். இன்னமும், தயானந்தர் எடுத்தெழுதி ஏசியிருப்பதையும் இந் நூலின் முன்னுரையில் நல்லவிதமாய் விவரித்துக் காட்டியுள்ளோம்.

எனவே, சுவாமி தயானந்தர் தம்முடைய வேதங்களில் இப்படிப்பட்ட ஆபாஸ மொழிகளையெல்லாம் அளவு கடந்து நிரப்பிக்கொண்டு, இத்துணை மனோதைரியமாய் யாருக்குமஞ்சாமல் வேதங்களைப் புகழ்ந்துகொண்டு, வெளியில் கிளம்பியதன் தாத்பரியம் எங்களுக்குத் தெரிந்தவரையில் இரண்டு விதமாகவேதான் காணப்படுகின்றது. இவர் சத்தியார்த்த பிரகாசத்தை எழுதும்போது தம் வேதங்களின் இரகசியத்தை அறவே அறிந்துகொள்ளாதவரா யிருந்து இவ்வாறு எழுதியிருக்கலாம்; இதுதான் உண்மை யென்று புலப்படுகிறது. ஏனெனின், இவர் தமது சத்தியார்த்த பிரகாசத்தில் ஒவ்வொரு பாகத்துக்கும் நியாயப் பிரமாணமாக வேதாதாரத்தை எடுத்துக் காட்டுவதை விடுத்து, மனுவின் சுலோகங்களையே அதிகமாகக் கொண்டுவந்து நிரப்பிவைத்திருக்கிறார்; ஆனால், மனு நூலை அவரே சரியான ஆதார கிரந்தமென்று ஒத்துக் கொள்ளாதவராயும் இருந்திருக்கிறார்.

இரண்டாவதாக, தயானந்தருக்குத் தமது வேதங்களின் இரகசிய ஊழல்களெல்லாம் நன்றாகத் தெரிந்திருக்குமாயின், அவர் விடாப் பிடிவாதத்துடனும் அக்கரமத்துடனுமேதான் அநியாயமாக இஸ்லாமார்க்கத்தை ஏசத் துணிந்திருக்க வேண்டுமென்று ஊகித்துக்கொள்ளுகிறோம். எனக்கு இரண்டு கண் குருடாய் விட்டபோதிலும், எதிரிக்கு ஒரு கண் குருடானால் அதுவே போதுமென்று கூறப்படும் கதையைப்போலும், என் மூக்கு அறுபட்டாலும் எதிரிக்குச் சகுனத்தடை ஏற்பட்டால் போதுமென்று சொல்லப்படும் கதையைப் போலும் தம்முடைய நான்கு வேதத்திலும் மகாமேருவைக் காட்டினும் மிகமிகப் பெரிதான குறைபாடுகளையெல்லாம் நிரப்பி வைத்துக்கொண்டு, இஸ்லாத்தைப்பற்றித் தூஷித்தெழுத நெஞ்சந் துணிந்துவிட்டார். ஏனெனின், இவ்வுலகத்திலுள்ள எல்லா அக்கிரமங்களுக்கும் அநீதங்களுக்கும் உறைவிடமாகிய தம்முடைய வேதங்களை உற்று நோக்காது நமது குர்ஆனெ கரீமையும் மற்றும் பல மதவாதிகளின் வேதங்களையும் வாயில் வந்தவாறெல்லாம் மிகமிக இழிவாக எழுதித் தம்முடைய மூர்க்க சுபாவத்தையும் மூதறிவின்மையையும் பக்ஷபாதத்தையும் பிடிவாதத்தையும் நல்லவிதமாக அவர் எடுத்து விளக்கியிருக்கின்றார்.

அவருடைய வேதங்களுக்கும் நமது குர்ஆன் ஷரீபுக்கு மிடையில் வானத்துக்கும் பூமிக்குமுள்ள வித்தியாசம் காணப்படும்போது இவ்வாறு தயானந்த் சாஹிப் எழுதத் துணிந்ததுதான் ஆச்சரியத்துக்கெல்லாம் மகா ஆச்சரியமாய்க் காணப்படாநின்றது. எனவே, பண்டிட் சுவாமிஜீ தம்மையொரு கற்றறிந்த கல்விமானென்றே கூறிக்கொள்வதே அதிக வெட்கத்துக் கிடமானதாய்க் காணப்படுகிறது. இப்படிப்பட்ட தயானந்தரை முன்மாதிரியாய்க் கொள்வோரும் மூர்க்கத்தனத்தினின்றும் பிடிவாதத்தினின்றும் நீங்கியிருத்தல் சாலுமோ? அஃதொருபோதும் சாலாது.

இனி எமது ஆரிய சகோதரர்களிடத்தில் நாம் கேட்க வேண்டிய தொன்றுண்டு: உங்கள் முன்னிலையில் வேதங்களிலிருந்தும் குர்ஆனெ கரீமிலிருந்தும் சிலவற்றை மேலே எடுத்துக் காட்டியுள்ளோம். அவற்றை நல்லவிதமாய் ஆராய்ந்து பார்த்து, தெய்வத்துக்குப் பொதுவாய் நியாயத்தைக் கண்டுபிடிப்பீர்களாக. மிகக் கொடியதாயும் அதிக ஆபாஸமாயும் அமைந்திருப்பது எமது குர்ஆன் ஷரீபா? அல்லது உங்கள் வேதமா? குர்ஆனெ கரீமின் உண்மையான தத்துவங்களை உணர்ந்துகொள்ளப் பிரயத்தனப்படாமலே சுவாமி தயானந்தர் இவ்வாறு அபரிசுத்தமான வார்த்தைகளைக்கொண்டு எமது வேதத்தை தூஷித்து எழுத முற்பட்டது நியாயமாகுமா? இதை விளக்கிக் காட்டவே இந்நூலில் சிறிதளவு இதுகாறும் எடுத்தெழுதினோம். 2

எனவே, தங்கள்முன் கிடைத்த விஷயங்களைக் கொண்டு எது நல்லது? எது கெட்டது? என்னும் உண்மையை நியாயத்துடனேயும் தர்மத்துடனேயும் இப்பொழுது கூறுவீர்களாக. அதன்பின்பு ஆரிய வேதங்கள் உங்களுக்கு எவ்வளவு தூரம் நேர்வழியைக் காட்டியிருக்கிற தென்பதையும் உற்றுணர்ந்து பார்ப்பீர்களாக. உங்கள் வேதங்களின் காரணத்தினால்லவோ உலகத்திலுண்டான சகல வேதங்களுடனேயும் அதன் பரிசுத்த ஸ்தாபகர்களுடனேயும் சண்டைகளும் சச்சரவுகளும் செய்யும்படியான அவசியம் ஏற்பட்டிருந்தது. ஆதலின், உங்கள் ஆரிய வேதங்களின் அந்தரங்கத்தில் என்ன விஷந்தான் இருக்கிறதென்பதை எடுத்தோதுவீர்களாக. இதைப்பற்றி இன்னும் சமயம் வாய்க்கும்போது எழுத முற்படுவேம். இறைவனருளால் ஈண்டு இவ்வளவுடன் நிறுத்திக்கொள்ளுகிறோம். -ஆமீன்.

வேதங்களைப்பற்றிய குருபால்ஸிங்ஜீயின் அபிப்ராயம்

நான் பார்க்கிறேன்: சுவாமிஜீ ஒருபோதும் உண்மையை உசாவுபவராய் இருந்தனரில்லை; உண்மையை உணர ஆற்றலுடையவராயும் அவர் இருந்தனரில்லை. ஆனால், அவரை வேதங்களின் பூதங்கள் சுற்றிக்கொண்டிருந்தன. அவ் வேதங்களில் ஏதோ சில நல்ல வார்த்தைகளே யல்லாமல் வேறொரு மண்ணும் இல்லை. ஜைனர்களும் பௌத்தர்களும் வேதங்களின்மீது எவ்விதமான தீர்மானம் செய்திருக்கிறார்களோ, அதுவே மிகவும் பொருத்தமும் உண்மையுமா யிருக்கிறது. ஸ்வாமிஜீ தமது மனச்சாந்திக்காகவும் தம்முடைய தோற்றத்தின் மகிமைக்காகவுமே வேதங்களின் தாழ்ந்த அந்தஸ்தை உயர்த்தி, ஒரு பெரிய உயர்ந்த அந்தஸ்துள்ள கோட்டையாய் அதை நிர்மாணித்து விடலாமென்ற எண்ணங்கொண்டு எத்துணையோ கஷ்டப்பட்டு வேலைசெய்தார். ஆனால், அஃது ஒருபோதும் முடியாத விஷயமாகவே முடிவடைந்துவிட்டது.

இறுதியில் சுவாமிஜீயின் முயற்சியினால் வேதங்களின் மர்மங்களெல்லாம் வெட்டவெளிச்சமாக வெளிப்பட்டு வந்து, அவை வேதமாவது எங்ஙனம்? சாதாரணமான ஒரு கிரந்தமாகவம் இருத்தல் முடியாவென்றே உலகத்தார் நன்கு விளங்கிக்கொண்டனர். ஏனெனின், இவரது முயற்சிக்குமுன் ஆரியவேதங்களின் ஆபாஸங்களை யெல்லாம் இத்துணை அதிகமாக நம் முஸ்லிம்களும் சாதாரண சனாதன ஹிந்துக்களும் கிறிஸ்தவர்களும, மற்றும் பற்பல மதவாதிகளும் ஒருபோதும் அறிந்துகொள்ள ஹேதுவுண்டானதில்லை. அந்தோ தயானந்தரின் மதி யிருந்தவாறே! மகன் செத்தாலும் சாகட்டும்; மருமகள் கொட்டம் அடங்க வேண்டுமென்று பிரார்த்தனை புரிந்த மாமியாரின் கதையாகத்தான் இவரது விஷயம் போய் முடிந்திருக்கிறது. அந்தோ பரிதாபம்! பரிதாபம்!! பரிதாபம்!!!

(தொடரும்)

-பா. தாவூத்ஷா


1. புரொபெஸர் மாக்ஸ்முல்லரும் இவ்வுபநிஷத்திலுள்ள கர்ப்பதான முறைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க மறுத்துவிட்டார்.
2. “ஆரியசமாஜிக் கர்ப்பணம்” என்னும் நூலும் வெளிவந்துவிட்டது. ஆரிய சமாஜிகளின் பெரிய குருவாகவும், சிரத்தானந்தரின் சகபாடியாகவும் விளங்கிய மகாகுருவே இஸ்லாத்தைத் தழுவியபின்பு எதிரிகளைத் தாக்கி எழுதும் இந்நூல் சமீபத்தில் வெளிவந்திருக்கிறது. ஆவலுடனே அதை வாங்கிப் படிப்பீர்களாக. “குப்ரு தேடின்” தமிழ் மொழிபெயர்ப்பாகிய இந்நூலின் கிரயம் ரூ. 1 தான்.


<<முந்தையது>>     <<அடுத்தது>>

<<நூல் முகப்பு>>

 


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment