அவனிருக்க பயமேன்?

by நூருத்தீன்

நள்ளிரவு நேரம். முஸ்தபா தம் குடும்பத்தினருடன் காரில் சென்னைக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். வெளியூரில் உறவினர் வீட்டுத் திருமணத்திற்கு அவர்கள் சென்றிருந்தனர். அங்கு இரண்டு

நாள் தங்கியிருந்துவிட்டு மாலையில் கிளம்பினர். கிளம்பும்போதே இருட்டிவிட்டது. நெடுந்தொலைவுப் பயணம் என்றாலும் விடிவதற்குள் சென்னையை அடைந்துவிட முடியும் என்று முஸ்தபா திட்டமிட்டிருந்தார்.

அதிகம் போக்குவரத்து இன்றி சாலை அமைதியாக இருந்தது. அவருடைய மனைவியும் பிள்ளைகளும் காரில் கண்ணயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தனர். திடீரென கார் டயரிலிருந்து படாரென சப்தம் வந்து, வண்டி தடுமாற ஆரம்பித்தது. டயர் ஒன்று பஞ்சராகிவிட்டது என்பதை உடனே உணர்ந்த முஸ்தபா, வண்டியின் வேகத்தைக் குறைத்து, திறமையாகச் சமாளித்து, சாலையின் ஓரத்தில் ஒரு மரத்தடியில் பத்திரமாக நிறுத்தினார். அதற்குள், சப்தம் கேட்டு வண்டியிலிருந்த அனைவரும் திடுக்கிட்டு விழித்து, பதட்டமடைந்துவிட்டனர்.

முஸ்தபா இறங்கி வண்டியை ஒருமுறை சுற்றிப் பார்த்தார். “டயர் பஞ்சராகிவிட்டது. வேறு ஒன்றும் பிரச்சினை இல்லை. ஸ்டெப்னி மாட்டிவிடலாம். பதட்டமடைய வேண்டாம்” என்று அனைவரையும் சமாதானப்படுத்தினார்.

விளக்குகள் இன்றி சாலை இருட்டிக் கிடந்தது. டார்ச் லைட் வெளிச்சத்தில் ஸ்டெப்னியை மாட்டலாம் என்று நினைத்து வண்டியை ஆராய்ந்தால் அதற்கான உபகரணங்கள் இல்லாததை அப்பொழுதுதான் முஸ்தபா உணர்ந்தார். ஏதோ காரணத்திற்காக அவற்றை காரிலிருந்து எடுத்து வீட்டில் வைத்திருந்தார். பயணம் கிளம்பும்போது அவற்றை எடுத்து வைத்துக்கொள்ள மறந்திருந்தார்.

“அல்லாஹ்வே! இப்போ என்ன செய்வது? பிள்ளைகளுடன் இப்படித் தனியாக இருட்டில் மாட்டிக்கொண்டோமே! இந்த பொட்டல் காட்டில் நம்மைத் தவிர வேறு யாரும் இல்லையே!” என்று மிகவும் கவலையுடன் பேசினார் ஸாலிஹாவின் அம்மா.

சட்டென்று அவரைத் திரும்பிப் பார்த்த முஸ்தபா, “இங்கு நம்முடன் இன்னொருவருனும் இருக்கிறானே! அல்லாஹ் இருக்கிறானே! மறந்துவிட்டாயா?” என்று புன்னகையுடன் தம் மனைவியிடம் கேட்டார்.

தம் நாக்கை கடித்துக்கொண்டார் ஸாலிஹாவின் அம்மா. “சரியாகச் சொன்னீர்கள். ஏற்பட்ட அச்சத்தில் தடுமாறிவிட்டேன். ரஸூலுல்லாஹ்வின் அறிவுரையை மறந்துவிட்டேன்” என்றார் அவர்.

தூக்கம் கலைந்து, பிரச்சினையைப் புரிந்து அச்சத்தில் இருந்த அப்துல் கரீம் அந்த நிலையிலும், “அது என்ன டாடி அறிவுரை?” என்று கேட்டான்.

”அதைப் பிறகு சொல்கிறேன். முதலில் ஏதாவது உதவி கிடைக்கிறதா என்று பார்ப்போம்” என்று தம் செல்ஃபோனைத் திறந்தார் முஸ்தபா. அச் சமயம் அந்தச் சாலையில் வேகமாக ஒரு கார் அவர்களைக் கடந்து சென்றது. சற்று தூரம் சென்றதும் நின்று, மீண்டும் ரிவர்ஸில் வந்து இவர்கள் அருகில் நின்றது.

காரில் இளவயது தம்பதியினர் இருந்தனர். வண்டியிலிருந்து இறங்கிய இளைஞன், “என்ன ஸார்? ஏதும் பிரச்சினையா?” என்று விசாரித்தான். விஷயம் தெரிய வந்ததும், “ஒன்றும் கவலைப்படாதீர்கள். என் வண்டியில் டூல்ஸ் உள்ளது” என்று அவனே கிடுகிடுவென்று பஞ்சரான டயரைக் கழற்றி, ஸ்டெப்னியை மாட்டித் தந்துவிட்டான். அவன் மனைவி அதற்குள் முஸ்தபாவின் மனைவியிடமும் பிள்ளைகளிடமும் நட்பாகி கிளம்புவதற்குள் ஃபோன் நம்பர் பரிமாறிக்கொண்டனர்.

“அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் அனைத்தையும் இலோச்கி வைத்தான்” என்று காரில் பயணத்தைத் தொடரும்போது கூறினார் ஸாலிஹாவின் அம்மா.

“ஆம்! அன்று தன் ரஸூலுக்கும் அவர்களுடைய தோழருக்கும் ஏற்பட்ட மாபெரும் சோதனையையே இலேசாக்கி வைத்தவனாச்சே” என்றார் முஸ்தபா.

முற்றிலும் தூக்கம் கலைந்துவிட்டிருந்த ஸாலிஹாவும் கரீமும், “அதைச் சொல்லுங்கள் டாடி” என்று கதை கேட்கத் தயாராயினர்.

“மக்காவில் நபி (ஸல்) அவர்களுக்கு குரைஷிகள் தொடர்ந்து தொந்தரவு அளித்து வந்தார்கள். அது எல்லை மீறிப்போனதும் ரஸூலுல்லாஹ் மதீனாவிற்குச் செல்ல அல்லாஹ் அனுமதி அளித்துவிட்டான். எனவே அவர்களும் நெருங்கிய ஃப்ரெண்டாக இருந்த அபூபக்ரும் (ரலி) எதிரிகளுக்குத் தெரியாமல் மக்காவிலிருந்து வெளியேறி தவ்ரு எனும் குகைக்குள் புகுந்து மறைந்துகொண்டார்கள். அவர்கள் இருவரையும் மக்காவில் காணோம் என்றதும் எதிரிகள் தேடிக்கொண்டே தவ்ரு குகையின் வாசல்வரை வந்து விட்டார்கள். அந்த குகையின் உள்ளேயும் நுழைந்து பார்த்துவிடலாம் என்று ஒருவன் சொன்னான்.”

“உள்ளே புகுந்து பார்த்தால் அவர்கள் மாட்டிக்கொள்வார்களே” என்று கரீம் கவலையுடன் கூறினான்.

“கரெக்ட். அபூபக்ரும் பயந்துபோய், ‘இறைத் தூதரே! ஓர் ஆயுதங்கூட இல்லாமல் நாம் இருவர் மட்டுமே இங்கே தனியாக இருக்கிறோமே! எதிரிகள் அத்தனை பேரிடமிருந்தும் நாம் தப்புவது எப்படி?’ என்று நடுக்கத்துடன் கேட்டார். ‘என்ன நாமிருவரா? – இங்கே நாம் மூவர் இருக்கிறோமே, அதை மறந்துவிட்டீரோ?’ என்றார்கள் நபியவர்கள். ஆம்! எல்லாம் வல்ல இறைவனொருவன் அங்கே பக்கத்தில் பாதுகாப்பு அளித்து வருகிறான் என்னும் உண்மை தோழர் அபூபக்ருக்கு உடனே புரிந்தது. ‘மா நபியே! மன்னித்தருள்க! எல்லாம் வல்ல அல்லாஹ்வை நான் ஒருகணம் தெரியாத்தனமாய் மறந்து விட்டேன். தக்க சமயத்தில் நீங்கள் நினைவூட்டினீர்கள். ஆம், இறைவன் நம்மைக் காப்பாற்றி விடுவான்’ என்று கூறினார்கள்.”

“அதைத்தான் உன் டாடி எனக்கு இப்பொழுது நினைவூட்டினார்கள். எந்த கடுமையான சூழ்நிலையிலும் அல்லாஹ் நம்முடன் இருக்கிறான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அது நமக்கு நல்ல நம்பிக்கையையும் தைரியத்தையும் தந்துவிடும். அல்லாஹ்வும் நமக்குத் தேவையான உதவியை அளிப்பான்” என்றார் ஸாலிஹாவின் அம்மா.

”தேங்க்யூ டாடி” என்றார்கள் ஸாலிஹாவும் கரீமும்.

-நூருத்தீன்

புதிய விடியல் – அக்டோபர் 1-15, 2019

அச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்

<–முந்தைய அத்தியாயம்–>  <–அடுத்த அத்தியாயம்–>

<–நூல் முகப்பு–>

 


Creative Commons License

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment