புறநகரில் புதிதாகத் திறக்கப்பட்டிருந்த ஹோட்டலுக்கு தம் குடும்பத்தினருடன் சென்றிருந்தார் முஸ்தபா. அவருடைய அலுவலக நண்பர் தமக்கு வேலையில் புரோமஷன் கிடைத்ததை முன்னிட்டு, நெருங்கிய குடும்ப நண்பர்களுக்கு அங்கு விருந்து ஏற்பாடு செய்திருந்தார்.
விருந்து, அதுவும் புதிய ஹோட்டலில் என்றதும் ஸாலிஹாவும் அப்துல் கரீமும் மிகவும் உற்சாகமாகிவிட்டனர்.
அந்த ஹோட்டல் நவீன வடிவமைப்புடன் அழகாய் அமைந்திருந்தது. அது முஸ்லிம்களின் ஹோட்டல் என்பதால் அனைவரும் தொழுவதற்கு தனியாகத் தொழுகைக் கூடமும் இருந்தது. விருந்தினர்கள் அனைவரும் வந்து சேர்ந்ததும் இஷா தொழுது முடித்தார்கள். பிறகு விருந்து நடைபெற்றது.
பெண்கள், ஆண்கள், அனைவரும் அவரவர் நட்புகளுடன் தனித்தனியாக அமர்ந்து சிரித்துப் பேசி, உண்ண ஆரம்பித்தனர். உணவு பலவிதமாகவும் சிறப்பாகவும் இருந்தது. அதில் பிள்ளைகளை மிகவும் கவர்ந்தது உணவு மேசைக்கு கிரில்லுடன் கொண்டுவந்து பரிமாறப்பட்ட சிக்கன். காரில் வீடு திரும்பும்போதும் அதைப் பற்றிப் பேசினாள் ஸாலிஹா.
“ரொம்ப டேஸ்ட்டா இருந்துச்சு மம்மி. எப்படிச் செய்வாங்க?” என்று கேட்டாள்.
“சுவைக்கு என்னென்ன சேர்ப்பார்கள் என்பது அவர்களுடைய சமையல் ரகசியம். அது எனக்குத் தெரியாது. ஆனால், இந்த சமையல் முறையில் சிக்கனை க்ரில்லில் வைத்து கீழே கரி நெருப்பை மூட்டி, அதில் சுடுவார்கள்” என்று சுருக்கமான விளக்கமான அளித்தார் அவரின் அம்மா.
காரை ஒட்டிக்கொண்டிருந்த முஸ்தபா, “ஓ! உங்களுக்கு அந்த அளவு ருசி தெரிய ஆரம்பித்துவிட்டதா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.
“அப்போ நிறைய நெருப்பு கரியைப் போட்டு பஞ்சா என்று எதையோ தூக்கிக்கொண்டு என்னமோ சொல்லிக்கொண்டு அதன்மீது ஓடுகிறார்களே, நான் பார்த்தேனே, அவர்கள் இதுபோல் வெந்துவிட மாட்டார்களா டாடி?” என்று கேட்டான் அப்துல் கரீம்.
முஸ்தபா அந்தக் கேள்வியைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவரது வீட்டிற்கு அண்மையில் உள்ள தெருவில் ஷீஆக்கள் அதிகம் வசிக்கின்றனர். முஹர்ரம் மாதத்தின்போது அவர்கள் நிகழ்த்தும் பல அனாச்சாரங்களை அவர் பார்த்திருக்கிறார். அதில் தீ மிதிக்கும் நிகழ்வும் நடைபெறும் என்று கேள்விப்பட்டிருக்கிறார். அப்துல் கரீம் அதைப் பார்த்து நினைவில் வைத்திருக்கிறான் என்றதும் அவருக்கு ஆச்சரியம் ஏற்பட்டுவிட்டது.
“வேகவேகமாக ஓடும்போது அப்படியெல்லாம் சிக்கன்போல் வெந்து விடமாட்டார்கள். தவிர, அப்படியான மூடச் செயல்களுக்கும் நம் இஸ்லாத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை” என்றார் கரீமின் அம்மா.
“ஆனால் இஸ்லாத்திற்காக நெருப்பில் வெந்த சஹாபா ஒருவர் இருந்தார்“ என்றார் முஸ்தபா.
“யார் அவர்? அவருக்கு ஒன்றும் ஆகவில்லையா?” என்று ஆவலுடன் கேட்டாள் ஸாலிஹா.
“எப்படி ஒன்றும் ஆகாமல் இருக்கும்?” என்று விவரிக்கத் தொடங்கினார் முஸ்தபா. “‘கப்பாப் பின் அல்-அரத் (ரலி) என்றொரு ஸஹாபா. மக்காவில் அவர் அடிமையாக வாழ்ந்து வந்தார். நபி (ஸல்) இஸ்லாத்தைப் பற்றித் தெரிவிக்க ஆரம்பித்ததும் அவருக்கு அது உடனே பிடித்துவிட்டது. அல்லாஹ் ஒருவனே கடவுள் என்பது புரிந்துவிட்டது. நபி (ஸல்) அவனுடைய தூதர் என்பதை ஏற்றுக்கொண்டார். முஸ்லிம் ஆகிவிட்டார்”.
“அப்படியானால் அவருடைய எஜமானார்கள் அவரை டார்ச்சர் செய்திருப்பார்கள். கரெக்டா?” என்றாள் ஸாலிஹா.
“கரெக்ட். அதுவும் மிகவும் மோசமான வகையில் அவரைக் கொடுமைப் படுத்தினார்கள். கற்களை நெருப்பில் இட்டுச் சுடுவார்கள். தீ கொழுந்து விட்டு எரிந்து அந்தக் கற்கள் நெருப்புத் துண்டுகளாய் ஆகும்வரை காத்திருப்பார்கள். பின்னர் அவரை அந்த நெருப்புக் கங்குகளின்மேல் படுக்கப் போட்டு மேலும் கீழுமாய் இழுப்பார்கள். அவரது முதுகுச் சதைத் துண்டுகள் அந்தத் தீயினால் வெந்து விழும். அவரது காயத்திலிருந்து வழிந்து விழும் நீரினால் அந்தத் தீ அணையும்.”
அதிர்ச்சியுடன் “அல்லாஹ்வே!” என்றார்கள் பிள்ளைகள்.
“அதனால் அவரது முதுகு சதை பொத்தலடைந்து உருக்குலைந்து விட்டது. ஆனால் பிற்காலத்தில் அவருக்கு மிகவும் கண்ணியமும் மரியாதையும் ஏற்பட்டது. நபி (ஸல்) அவரைக் கண்டால் தமது விரிப்பை அவருக்கு விரித்து, அவரது தோள்களைத் தட்டி, ‘என் இறைவன் சிறப்பிக்கும்படி பரிந்துரைத்தவர்களுக்கு நல்வரவு உரித்தாகுக’ என்று மிகவும் அன்பாய் வரவேற்பார்கள்.”
பிள்ளைகள் இருவரும் அதைக் கேட்டு முடித்து சற்று நேரம் ஒன்றும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். பின் ஸீட்டில் அமர்ந்திருந்த ஸாலிஹா ஏதோ தீவிர சிந்தினையில் இருப்பதை கண்ணாடியில் கவனித்தார் முஸ்தபா.
பிறகு மௌனத்தைக் கலைத்துவிட்டு அவளே பேசினாள். “ அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டதற்காக சஹாபாக்கள் அப்படியெல்லாம் துன்பப்பட்டிருக்கிறார்கள், கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு க்ரேட்! நினைத்துப் பார்க்கவே முடியவில்லை டாடி”
“கரெக்ட்! அவரக்ளுடைய தியாகத்தையும் இஸ்லாத்திற்காக உயிரையும் கொடுக்கத் துணிந்து நின்ற வீரத்தையும் நாம் நம்முடன் கம்பேர் செய்யவே முடியாது. எனவே, நாம் முஸ்லிம்கள் என்பதற்காக நமக்குப் பிறர் துன்பத்தை அளிக்கும்போது சஹாபாக்கள் அதை எப்படிப் பொறுமையுடன் சகித்துக்கொண்டார்கள், வீரமாய் எதிர்த்து நின்றார்கள் என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார் முஸ்தபா.
“புரிகிறது” என்றார்கள் பிள்ளைகள்.
-நூருத்தீன்
புதிய விடியல் – நவம்பர் 1-15, 2019
அச்சுப் பிரதியை வாசிக்க இங்கே க்ளிக்கவும்
<–முந்தைய அத்தியாயம்–> <–அடுத்த அத்தியாயம்–>
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License