61. அக்ஸா மஸ்ஜித் மிம்பர்
நூருத்தீனின் நோக்கமும் செயல்பாடுகளும் அரசியல் சார்ந்தவை மட்டுமே என்று மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்கள் சுருக்கிப் புனைந்தாலும் – அவரது சாதனைகளை வீரியமற்றதாக சித்திரித்தாலும் அவரது ஆட்சிக் காலத்தில்தான் இஸ்லாமிய ஜிஹாதின் மீளெழுச்சி அதிவேகமுற்றது; சிரியாவிலும் இராக்கிலும் பரவியது என்பதை மட்டும் அவர்களாலேயே மறுக்க இயலவில்லை. சிரியாவின் ஆட்சிப் பகுதிக்கு இமாதுத்தீன் ஸெங்கியின் வாரிசாக அவர் பட்டத்துக்கு வந்திருந்த போதிலும் அவருள் நிகழ்ந்த ஆன்மிக மாற்றம், உயர்வடைந்த இறை பக்தி, புனித பூமி ஜெருசலத்தை மீட்டெடுக்கும் வேட்கை ஆகிய யாவும் பாசாங்கின் வாடையே கலக்காதவை என்பதையே அக்காலத்திய முஸ்லிம் வரலாற்று ஆசிரியர்களின் ஆவணங்கள் பகர்கின்றன. கிறிஸ்தவ ஆசிரியர்கள் நினைப்பது போல், விரும்புவது போல் நூருத்தீனிடம் ஏற்பட்டது தோற்ற மாயை, நடிப்பு, பாவனை என்றால் அவை நெடுநாள் நீடிக்காமல் நிஜ சொரூபத்தை விரைவில் வெளிப்படுத்தியிருக்கும். அதற்கு அதே மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்கள் புதிய ஜெருசல ராஜா அமால்ரிக்கைப் பற்றி எழுதி வைத்திருக்கும் குறிப்புகளே போதுமான சாட்சியாக நிற்கின்றன. அமால்ரிக்கின் அந்த இலட்சண அவலத்தையும் அவர் நூருத்தீனைப் பிரதிபலிக்க முனைந்து தோற்றதையும் நிதானமாக அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
தமது போர் வெற்றிகளுடன் மன நிறைவு அடையாமல், நூருத்தீன் மார்க்கத்திற்கும் மக்களுக்கும் ஆற்றிய சேவை, காட்டிய முனைப்பில் அடங்கியுள்ளது அவரது நோக்கத்தின் அளவுகோல். மன்னன் என்ற படோடபத்தை அவரது தலை கிரீடமாகச் சுமந்தாலும் அவரது சிந்தையை எப்போதும் இறை அச்சம் சூழ்ந்து கிடந்ததால், அவர் நடமாடியது பக்தியுள்ள முஸ்லிமாகவே. சிலுவைப்படை லெவண்த்திற்குள் வந்து நுழைவதற்கு முன்பிருந்தே அப்பாஸிய ஸன்னி கிலாஃபத்துக்கும் எகிப்தின் ஃபாத்திமிய கிலாஃபத்துக்கும் தொன்றுதொட்டு விரோதம் நிலவி வந்தது. ஸெல்ஜுக் துருக்கியர்கள் ஸன்னி முஸ்லிம்களாகத் திகழ்ந்து அப்பாஸிய கலீஃபாவுக்கு ஆதரவாக இருந்ததே போல் நூருத்தீனும் ஃபாத்திமீ ஷீஆக்களுக்கு எதிராகவும் ஸன்னி முஸ்லிம் மரபை வலுப்படுத்துவதிலும் அதிக முனைப்புடன் செயல்பட்டார்.
நூருத்தீன் முன்னெடுத்த பொதுப்பணிகள் அவரது இறை விசுவாச உணர்வின் ஆழத்தை உறுதி செய்தன. அலெப்போவில் ‘மதரஸா அல்-ஷுஅய்பிய்யா’ அவரால் உருவாக்கப்பட்டது. அவருடைய ஆட்சிக் காலத்தில் அந்நகரில் கட்டப்பட்ட நாற்பத்திரண்டு கல்லூரிகளுள் அதுவும் ஒன்று. அவற்றுள் பாதிக்கும் மேல் அவரது தனிப்பட்ட ஆதரவில் நிர்வகிக்கப்பட்டன. அவருடைய அணுக்கத் தோழரும் பிரபல மார்க்க அறிஞருமான இப்னு அஸாகிர் ‘தாருல் ஹதீஸ் அல்-நூரிய்யா’ எனும் பெயரில் நபியவர்களின் ஹதீஸ்களைப் பயிலும் கல்விச்சாலை ஒன்றைக் கட்டினார். மன்னர் நூருத்தீன் அதில் நேரடியாகக் கலந்துகொண்டார்.
oOo
இஸ்லாமிய ஆட்சியின் வலிமையையும் அதன் நாகரிகத்தின் பெருமையையும் பறைசாற்றும் மையங்களுள் ஒன்றாகத் திகழ்ந்த நகரம் டமாஸ்கஸ். 1154ஆம் ஆண்டு அந்நகர் தம் வசமானதிலிருந்து அதற்குப் புத்துயிர் அளிப்பதில் நூருத்தீனுக்குப் பெருமுனைப்பு. நினைவுச்சின்னங்களாகப் பல கட்டடங்களைக் கட்டத் திட்டமிடப்பட்டது. அதற்கான நிதியுதவிகள் வழங்கப்பட்டு அப்பணிகள் உடனே தொடங்கப்பட்டன. செங்கல் ஒன்று பெயருக்கு நாட்டப்பட்டு மறக்கப்படுவது போலன்றி, புதிய மருத்துவமனை கட்டப்பட்டது. அதன் பெயர் Bimaristan (நோய் நீக்கும் மையம்). மருத்துவ அறிவியலிலும் சிகிச்சையிலும் உலகின் முன்னணி மையங்களுள் ஒன்றாக அது உருவானது.
குடி மக்களுக்காக ‘ஹம்மாம் நூருத்தீன்’ என்னும் பெயரில் ஒய்யாரமான பொதுக் குளியலறை கட்டப்பட்டது. பெரிதளவில் ஏதும் மாற்றம் செய்யப்படாமல் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது அந்த ஹம்மாம். டமாஸ்கஸ் நகருக்கு மேற்கே ஹஜ்ஜுக்குச் செல்லும் பயணிகளுக்காகப் புதிதாக உருவானது ஒரு புறநகர். அதேபோல் ஒரு மைல் வடக்கே ஃபலஸ்தீன் அகதிகளுக்குப் புகலிடமாக ‘அஸ்-ஸாலிஹிய்யா’ நகரம் கட்டப்பட்டது.
அவர் வெளியிட்ட நாணயத்தில் ‘நீதி வழுவா மன்னர்’ என்று அவர் பெயர் பொறிக்கப்பட்டது. பெருமைக்கோ, புகழுக்கோ எழுதப்பட்டது போலன்றி, நீதியை நிலைநாட்டப் பெருமுனைப்பு காட்டியிருக்கிறார் நூருத்தீன். புதிய நீதி மன்றம் கட்டப்பட்டு, வாரத்தில் இரண்டு நாள்கள் தாம் அங்கு அமர்ந்து தம் குடிமக்களின் குறைகளைக் கேட்டறிந்து நடவடிக்கை எடுத்திருக்கிறார் அரசர் நூருத்தீன்.
அவரது அரசவை – ஆட்சி, சட்டம், இராணுவத் துறை சார்ந்த பல வல்லுநர்களை உலகின் பல பகுதிகளிலிருந்தும் கவர்ந்து இழுத்தது. அவர்களுள் ஒருவர் பாரசீகத்தைச் சேர்ந்த அறிஞர் இமாதுத்தீன் அல்-இஸ்ஃபஹானி. பக்தாதில் கல்வி பயின்ற அவர் 1167ஆம் ஆண்டு நூருத்தீனிடம் கத்தீபாகச் சேர்ந்தார். பிற்காலத்தில் அக்காலத்திய அரபு வரலாற்றைப் பிரமாதமான கவிதைகளாக வடித்தார் அவர். தம் புரவலர் நூருத்தீன் சாமர்த்தியம், தூய்மை, நல்லொழுக்கம் நிறைந்த, ஆகச் சிறந்த மன்னர் என்று அவர் விவரித்து எழுதி வைத்துள்ளார்.
இவற்றோடுதான் 1160 ஆண்டுகளின் தொடக்கத்திலிருந்து நூருத்தீனின் ஆட்சியில் ஜிஹாதுக்கான முக்கியத்துவம் தீவிரமடைந்தது. அவரது நற்பண்புகள் அவரை வீர முஜாஹிதாக அடையாளப்படுத்தி, பொது நினைவுச்சின்னங்களில் அது செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. ஜெருசலம் முதன்மையான இலக்கு; ஜிஹாது கோட்பாட்டுக்குள் அதைக் கொண்டுவந்தாக வேண்டும் என்ற நிலை அவரது ஆட்சியில்தான் ஏற்பட்டது. நூருத்தீனின் நண்பர் இப்னுல் அஸாகிர் இஸ்லாமிய ஜெருசலத்தின் முக்கியத்துவத்தை, அருமை, பெருமைகளை, எழுத்தில் வடித்துத் தீவிரப்படுத்த, அவை டமாஸ்கஸில் மக்கள் கூட்டங்களில் வாசிக்கப்பட்டன.
நூருத்தீனின் அவைக் கவிஞர்கள் யாத்த கவிதைகள் இலத்தீன் கிறிஸ்தவர்களைத் தாக்குவதோடன்றி இஸ்லாத்தின் புனித நகரமான ஜெருஸலத்தை மீட்பதைப் பற்றியும் வலியுறுத்தின. அவையும் பெருவாரியாகப் பரப்பப்பட்டன. ‘ஜெருஸலம் நகரம் இரத்தத்தால் சுத்திகரிக்கப்படட்டும்’ எனத் தமது ஆசையை வெளிப்படுத்தினார் அறிஞர் இப்னுல் ஃகைஸரானி. எப்பொழுதும் போல் வலிமையுடன் திகழும் நூருத்தீனின் ஈட்டி முனை அக்ஸாவைக் குறி வைத்துள்ளது என்று தெரிவித்திருக்கிறார் அவர்.
இப்னுல் ஃகலனிஸி எனும் அக்காலத்திய வரலாற்று ஆசிரியர், நூருத்தீன் பிற ஆட்சியாளர்களிடம் தெரிவித்ததைத் தாமும் எழுதி வைத்துள்ளார். ‘முஸ்லிம்களின் நலனும் பரங்கியர்களுக்கு எதிரான போரும் அன்றி வேறெதையும் நான் நாடவில்லை… புனிதப் போர் தொடுப்பதில் நாம் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொண்டால், நமது விவகாரங்களை இணக்கமாக அமைத்துக்கொண்டு அந்த நலனில் மட்டுமே ஒன்றாகப் பார்வையைக் குவித்தால், எனது விருப்பமும் நோக்கமும் முழுமையாக நிறைவேறும்’
நூருத்தீன் தாமே பக்தாதில் உள்ள கலீஃபாவுக்குத் தமது விருப்பத்தை எழுதினார் – ‘சிலுவை வழிபாட்டாளர்களை அக்ஸா மஸ்ஜிதில் இருந்து வெளியேற்ற வேண்டும்’
இவ்வாறாக உருவான அவரது விருப்பமும் இலட்சியமும் ஒப்பற்ற ஓர் அடையாளச் சின்னமாக உருவானது. அது மிம்பர்! மஸ்ஜிதில் இமாம் உரையாற்றும் மேடை!
oOo
1168-1169 காலகட்டம். தலைசிறந்த தச்சர் அல்-அஃகரினி என்பவரை அழைத்து, அற்புதமாக அலங்கரிக்கப்பட்ட மிம்பர் ஒன்றைச் செதுக்கி உருவாக்கும் பணியை அவரிடம் ஒப்படைத்தார் நூருத்தீன். மஸ்ஜிதுல் அக்ஸாவை மீட்டெடுத்ததும் அங்கு அந்த மிம்பரை வைக்க வேண்டும் என்பது நூருத்தீனின் பேரவா; கனவு.
மத்திய காலக்கட்ட சிரியாவின் மரவேலைக் கலையின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளுள் ஒன்றாக உருப்பெற்றது மிம்பர். அதன் கலை வேலைப்பாடும் குறியீடும் முஸ்லிம் உலகின் மிக முக்கியமான வரலாற்று மிம்பர்களுள் ஒன்றாக அதை ஆக்கிவிட்டது.
பைன் மரத்தின் துண்டுகள் சுமார் 6500, முத்து, தந்தம், கருங்காலி ஆகியனவற்றைக் கொண்டு வடிவமைக்கப்பட்டு அவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டன. பசைகளையோ உலோக ஆணிகளையோ பயன்படுத்தாமல், மர ஆணிகளின் உதவியுடன் பிணைப்பு முறையில் அவற்றை ஒன்றிணைத்தனர். மிம்பரின் அடிப்பகுதியில் நுழைவாயிலுக்குக் கதவு, அந்த வாயிலின் மேல் அலங்கரிக்கப்பட்ட வளைவுகள், படிக்கட்டுகள், உச்சியில் மாடம் என்று உயர்ந்தது மிம்பர். அதன் ஓரங்களில் குர்ஆன் ஆயத்துகள், நூருத்தீன் பெயர், உருவாக்கிய கைவினைஞர்களின் கையொப்பம் பொறிக்கப்பட்டன.
நூருத்தீனின் பெயரைக் குறிப்பிடும்போது, ‘அல்லாஹ்வின் பாதையில் போரிடும் ஜிஹாதுப் போராளி, அவனுடைய மார்க்கத்தின் எதிரிகளிடமிருந்து எல்லைகளைப் பாதுகாப்பவர், நேர்மையான அரசர், இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்குமான தூண், நீதி வழுங்குபவர் என்ற புகழுரையும் நூருத்தீன் தம் கையால் (அக்ஸாவை) மீட்கட்டும், அல்லாஹ் அவருக்கு வெற்றியை வழங்கட்டும்!’ என்ற வாழ்த்துச் சொற்களும் இடம்பெற்றன.
ஐபீரியாவைச் சேர்ந்த முஸ்லிம் பயணி இப்னு ஜுபைர், லெவண்த் பகுதியில் 1182ஆம் ஆண்டு பயணித்தபோது இந்த மிம்பரின் அசாதரண அழகைப் பார்த்து வியந்துவிட்டார். அதன் பிரம்மாண்டம் நிகரற்றதாக இருந்தது என்று பிரமித்திருக்கிறார் அவர்.
நூருத்தீனின் நோக்கத்தைப் பொதுமக்கள் மத்தியில் உரத்து ஒலித்தது மிம்பர். அதை அலெப்போவின் பெரிய பள்ளிவாசலுக்குக் கொண்டுசென்று பத்திரப்படுத்தினார் நூருத்தீன். ‘உறையுள் உறங்கும் வாளைப் போல் ஜெருசலம் வெற்றிகரமாக மீட்கப்படும் நாளுக்காக அது காத்திருந்தது’ என்று விவரிக்கிறார் இமாதுத்தீன் என்பவர்.
ஆனால் அலெப்போவில் காத்திருந்த அந்த மிம்பரை மஸ்ஜிதுல் அக்ஸாவுக்குக் கொண்டு செல்லும் பாக்கியம் நூருத்தீனுக்கு அமையவில்லை. அந்த நற்பேறு ஜெருசல நாயகர் ஸலாஹுத்தீன் அய்யூபிக்கே வாய்த்தது. தாம் ஜெருசலத்தை 1187ஆம் ஆண்டு மீட்டெடுத்ததும் அந்த மிம்பரை அலெப்போவிலிருந்து அக்ஸாவில் உள்ள பைத்துல் மக்திஸிற்குக் கொண்டுவந்து நிறுவி நூருத்தீனின் கனவை நிறைவேற்றினார் ஸலாஹுத்தீன்.
1169ஆம் ஆண்டு நூருத்தீன் உருவாக்கிய அந்த மிம்பர், பைத்துல் மக்திஸில் கம்பீரமாக வீற்றிருந்த அந்த மிம்பர், 1969 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் நாள், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறிஸ்தவ தீவிரவாதி டெனிஸ் மைக்கேல் ரோஹன் என்பவனின் மதவெறிக்கு இரையானது. மஸ்ஜிதுக்குள் நுழைந்து அந்த மிம்பருக்குத் தீயிட்டான் அயோக்கியன். கொளுந்துவிட்டு எரிந்த தீ, மிம்பரை மீட்க இயலாத அளவிற்கு அழித்தது. பள்ளிவாசலின் இதர பகுதிகளையும் மிஹ்ராபையும் சேதப்படுத்தியது.
எண்ணூறு ஆண்டுகளாக வலுவாக இருந்த அந்த மிம்பர் அத்தீவிரவாதியின் வெறியில் கருகியது. எரிந்ததுபோக மீதமிருந்தவற்றிலிருந்து மீட்கப்பட்ட மிம்பரின் மரத்துண்டுகள், கற்குவிமாடத்தில் (Dome of the Rock) அமைந்துள்ள இஸ்லாமிய அருங்காட்சியகத்தில் இன்றும் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன.
பள்ளிவாசலைச் செப்பனிட்டு மறுசீரமைப்புச் செய்துவிட்டாலும் அதே போன்ற வடிவமைப்பில் ஒரு மிம்பரை உருவாக்குவது முஸ்லிம்களுக்குப் பெரும் சவாலான பணியாக ஆகி, 2007ஆம் ஆண்டுதான் அது நிறைவுற்றது. அதற்காக ஜோர்டானில் மறுசீரமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. மரவேலைப்பாடுகளில் பல்வேறு திறன் கொண்ட 30 தச்சர்கள் துருக்கி, எகிப்து, மொராக்கோ, சிரியா, இந்தோனேஷியா, ஜோர்டான் ஆகிய நாடுகலிருந்து வரவழைக்கப்பட்டு அவர்களின் குழு அமைக்கப்பட்டது. நூருத்தீன் உருவாக்கிய மிம்பரின் பழைய புகைப்படங்கள், வரைபடங்களைக் கொண்டு அவர்கள் அதே மாதிரியில் புது மிம்பரை வடிவமைத்தனர். பழைய மிம்பர் எப்படிச் செதுக்கப்பட்டு, ஒன்றிணைக்கப்பட்டிருந்ததோ அதைப் போலவே இணைத்தனர். அனைத்தையும் அம்மான் நகரில் உருவாக்கி சரிபார்த்து, திருப்தியடைந்த பின், தனித்தனியாகப் பிரித்தெடுத்து ஜெருசலம் கொண்டுவந்து மீண்டும் இணைத்தனர். இன்று பைத்துல் மக்திஸில் அமைந்துள்ள மிம்பர் அதுவே.
அந்தத் தீவிரவாதி டெனிஸ் மைக்கேல் என்னவானான்? கைது செய்தது யூதர்களின் இஸ்ரேல் அரசு. வழக்கு நடந்தது. ‘பாவம் மனநிலை சரியில்லாதவன்’ என்று சில காலம் மனநலக் காப்பகத்தில் வைத்திருந்துவிட்டு, பிறகு அவனைப் பத்திரமாக ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைத்துவிட்டது.
முஸ்லிமல்லாத தீவிரவாதிகள் என்றாலே மனநிலை சரியில்லாதவர்கள் எனப்படும் ஐதீகத்தை 1969ஆம் ஆண்டே ஆரம்பித்து அதற்கு அடித்தளம் அமைத்துவிட்டனர் யூதர்கள்.
oOo
(தொடரும்)
-நூருத்தீன்
சத்தியமார்க்கம்.காம் – தளத்தில் 31 March 2023 வெளியானது
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License