உண்மையான ஜனநாயகம் இஸ்லாம்தான் – சென்னை கவர்னரின் புகழுரை

by admin

துல் பித்ர் பெருநாள் கழிந்த இரு தினங்களுக்கப்பால் சென்ற ஜூன் மாத இறுதி வாரத்தில் சென்னைக் காஸ்மாபாலிட்டன் கிளப்பில் முஸ்லிம்கள் சங்கமொன்று அளித்த விருந்தில் கலந்து கொண்ட சென்னை கவர்னர் மே. த. ஸ்ரீ பிரகாசா புரிந்த பிரசங்கத்தின் சாரத்தை இதன்கீழ்த் தருகிறோம்:—

ஈதுப் பெருநாளென்பது மிகவும் குதூகலத்துடனும் அபரிமிதமான மகிழ்ச்சியுடனும் கொண்டாடத்தக்க ஒரு பெரிய தினமாகும்; அன்றுதான் மனிதனுக்கு இறைவன் வஹீயருளிய நாளுமாகும். முஸ்லிம்களாகப் பிறக்காத ஏனை ஜாதி மக்களையுங்கூட இஸ்லாம் என்னும் காந்த சக்தி ஆகர்ஷிக்க முற்பட்டுவிடுகிறது. ஏனென்றால், இந்த அகிலவுலகிலும் உண்மையான ஜனநாயகக் கோட்பாட்டை நடைமுறையில் செயல்பூர்வமாகச் செய்து காட்டத்தக்க சிறப்பு வாய்க்கப் பெற்ற ஒரே மதம் இஸ்லாமாகவே இருந்து வருகிறது. வேறு மதங்களிலுங்கூட இத்தன்மைத்தாய கோட்பாடுகள் இருந்துவரினும், இஸ்லாம் மதத்திலேதான் அவை அதிசயத்தை யெட்டி நிற்கின்றன. மனிதர்களுக்கிடையிலே எந்தத் துறையிலும் உயர்குலமென்பதோ இழி குலமென்பதோ கிஞ்சித்தும் கிடையாதென்று இஸ்லாம் திட்டவட்டமாய் எடுத்தியம்புவதால், எல்லா வகைப்பட்ட முஸ்லிம்களும் தோளுடன் – தோளுறழ அடுத்தடுத்து நெருங்கி நின்றே இறைவனை வணங்குகின்றார்கள்; ஒன்றாய்க் குழுமிச் சேர்ந்து ஒரே விரிப்பைச் சுற்றி அமர்ந்து கொண்டே உணவு உட்கொள்கிறார்கள்.

நான் நயவஞ்சகமாகவோ, அல்லது ஒரு சாராரை முகஸ்துதி செய்து திருப்திப்படுத்த வேண்டுமென்னும் கருத்துடனோ இங்குப் பேச வரவில்லை. இஸ்லாத்தின் கலாசாரம் அதியுன்னத அந்தஸ்தை யெட்டி நிற்கும் வட நாட்டிலிருந்து நான் வருகிறேனாகையாலும், முஸ்லிம் நண்பர்களுடனே நெருங்கிப் பழகவும் அவர்களுடைய கலாஞானங்களைப் பயிலவும் எனக்கு நிரம்பச் சந்தர்ப்பங்கள் வாய்க்கப்பெற்றிருக்கிறே னாகையாலும் முஸ்லிம்களின் இந்த மாண்பு மிக்க பெருங் குணச் சிறப்புக்கள் என் உள்ளத்தைக் கவர்ந்து விட்டன.

இஸ்லாத்தைப் பற்றி எவ்வளவு கேவலமாகவும் இழிவாகவும் கபடப் பிரசாரம் பண்ண முடியுமோ அவ்வளவெல்லாம் அவதூறு செய்யும் எதிர்மதவாதிகளும் நாஸ்திகர்களும் இந்நாட்டில் அபரிமிதமாகக் காணப்படுகிறார்கள். அந்த அவிவேகிகளுக்குச் சென்னை கவர்னரின் இப்பிரசங்கம் கண் விழிப்பைத் தருமென்று நினைக்கிறோம்.

நோன்பின் மகத்துவம்

எந்த மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் நோன்பென்பது நன்கு தெரியும். ஏனென்றால், ஒவ்வொரு மதமும் நோன்பைக் கடமையாக்கியிருக்கிறது. ஆனால், முஸ்லிம்கள் நோற்கும் நோன்பு மிகவும் புனிதமானது. அவர்கள் ரம்ஜான் மாதத்தில் முப்பது நாட்களும் பகல் முழுவதும் கடுமையான நோன்பு நோற்கிறார்கள். இதனால் அவர்கள் நயவஞ்சகத்தனமாக ஏதும் தீங்கு செய்ய வேண்டுமென்று நினைத்தபோதினும், அப்படி முனாபிக்தனம் பண்ண அவர்களால் இயல்வதில்லை. ஹிந்துக்கள் நோன்பு நோற்பதேபோல், முஸ்லிம்கள் எதுவும் பிராயச்சித்தம் செய்ய வேண்டுமென்னும் நோக்கத்துடன் நோன்பிருப்பதில்லை; ஆனால் அவர்கள் உள்ளப் பரிசுத்தத்துக்காகவும் தங்களைத் தீமையினின்று தற்காத்துக் கொள்வதற்காகவும் மட்டுமே அப்படி நோன்பு நோற்கிறார்கள். அல்லது வேறு சிலர் செய்வதேபோல், பிறர் மீது உபத்திரவத்தைச் சுமத்தி, தாங்கள் எதை விரும்பி நிற்கிறார்களோ அதைச் சாதித்துக் கொண்டுவிட வேண்டுமென்னும் சுயநலப் பேராசையுடன் முஸ்லிம்கள் நோன்பு நோற்பதில்லை. ஆனால், இறைவன் கட்டளைக்குப் பணிந்து ஒழுக வேண்டுமென்னும் தாழ்வான பெருமிதத்துடனேதான் முஸ்லிம்கள் நோன்பு நோற்கிறார்கள். பயங்கரமான அளவில் உடல் நலிவுற்றிருப்போரைத் தவிர வேறு ஒவ்வொரு முஸ்லிம் ஆணும் பெண்ணும் கட்டாயமாக நோன்பிருந்தே தீரவேண்டும். இவ்வளவு வன்மையான சோதனைக்கு உட்பட்டு நிற்கும் முஸ்லிம்களுக்கு இறுதியிலே வந்து வாய்க்கும் இந்தப் பெரு மகிழ்வுக்குரிய புனித நாள் நிச்சயமாகவே நல்ல படிப்பினைகளைக் கற்றுத் தருவதாய் மிளிர்ந்து காணப்படுகிறது. இச்சிறந்த படிப்பினையை மக்கள் மறந்துவிட மாட்டார்களென்றே நான் நினைக்கிறேன்.

நம் நாட்டினரின் பெருமை

நமது தேச சரித்திரத்தின் மிக நெருக்கடியான இந்தக் காலத்திலே நம் எல்லோரின் நலத்தை யுத்தேசித்தாவது, அக்கம் பக்கத்திலுள்ள அண்டை அயல்வர்மாட்டு நல்லபிமானத்தையும் விட்டுக் கொடுக்கும் சுபாவத்தையும் நாம் ஒவ்வொருவரும் காண்பிக்க முற்பட வேண்டியது அத்தியாவசியமாகும். இந்த வகையிலே மற்றெல்லா நாட்டையும் விட நமது தேசம் ஓர் இணையற்ற அந்தஸ்தை எட்டி நிற்பதாகவே நான் கருதுகிறேன். இங்கே ஒரே வீதியில் அடுத்தடுத்த இல்லங்களில் வெவ்வேறு மதத்தைச் சார்ந்த பல திறப்பட்ட மக்கள்கள் வசித்து வருகிறார்கள். இங்கேதான் ஒரே குறிப்பிட்ட ஸ்தலத்தில் கோவில்களும், மஸ்ஜித்களும், மாதாகோவில்களும், குருத்வாராக்களும், நெருப்பாலயங்களும் அடுத்தடுத்து நின்று கொண்டிருக்கின்றன. நம்முடைய தேசத்தில் காணப்படுவதைப் போல் இவ்வளவு நெருக்கமாகவும், இப்படி அடுத்தடுத்தும் வாழ்கின்ற பல்வேறு திறப்பட்ட மதத்தினர்களோ அல்லது அவர்களுக்காக அமைந்துள்ள ஆலயங்களோ வேறு எந்த நாட்டிலும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. எனவே, இப்படிப்பட்ட விசேஷமுள்ள பல்வேறு மத மக்களின் சகோதரத்துவம் நிலவியுள்ள நம் நாட்டின் பெருமையைக் காப்பாற்ற வேண்டிய மகத்தான பொறுப்பு நம்மீது விசேஷமாகச் சுமத்தப்பட்டிருக்கிறது. அப்பொறுப்பை ஒழுங்குடன் இறுதி வரை நிர்வகித்து நடத்திக் காட்டவேண்டிய கடமை நம்முடையதே யாகும்.

நம்முடைய வேதங்கள் நமக்கு எவ்வளவோ நற்போதனைகளைத்தாம் போதிக்கின்றன. ஆனால், உலகம் நம்முடைய ஒழுக்கத்தையும் நடத்தைகளையுங் கொண்டேதான் நம்மைப் பற்றித் தீர்ப்புக் கூறுமேயன்றி, நம்முடைய வேதங்களிலும் உபநிஷத்களிலும் என்ன போதனைகள் இருக்கின்றன என்பதைக் கொண்டு மட்டும் தீர்ப்புக்கூறப் போவதில்லை. பல்வேறு மதத்தைப் பின்பற்றக் கூடியவர்களும், இறைவனைப் பலவித நாமமிட்டழைத்து வணங்குவோர்களும் இந்நாட்டிலே அடுத்தடுத்துக் கண்ணியமாகவும் கௌரவமாகவும் வாழமுடியும் என்னும் உண்மையை உலகுக்கறிவிக்கும் பிரத்தியேகமான தருணத்தை நாம் வாய்க்கப் பெற்றிருக்கிறோம். நம் தேச சரித்திரத்தின் ஏடுகளை நான் புரட்டிப் படிக்கும்போதெல்லாம், இப்படிப்பட்ட படிப்பினையை நாம் உலகத்தோர்க்கு எடுத்துக்காட்ட வேண்டும் என்னும் எண்ணத்துடனே தான் ஆண்டவன் நம்மைப் படைத்திருக்கிறானென்று கருதுவதுண்டு. மற்ற நாட்டுச் சரித்திரங்களிலே நாம் காண்பது போல், நமது நாட்டிலே மத வெறி பிடித்த யுத்தங்கள் நடந்ததாக நாம் காண முடியவில்லை. இங்கே நம் மக்கள் எத்தனையோ தினுசு தினுசான மதங்களைப் பினபற்றுகிறவர்களாயிருக்கிறார்கள். தம் நாட்டில் ஆபத்தில் சிக்கிக்கொண்ட வேளைகளில் உதவி கோரி வெளிநாடுகளிலிருந்து வந்து இப்படிக் குடியேறியவர்களான பார்ஸிகளைப் போன்றாரை நாம் காண்கின்றோம். இந்தியர்களாய நாம் தலைமுறை தலைமுறையாக, ஒவ்வொரு நூற்றாண்டிலும் வெளிநாட்டிலிருந்து வருவோரை நல்வரவேற்று நம் அகத்திலே சேர்த்துக் கொண்டு, அவர்களிடம் நாம் கற்க வேண்டியவற்றைக் கற்று எல்லாரும் சேர்ந்து எப்படி ஒற்றுமையுடன் வாழ்வது என்னும் படிப்பினையையும் தெரிந்து கொண்டு விட்டோம்.

நம்மை வெவ்வேறு திக்குக்கு இழுக்கத்தக்க வெவ்வேறு சக்திகள் நம்மிடையே நிலவிவரினும், நாமெல்லாரும் ஒரே இனமாகிய மனித குலத்தைச் சார்ந்தவர்களே என்னும் அந்த மகத்தான சக்தி மட்டுமே நம்மனைவரையும் ஒன்றுபடுத்தி வைப்பதற்குப் போதுமான இணைப்பாயிருக்கிறது. முஸ்லிம்கள் ஒரு மாதம் நோன்பிருந்துவிட்டு , ஈத் அன்றைத் தினம் அதைத் திறந்துவிட்டு, பெருநாளை மிகவும் சந்துஷ்டியுடன் கழித்துவிட்டு, ஆண்டவன் தங்களுக்கெல்லாம் என்ன அருளினானென்பதையும் சற்றுச் சிந்தித்துணர்ந்து, ஏக சகோதரத்துவத்தை நடைமுறையில் செய்து காட்டுவது மட்டுமேதான் இஸ்லாத்தின் இணையற்ற படிப்பினையாயிருக்கிறதென்பதை அமல் செய்வார்களேயானால், அப்போதுதான் அவர்கள் தங்களுக்கும், தாங்கள் பின்பற்றும் உன்னதமான மார்க்கத்துக்கும் நேர்மையைச் செய்தவர்களாவார்கள்.

நான் காசி நகரில் பிறந்தவன். அந்த நகரம் மிகப் புராதன ஹிந்து கலாசார மத்திய ஸ்தலமாகும். ஆனால், அங்கே 60 ஆயிரம் முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். அந்த முஸ்லிம்களும் தங்களுடைய மிகத் திறமையான கைவேலைப்படுகளைக் கொண்டு காசி நகரத்துக்குக் கீர்த்தியையும் கியாதியையும், பேரையும் புகழையும், செல்வத்தையும் செல்வாக்கையும் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறார்களென்பதை நாம் மறக்கக் கூடாது.

பாக்கிஸ்தானில் 18 மாதகாலம் நான் முதல் இந்திய ஹைக்கமிஷனரா யிருந்தபோது, காசி வாசியான ஒரு முஸ்லிமைக் கராச்சி வீதியில் சந்திப்பேனானால், உடனே அவரை என்னுடன் என் மாளிகைக்கு அழைத்துச் சென்று, அவர் காசிக்குத் திரும்பிச் செல்லத்தக்க நிரந்தரப் பெர்மிட்டை அவருக்கு வழங்கி, மீண்டும் கராச்சியின் பக்கம் திரும்ப வேண்டாமென்றும், காசிக்குச் சென்று அங்கேயே அவர் சுகமாகத் தம் தாயகத்தில் வாழலாமென்றும் நல்லுபதேசம் புரிந்து அனுப்பி வைப்பது வழக்கம். ஏனென்றால், உண்மையான முஸ்லிம்கள் எவ்விதமான தீங்கையும் பிறரெவர்க்கும் விளைக்கவே மாட்டார்களென்பதை நான் நன்கறிவேன். இஸ்லாம் போதிக்கும் மகத்தான இந்த ஜனநாயகத் தாராள அனுமதியினால்தான் இம்மதம் உலக மதங்கள் சகவவற்றுள்ளும் தலை சிறந்து மிளிர்கிறது.

தாருல் இஸ்லாம், ஆகஸ்டு 1952, பக்கம் 31-33

Related Articles

Leave a Comment