எம் அருமைச் சோதரர்காள்! நம் தீனுல் இஸ்லாத்தின் விரோதிகள், கல்வி வாசனையற்றவர்களும் அறியாமைக்கு ஆளானவர்களுமான முஸ்லிம் எளியார்களை வஞ்சித்து ஏமாற்றி வழிக்கேட்டிலாக்கும் நோக்கங்கொண்டவர்களாய், “இஸ்லாமார்க்கம் வாளாயுதத்தின் பலத்தினால்தான் இவ்வுலகில், அதிலும் முக்கியமாய் இந்த ஹிந்துஸ்தானத்தில் பரத்தப்பட்டது,” என்று எமது பரிசுத்த மார்க்கத்தின்மீது பழிசுமத்துகின்றனர். இதன் உவமை, பட்டப் பகலில் பன்னிரண்டுமணி நேரத்தில் ஒருவன், இது சரியான நடுநிசியாய் இருக்கிறதென்று கூறுவதற்கு ஒப்பாகவே காணப்படுகின்றது.
உலக சரித்திர கிரந்தங்களும், மனித ஜீவிய சரித்திரங்களும், இன்னம் இஸ்லாமிய சரிதைகளும் பின்வருமாறு விளக்கிக்காட்டி இருக்கின்றன: ‘இஸ்லாத்தின் விரோதிகள் இம்மார்க்கம் தோன்றிய அக்காலத்திலேயே இதை அழித்துவிட ஆவல்கொண்டவர்களாய் முஸ்லிம்களுக்கு இழைத்துவந்த எண்ணிறந்த கஷ்டநிஷ்டூரங்களை எல்லாம் அறியாதார் அறியாதாரே!’ இதை எமது குர்ஆன்ஷரீபும் ஊர்ஜிதப் படுத்தாமலில்லை. இதுபோலவே இன்னமும் எத்தனையோ இடங்களில் இற்றைக்கும் அவர்கள் “பாங்கு” சொல்லவிடப்படாமலும், “தொழுகை” நடத்தவிடப்படாமலும், “குர்பானி” செய்ய அனுமதிக்கப்படாமலும், ஆலயங்கள் இடிக்கப் பெறாமலும், மற்றும் சகல காரியங்களிலும் இடையூறு இழைக்கப்படாமலும் போகவில்லை. முஸ்லிம்கள் தொழுதுகொண்டிருக்கும் சமயத்தில் போர்புரிந்து வெட்டப்படுகிறார்கள்; கற்களால் காயமாக்கப்படுகின்றனர். தனியே அகப்பட்டுக் கொள்வார்களாயின், கண்டதுண்டம் செய்யப்படுகின்றனர்; இஸ்லாத்தின் ஆரம்ப காலத்திலும் இதைவிட இம்சை குறைவாயிருந்ததென்று கூறுவது முடியாது. ஆயினும், இஸ்லாத்துக்கு எவ்வளவு தூரம் இன்னல்களும் இடையூறுகளும் விளைக்கப்படுகின்றனவோ, அவ்வளவு தூரம் எமது தூய்மையான சுத்தசத்திய இஸ்லாமும் விருத்தியாய்க் கொண்டே வந்தது.
முஸ்லிம்கள் தங்கள்மீது பதின்மூன்று வருஷகால மட்டும் எதிரிகளால் இழைக்கப்பட்டு வந்த இன்னல்களையும் இடையூறுகளையும் மிகப் பொறுமையுடன் சகித்து வந்தபின்னரே இறுதியில் தற்காப்பினிமித்தமாயே தங்கள் வாட்களை உருவத் தலைப்பட்டனர்.
“(யுத்தத்தினால்) கொல்லப்படும் படியானவர்களுக்கு, (அவர்கள்மீது) அக்கிரமம் செய்யப் படுகின்றமையால் (தற்காப்பு யுத்தத்துக்கு) அனுமதியளிக்கப்பட்டது; மேலும் நிச்சயமாகவே அல்லாஹ் அவர்களுக்கு உதவி புரிவதன்மீது ஆண்மையுள்ளவனாயிருக்கிறான். அவர்கள், ‘எங்கள் நாயன் அல்லாஹ்வா யிருக்கிறான்,’ என்று சொன்னதற்காகவேயல்லாமல் வேறொரு குற்றமுமின்றியே தங்கள் விடுதிகளைவிட்டு அப்புறப் படுத்தப்பட்டார்கள். மேலும் அல்லாஹ் மனிதர்களுள் சிலரைக் கொண்டு சிலரைத் தடுக்காமலிருப்பானாயின், (பாதிரிகளின்) மடாலயங்களும், கோயில்களும், (யூதர்களின்) கோயில்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகம் தியானிக்கப்படும் மஸ்ஜித்களும் தகர்க்கப்பட்டுப் போம். மேலும் உண்மையாகவே அவனுக்கு – (ஆண்டவன் பாதையில் உழைப்பவனுக்கு) அல்லாஹ் உதவி செய்வான்” – (குர்ஆன், 22:39,40).
இதுதான் ரஸூலுல்லாவின் (ஸல்) காலத்தில் முதன் முதலில் முஸ்லிம்கள் தற்காப்பினிமித்தம் யுத்தம் செய்து கொள்ளலாமென்று அனுமதிக்கப்பட்ட வேதவாக்காகும். இதன் வாக்கியப் போக்கை உற்று நோக்குவோமாயின், இதற்கு முன்னமே முஸ்லிம்கள் எதிரிகளால் யுத்த களத்தில் கொல்லப்பட்டு வந்தார்களென்று நன்கு தெரிந்து கொள்வோம்; பதின்மூன்று வருஷகாலமட்டும் அம்முஸ்லிம்கள் தங்கள் இல்லங்களைவிட்டுத் துரத்தப்பட்டு வந்தார்கள். நபிகள் பெருமானும் (ஸல்) அவர்களுடைய சிஷ்யர்களும் எல்லாவிதமான இன்னல்களுக்கும் இம்சைகளுக்கும் உட்படுத்தப்பட்டு வந்தார்கள்; ஆதலின், பதின்மூன்றாவது வருஷ அந்தத்தில் தங்கள் உயிரையும் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு ஜன்ம பூமியாகிய மக்காவை விட்டு, வடக்கே சுமார் 300 மைல் தூரத்திலுள்ள மதீனாவுக்குள் சென்று அடைக்கலம் புகுந்துகொள்ளும்படியான ஆவசியகமும் நேரிட்டுவிட்டது. அங்கே சென்றும் க்ஷேமமாயிருக்கும்படி அவர்கள் மக்கத்து மறமாக்களால் சும்மா விடப்படவில்லை. அவ்வெதிரிகள் சேனைகளைத் திரட்டிக்கொண்டு மதீனாவின்மீது படையெடுத்துச் சென்றார்கள்; ரஸூல் நாயகத்துக்கும் தற்காப்பினிமித்தம் வாளை உருவிக்கொண்டு வெளிப் புறப்பட வேண்டிய அத்தியாவசியத்தை உண்டுபண்ணி விட்டார்கள். அப்பொழுதுதான் மேற்கூறிய ஆயத்திலுள்ள அனுமதியும் கொடுக்கப்பட்டது.
|
நபிகள் நாயகமவர்கள் (ஸல்) வேண்டுமென்று வலுவில் சுயமே சென்று யுத்தம் புரியவில்லையென்பதும், எல்லாம் தற்காப்பினிமித்தமாகவே செய்யப்பட்டு வந்ததென்பதும் அவர்களுடைய காலத்தில் நடத்தப்பட்ட மூன்று முக்கியமான யுத்தகளங்கள் – பத்ரு, உஹத், அஹ்ஜாப் என்பன – அமைந்திருந்த இடங்களைச் சிறிது நோட்டமிட்டுப் பார்ப்பதனாலேயே செம்மையாக விளங்கிவிடும். மக்கத்திலிருந்து மதீனாவானது வடக்கே சுமார் 300 மைல்களுக்கப்பால் அமைந்திருக்கிறது. பத்ரென்பது மதீனாவிலிருந்து 60 மைல் தூரத்திலும், உஹதென்பது 3 மைல் தூரத்திலும் அமைந்திருக்கின்றன. மூன்றாவது யுத்தகளமாகிய அஹ்ஜாபென்பது மதீனாவாகவே காணப்படுகிறது. இம்மூன்றாவது யுத்தத்தின்போது எதிரிகளாகிய அரபிகளின் நேசப்படை வந்து மதீனாவை முற்றுகை போட்டுவிட்டது. இதிலிருந்து, இன்னமுமா யார் வலுவில் சண்டைக்குச் சென்றவரென்றும், யார் தற்காப்புக்காக அவசியத்தினிமித்தம் வாளை உருவினாரென்றும் தெரிந்து கொள்வதில் சங்கடம் ஏற்படக் கூடும்?
எதிரிகள் இவ்வாறு செய்து வந்ததனால் தேசத்தில் அமைதி குறைந்து, யுத்தமும் உயிர்ச்சேதமும் அவ்வெதிரிகளால் அதிகம் இழைக்கப்பட்டு வந்தன; இதனால் அவரவரும் தற்காப்பைத் தேடிக் கொள்ளும்படியான அவசியமும் நேரிட்டு விட்டது. அப்பொழுதுதான் அடியிற் காணப்படும் தற்காப்பு யுத்த விதிமுறைகளும் ஆண்டவனால் அருளப்பெற்றன :
“உங்களைக் கொன்றவர்களை நீங்களும் – ஆண்டவன் பாதையிலேயே – கொல்லுங்கள்; மேலும் நீங்கள் வரம்பு கடவாதீர்கள். உண்மையாகவே வரம்பு கடப்பவர்களை அல்லாஹ் நேசிக்கமாட்டான். மேலும் அவர்களை (யுத்தத்தால் முஸ்லிம்களைக் கொல்கிறவர்களைக் கண்ட இடத்தில்) கொல்லுங்கள்; மேலும் உங்களை அவர்கள் எங்கிருந்து அப்புறப்படுத்தினார்களோ, அங்கிருந்து நீங்களும் அவர்களை அப்புறப்படுத்துங்கள். (இடுக்கண் விளைப்பதால்) புரட்சியை உண்டுபண்ணுவது கொல்வதைக் காட்டினும் கொடியதாகும்…. மேலும் அவர்கள் (கொல்வதை விட்டு) விலகி விடுவார்களாயின், உண்மையாக (ஆண்டவன் பாபத்தை மன்னிப்பவனாகவும், அன்புடையோனாகவும் இருக்கிறான். (கொடுமையின்) புரட்சி (அறவே) ஒழியும் வரையும், மார்க்கம் (தீன்) அல்லாஹ்வுக்கே ஆகும் வரையும் அவர்களைக் கொல்லுங்கள். பிறகு அவர்கள் விலகிக் கொள்வார்களாயின், அக்கிரமக்காரர்களுக்காகவே அன்றி (வேறு யாருக்கும்) தண்டனை கிடையாது” -(குர்ஆன், 2:190-193).
இப் பரிசுத்த ஆயத்துக்களே முஸ்லிம்களின் தற்காப்பு யுத்த விஷயத்தை மிகப் பட்டவர்த்தமானமாய் விளக்கிக் காட்டிவிட்டன. “(யுத்தத்தினால்) கொல்லப்படும் படியானவர்களுக்கு, (அவர்கள்மீது) அக்கிரமம் செய்யப்படுகின்றமையால், (தற்காப்பு யுத்தத்துக்கு) அனுமதியளிக்கப்பட்டது.” “உங்களைக் கொன்றவர்களை நீங்களும் கொல்லுங்கள்; மேலும் உங்களை அவர்கள் எங்கிருந்து அப்புறப்படுத்தினார்களோ, அங்கிருந்து நீங்களும் அவர்களை அப்புறப்படுத்துங்கள்.” இவ்வாறு அம் முஸ்லிம்கள் தற்காப்பினிமித்தம் தங்களைக் கொல்லவந்த எதிரிகளுடன் யுத்தம் புரிவது அக்கிரமமானதென்று எந்த அறிவுடையோன்தான் கூசாது கூற முற்படுவான்? தன்னைக் கொல்லவந்த பசுவையும் கொல்லலாமென்று ஹிந்துக்களின் சாஸ்திரமும் முறையிடவில்லையா?
முஸ்லிம்கள் தற்காப்பு யுத்தம் புரியுங் காலையிலும் அத்தியாவசியமான அளவைக் கடப்பது கூடாது. “மேலும் அவர்கள் (கொல்வதை விட்டு) விலகி விடுவார்களாயின்….தண்டனை கிடையாது.” எதிரிகளின் கொடுமை ஒழிந்துவிடுமாயின், அதன்பின்பு முஸ்லிம்கள் தங்களுடைய தற்காப்பு யுத்தத்தையும் விட்டுவிடக் கடவர். அவரவரும் தத்ததம்முடைய மனச்சாக்ஷியின் பிரகாரமே தாம் அல்லாஹ்வின்மீது கொண்டுள்ள ஒரே அச்சப்பாட்டின்படி தமக்குரிய தீனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டுமல்லாது, ஒருவரும் வேறொருவருடைய நிர்ப்பந்தத்துக்காக அஞ்சி ஆண்டவனது மார்க்கத்தை அனுஷ்டிக்கும்படி செய்யப்படுவது கூடாத காரியமேயாகும். “மார்க்கம் (தீன்) அல்லாஹ்வுக்கே ஆகும்வரை அவர்களைக் கொல்லுங்கள்.” என்பது “அவரவருக்கும் மத சுதந்தரம் ஏற்படும் வரை” என்றே கருத்துக் கொள்ளும். ஏனெனின், பின்வரும் “பிறகு அவர்கள் விலகிக்கொள்வார்களாயின்….. தண்டனை கிடையாது,” என்னும் வாக்கியமே “தீன் அல்லாஹ்வுக்காக ஆகும் வரை” என்பதைச் சந்தேகமற மிகவாக நன்கு விளக்கிக் காட்டுகின்றது. “மத விஷயத்தில் கட்டாயம் வேண்டாம்,” என்று கூறும் குர்ஆன் ஆயத்தே (2:256) எல்லோருடைய மதசுதந்தரத்தையும் இனியில்லாவண்ணம் மிகச் செம்மையாய் விளக்கியிருக்கின்றது.
இப்படிப்பட்ட தாராளமான மத சுதந்தரத்தை இஸ்லாத்திலல்லாமல் வேறெந்த மதத்திலும் காண்பதரிதாகும்; முஸ்லிம்கள் தங்கள்மீது எதிரிகள் புரியும் அக்கிரமங்களையும் அட்டூழியங்களையும் ஒழிக்கும் பொருட்டும், தங்களுடைய மஸ்ஜித்களைத் தற்காக்கும் பொருட்டும் மட்டுமேதான் எதிரிகளுடன் யுத்தம் புரியும்படி அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று எண்ணிவிட வேண்டாம்; இன்னமும் கிறிஸ்தவர்களின் மடாலயங்களையும், மாதா கோவில்களையும், யூதர்களின் தேவாலயங்களையும் முஸ்லிம்கள் முன்னின்று காக்கவேண்டுமென்னும் கட்டளையும் குர்ஆன் வேதத்தில் (22:40) காணப்படுவதைக் கண்ணுடையோரென்போர் ஒருவரும் கவனியாது கைவிடார்.
இப்படிப்பட்ட உயர்ந்த தத்துவத்தை வேறெந்த மதாசாரியரும் இவ்வுலகில் உபதேசித்திருக்கின்றாரா? பிறமதத்தினரின் தேவாலயங்களைத் தற்காக்கும் பொருட்டு அவர்கள் தங்களுடைய உயிரையும் தியாகம் புரியவேண்டுமென்னும் கட்டளை வேறெவருடைய வேதத்தின் கண்ணும் காணப்படுவதுண்டா? ஆனால், முஸ்லிம்கள் மட்டும் தங்களுடைய வேதக்கட்டளையின் பிரகாரமே ஆதிமுதல் நடந்து வந்திருக்கிறார்கள்; யுத்த சேனாபதிகளான முஸ்லிம் தளபதிகள் எல்லாவிதமான தேவாலயங்களையும் தகர்க்காது காப்பாற்ற வேண்டுமென்றே தத்தம்முடைய படைவீரர்களுக்கு வெளிப்படையான கட்டளை யிட்டிருப்பதற்குச் சரித்திரமே வேண்டியமட்டும் சான்று பகரும். “இஸ்லா மார்க்கமானது ஒரு கையில் குர்ஆனுடனும் மற்றொரு கையில் வாளாயுதத்துடனுந்தான் பரத்தப்பட்டது,” என்று கூறும் பழிச் சொல்லுக்கு ஏதேனும் ஆதாரமுண்டோ? ரஸூல் நாயகத்தின் (ஸல்) காலத்திலேனும் அவர்களுடைய கலீபாக்களின் காலத்திலேனும் ஏதேனுமொரு தனிப்பட்ட நபரேனும் வாளாயுதத்தின் பலாத்காரத்தைக் கொண்டு இஸ்லாத்துக்கள் திருப்பப்பட்டனரா? என்பதை இஸ்லாத்தின் எதிரிகளுள் எவரேனும் ருஜுப்பிக்க முன் வருவாரா? அவ்வாறு எவரேனும் முயற்சித்துப் பார்ப்பாராயின், அது வீண் முயற்சியேயாகுமென்று நாம் தயங்காது கூற முன்வருவோம்.
-பா. தாவூத்ஷா
படம்: அபூநூரா
<<நூல் முகப்பு>>