சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 4

4. மன்ஸிகர்த் யுத்தம்

ஸெல்ஜுக்கியர்களுக்கும் பைஸாந்தியர்களுக்கும் இடையே உருவான ஒப்பந்தத்தின் அடிப்படையில் போர் ஓய்ந்து இரண்டு ஆண்டுகள் சமாதானமாகக் கழிந்தன. கி.பி. 1071ஆம் ஆண்டில், ‘இந்த அமைதி நன்றாக இருக்கிறது.

மேலும் இப்படியே தொடர்வோமே’ என்று பைஸாந்தியப் பேரரசர் ரோமானஸ் IV (Romanus Diogenes) சமாதான ஒப்பந்தத்தை நீட்டித்து அல்ப் அர்ஸலானுக்குத் தூது அனுப்பினார். அது சுல்தானுக்கு உடனே பிடித்துவிட்டது. ‘நல்லது. அப்படியே ஆகட்டும்’ என்று அதை அவர் மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார். காரணம் இருந்தது.

அவரது பட்டியலில் முன்னுரிமை பெற்றிருந்தது அலெப்போ நகரம். அச் சமயம் அந் நகரத்தை எகிப்திய அரசாங்கம் கைப்பற்றி வைத்திருந்தது. அதை மீட்டு எடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தபோதுதான் பைஸாந்தியத் தரப்பிலிருந்து இப்படி ஓர் ஒப்பந்த நீட்டிப்பு. தாமாக வந்த வாய்ப்பைத் தவற விடாமல் ஏற்றுக்கொண்டு, அலெப்போ நோக்கித் தமது படையினருடன் விரைந்தார் அல்ப் அர்ஸலான். ஆனால் அவர் நம்பியதுபோல் பைஸாந்தியத்திற்கு அமைதி தேவைப்படவில்லை. அவகாசம்தான் தேவைப்பட்டது! ஸெல்ஜுக்கியர்களுக்கு எதிராகப் பெரும் படை ஒன்றைத் திரட்டப் போதுமான அவகாசம்!

பைஸாந்தியம் ஸெல்ஜுக்கியர்களிடம் இழந்திருந்த வளமான உயர்நிலப்பரப்புகள் பாரம்பரியமாக அப்பேரரசின் அதிகார மையமாகத் திகழ்ந்தவை. அவற்றை மீட்டுத் தம் கைவசம் கொண்டுவர வேண்டும் என்பது அவர்களுக்குச் சொல்லி மாளாத கவலை. மட்டுமின்றி, கிழக்கு அனட்டோலியா வரை ஆக்கிரமித்துவிட்ட துருக்கியர்களைத் திட்டவட்டமாகத் தடுத்து நிறுத்தி நசுக்க வேண்டாமோ?

ஒப்பந்தம் கையெழுத்தாகி, அல்ப் அர்ஸலான் தெற்கு நோக்கி அலப்போவுக்குச் சென்றதும், அதை எடுத்துக் கண்ணைத் துடைத்துவிட்டு, மளமளவென்று காரியத்தில் இறங்கினார் சக்ரவர்த்தி ரோமானஸ். நாற்பதாயிரம் வீரர்கள் அடங்கிய பெரும் படையைத் திரட்டி, மன்ஸிகெர்த் நகரை நோக்கி நகர்ந்தார். அலப்போ சென்றிருக்கும் அல்ப் அர்ஸலான் சுதாரித்துத் தம் படையுடன் வருவதற்குள் மன்ஸிகெர்த் நகரைக் கைப்பற்றிவிட வேண்டும் என்பது ரோமானஸின் திட்டம். ஆனால் அதற்குமுன் அல்ப் அர்ஸலானுக்குச் செய்தி எட்டிவிட்டது. அலப்போவிலிருந்து அப்படியே திரும்பி, முப்பதாயிரம் வீரர்களுடன் அங்கு வந்துச் சேர்ந்துவிட்டார் அவர்.

ஹிஜ்ரீ 463ஆம் ஆண்டு (கி.பி. 1071) நிகழ்ந்தது வரலாற்றுப் புகழ் மிக்க மன்ஸிகர்த் யுத்தம். உலக வரலாற்றில் அது மிக முக்கியமான ஒரு யுத்தமாகக் குறிக்கப்பட்டுள்ளது. களத்திற்கு வருவதற்கு முன்னரே பைஸாந்தியப் படையினர் சரிபாதி பின்வாங்கிச் சென்றுவிட, நடைபெற்றக் கடுமையான போரில் ஸெல்ஜுக் படை அமோக வெற்றியடைந்தது. பைஸாந்தியர்களுக்கு மாபெரும் தோல்வி என்பது ஒருபுறமிருக்க, அதுவரை அவர்களது யுத்த வரலாற்றில் நடைபெறாத விஷயம் முதன்முறையாக அப்போரில் இடம்பெற்றது.

பைஸாந்திய சக்ரவர்த்தி போர்க் கைதியாகப் பிடிபட்டார்! எத்தகு அவமானம்? வெட்கித்துப்போனது பைஸாந்தியப் படை. மனோரீதியாக அவர்களை அந்தத் தோல்வி பெரிதும் தாக்கியது, காயப்படுத்தியது.

ஒரு வாரத்திற்குப் பின், ஒப்பந்தங்கள், பணயத் தொகை என்று சக்ரவரத்தி ரோமானஸை அல்ப் அர்ஸலான் விடுவித்துவிட்டாலும் ‘பைஸாந்தியப் பேரரசிற்கு அது மிகவும் பின்னடைவை ஏற்படுத்திவிட்ட போர்; அவர்களின் அரசியலை மாற்றி அமைத்த பேரழிவு’ என்றே கிறிஸ்தவ வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். இத் தோல்விக்குப்பின் அவர்களுக்குள் அதிகாரப் போர் மேலோங்கி, அரசியல் களேபரங்கள் நிகழ்ந்து, ஒருவழியாக மைக்கேல் VII என்பவர் பைஸாந்தியச் சக்ரவர்த்தியானார்.

பைஸாந்தியக் கிறிஸ்தவர்களைப் பொருத்தவரை ஜெருசலத்தைவிட அனட்டோலியா நகரம்தான் அவர்களுக்கு முக்கியமான தளம். அது பறிபோனது; துருக்கியர்களையும் வெல்ல முடியவில்லை, ஒடுக்க முடியவில்லை என்றானதும் வேறு வழியில்லாமல் அவர்கள் ஒரு முடிவெடுத்தனர். மேற்குலகின் தேவாலயத்துடன் பைஸாந்தியர்களுக்கு நெடுங்காலமாகவே ஒட்டாத உறவு. கசப்புகள், வேறுபாடுகள் இருந்த போதிலும் இப்பொழுது தம் இடுக்கண் களைய, அவர்களது நட்பையும் உதவியையும் பெற்றுத்தான் ஆகவேண்டும் என்று தீர்மானித்து உதவி கோரி, ஐரோப்பாவில் உள்ள போப்பாண்டவருக்குத் தகவல் அனுப்பினார் மைக்கேல். அச்சமயம் போப்பாக இருந்தவர் கிரிகோரி VII.

கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டின் மத்தியில், பாழ்பட்டுப்போய்க் கிடக்கும் மேற்கத்திய கிறிஸ்தவ உலகை மீட்டெடுக்க வேண்டும் என்று ஐரோப்பாவின் ரோம் நகரத்துப் போப்பாண்டவர் சபை தீர்மானித்தது. அதற்கான சீர்திருத்த இயக்கம் ஒன்றைத் தன் தலைமையில் முன்னெடுத்தது. பாதிரிமார்களுக்கும் மத ஈடுபாடற்ற ஆட்சியாளர்களுக்கும் இடையே நிலவிவரும் தொடர்புகளால் ஏற்பட்டுவிட்ட மோசமான ஆதிக்கமே தேவாலயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று கருதியது போப்பின் திருச்சபை. தேவாலயத்தின் கழுத்தை நெரித்துப் பிடித்திருக்கும் சக்ரவர்த்திகள் மற்றும் அரசர்களின் பிடிகளை முறிக்க வேண்டுமெனில் அதற்கு ஒரேவழி இறைவன் தமக்கு அளித்திருக்கும் உச்சபட்ச அதிகாரத்தைப் போப் நிலைநாட்டுவதே என்று அவர்களுக்குள் குரல் உயர ஆரம்பித்தது. அதைத் தீவிரமாக முன்னெடுத்தவர் போப் கிரிகோரி.

லத்தீன் திருச்சபையின் விவகாரங்களை முற்றிலுமாய்க் கைப்பற்றி, கிறிஸ்தவ மக்களைச் சீர்ப்படுத்தவே தாம் இப் புவிக்கு அனுப்பப்பட்டிருப்பதாக கிரிகோரி மிகத் தீவிரமாய் நம்பினார். அதை நடைமுறைப்படுத்தக் கிடைக்கும் எந்தவொரு வாய்ப்பையும் நழுவவிடாமல் தழுவி ஏற்றுக்கொள்ள அவர் தயாரானார். போப்பாண்டவரின் ஊழியர்கள் அதற்கென வன்செயல்கள் புரிந்தாலும் அது சரியே, அவர்கள் ஏசு கிறிஸ்துவின் சிப்பாய்கள் என நியாயம் கற்பிக்கும் அளவிற்கு அவரது நிலைப்பாடு சென்றது. அவரது வழிகாட்டலின் அடிப்படையில், ‘புனித வன்முறை’ என்ற ஒரு கோட்பாடு உருவாக்கப்பட்டு நடைமுறைக்கும் கொண்டுவரப்பட்டது. ரோமுக்கு விசுவாசமான ஏசு கிறிஸ்துவின் சிப்பாய்களின் படையினரை உருவாக்க வேண்டும் என்ற முனைப்பில் அதற்கு ஆளெடுப்பதற்காக , கிறிஸ்தவப் பாரம்பரியங்களைத் தமக்கு உகந்த முறையில் வியாக்கியானம் புரியவும் ஆரம்பித்தார் போப் கிரிகோரி.

கிறிஸ்தவர்கள் தங்களுள் நிகழ்த்தும் ஆன்மீகப் போராட்டமே ‘கிறிஸ்துவின் போர்’ என்று கிறிஸ்துவத் தத்துவ அறிஞர்கள் வகைப்படுத்தியிருந்தனர். அதுதான் காலங்காலமாக அவர்களது நம்பிக்கை. கிறிஸ்தவத் துறவிகளைத்தாம் ஏசு கிறிஸ்துவின் சிப்பாய்கள் என்று அதுநாள்வரை விவரித்து வந்தனர். இவற்றையெல்லாம் தம் நோக்கத்திற்கு ஏற்ப , போப் கிரிகோரி மாற்றி விளக்கம் அளிக்க ஆரம்பித்தார். மார்க்க ஞானமற்ற சராசரி மனிதனாக இருந்தாலும் சரி, லத்தீன் தேவாலயத்தைக் காப்பதற்காக ஆயதமேந்திய போரில் ஏசு கிறிஸ்துவின் சிப்பாயாகப் பங்கெடுப்பது கட்டாயக் கடமை என்று அவர் அறிவித்தார்.

இப்படியாக அவரது செயல்பாடுகள் அமைந்திருந்த நிலையில் கிழக்கத்திய கிறிஸ்தவர்களான பைஸாந்தியர்களிடமிருந்து உதவி கேட்டு வந்த தகவல், பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலிருந்தது போப்புக்கு. கி.பி. 1074 ஆம் ஆண்டு தம்முடைய தலைமையில் பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கைக்குத் திட்டமிட்டார் போப் கிரிகோரி. அதைச் செயல்படுத்துவதற்காக அப்பட்டமான பொய்களைக் கூறவும் அவர் தயங்கவில்லை. ‘அங்கு நம் கிறிஸ்தவச் சகோதரர்களை முஸ்லிம்கள் நாள்தோறும் ஆடு, மாடுகளைப்போல் கொன்று கூறுபோட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் காப்பதற்காகப் போரில் ஈடுபடும் லத்தீன் கிறிஸ்தவர்களுக்குப் பரலோகத்தில் வெகுமதி நிச்சயம்’ என்றெல்லாம் பரப்பப்பட்டது. ஆனால் அவர் நினைத்த அளவிற்கு அத் திட்டம் வெற்றியடைவில்லை.

தவிர, போப்பாண்டவர்களின் திருச்சபையின் ஆதிக்கத்தை மேம்படுத்துவதற்காக முன்னெடுத்த அவரது வேகமான செயல்பாடுகளெல்லாம் புனித ரோமானியப் பேரரசராக ஆட்சி புரிந்த ஜெர்மனியின் சக்ரவத்தி நாலாவது ஹென்றியுடன் பெரும் அதிகார மோதலை ஏற்படுத்திவிட்டது. அது ஓங்கி வளர்ந்து ஒரு கட்டத்தில் மன்னர் ஹென்றி படை திரட்டிச் சென்று, ரோமைக் கைப்பற்றி, போப் கிரிகோரியை இத்தாலியின் தென்பகுதிக்கு நாடு கடத்தினார். இத்தகு நிகழ்வுகளால் போப் கிரிகோரியின் புனிதப் போர்த் திட்டம் அவருடைய காலத்தில் நடைமுறைக்கு வரமுடியாமல் போய் அப்படியே நீர்த்தும் போனது. ஆனால் அவர் மூட்டிய தீ?

அது மட்டும் நீறுபூத்த நெருப்பாய்க் கனன்று கொண்டிருக்க, அதைத் தக்க முறையில் விசிறி ஜுவாலை விடச் செய்தார் அடுத்து வந்த போப் அர்பன். கி.பி. 1095 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள க்ளெர்மான்ட் நகரில் அதற்கான அச்சாரம் இடப்பட்டது.

(தொடரும்)

-நூருத்தீன்

சத்தியமார்க்கம்.காம் – 11 மே 2018 வெளியானது


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment