க்காவில் பள்ளிவாசலை இடித்து விட்டார்கள்! கோட்டையின் மதில்போல் உயர்ந்து நின்ற வெளிச் சுவர்கள், நெடுநெடுவென்று உயர்ந்து நின்ற சில மினாராக்கள், பரந்து விரிந்திருந்த பள்ளிவாசலின் மூன்றடுக்கு உள்பரப்பு என்று பள்ளிவாசலின் பெரும் பகுதியைக் காணவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்குமுன் சென்றபோது கால்வாசிப் பகுதி இடிக்கப்பட்டிருந்தது. பள்ளிவாசல் விரிவாக்கப்படுகிறது என்று புரிந்தது. இப்பொழுது சென்று பார்த்தால் கால்வாசிப் பகுதிதான் கட்டடம் உள்ளது. விரிவாக்கம் என்பது பொருத்தமற்றச் சொல். பிரம்மாண்டமான மறு கட்டுமானம் நடைபெறுகிறது.

மலைக் குன்றுகளையே உடைத்து நகரை உருவாக்கும் சஊதியின் கட்டுமான ஆற்றலை அறிந்தவர்களுக்கு இதில் ஆச்சரியமில்லை. அதனால், Lego toy கட்டடத்தை கலைத்துப் போடுவதுபோல அம்மாம் பெரிய பள்ளியை உடைத்துப் போட்டு துரித கதியில் நடைபெற்றுவரும் வேலைகள் முதலில் எனக்கு வியப்பை ஏற்படுத்தினாலும் அதையும் தாண்டிய மற்றொரு விஷயம்தான் என்னை மிகவும் கவர்ந்தது.

Sorry we are under construction என்று போர்டு மாட்டி இழுத்து மூடிவிட்டு வேலை பார்க்க முடியாத ஓர் ஆலயம் கஅபா. ஆண்டின் அனைத்து நாள்களும் 24 மணி நேரமும் மக்கள் மொய்க்கும் இடம். அப்படி வந்து குழுமும் யாத்ரீகர்கள் தங்களது வழிபாட்டை இடைஞ்சலின்றி, சிரமமின்றி நிறைவேற்ற தற்காலிக ஏற்பாடுகள் செய்து வைத்திருக்கிறார்களே அதுதான் பெரும் பிரமிப்பு.

பள்ளிவாசலுக்குள் நுழைய, தவாஃப் சுற்ற, ஸஃபாவுக்குச் சென்று ஸயீ நிறைவேற்ற என்று யாத்ரீகர்களை நகர்த்திச் செல்லும் கச்சிதமான தற்காலிக வடிவமைப்பு அருமை. போலவே ஐவேளையும் நொடி தவறாமல் military precision-ல் நிகழும் தொழுகையும் அதற்கான ஏற்பாடும்.

சஊதிகளின் வேலைத் திறனும் சுறுசுறுப்பும் மக்கள் தொடர்பும் அந்நாட்டில் பணி புரிபவர்கள், பணி புரிந்தவர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அந்த அனுபவம் மகா வேதனை. ஆனால் இங்கு மக்காவின் பள்ளிவாசலில் அது முற்றிலும் வேறு நிறம்.

அதை எப்படி உணர்வது? வழிபாட்டை நிறைவேற்றுவதில் ஒரு சிறு அசௌகரியத்தையும் உணராதபோது! இதன்பின் பொதிந்திருக்கும் உழைப்பும் அர்ப்பணிப்பும் திட்டமிடலும் அபாரம்! அட்டகாசம்!

தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்தையும், ‘எத்தனையோ பார்த்துவிட்டேன், இதென்ன பிரமாதம்?’ என்று அமைதியாக நின்றிருக்கிறது கஅபா.

-நூருத்தீன்

Related Articles

Leave a Comment