முஸ்தபாவின் வீட்டிலிருந்து இரு வீடுகள் தள்ளியிருந்த வீட்டில் ராபியா என்ற பெண்மணி வசித்து வந்தார். அவர் வயது முதிர்ந்தவர். அவருடைய கணவர் இறந்து விட்டார். இரண்டு பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் வெளிநாட்டில் பணி புரிந்தனர்.
அங்கேயே தங்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர். தங்கள் தாயாருக்குத் துணையாய் வீட்டில் தங்கி கவனித்துக்கொள்ள ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்தியிருந்தனர்.
கனிவும் அன்பும் நிரம்பிய ராபியாவை ஸாலிஹாவுக்கும் கரீமுக்கும் ரொம்பப் பிடிக்கும். அவரும் தம் பேரப் பிள்ளைகளைப்போல் இருவரையும் கொஞ்சுவார். உள்ளே அழைத்து ஏதாவது தின்பண்டத்தை அவர்களது கையில் திணித்து அனுப்புவார். தெருவில் உள்ள பெரும்பாலான வீடுகளிலிருந்தும் தொலைக்காட்சியின் ஒலி வந்து கொண்டிருக்கும். ஆனால் இவரது வீட்டை கடக்கும்போது மட்டும் ராபியா அழகிய குரலில் குர்ஆன் ஓதும் ஒலி கேட்டபடி இருக்கும்.
ஒருநாள் காலை தெருமுனையில் உள்ள கடைக்குச் சென்று, மளிகைப் பொருள் ஒன்றை வாங்கி வந்த ஸாலிஹா, ‘ராபியா நானி வீட்டு கதவு சாத்தியிருக்கு. எப்போதுமே குர்ஆன் ஓதும் சப்தம் கேட்குமே, அதுவும் கேட்கவில்லை’ என்று தெரிவித்தாள்.
“அசதியில் அவங்க இன்று தூங்கியிருக்கலாம்” என்று பதில் அளித்ததோடு தம் வேலையில் மும்முரமாகிவிட்டார் ஸாலிஹாவின் அம்மா.
மாலை முஸ்தபா வீடு திரும்பும் போது கவனித்தார். ராபியா வீட்டு வாசலில் சிறு கூட்டம் குழுமியிருந்தது. ‘இன்னிக்குக் காலையில் ராபியா மாமி இறந்து விட்டார்களாம்” என்று தம் கணவரிடம் சோகத்துடன் தெரிவித்தார் ஸாலிஹாவின் அம்மா.
“இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்” என்றார் முஸ்தபா.
“எப்பவுமே கேட்கும் அவர்கள் குர்ஆன் ஓதும் ஒலி இன்று காலையில் கேட்காதபோதே எனக்கு ஒரு மாதிரியா இருந்துச்சு டாடி” என்று அழுத கண்களுடன் கூறினாள் ஸாலிஹா. சோபாவின் ஒரு மூலையில் அப்துல் கரீமும் கண்ணீருடன் ஒடுங்கி அமர்ந்திருந்தான்.
இரவு உணவுக்குப் பின் தம் பிள்ளைகளுடன் கட்டிலில் ஓய்வாகப் படுத்திருந்த முஸ்தபா அவர்களிடம் சொன்னார், “குர்ஆன் ஓதும் ஒலியைக் கேட்கத் தவறியதால் ஒரு கொலையை உடனே அறிந்து, குற்றவாளியையும் விரைந்து கண்டுபிடித்து விட்டார் கலீஃபா உமர் (ரலி). அப்படி ஒரு க்ரைம் திரில்லர் மதீனாவில் நடந்தது.”
“அதைச் சொல்லுங்கள் டாடி” என்றான் கரீம்.
“உம்முவரக்கா (ரலி) மதீனாவில் வாழ்ந்து வந்தார். செல்வ வசதி படைத்தவர். இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதும் நபியவர்களின் போதனைகளும் குர்ஆனும் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. தினமும் பகலும் இரவும் பல மணி நேரம் குர்ஆனை ஓதுவார். அதன் அர்த்தங்களை நபியவர்களின் போதனைகளிலிருந்து புரிந்து கொள்வார். இப்படியே காலத்தைக் கழிக்க ஆரம்பித்தார் அவர்.”
“ஆனாலும் அவர் மிகவும் தைரியமான பெண்மணி. பத்ருப் போருக்கு முஸ்லிம்கள் செல்லும்போது, ரஸூலுல்லாஹ்விடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! நானும் படையினருடன் இணைந்துகொள்ள அனுமதி அளியுங்கள். போரில் காயம் அடைபவர்களுக்குச் சிகிச்சை அளிப்பேன். வீரர்களுக்குப் பணிவிடை செய்வேன். இந்த வாய்ப்பின் மூலமாக அல்லாஹ் நாடினால் எனக்கு உயிர்த் தியாகியாக வாய்ப்பும் கிடைக்கலாம்’ என்றார். அவருடைய வயது, மற்றும் சில காரணங்களினால் நபி (ஸல்) உம்முவரக்காவை வீட்டிலேயே இருக்கச் சொல்லிவிட்டார்கள்.”
“அதற்கு அவர்கள் என்ன சொன்னார்கள்?” என்று கேட்டாள் ஸாலிஹா.
“நபியவர்கள் ஒன்றைச் சொல்லிவிட்டால் அவர்கள் எதிர்த்துப் பேசமாட்டார்கள் அல்லவா? அதனால் அப்படியே செய்தார் உம்முவரக்கா. தமது பெரிய வீட்டில் தனியாக வசித்து வந்த அவருக்கு உதவி ஒத்தாசை புரிய இரு அடிமைகள் இருந்தனர். ரஸூலுல்லாஹ் இறந்த பிறகும் நீண்ட நாள் உயிருடன் இருந்தார் உம்முவரக்கா. எப்போதும்போல் குர்ஆனை ஓதியபடி அவரது நேரம் கழியும்.”
“ஒருநாள் காலை எப்பொழுதும் போல் சுப்ஹுத் தொழுகைக்கு எழுந்த கலீஃபா உமருக்கு (ரலி) என்னவோ சரியில்லை என்று தோன்றியது. தொழுது முடித்ததும் சஹாபாக்களிடம், ‘எல்லா இரவுகளிலும் என் சிற்றன்னை உம்முவரக்கா குர்ஆன் ஓதும் சப்தம் கேட்கும். ஆனால், நேற்றிரவு எனக்குக் கேட்கவில்லையே!’ என்றார். விசாரித்துவிட்டு வருவோம் என்று அவரும் சில தோழர்களும் உம்முவரக்காவின் வீட்டிற்குச் சென்றனர். அங்கே போய் பார்த்தால்…” என்று நிறுத்தினார் முஸ்தபா.
“என்னாச்சு டாடி?” என்று ஆர்வத்துடன் கேட்டான் கரீம்.
“உம்முவரக்கா உறங்கும்போது, இரு அடிமைகளும் அவரின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, உடலை ஒரு துணியால் போர்த்தி, வீட்டின் மூலையில் தள்ளிவிட்டு, தப்பித்துச் சென்றுவிட்டனர். விசாரித்துவிட்டுப் போகலாம் என்று அந்த வீட்டிற்கு வந்த கலீஃபாவும் தோழர்களும் துணியுடன் சுருட்டப்பட்டுக் கிடந்த உம்முவரக்காவின் உடலைப் பார்த்துவிட்டார்கள். விஷயம் புரிந்து, உடனே நாலாபக்கமும் ஆளை அனுப்பித் தேடியதில் அந்த அடிமைகள் இருவரும் மாட்டிக்கொண்டனர். குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.“
“இதில் ஒரு விஷயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் எல்லோருக்கும் குர்ஆன்தான் வாழ்க்கையாக இருந்தது. நமக்கும் அதுவே வாழ்க்கையாக அமைய வேண்டும். நாமும் தினமும் குர்ஆனை அழகிய முறையில் தெளிவாக ஓதவேண்டும். அதன் அர்த்தங்களை உணர்ந்து புரிந்துகொள்ள வேண்டும்” என்றார் ஸாலிஹாவின் அம்மா.
“ஓக்கே மம்மி” என்று பதில் வந்தது.
-நூருத்தீன்
புதிய விடியல் – செப்டம்பர் 1-15, 2019
அச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்
<–முந்தைய அத்தியாயம்–> <–அடுத்த அத்தியாயம்–>
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License