“(காபிர்கள்) தங்கள் நாக்களைக்கொண்டே அல்லாஹ்வின் பிரகாசத்தை அணைத்துவிட நாடுகிறார்கள். ஆனால், அல்லாஹ் தன்னுடைய பரஞ்சோதிப் பிரகாசத்தைப் பரிபூரணப் படுத்துகிறவனாய் இருக்கிறான், காபிரீன்கள் (இதைப்) பொருத்தக்கேடாய் எண்ணினும் சரியே.” – குர்ஆன்.
ஏ, சகோதரர்காள்! உலகத்திலுள்ள கள்வர்களுக்கு எப்பொழுதும் சூரிய வெளிச்சமும் மின்னொளியும் வேறு பிரகாசங்களும் வீசிக்கொண்டிருப்பது துன்பமாகத்தான் காணப்படும்; ஆனால், காரிருள் சூழ்ந்திருப்பதே அன்னவருக்குக் கணக்கற்ற சந்தோஷத்துக்குக் காரணமாய் விளங்காநிற்கும். இவ்வுண்மையானது உலகப் பிரசித்தமான ஒரு சத்தியமேயாகும். இவ்வாறே வியபிசாரம் முதலிய துர்க் கிருத்தியங்களை வழக்கமாய்ச் செய்துவரும் மனிதர்களின் எண்ணத்தில் உண்மையாளரும் நீதிமான்களும் அநியாயக்கார்களாகவும் அசத்திய முள்ளவர்களாகவுமே காணப்படுவர்; இன்னமும் பகைவர்களாகவும் பக்ஷபாத முடையவர்களாகவுங்கூடத் தென்படுவர். ஆனால், அன்னவர் பார்வையில் கொடிய துஷ்டனும் லஞ்சம் வாங்குபவனும் அநீதமுடையவனும் அக்கிரமத்தையுடையவனுமே மகா பிரபல்யமுள்ள மேலோர்களாகவும் நீதிமான்களாகவும் சினேகிதர்களாகவும் காணப்படுவார்கள். இதுவும் எல்லோருக்கும் தெரிந்த விஷயமேயாம்.
ஏனெனின், கெட்டவர்களிடத்தும் கள்வர்கள் தங்கள் கோரிக்கைகளைத்தாம் கோரிய வண்ணம் முடித்துக்கொண்டு விடுவார்கள். ஆனால், இவர்களுக்கு மாறானவர்களிடம் கொண்டு செல்லப்படுவார்களாயின், அங்கே அக்கள்வர்களுக்கு ஒன்றும் சாதகம் கிட்டமாட்டாது. இவ்விதமாகவே கீழானவற்றிற்கெல்லாம் கீழானதும், தீதானவற்றிற்கெல்லாம் தீதானதுமாயிருக்கும் வேதமொன்று இருக்குமாயின், அஃது எதுவாயிருப்பினும், எதனால் தன் மனம் சாந்தியையும் சமாதானத்தையும் இன்பத்தையும் சுகத்தையும் அடையுமோ அதையே மகா மேலானதாகவும் பரிசுத்தமுள்ளதாகவும் புகழுக்குரியதாகவும் இருக்கிறதென்று மனிதன் கருதுகிறான். ஆனால், எதனால் தன் மனம் சாந்தியையும் சமாதானத்தையும் இன்பத்தையும் சுகத்தையும் அடையவில்லையோ, அஃது உண்மையிலேயே நற்குணம் குடிகொண்டதாயிருப்பினும், பரிசுத்தத்தால் பரிபூர்ணம் எய்தியதாயிருப்பினும், துர்க்குணங்களை யுடையதாகவும் நீதமற்றதாகவும் பரிசுத்தமற்றதாகவுமே காணப்படுமென்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே.
ஆனால், மனிதர்களின் குணமும் ஒழுக்கமும் இப்படிக் கெட்டுவிடுமாயின், அதன்பின்பு அவர்கள் துஷ்டர்களென்றும் சுயநலப் பிரியர்களென்றும் பிடிவாத முடையவர்களென்றும் தர்மத்தைத் தாண்டிய அசுரர்களென்றும் ராக்ஷசர்களென்றும் மற்றும் பலவிதமாகவும் அழைக்கப்படுகிறார்கள். இப்படிப்பட்ட குணமுடையோரின் அடிச்சுவட்டைப் பின்பற்றிக்கொண்டே மஹரிஷி தயானந்த்ஜீ எமது பரிசுத்தக் குர்ஆனெ மஜீதின்மீது அர்த்தமும் பொருத்தமுமற்ற அட்டகாசங்கள் அனைத்தையும் அபாண்டமாய்க் கூறிமுடித்துத் தம்முடைய மனம்போன போக்கில் வாயில் வந்ததை யெல்லாம் கையால் கிறுக்கி, “சத்தியார்த்த பிரகாசம்” என்னும் நாமத்தைச் சூட்டிப் பெரியதொரு வேதத்தையே சிருஷ்டித்துவிட்டதாக மனப்பால் குடித்துத் தற்பெருமை கொண்டாடுகிறார். இந்த நூல் அவருடைய சிஷ்யர்களின் கையில், இயற்கையில் வீடு புகுந்து திருடும் கள்வர்களின் கையில் செயற்கையான் கன்னக் கோலொன்றைச் செய்து கொடுத்ததே போல் ஆகிவிட்டது. சத்தியார்த்த பிரகாசத்தில் உள்ள விஷயங்கள் உண்மையான திருப்தியுடன்தான் செய்யப்பட்டனவா இல்லையா என்றும் தயானந்தர் கூறும் ஆக்ஷேபங்கள் நியாயமானவையா அல்லவா என்றும் சற்றும் சிந்தனை செய்யக்கூட முடியாமல் அவருடைய சிஷ்யர்களை அந்த சத்தியார்த்த பிரகாசம் அத்துணை மௌட்டியர்களாக்கிவிட்டது.
எனவே, நாம் தயானந்தரின் சிஷ்யர்களுடைய நன்மையைக் கருதி அவர் நம் குர்ஆன்மீது தொடுத்திருக்கும் பாணப் பிரயோகங்கள் வாஸ்தந்தானா அல்லது ஒருதலைப் பக்ஷமா அல்லது ஞானசூன்யமா அல்லது பிடிவாதத்தனமா என்பதைப்பற்றி எல்லோருக்கும் சிறிது எடுத்துக்காட்டி, நம் ஆரிய நண்பர்களின் கண்பார்வையைச் சற்றுத் துலக்கிவிடுவோமாக. தயானந்தர் குர்ஆனெ மஜீதின்மீது செய்திருக்கும் ஆக்ஷேபங்கள் அறியாத்தனத்தினாலும் பிடிவாதத்தினாலுமே என்பதை எல்லோருக்கும் எடுத்துக்காட்டி, அவர் குர்ஆன் ஷரீபைத் தூஷிப்பது மட்டுமன்றித் தம்முடைய வேதங்களை அளவுக்கு மீறிப் புகழ்ந்திருப்பதும் தகுமா என்பதையும் பொது ஜனங்களுக்கு அறிவித்துவிடுவோம்.
நம்முடைய சுவாமிஜீ செய்திருக்கும் ஆக்ஷேபங்களை அப்படியே எடுத்து வரைந்து, பிறகு எக்காரணத்தினால் தம் வேதங்கள் சுவாமிஜீக்கு மிக்க மேலானவையாக விளங்குகின்றனவென்னும் விஷயத்தின் சுருக்கத்தையும் சிறிது மாதிரிக்காக எடுத்தோதிப் பொதுமக்களிடம் அதன் முடிவை விட்டுவிடுவோம். எது மெய், எது பொய் என்னும் தீர்ப்பையும் எது கெட்டது எது நல்லது என்னும் முடிபையும் அவர்கள் வசமே விட்டுவிடுவோம். அதன் பின்பு சுவாமிஜீக்குத் தமது வேதத்தின்மீது விருப்பும், எமது வேதத்தின்மீது வெறுப்பும் ஏற்பட்டதற்குக் காரணந்தான் என்னவென்று கேட்போம்.
மஹரிஷி சுவாமி தயானந்த்ஜீ இஸ்லாம் என்னும் பெயரைக் கேட்டவுடன் இவ்வாறு எழுதுகிறார்: (1904-ஆம் வருஷ உருது சத்தியார்த்த பிரகாசம் 61-ஆம் பக்கம், 11-ஆம் வாக்கியம்) ” ‘மேலும் நாம் அந்தப் பெண்பிள்ளை (பீபிமரியம்-மஸீஹின் தாயார்)க்கு நேர்வழியளித்தோம்; அவள் தன்னுடைய வெட்கத்துக்குரிய ஸ்தலத்தை காப்பாற்றினாள்; எனவே, அதன் நடுவில் நாம் நமது ஆத்மாவை ஊதினோம்.’ இப்படிப்பட்ட கெட்ட வார்த்தைகள் அல்லாவின் வேதத்தில் காணப்படுவது இருக்கட்டும்; சாதாரணம் நல்ல மனிதனுடைய நாவினின்றுங்கூட அவை உண்டாகமாட்டா.1 எப்பொழுது ஒரு சாதாரண மனிதன்கூட இவ்வார்த்தைகளை நல்லவையென்று கொள்ளமாட்டானோ அப்பொழுது அல்லாவினிடத்தில் மாத்திரம் இவை எப்படி நல்லவையாய் இருக்கப்போகின்றன? இப்படிப்பட்ட வார்த்தைகளினாலேயே குர்ஆன் கெட்ட பெயருடையதாய் மாறிவிட்டது. ஆனால், அதில் நல்ல நல்ல வார்த்தைகள் இருந்திருக்குமாயின், வேதங்கள் நன்கு மதிக்கப்படுவதே போல் நன்கு மதிக்கப்பட்டிருக்கும்.”2
வாஸ்தவந்தான் மஹாராஜ்! தாங்கள் மிக்க நல்ல தீர்ப்பையே அளித்தீர்கள். இதற்காக அனந்தகோடி நமஸ்காரம்! ஆனால், தாங்கள் குர்ஆனெ மஜீதிலிருந்து இவ்விதமான நுட்ப ரகசியங்களையெல்லாம் அவ்வேதக் கல்வியில் பயிற்சி பெறாமலே (அஃதாவது, குர்ஆனெ மஜீதலேனும் அல்லது இதுவரை அதற்குண்டான வியாக்கியான விஷயங்களிலேனும் உண்மையான உயரிய அந்தரங்கத் தாத்பரியத்தை உணர்ந்துகொள்ளச் சற்றும் கிட்டக்கூட அணுகாமலே) முற்றுமுணர்ந்த மூதறிவாளியேபோல் இஸ்லாத்தின் கருத்துக்களனைத்தையும் கறுப்பாகச் செய்துவிட்டு உமது மூஞ்சியின்மீதும் கரியதை் தவிக் கொண்டீர். ஐயகோ! என்ன பரிதாபம்!
ஒரு தேசத்தில் மனிதர்களால் பேசப்பட்டுவரும் அரபு பாஷையில் வெளியாயிருக்கின்ற எமது பரிசுத்தக் குர்ஆன் ஷரீபை எவ்வாறு கற்றுக்கொள்ளப் போகின்றீர்கள்? இப்பிரபஞ்சத்தில் எத்தேசத்துக்கும் எச்சாதியாருக்கும் எக்காலத்திலும் சொந்தமல்லாது, பேச்சுவழக்கிலில்லாமல் ஏட்டுவழக்கில் மட்டுமே பல்லாயிரக் கணக்கான வருஷங்களுக்கு முன்னரே அருகிப்போயிருக்கும் ஆருக்கும் விளங்காத அப்படிப்பட்ட பாஷையில் எமது திருவேதம் வெளிவந்திருந்தாலல்லவோ தாங்கள் அதிக சிரமத்துடன் அதைக் கற்றுக்கொள்ள முற்படுவீர்கள்?
அருமைச் சகோதரர்காள்! மஹரிஷி சாஹிபின் மேற்கூறிய வாசகத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய தொன்றுண்டு : அஃதாவது, பீபிமரியம் தங்கள் வெட்கத்துக்குரிய ஸ்தலத்தைக் காப்பாற்றிக் கொண்டது தயானந்தரிடம் கெடுதலாகவும் வெட்கமுள்ளதாகவும் காணப்படாநின்றது. இக்காரணத்தினாலேயே மிகப் பரிசுத்தமான குர்ஆன் ஷரீபின்மீது அது கெட்டதென்றும் அநாகரிகமுள்ளதென்றும் வெட்கமற்றதென்றும், மற்றும் பலவாறாகவும் தூஷணைப் பிரயோகங்களை உபயோகித்திருக்கிறார். ஆனால், மஹரிஷி சரஸ்வதி சாஹிபின் அபிப்பிராயத்தில் ஒவ்வொருவரும் தத்தம் மர்ம ஸ்தானங்களைக் காப்பாற்றிக் கொள்ளாது எல்லோருக்கும் உரிமையுள்ளதென்று சகலரும் பார்க்கக்கூடிய விதமாய்ச் சர்வ சாதாரணமாக அம்பலத்தில் காட்டிக்கொண டிருப்பதுதான் (வேத வைதிக) தர்மம் போலும்!
எனவே, இக்காரணத்தினால்தான் எல்லோரும் சொந்தம் பாராட்டும் பொருட்டே மகாபரிசுத்தம் நிறைந்த நியோகமென்னும் நவநாகரிக திட்டமொன்றைத் தம்முடைய சிஷ்யர்களுக்கென்று பிரத்தியேகமாக ஏற்படுத்தியிருக்கிறார். அல்லது ஆண்டவன் தன் ஆவியை ஊதினாதென்பதைக் கேட்டு அன்னவர் அசுசிகொண்டு ஒருகால் மேற்கூறியவாறு நமது குர்ஆன் ஷரீபின்மீது பழி தூற்றியிருக்கலாம்.
பீபிமரியம் ஸித்தீக்கா அவர்கள் பாரிலேயே அதிகம் பரிசுத்தம் நிறைந்த ஒரு பதிவிரதையாகவும் உண்மையின் உருவாகவும் இருந்து வந்தார்கள். இதனால் பீபிமரியம் அவர்கள்பால் ஆண்டவன் தன் ஆவியை இறக்கிவைத்தால், எவ்வாறு, எங்ஙனம், யாருக்கு, அது பங்கத்தை உண்டாக்கியிருக்கிறது? உண்மையில் ஆண்டவனது ஆவியின் அம்சத்தை யடையவில்லையாயின், இப் பூலோகத்தில் யாதொரு பிள்ளையும் கர்ப்பத்துக்குள் கருக்கூட மாட்டாதென்பது அறிவுநூல் விற்பன்னர்கள் அனைவராலும் அறியக்கிடக்கும் உண்மையன்றோ?3
நல்ல நல்ல பக்தர்களுங்கூட இரவு பகலாகக் காலா காலமும் எத்துணையோ கஷ்டப்பட்டுக் கெஞ்சிக்கேட்டும் குழந்தை என்பதன் அடையாளமென்பதையும் அடைய முடியாமல் அவஸ்தைப் படுகின்றனர். “மலையிட்ட செல்வத்தார்கள் மகிழ ஓர் மகவுந் தாரான், அலையிட்ட முட்டாட் செய்ய அம்புயத் துறைவோன்”4 என்றார் சமீபகாலத்துக்கு முன் தென்னாட்டில் ஜீவித்திருந்த ஒரு மகாவித்வானும். ஆனால் அல்லாஹ்வின் ஆணையைக் கைக்கொண்டு விடுவோமாயின், அவனது அருளினால் சிசுக்கள் உற்பத்தியாகின்றன.
(தொடரும்)
-பா. தாவூத்ஷா
1. “ஜலம் உற்பீஜமாகி உபஸ்தத்தில் நுழைந்தது,” என்று ருக்வேதம் ஐத்ரேய ஆரண்யகம் கூறுவதைத் தயானந்தர் அறிந்திலர் போலும்! ⇑
2. “அவன் அதை (ஆகாரத்தை) உபஸ்தத்தினால் பிடிக்க யத்தனப்பட்டான்,” என்று ருக்வேதம் ஐத்ரேய ஆரண்யகம் எழுதியிருக்கவில்லையா? பிரகதாரண்யக உபநிஷத்தைப் பற்றியும் தயானந்தர் கேள்விப்பட்டதில்லை போலும்! ⇑
3. “இந்த ஆத்மா மனிதனில் மூலகாரணமாக அல்லது கருவாக, அல்லது விந்துவாக இருக்கின்றது,” என்று ருக்வேதம் கூறுவதையும், “கருப்பாசயத்தில் இந்தக் கடவுளருடைய தொடர்ச்சியுள்ள பிறப்புக்களையெல்லாம் நான் அறிந்திருக்கிறேன்,” என்று வாமதேவர் கூறியதாக அந்த ருக்வேதமே கூறுவதையும் ஆரிய சகோதரர்கள் ஆழ்ந்து நோக்குவார்களாக. ⇑
4. குசேலோபாக்கியானம், வல்லூர் தேவராச பிள்ளை. ⇑
<<நூல் முகப்பு>>
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License