தாம்பரம் ஹிந்தி வித்தியாலயாவின் நான்காவது ஆண்டு விழா சென்ற 27-1-1953 அன்று நடந்தது. அதற்குச் சென்னை கவர்னர் ஸ்ரீபிரகாசா தலைமை வகித்தார். அவர் அப்போது புரிந்த சொற் பெருக்கின் முக்கிய பகுதியைக் கீழே பிரசுரிக்கிறோம். சகலவற்றையும் அவரே மிக நன்றாய் விளக்கிவிட்டிருப்பதால், நாமொன்றும் மேலதிகமாக விமர்சனம் எழுத விரும்பவில்லை. (தாருல் இஸ்லாம் பதிப்பாசிரியர்)
oOo
கவர்னரின் பிரசங்கம்
ஸ்ரீ பிரகாசா கூறினார்:- இந்த நாட்டிலுள்ள வேறு பிரதேச பாஷைகளுக்குக் குந்தகம் விளைக்கத் தக்க முறையிலே ஹிந்தி பரத்தப்பட வேண்டுமென்று விரும்புகிறவர்களுள் நானொருவன் அல்லேன். என்னைப் பொருத்த மட்டில், நான் என்றைக்குமே ஹிந்தியை நம் நாட்டின் தேசீய பாஷையாக ஆக்கவேண்டுமென்று நான் எப்போதுமே சம்மதித்தது கிடையாது; இன்றைக்குங்கூட நான் கொஞ்சமும் தயக்கமின்றி அதே உண்மையைத்தான் எடுத்துரைப்பேன். இதற்கு என்ன காரணமென்றால், நம் நாட்டு மக்கள் எல்லோரிடையேயும் ஹிந்தி பாஷையைப் பரத்துவதனால் அந்தப் பாஷைதான் குட்டிச் சுவராயப் போய்விடுகிறது. எவனெவன் தன் தன்னிஷ்டத்துக்கு தன்தன் மனம் போன போக்கில் பேசுகிறானோ அதைத்தான் ஹிந்தி பாஷையென்று பெயரிட்டழைக்கிறார்கள். ஒவ்வொருவனும் கண்ட கண்ட மாதிரியாக அந்தப் பாஷையைப் பேசுவதையும், அவன் அப்படிப் பேசுகிறதற்குத்தான் ஹிந்தியென்று பெயர் என்று கூறுவதையும் நான் காண்கின்றேன்.
மிக மிகக் கடினமான மொழி
ஹிந்தி மிகவும் சுலபமான மொழியென்று பல பேர்வழிகள் இடம்பமாகக் கூறுகிறார்கள். ஆனால், ஹிந்தி என்பது ஒரு மிகக் கடினமான மொழியென்பதும் அதை எந்த மனிதன் வேண்டுமானாலும் பேசக் கூடிய விதத்தில் அது அமைக்கப்பட்டில்லை என்பதும் எனக்கு நிச்சயமாய்த் தெரியுமென்பதை உங்களுக்கு அறிவித்துக் கொள்கிறேன். எனக்கு இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும், என்னைச் சூழவும் அந்த மொழி எல்லா மக்களாலும் படுகொலை புரியப்படுவதை நான் காணக் காண, ஹிந்தி தேசீய பாஷையாக ஆனாலும் சரியே, அல்லது ஆகாமற் போனாலும் சரியே, எப்படியாவது அந்தப் பாஷை கொலை புரியப்படாமல் காப்பாற்றப்பட்டால் போதுமே என்றுதான் நான் கவலைப் படுகிறேன். காலஞ் சென்ற காந்திஜீ பேசிக் கொண்டிருந்த ஹிந்தி எனக்கு நினைவிலிருக்கிறது. அவர் பேசி வந்த ஹிந்தி சுத்த மோசமாகவே இருந்து வந்தது. எனினும், அனேக மக்கள் காந்திஜீ பேசியதைப் போலவே தாங்களும் பேசவேண்டுமென்று ஆசை கொண்டு, அவர் பேசிய மாதிரியாகவே பேசி, ஹிந்தியைக் கொலை செய்து விட்டார்கள். இதையெல்லாம் கண்ட நான், என்னருமைத் தாய் மொழியாகிய ஹிந்தி பின்னொரு காலத்தில் தேசீய பாஷையாக ஆக்கப் படுமேயானால், அது நிச்சயமாகப் படுகொலை புரியப்பட்டு, சிதைக்கப்பட்டு, சிதறடிக்கப்பட்டு விடுமென்று அப்போதே நன்குணர்ந்து கொண்டு விட்டேன்.
இன்று நம் நாட்டிலே ஹிந்தி பாஷையைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்ன நினைக்கிறார்கள், தெரியுமா? அவர்களுடைய ஹிந்தியை இந்தியன் ஒவ்வொருவனும் எப்பாடு பட்டாவது கற்றுக் கொண்டுதான் தீரவேண்டுமென்றும், ஆனால், தாங்கள் மட்டும் வேறு எந்த மொழியையும் கற்றுக் கொள்ள முடியாதென்றுமே அவர்கள் சவால் விடுக்கிறார்கள். இன்று ஹிந்தி தேசீய பாஷையாக ஆக்கப்பட்டு விட்டதை யடுத்து நம் நாட்டில் எத்தனையோ எண்ணிறந்த மக்கள் மிகவும் நரக அவஸ்தையுடன் ஹிந்தியைக் கற்றுக்கொள்ள முற்பட்டிருக்கும்போது, ஹிந்தியைத் தன் தாய் பாஷையாகக் கொண்டவன் ஒவ்வொருவனும் அதே மாதரியாக அவஸ்தைப்பட்டே வேறு பாஷைகளைக் கற்றுத் தீரவேண்டும் என்பதைக் கடமையாகக் கொள்ள வேண்டும். அப்போதுதான் எருதின் புண் காக்கைக்குத் தெரியும்.
இப்போது பாருங்கள்! நான் இந்த மாகாணத்துக்கு கவர்னராக நியமனம் பெற்று வந்ததலிருந்து எவ்வளவோ சிரமப்பட்டுத் தமிழைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். ஆனால், சில சொற்களை மட்டுமே என்னால் இதுவரை கற்றுக் கொள்ள முடிந்ததே யொழிய, ஒரு வாக்கியத்தைக்கூட என்னால் தமிழில் பேச முடியவில்லை. ஹிந்தி பேசக்கூடிய எனக்குத் தமிழைக் கற்றுக்கொள்ள இவ்வளவு கஷ்டமாய் இருப்பதிலிருந்து, இப்படியேதான் தமிழர்களுக்கும் ஹிந்தி கற்றுக் கொள்வதென்பது மிகவும் சிரமமாயிருக்கும் என்பதை நான் நன்குணர்ந்து கொண்டுவிட்டேன். நீங்கள் எனக்கு அனுமதியளிப்பதாய் இருந்தால், இந்த அம்சம் சம்பந்தப்பட்ட மட்டில், திராவிடக் கழக கட்சியினரின் கூற்றை நான் அனுதாபத்துடனே ஏற்றுக்கொண்டுதான் தீரவேண்டும். ஆனால், நம் நாட்டின் எல்லாப் பிரதேசங்களிலிருந்தும் தேர்ந்தெடுத்தனுப்பப்பட்ட பிரதிநிதிகள் ஒன்று கூடியமர்ந்த அரசியல் நிர்ணய சபை ஹிந்தி பாஷையே தேசீய பாஷையாக ஆக்கப்பட வேண்டுமென்று தீர்மானித்துவிட்டபடியால், ஜனநாயக சித்தாந்தப்படி நாம் அந்தத் தீர்மானத்தை முழு மனத்துடன் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டுமல்லவா?
ஹிந்தி உருப்படாத பாஷையென்று நாம் சொல்லவில்லை. சென்னை கவர்னரே சாட்சியம் பகர்கிறார்! |
உருப்படாத பாஷை
இன்று ஹிந்தியே நம் தேசீய பாஷையாக ஆக்கப்பட்டுவிட்டது என்றால், அந்த மொழி மிகவும் வளப்பமானது என்கிற காரணத்தாலோ அல்லது அது மிகவும் சக்திமிக்கதென்னும் காரணத்தாலோ அல்லவே அல்ல. ஹிந்தி என் சொந்தத் தாய்பாஷையாய் இருந்து வருங் காரணத்தால், அந்த மொழியில் அப்படிப்பட்ட சிலாகிக்கத்தக்க குண விசேஷங்கள் எதுவுமே கிஞ்சித்தும் இருப்பதாக எனக்குப் புலப்படவில்லையென்பதை நான் வெட்கத்துடனே ஒத்துக் கொள்கிறேன். அப்படியானால் அந்த உதவாக்கறை ஹிந்தி ஏன் நம் தேசீய பாஷையாக ஆக்கப்பட்டது? ஏனென்றால், இந்நாட்டிலுள்ள மக்களுள் மிகப் பெரும்பாலோரால் அது பேசப்பட்டு வருகின்றமையாலும், மற்ற வேறு மொழியைப் புரிந்துகொள்கிறவர்களைவிட ஹிந்தியை விளங்கிக் கொள்கிறவர்கள் இந்நாட்டில் மிகுதமாயிருப்பதாலுமே ஹிந்தி தேசீய பாஷையாக ஆக்கப்பட்டுவிட்டது. எனவே, அரசியல் நிர்ணய சபை தேசீய பாஷையாக எதை ஆக்கலாமென்று யோசித்த சமயத்தில், ஹிந்தி மீதே அதன் திருஷ்டி விழுந்து விட்டது.
வடநாட்டிலிருப்பவர்கள் ஹிந்தி பேசுவதைவிட எழுதுவதைவிட இச் சென்னையில் ஹிந்தி கற்றுக் கொண்டவர்களே மிகவும் சுத்தமாகவும், இலக்கணப் பிழையின்றியும் ஒழுங்கான முறையில் ஹிந்தியைப் பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள். இந்த வகையில் நான் சென்னை ராஜ்ய மக்களைப் பாராட்டுகிறேன்.
தமிழின் பழைமை
இப்போது நான் இந்த ராஜ்யத்தின் பிரதான மொழியாகிய தமிழைப் பற்றி எனக்குத் தெரிந்ததை உங்களுக்கு அறிவிக்க ஆசைப்படுகிறேன். என்னவென்றால், ஹிந்திப் பேர்வழிகள், “வெண்கலக் குடத்தில் கூழாங்கற்களைப் போட்டுக் குலுக்குவதைப் போல் தமிழ் காணப்படுகிறது” என்று சும்மாவாவது கிண்டல் செய்கிறார்கள். ஆனால், அது சுத்தத் தவறு. ஏனென்றால், தமிழென்பது ஒரு வலுப்பமுள்ள, அழகிய, இனிய மொழியாகும். இந்த இனிய மொழியின் மிகப் பெரிய விசேஷாம்சங்கள் என்னவென்றால், சென்ற இரண்டாயிர வருடங்களுக்கு மேலாக இம் மொழி ஒரே விதமாகப் பேசப்பட்டு வருகிறது. அஃதாவது, சென்ற 2000 வருடங்களுக்கு முன் இத் தமிழ் நாட்டில் உயிர் வாழ்ந்திருந்தவன் ஒருவன் தற்செயலாக உயிர்கொடுக்கப்பெற்று மீட்டும் எழுந்து இங்கே இப்போது நடமாடினானேயானால், நீங்கள் என்ன பேசுகிறீர்களென்பதையும் அவன் நன்றாக விளங்கிக் கொள்ளுவான்; அவன் என்ன பேசுகிறானென்பதையும் நீங்கள் நன்றாய்ப் புரிந்து கொண்டு விடுவீர்கள். இந்த உலகத்திலுள்ள வேறெந்த மொழிக்கும் நீங்கள் இவ்வுபமானத்தைப் பொருத்திக் காட்ட இயலாது. மற்ற மொழிகள் காலம் செல்லச் செல்ல எவ்விதமான மாறுதலைப் பெற்றுக் கொண்டு இருக்கின்றனவென்றால், சென்ற நூறு வருடங்களுக்கு முன் ஒரு நாட்டினர் பேசிய பாஷையை அதே நாட்டில் இப்போது வசிப்பவர்கள் கொஞ்சமும் புரிந்துகொள்ள முடியாதவாறு பெரும் மாறுதலைப் பெற்றுக்கொண்டிருக்கின்றது. இதே உண்மைதான் இங்கிலீஷிலும் ஹிந்தியிலும் நிலவிவருகிறது. ஏனென்றால், சென்ற சில நூற்றாண்டுகட்கு முன்னே வழக்கத்திலிருந்த ஹிந்திக்கும் இங்கிலீஷுக்கும், தற்போது புழக்கத்திலுள்ள அவற்றுக்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லை.
[எனவேதான், சென்ற ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட சங்க இலக்கியத் தமிழ் நூல்களை இன்றும் நம் தமிழ் நாட்டினர் சுலபமாகப் படித்துக் கற்க முடிகிறது. நம் பல்கலைக் கழகங்களிலும் சங்க இலக்கியம் பாடமாக்கப் பட்டுள்ளது. ஆனால், 2000 ஆண்டு வயது முதிர்ந்த ஹிந்தியையோ இங்கிலீஷையோ இன்று உங்களால் கண்டுபிடிக்க முடியாது. அப்படியே தேடிக் கண்டு பிடித்தீர்களாயினும், அவற்றை ஒருவரும் புரிந்துகொள்ள இயலாது. தாருல் இஸ்லாம் பதிப்பாசிரியர்.]
ஹிந்தியைக் கட்டாயப் படுத்தாதீர்!
இவ்வளவும் நான் ஏன் கூறுகிறேனென்றால், நானே ஹிந்தி வல்லுநனாயிருப்பினும், அந்த ஹிந்தியை விரும்பாத எந்த ஒருவனின் தொண்டைக்குள்ளும் வலுக்கட்டாயப்படுத்தி நுழைத்துத் துருத்தக் கூடாதென்பதை வற்புறுத்திக் காட்டவேயன்றி, வேறல்ல. என் ஆசையெல்லாம் என்னவென்றால், எல்லாப் பிரதேச பாஷைகளும் ஒழுங்காக முன்னேறி வளப்பத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதாகும். எல்லாப் பிரதேச பாஷைகளுமே பீடுகெழு பெருமை மிக்கன, வன்மையுடையன, அழகு பொருந்தியன. ஒவ்வொரு மனிதனும் தன் தாய் நாட்டின் மீது பாசங் கொண்டதைப் போல், தன் பெற்ற தாய்மீது பாசங் கொண்டதைப் போல், தன் தன் தாய்மொழி மீதும் சொல்லொணா அபிமானங் கொண்டிருக்கிறான். இப்படியிருக்க, ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவன் மட்டும் தன் கடைப்பிடி சரியென்று வாதிப்பதும், தன் ஹிந்தியையே மற்றெல்லா இந்தியனும் கற்று வல்லுநனாக வேண்டுமென்று அடம் பிடிப்பதும் மிகவும் தவறானதாகும்.
தேசீய ஒற்றுமையைக் கருதி எல்லாரும் ஹிந்தி கற்றுக் கொள்ளத்தான் வேண்டுமென்ற நிலைமை ஏற்பட்டு விட்டபடியால், நாமெல்லாரும் ஹிந்தியை ஒழுங்காகக் கற்றுக் கொள்வோமாக! ஆனால், அதே சமயத்தில், ஹிந்தி கற்றுக் கொள்ள விரும்புவோர் மீது சுமக்கொணாச் சுமையைச் சுமத்தி வைத்து அதைக் கற்றுக் கொடுப்பது கூடாதென்றே நான் கருதுகிறேன்.
எனக்குத் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டுமென்னும் ஆவல் நிரம்ப இருக்கிறது. ஆனால், சென்னையில் எல்லாரும் எவ்வளவு இங்கிலீஷ் பேசுகிறார்களென்றால், என் மாளிகையான ராஜ் பவனி லுள்ள சகல வேலைக்காரர்களுமே என்னிடம் சதா இங்கிலீஷிலேயே பேசுகிறார்கள். எனவே, எனக்குச் சீக்கிரத்தில் தமிழ் கற்றுக் கொள்ளத் தருணம் வாய்க்காமற் போய்விட்டது. இவ்வளவு தூரத்துக்கு இங்கிலீஷைச் சுலபமாகப் பேசக் கற்றுக்கொண்ட தமிழர்கள் அதேவிதமாக எளிதில் ஹிந்தியையும் பேசக் கற்றுக் கொள்வார்களென்று எதிர்பார்க்கிறேன்.
தாருல் இஸ்லாம், பிப்ரவரி 1953, பக்கம் 10-12