றுப்பினப் பெண்களுக்கும் இனி அங்கீகாரம், பெருமை என்றொரு செய்தி அண்மையில் கண்னில் பட்டது. அழகிப் போட்டியை ஆப்பிரிக்க நாடுகளில் விஸ்தரித்து, அங்குள்ள கறுப்பு வைரங்களைத் தேர்ந்தெடுப்பது பற்றி சிலாகித்திருந்தார் செய்தியாளர். நிற வேற்றுமையைக் களையும் முற்போக்காளர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் அஞ்ஞானிகளில் ஒருவர் அவர்.

அழகிப் போட்டிகளும் அதன் பின்னே ஒளிந்திருக்கும் மாதர் நுகர்பொருட்களின் பல்லாயிரக் கோடி வர்த்தக வலையும் ஆபாசக் குறை உடை பெண்களே முற்போக்காளர்கள் என்ற நவீன அடிமைத்தளையும் அப்படி எதுவும் இரகசியமான விஷயங்களல்ல. அதைச் சிந்திக்க விடாமல் மக்களை போதையில் ஆழ்த்தியிருக்கின்றன நயவஞ்சக மூளையும் வர்த்தக சாம்ராஜ்யமும்.

அழகும் கம்பீரமும் மெய் வெற்றியும் எவை என்பதன் இஸ்லாமிய விளக்கமும் அளவுகோலும் முற்றிலும் வேறு. அதன் உன்னதம் இன்றைய காம, மோக நாகரிகம் உணராதது.

அதற்கு வரலாற்றில் மிகச் சிறந்த ஓர் உதாரணம் உண்டு.

மக்காவில் இஸ்லாம் மீளெழுச்சி அடைந்த புதிதில் தோழர் அர்கமின் இல்லத்தில் நபியவர்களின் தலைமையில் முஸ்லிம்கள் கூடுவதும் குர்ஆன் கற்றுக்கொள்வதும் தொழுவதும் இரகசியமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. இதை மோப்பமிட்ட குரைஷிகள், ஒருநாள் அர்கமின் இல்லத்திற்குச் செல்லும் பாதையில் தடை ஏற்படுத்திவிட்டார்கள். அப்பொழுது நபியவர்களைச் சந்தித்து, அன்னை கதீஜா சொல்லியனுப்பிய முக்கியச் செய்தியொன்றைத் தெரிவிக்க வேண்டியிருந்தது ஒருவருக்கு.

அவர்- உம்முஅய்மன் ரலியல்லாஹு அன்ஹா.

முஸ்லிம்களின்மீது சினமும் சீற்றமும் கொண்டிருந்த குரைஷிகளின் கண்களில் படாமல் தப்பி, உயிரைப் பணயம் வைத்து, அவ்வீட்டை அடைந்து தகவலைச் சமர்ப்பித்தார் உம்முஅய்மன். அவரை நோக்கிப் புன்னகைத்த நபியவர்கள் நற்செய்தி ஒன்று சொன்னார்கள். “நீங்கள் இறையருளைப் பெற்றவர்! சொர்க்கத்தில் நிச்சயமாய் உங்களுக்கு இடமுண்டு, உம்முஅய்மன்.”

நபியவர்கள் அறிவித்தால் அது தீர்க்கமானது என்பது முஸ்லிம்களின் திடநம்பிக்கை. தம் இஷ்டத்திற்கு எந்த ஒன்றையும் அறிவித்ததில்லை அந்த மாமனிதர். மகிழ்வுடன் உம்முஅய்மன் கிளம்பிச் சென்றதும், அங்கு அமர்ந்திருந்த தம் தோழர்களிடம், “சொர்க்கவாசிப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள நீங்கள் விரும்பினால் உங்களில் ஒருவர் உம்முஅய்மனை மணம் புரிந்து கொள்ளட்டும்” என்றார்கள்.

அப்பொழுது உம்முஅய்மனின் வயது ஐம்பதுக்கும் மேல். பொலிவான புற அழகும் அவரிடம் அமைந்திருக்கவில்லை. நபியவர்களின் முன்னறிவிப்பையும் உம்முஅய்மனின் அகத்தையும் கருத்தில்கொண்டு முன்வந்தார் ஸைது இப்னு ஹாரிதா, ரலியல்லாஹு அன்ஹு.

“அல்லாஹ்வின் தூதரே! நான் உம்முஅய்மனை மணந்துகொள்கிறேன். அல்லாஹ்வின் மீது ஆணையாகக் கூறுகிறேன், வனப்பும் கவர்ச்சியும் அமையப்பெற்ற பெண்களைவிடச் சிறந்தவர் இவர்.”

சில ஆண்டுகளுக்குப் பின் மற்றொரு நிகழ்வு.

மக்காவில் குரைஷியர் கொடுமை முடிவுக்கு வராமல், இறுதியில் நபியவர்கள் மதீனாவிற்குப் புலம்பெயர நேர்ந்தது. அதற்குப்பின் மக்காவில் எஞ்சியிருந்த முஸ்லிம்களும் மெதுமெதுவே மதீனாவிற்கு நகர ஆரம்பித்தார்கள். அந்தக் காலகட்டத்தில் பயணம் என்பதே மிகவும் சிரமமான ஒன்று. இதில் வெறியுடன் அலைந்து கொண்டிருந்த குரைஷிகளுக்குத் தெரியாமல் பயண ஏற்பாடு செய்துகொள்வது என்பது அதைவிடச் சிரமமாகியிருந்தது. அதனால் என்ன செய்ய? ஒருநாள் தன்னந்தனியாக, கால்நடையாகவே கிளம்பிவிட்டார் உம்முஅய்மன்.

மலை, கரடு முரடான பாதை, பாலைவனம், மணல், மண்டையைப் பிளக்கும் வெயில், புழுதிப் புயல் இவை எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, அல்லாஹ்வுக்காகவும் அவன் தூதருக்காகவும் பொறுத்துக்கொண்டு மதீனாவை வந்தடைந்தார் அவர். புண்ணாகி வீங்கிப் போயிருந்தன கால்கள். சொர்க்கத்திற்குரிய அந்த மங்கையின் முகமெல்லாம் மணற் புழுதி ஒப்பனை பூசியிருந்தது.

“என் அன்னையே! ஓ உம்முஅய்மன்! வெகு நிச்சயமாக உமக்குச் சொர்க்கத்தில் ஓர் இடமுண்டு!” என்று அகமகிழ்ந்து வரவேற்றார்கள் நபியவர்கள்.

தமது கரங்களால் அந்த அன்னையின் முகத்தையும் கண்களையும் துடைத்துவிட்டு, அவரது பாதங்களை இதமாகப் பிடித்துவிட்டு, அவரது தோள்களை அமுக்கி நீவிவிட்டுப் பணிவிடை புரிந்தார்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். ஒப்பனைக்கும் ஒப்புயர்வுக்கும் புது இலக்கணத்தை அறிவித்தார்கள் அவர்கள்.

வரலாற்றில் அழியாத இடம் பிடித்தார் ஸஹாபிய்யா எனப்படும் அந்த நபித் தோழி. நன்மாராயம் முன்மொழியப்பெற்ற சொர்க்கத் தோழி!

-நூருத்தீன்

சொர்க்கத்தோழி – ஜுன் 2023 இதழில் வெளியான கட்டுரை

அச்சுப் பிரதியை வாசிக்க க்ளிக்கவும்

Related Articles

Leave a Comment