சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 20

by நூருத்தீன்
20. அந்தாக்கியாவின் இரண்டாம் முற்றுகை

கி.பி. 1098ஆம் ஆண்டு, ஜூன் முதல் வாரம் அந்தாக்கியாவைச் சிலுவைப் படை கைப்பற்றியது. உள்ளே நுழைந்து வெற்றிக் கொடியை நாட்டியது. அடுத்த நாள் அங்கு வந்து சேர்ந்த கெர்போகாவின் தலைமையிலான முஸ்லிம்களின் படை இப்பொழுது அந்தாக்கியாவை முற்றுகையிட, பொறியில் சிக்கிய எலியைப் போல் ஆனது சிலுவைப் படை. தாங்கள் அந்தாக்கியாவை முற்றுகையிட்டிருந்தபோது, உள்ளிருக்கும் முஸ்லிம்களுக்கும் வெளியில் இருந்து வரும் முஸ்லிம் படையினருக்கும் இடையே சிக்கி, இருமுனைப் போரில் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்து அஞ்சியவர்கள், இப்பொழுது அந்தாக்கியாவின் கோட்டைச் சுவர்களுக்குள் மாட்டிக் கொண்டு மூச்சு முட்டி, திக்குமுக்காடும் நிலைக்கு உள்ளானார்கள்.

முந்தைய நீண்ட முற்றுகை, போர், அதைத் தொடர்ந்த சூறையாடல் ஆகியனவற்றால் பாதிப்படைந்து, சீரழிந்திருந்த அந்நகரம் சிலுவைப் படையினருக்குத் தேவையான உணவையோ, இராணுவத் தளவாடங்களையோ அளிக்க இயலாத பரிதாப நிலையில் கிடந்தது. மலையின் உச்சியில் அமைந்திருந்த கோட்டையோ முஸ்லிம்களின் வசம். அதனால் சிலுவைப் படையினருக்குத் தற்காப்புக்கும் வழியின்றி ஆபத்தான சூழ்நிலை. ‘தீர்ந்தது விஷயம்; அனைவரும் அழிந்தோம்’ என்று அவர்கள் முடிவுகட்டி விட்டனர். அப்படியும் அவர்களுக்கு இருந்த ஒரே ஒரு துளி நம்பிக்கை அலெக்ஸியஸ். அந்த பைஸாந்தியச் சக்ரவர்த்தி உதவிப் படையை அனுப்பி வைப்பார்; அப்பொழுது வெளியில் இருக்கும் முஸ்லிம் படையை இருமுனைத் தாக்குதலுக்கு உள்ளாக்கலாம் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் அந்த வாய்ப்பையும் முன் நிகழ்வு ஒன்று தகர்த்திருந்தது.

oOo

சிலுவைப் படையின் முக்கியத் தலைவர்களுள் கோமான் ஸ்டீஃபன் என்பவரும் ஒருவர். முன்னர் அவர்கள் அந்தாக்கியாவை முற்றுகையிட்டிருந்தபோது, கடைசிக் கட்டத்தில் நிலைமையை ஆராய்ந்த அவர், இனி கிறித்தவர்கள் வெற்றி அடைவதற்கோ, பிழைப்பதற்கோ வாய்ப்பே இல்லை என்று முடிவுகட்டினார். இவர்கள் எக்கேடோ கெட்டுப் போகட்டும். நாம் உயிர் பிழைத்து ஊர் போய்ச் சேர்வோம் என்று எண்ணியவர், காய்ச்சல், நோய் என்பதைப்போல் ஏதோ நொண்டிச் சாக்குச் சொல்லிவிட்டு, படையிலிருந்து விலகி, ஆசியா மைனர் வந்து சேர்ந்தார். அங்கு மத்திய அனடோலியாவில் தம் படையுடன் தங்கியிருந்த சக்ரவர்த்தி அலெக்ஸியஸை அவர் சந்தித்தார். ‘அதெல்லாம் அங்கு நிலைமை அப்படி ஒன்றும் சரியில்லை. அனேகமாய் இந்நேரம் நம் படையினர் அனைவரும் துடைத்து எறியப்பட்டிருப்பார்கள்’ என்று திட்டவட்டமாய்ச் சொல்லிவிட்டார்.

பார்த்தார் அலெக்ஸியஸ். ‘சரி, நாம் இனி இங்குத் தங்கி இருந்து ஆகப்போவது எதுவும் இல்லை. அவர்கள் விதிப்படி நடக்கட்டும்’ என்று தம் படையுடன் தலைநகர் கான்ஸ்டன்டிநோபிளுக்குச் சென்று விட்டார். எனவே, அந்தாக்கியாவின் முதல் முற்றுகையின்போது சிலுவைப் படையினருக்கு வந்து சேராத பைஸாந்திய உதவிப்படை, இப்பொழுது எப்படி வந்து சேரும்? தாங்கள் கைவிடப்பட்டது லத்தீன் கிறித்தவர்கள் மனத்தில் கிரேக்கர்களைப் பற்றிய அதிருப்தியையும் மாறாத வடுவையும் நிரந்தரமாக ஏற்படுத்திவிட்டது. பிற்கால அரசியலில், போர்களில் பின்விளைவை ஏற்படுத்தியது. இதற்கெல்லாம் காரணமான ஸ்டீஃபன் ஊர் போய்ச் சேர்ந்தால், ‘கோழைப் பயலே!’ என்று அவர் தம் மனைவியிடம் ஏக வசனத்தில் திட்டும் துப்பும் வாங்கியதுதாம் மிச்சம். இதற்கு அங்கேயே கிடந்து இறந்திருக்கலாம் என்று அவர் நினைத்திருக்கலாம். அவையெல்லாம் கிடக்கட்டும். இங்கே அந்தாக்கியாவில் இப்பொழுது சிலுவைப் படை தனியே கொ்போகாவை எதிர்கொள்ளும் நிலைக்கு உள்ளாகியது.

அப்பாஸிய கலீஃபாவின் ஆசிபெற்ற, பக்தாதில் உள்ள சுல்தானின் படையைத் தலைமை தாங்கி வந்திருக்கும் தளபதியாக, பெரும் வல்லமை மிக்கவராகத்தான் கெர்போகாவைச் சிலுவைப் படையினர் பார்த்தனர். அது என்னவோ உண்மைதான். மொசூல் நகரின் அந்தத் தளபதியும் பெரும் வீரர், திறமையானவர்தான். ஆயினும் இந்தப் போரில் அவருக்கும் தனிப்பட்ட வகையில் தன்னலம் சார்ந்த குறிக்கோள் ஒன்று இருந்தது.

சிரியா!

இந்தப் போரில் சிலுவைப் படையினரை வென்று அவர்களைத் துரத்தி அடித்துவிட்டால், இப்பகுதியின் ஒப்பற்ற தலைவராகத் தாம் உயர முடியும், சிரியாவைக் கைப்பற்ற நல்லதொரு வாய்ப்பாக அது அமையக்கூடும் என்று அவருக்கு நம்பிக்கை, ஆசை. அதனால் ஆறு மாதங்களுக்கு முன்பே மிகக் கவனமாக அவர் திட்டம் தீட்ட ஆரம்பித்திருந்தார்.

யூப்ரட்டீஸ் நதியைக் கடந்து சிரியாவுக்கு வந்த கெர்போகா, டமாஸ்கஸின் ஆட்சியாளர் துகக், அவருடைய அதாபெக் ஸஹீருத்தீன் துக்தெஜின், ஹும்ஸின் ஆட்சியாளர் ஜனாஹ் அத்தவ்லா ஹுசைன், ஸின்ஜாரின் ஆட்சியாளர் அர்ஸலான் தாஷி, ஜெருஸலத்தின் ஆட்சியாளர் ஸுக்மான் இப்னு அர்துக் ஆகியவர்களைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார். அந்நியக் கண்டத்திலிருந்து உள்புகுந்து, நம் பகுதிகளைப் பிடுங்கி, நம்மைக் கொன்றொழித்து இஸ்லாத்திற்கு ஆபத்து விளைவிக்க முனையும் இந்தக் கிறித்தவர்களை விரட்டி அடிப்போம், இஸ்லாத்திற்காக ஒருங்கிணைவோம் என்றெல்லாம் பேசி, சிலுவைப் படையின் அபாயத்தை விவரித்தார். ராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முஸ்லிம்களுக்குள் இணக்கம் ஏற்படுவது எவ்வளவு முக்கியம் என்பதை அவர் உணர்த்த, அவரது அம் முயற்சிக்கு வெற்றியும் கிடைத்தது. தத்தம் போக்கில் பிரிந்து கிடந்த அவர்களும் ஓரளவு ஜிஹாதின் அவசியத்தை உணர்ந்திருக்க வேண்டும். கெர்போகாவின் தலைமையில் அணி திரண்டனர்.

ஜிஹாது, சிலுவைப் படையின் மீதான வெறுப்பு என்பனவெல்லாம் அந்தக் கூட்டணித் தலைவர்களுக்கு இரண்டாம் பட்சமாக இருந்தன; முதன்மையான காரணம் அச்சம்! கொ்போகாவின் மீது அவர்களுக்கு இருந்த அச்சம்! ஸெல்ஜுக் பகுதிகளின் ஏகபோக அரசராக அவர் விரைவில் உயரப்போகிறார்; ஆளப்போகிறார்; அதனால் இப்பொழுதே அவருடன் இணக்கம் பாராட்டுவது நமக்கு நல்லது என்ற அரசியல் நோக்கம்தான் அவர்களிடம் பிரதானமாக இருந்தது என்று அந்தக் கூட்டணிக்கு மேலைநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் அர்த்தம் கற்பிக்கிறார்கள். அவரவர் உள்நோக்கம் என்னவாக இருந்தபோதினும் அச்சமயம் சிலுவைப் படையை நிர்மூலமாக்கும் சாத்தியம் அமைந்த முஸ்லிம்களின் கூட்டணிப் படை உருவானது, அது அந்தாக்கியாவை நோக்கி நகர்ந்தது என்பது மட்டும் கண்கூடு.

இலத்தீன் கிறித்தவர்களின் தலைவர்களுள் ஒருவரான பால்ட்வின், எடிஸ்ஸா நகரைக் கைப்பற்றினார்; சிலுவைப் படையின் முதல் ராஜாங்கமாக எடிஸ்ஸா மாகாணத்தை உருவாக்கினார் என்பதைப் பதினேழாம் அத்தியாயத்தில் வாசித்தோமில்லையா? பெரும் படையுடன் கிளம்பிவந்த கெர்போகா நேராக அந்தாக்கியாவுக்குச் செல்லாமல், வழியில் இந்த எடிஸ்ஸா நகரை முற்றுகையிட்டார். முதலில் இதை மீட்டெடுப்போம் என்று நினைத்தாரா, அல்லது எடிஸ்ஸாவின் மீதான இந்த முற்றுகை அந்தாக்கியாவை முற்றுகையிட்டிருக்கும் சிலுவைப் படையினரைத் திசை திருப்பும்; அவர்களுள் ஒரு பிரிவு இங்கு வரும் என்ற தந்திரம் புரிந்தாரா என்பது தெரியாது. ஆனால் மூன்று வாரம் அவர் எடிஸ்ஸாவை முற்றுகையிட்டுக் காலம் விரயமானது, எடிஸ்ஸாவையும் கைப்பற்ற முடியாமல் போனது அவரது படையெழுச்சியின் முதல் பெரும் பிழையாக ஆகிவிட்டது. இரண்டில் ஒன்று என்று மூர்க்கமுடன் சிலுவைப் படை அந்தாக்கியாவைக் கைப்பற்ற அவகாசம் அளித்துவிட்டது. அந்தாக்கியா பறிபோனது என்று தெரிந்த பிறகுதான் இங்கு எடிஸ்ஸாவை விட்டுவிட்டு கெர்போகா அந்தாக்கியாவுக்கு விரைந்தார்.

ஜுன் 1098. அந்தாக்கியாவின் வடக்கே சில மைல்கள் தொலைவில், தமது படையின் முக்கியமான பகுதியை கெர்போகா பாடியிறக்கினார். நகரின் உச்சியில் இருந்த கோட்டையை முஸ்லிம்கள் தக்க வைத்திருந்தார்கள் அல்லவா, அவர்களுடன் தொடர்பு கொண்டார். கோட்டையைச் சுற்றி முஸ்லிம் படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். நகரின் வடக்கே இருந்த செயின்ட் பால் வாயிலைத் தடுத்து அடைக்கும் வகையில் போர்வீரர்கள் நிறுத்தப்பட்டனர். நகரின் முற்பகுதியில் தீவிரமாய்த் தாக்குதல் தொடுத்து உள்நுழைவது அவரது திட்டமாக இருந்தது. நகரின் கிழக்கு வாயில் சிலுவைப் படைத் தலைவர்களுள் ஒருவரான பொஹிமாண்டின் வசம் இருந்தது. அவர் தமது படை வீரர்களுக்குத் தலைமை தாங்க, ஜுன் 10ஆம் நாள் கெர்போகா தமது தாக்குதலைத் தொடங்க, ஆரம்பித்தது சண்டை. முஸ்லிம்கள் சிலுவைப் படையினருடன் கடுமையாகச் சண்டையிட்டனர். முழுவீச்சிலான போர் போலன்றி, இரு தரப்பினருக்கும் இடையே ஆரம்பத்தில் கடுமையான கைகலப்புச் சண்டைகளே நிகழ்ந்தன. பொழுது விடிந்ததிலிருந்து இரவு கவியும் வரை சிறிதுகூட இடைவெளி இன்றிச் சண்டை. ஓய்வு என்ற பேச்சுக்கு இடமே இல்லை. படை வீரர் ஒருவர், ‘இருக்கும் உணவை உண்ண முடியவில்லை, நீரைப் பருக அவகாசமில்லை. விடாமல் அடித்துக்கொண்டோம்’ என்ற குறிப்பிட்டிருக்கிறார். சண்டை, சண்டை, இடைவிடாத சண்டை.

இதில் முஸ்லிம் படையினரின் கை ஓங்கியது. அடித்துத் தாக்கி, துவைத்தார்கள். பலரைக் கொன்றார்கள். சிலுவைப் படையினர் துவண்டு, சோர்ந்து போனார்கள். அச்சமும் பீதியும் அவர்களைச் சூழ்ந்தன. அவை மிகுந்து, ‘இத்துடன் நம் ஆட்டம் முடிந்தது, தொலைந்தோம்’ என்று உறைந்து போனார்கள். இரவு சூழ்ந்ததும் இன்றைய சண்டை இத்துடன் முடிவடைந்தது என்று நகருக்குத் திரும்பும் படை வீரர்கள், ‘கொத்துக்கொத்தாக நம் தலைகளைக் கொய்ய முஸ்லிம்கள் தயாராகிவிட்டனர்’ என்று தங்கள் பங்குக்கு அச்சத்தைப் பரப்ப, பலர் என்ன செய்தனர் என்றால் கோட்டைச் சுவரின் உச்சியிலிருந்து கயிறுகள் கட்டிக் கீழே இறங்கிக் குதித்து, தப்பித்து ஓடினர். அந்த எண்ணிக்கை அதிகரித்தது. பொஹிமாண்டின் நெருங்கிய உறவினரேகூட, ‘உங்களுடன் உறவு இருக்கு சரி, உயிருக்கு உத்தரவாதம் இருக்கிறதா?’என்று கயிற்றில் இறங்கித் தப்பி ஓடினார். ஒரு கட்டத்தில் சிலுவைப் படையின் முக்கியத் தலைவர்களேகூடத் தப்பித்துச் செல்லத் தயாராகிவிட்டனர் என்று செய்தி பரவியது. ‘இது என்ன கூத்து? ஆபத்தாக இருக்கிறதே’ என்று பொஹிமாண்டும் அத்ஹிமரும் நகரின் வாயில்களை அடைத்து வீரர்கள் தப்பித்து ஓடுவதைத் தடுக்க அணை போடும்படி ஆனது.

இப்படியான களேபர நிலையில், ஜுன் 13ஆம் நாள் இரவு எரி நட்சத்திரம் ஒன்று முஸ்லிம் படைகளின் கூடாரத்திற்குள் விழுந்தது. இதைப் பார்த்தார்கள் சிலுவைப் படையினர். ‘ஆஹா! நல்ல சகுனம் இது. தேவனின் வதை முஸ்லிம்களின் மீது இறங்கும்’ என்று குதூகலித்தனர். அதற்கேற்றாற்போல் அடுத்த நாளே கெர்போகாவின் படையினர் பின்வாங்கிச் செல்வதை அவர்கள் கண்டனர். ஆனால், அதற்கான காரணமோ வேறு. தமது தாக்குதலில் தாம் நினைத்தபடி திட்டவட்டமான வெற்றி கிடைக்கவில்லை, சிலுவைப் படையின் தற்காப்பை முழுவதுமாகத் தகர்க்க முடியவில்லை என்பதை உணர்ந்த கெர்போகா தமது வியூகத்தை மாற்றி அமைத்தார். தினசரி நடைபெறும் சண்டை அது ஒருபக்கம் தொடரட்டும். நேரடியாக நகரினுள் நுழைவதை மாற்றி, சுற்றி வளைத்து நெருக்குவோம், சிலுவைப் படையை வெளி உலகுடன் முற்றிலுமாகத் தொடர்பிழக்கச் செய்வோம் என்பது அவரது திட்டம்.

அந்தாக்கியாவைக் கைப்பற்றிய நாளாகப் பரங்கியர்கள் ஏற்கெனவே உணவுத் தட்டுப்பாடில் தவித்து வந்தனர். இப்பொழுது அது மேலும் தீவிரமடைந்தது. காலணிகளின் தோல், கண்டகண்ட செடிகளின் வேர்கள் என்று அகப்பட்டதைச் சாப்பிட்டு, ‘தோல்வி இனித் தவிர்க்க முடியாதது. சரணாகதிதான்’ என்று தோல்வியின் விளிம்பிற்குச் சென்றுவிட்டனர். ஆனால்…

ஜுன் 14ஆம் நாள் நடைபெற்ற ஒரு நிகழ்வு நிலைமையை முற்றிலும் மாற்றிப்போட்டது.

(தொடரும்)

-நூருத்தீன்

சத்தியமார்க்கம்.காம் – தளத்தில் வெளியானது


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment