“தாருல் இஸ்லாமும்” தென்னாட்டு “முல்லாக்களும்”

by admin
தாருல் இஸ்லாம், மார்ச் 1927 இதழில் பிரசுரமாகியுள்ள நத்திளங் குமரன் என்ற வாசகரின் கடிதம். ஏகத்துவப் பிரச்சாரத்தை முன்னெடுத்த தாருல் இஸ்லாமும் அதன் ஆசிரியர் பா. தாவூத்ஷாவும் சந்திக்க ஆரம்பித்த சவால்களையும் சோதனைகளையும் அம்மடலில் காண முடிகிறது.

“தாருல் இஸ்லாம்” என்னும் சத்திய சமத்கார உத்தமப் புத்திரனே! வாழிய! தக்க சமயத்தில் சாந்தி மார்க்கத்தைச் செந்தமிழ் நாடு எங்கணும் பரப்ப வந்து அவதரித்தோய்! வாழிய! வாழிய!! பல்லாண்டு வாழிய!!! பிரதி திங்களும் முறை தவறாமல் எம்மிடம் போந்து பேருவகையும் பெரு நலனும் எமக்கு நீ யளிக்க எல்லாம் வல்ல பரம்பொருள் உனக்கு இன்னருள் தருவதாக!

மகனே! நீ பிறந்து சில ஆண்டுகளுக்குள் செந்தமிழ் நாட்டு முஸ்லிம்களுக்கு நீ கொடுத்திருக்கும் அளப்பரும் பயன்கள் உரைக்கவும் படுமோ? அறிவுசால் நுண் பொருட்கு இருப்பிடம் எனத்தகும் “புர்க்கான்” என்னும் தெய்வத் திருமறையை அரபி பாஷையில் இருந்து படிப்போர்க்கு எளிதான பைந்தமிழில் எழுதி நீ எமக்கு அளித்தாய். உனக்கு முன் இத்தகைய பேருதவியை எமக்கு அருளினர் எவரேயோ? அத்தொழிலைச் செய்து முடிப்பதற்குள் மைந்தனே! நீ அடைந்த பாட்டினைக் கேட்டிடில் பார மலையும் பனிபோற் கரைந்து உருகுமே! செப்புதற்கு அரிய அப்பணியை அயர்வுறா முயற்சியோடு நீ செய்து முடிக்க ஒப்பரும் ஒரு பரஞ்சோதியன்றோ உனக்குத் தோன்றாத் துணையாய் நின்று உதவி புரிந்தது? இன்னும் இதுபோலவே நீ வேண்டிய வேண்டி யாங்கு செய்து முடிக்க அப் பரம்பொருள் உனக்குத் துணை செய்யுமாக!

மகனே! நீ உத்தமனாகவும் சத்தியனாகவும் உறழுறு நெஞ்சனாகவும் மத அபிமானியாகவும் தனக்கென வாழாப் பிறர்க்கு உரியனாகவும் இருப்ப உன் திருமேனி தோன்றிய அந்தநாள் முதல் இந்த நாள் வரை சில மௌட்டிய முல்லாக்களும், ஆலிம்களும், உலமாக்களும் உன் உயிர் நாடியை அறுத்து உன்னைப் பாதாளப் படுகுழியில் தள்ள ஏனோ முனைத்து நிற்கின்றனர்? மேலும் உனது திருநாமம் கேட்டமாத்திரம் இரத்தம் கொதிப்புற நரம்புகள் முறுக்கேரச் சித்தங் கலங்கிப் பித்தமீதுற உன்மீது ஏனோ அவர்கள் வெற்றுரை பகர்கின்றனர்? பின்னும் உன் பிதா தாவூத்ஷா அவர்கள் பேரில் பழிபடு பாவம் சுமத்தி உன்னை ஆதரிக்கும் சந்தா நேயர்களைக் குறைக்க ஏனோ அவர்கள் வெளிக்கிளம்பிப் பிரசார வேலை செய்கின்றனர்? ஈதெல்லாம் அவர்களின் மௌட்டிய மதிக்குச் சான்று பகருமே அன்றிப் பிறிது என் செய்யும்?

மைந்த! நீ இதுகாலை இருப்பதைவிடப் பன்மடங்கு அதிகமாய் ஆண்டவன் அருளால் உன்னை அன்புடன் வளர்க்க எண்ணிறந்த புண்ணியசீலர்கள் இத்தமிழ் நாட்டிடை இலைமறை காயென இருக்கின்றனர் என்பதை அவர்கள் அறிந்திலர் போலும்! இல்லையேல் அவர்கள் இனியேனும் அறியக்கடவர்.

கிருத்துவர் முதலான பிற மதத்தினர் சுத்த சத்திய நெறியாம் ”தீனுல் இஸ்லாத்”தைப் பிறழ உணர்ந்து அதனைக் கண்டனஞ் செய்வுழி அவரை அஞ்சா நெஞ்சுடன் எதிர்த்து அன்னோர்க்கு அமிழ்தினும் இனிய தமிழ் மொழியில் ஆழ் கருத்துப்பட அறிவுச் சுடர் கொளுத்தும் உன்னைக் கையான் அருச்சித்து நாவால் துதித்துத் தலையான் வணங்குதல் செய்ய வேண்டியதிருக்க அதை விடுத்து அழுக்காற்று அகந்தைக் குணமுடைய ஒரு சில முல்லாக்கள் உன்னை எள்ளி நகையாடுதலும் முறையேயோ? குறுகிய நோக்கத்திலும் குருட்டு வழியிலும் நாங்கள் அம்முல்லாக்களால் செலுத்தப்பட்டு ஆழ்ந்த அறியாமை என்னும் தூக்கத்தில் அழுந்திக்கிடந்த ஞான்று எம்மைத் தட்டி எழுப்பி “இஸ்லாத்தின் உண்மைத் தத்துவத்தைப் பசுமரத் தாணியே போல் எம்மனோர் மனத்திற் பதியவைத்த பரோபகாரியாகிய உன்னை அவர்கள் வசை மொழியால் அலங்கரித்தலும் அழகேயோ? ஐயகோ! ஆண்டவன் தான் இம் முல்லாக்களுக்கு அறிவுச் சுடர் கொளுத்தல் வேண்டும்.

மகனே! கூரிய அறிவும் விரிந்த நோக்கமும் ஆழ்ந்த ஆராய்ச்சியும் உள்ள உலமாக்களை, ஆலிம்களை, முல்லாக்களைப் பற்றி அணுவும் நீ பிசகு நினைத்திலை; ஆனால், வயிற்றுப் பிழைப்புக்காக நீண்ட அங்கியும், புரிமணை போன்ற தலைப்பாகையும், வெறிநா யடிக்கும் குறுந்தடியும், செம்பவளச் சிறுமணிச் செபமாலையுங் கொண்டு நாடோடியைப்போல் ஊர் ஊராய்த் திரிபவர்களும்; கிளிப்பிள்ளைப் பாடமாய்ப் பொருள் தெரியாமல் மனனம் செய்யப்பட்ட “குர்ஆன்” மொழிகளில் சிலவற்றைக் கருத்தின்றிக் கொட்டிக் குளறி ஆரோக அவரோக ஆலாபனத்துடன் இராகமிட்டு மசூதிகளில் தெருக்களில் அசங்கிதப் பிரசங்கம் செய்வோர்களுமான முல்லாக்களைப்பற்றியே நீ பத்திரிகை, சஞ்சிகை, பிரசங்கம் மூலமாய்க் கண்டித்தும் அறிவு உறுத்தியும் ஆண்டவனிடம் பரஞ்சாற்றியும் வருகின்றனை.* இதுவும் குற்றமா? மார்க்க விடயங்களை ஐயம் திரிபு அறக் கற்றுக் கால தேச வர்த்தமானங்களுக்குப் பிழைபடாது போதிக்க அறியாத போலி வேடப் போதகர்களால் மதத்திற்கு ஏற்படும் இழிவு நீக்குவான் வேண்டி அன்னோரை எதிர்த்துக் கண்டிக்க ஒவ்வொரு நடு நிலை உள்ள மத அபிமானியும் கட்டுப்பட்டுளர். அதற்கு இணங்கவே நீயும் கண்டிக்கப் புக்கினை. இதுவும் தவறேயோ?

(* இந்தியாவிலிருந்து ஒரு போலிப் பத்திரிகையின் பங்குகளை விற்கச் சென்றிருந்த பேயனொருவன் சிங்கப்பூரில் என்னைக் காபிரென்று ‘பத்வா விடுத்ததுடன் தன்னுடைய களிமண் தலையையும் ஒரு துருக்கிய வீரசிங்கத்தின் தீர உடலையும் ஒன்று சேர்த்துப் புகைப்பட மெடுத்துத் தானொரு மகாபெரிய மதபோதகனென்றும், தன்னுடைய இஸ்லாமிய கிலாபத் ஊழியத்துக்காக இந்தியாவில் அளிக்கப்பட்ட பொற்பதக்கங்களே தன் மார்மீது தொங்கவிடப்பட்டிருப்பதாகவும் நடிப்புச்செய்து சிங்கையிலுள்ள சிற்சில முஸ்லிம்களை ஏமாற்றி விட்டான். இவனே முன்னொரு சமயம் தனக்கு இஸ்லாத்தைப்பற்றி ஒன்றுமே தெரியாதென்று வேலூர் கலெக்டர் முன் அறக்கோணம் முகாமில் எழுதிக்கொடுத்து அவ்வெள்ளையர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்ட மடயனாகும். பா. தாவூத்ஷா)

தமிழ் நாட்டு முஸ்லிம்களுள் எம்போன்றார் பலரை அந்த முல்லாக்கள் அறியாமை என்னும் இருட்டு அறையில் அடைத்துத் தங்களின் மரியாதை, செல்வாக்கு முதலியவற்றை மிகுதிப் படுத்திக் கொண்டிருக்கையில் எட்டாட்டைப் பிராயத்தனாகிய நீ எழுதுகோல் என்னும் ஒளியுடன் எம்பால் அணுகி எமது இருட்டுக் குருட்டறையை இடித்துத் தகர்த்து நிர்த்தூளி பண்ணி எம்மைக் கைப்பற்றி அறிவு என்னும் ஆதவன் ஒளியில் விட்டு விடய விளக்கம் என்னும் இளந்தென்றல் காற்றை நுகரும்படி செய்ததும் தவிர, ”குர்ஆன்” மறையிலிருந்து அன்னோர் எமக்கு மேற்கோள் எடுத்துக் காட்டுகையில் பிறழ உணர்த்துவரேல் அவரைக் கேட்கும் முறையால் கேட்டு விளக்கும் ஆற்றால் விளக்குதற்கு ஏற்ற தமிழ்த் தப்ஸீர் என்னும் கூரிய குடாரத்தையும் நீ எமக் கீந்தனை. இத்தகைய பேருபகாரம் பெருஞ்செயல் அம் முல்லாக்களின் செல்வாக்கைக் குறைத்து எங்கு சென்றாலும் மதிப்பில்லாமல் செய்துவிட்டதைக் கருதி அன்னோர் உன்மீது அழுக்காறு கொண்டு உன் திருநாமம் கேட்ட மாத்திரம் இடியோசை கேட்ட விடப்பணியைப்போல் கலங்கியும், ஆடிக்காற்றில் ஊடிய பஞ்சென ஒவ்வொரு ஊராய் முட்டி மோதி உன்மீது அடாப் பழி சுமத்தியும் பாதரஸத்தை உள்ளுக்குச் செலுத்தி வெய்யிலில் இடப்பட்ட எலுமிச்சம் பழம்போல் அன்னோர் தம் பிரசங்கத்தில் உன் பெயரைச் சொல்லிச் சொல்லிக் குதித்தும் திரிகின்றனர். ஐயோ! பித்தருக்கு உரிய செயல்களில் இவர்கள் பெரிதும் பட்டு உழலுதல் மிக்கப் பரிதபிக்கத்தக்கது!

முல்லாக்களே! செந்தமிழ் அரபி ஆங்கிலம் உர்து முதலிய பாஷைகளைக் கற்றுத் துறை போகிய பெரியாரிடம் பன்னெடுங்காலம் பணிவுடன் படித்து அவ்வப் பாடைகளில் எழுதி வெளியிடப்பட்டிருக்கும் அறிவுறை நூற்களில் புதைந்து கிடக்கும் ஆழிய கருத்தைத் துருவி ஆராய்ந்து பற்பல நாடு நகர் சென்று ஆங்காங்கு உள்ள நடை நொடி பாவனைகளைத் தெரிந்து அவற்றுள் எம் தமிழ் நாட்டிற்குப் பொருந்துவனவற்றைப் பொறுக்கி யெடுத்துப் பொதுநலப் பிரியராய்க் கைம்மாறு கருதாமல் எமக்கு உழைக்க வெளிவருவிரேல் நீவிரும் எம்மால் எங்கள் ஆருயிரே போல் போற்றப் படுவீர் என்பதில் எட்டுணையும் ஐயப்பாடு இலவாம். அங்ஙனம் இன்றி இதுகாறும் தமிழ்நாட்டு முஸ்லிம் ஏழைமக்களை ஏமாற்றிப் பொருளீட்டியதே போல் இனியும் செய்ய நினைப்பிரேல் அஃது பலிக்காதென்றும், புறக் கோலத்தைக் கண்டு ஆலிம்களென மருண்டு நினைத்த காலம் இதுகாலை மலையேறிப் போய்விட்டது என்றும் நன்கு அறியக்கடவீர்!

தேன் ஒழுகும் மதுர மொழியும், முறையுடன் தர்க்கிக்கும் ஆற்றலும், சொல் வன்மையும், ஆழ்ந்த சிந்தனாசக்தியும், வழுவற்ற துய்ய நடத்தையும், பயன் விழையாது பிறர்க்கு உழைக்கும் தாகமும் உடைய விழுதகையான ரையன்றிப் பழுதுபடும் வழூஉச் சொற்களும், குதர்க்க வாதமும், தன்னலத்தாகமும், நகையாடும் துர்நடத்தையும் உள்ள மந்த மதி உடையாரை “ஆலிம்” “கலைஞன்” என்று அழைத்தல் யாங்ஙனம் பொருந்தும்? அஃது பொருந்துமேல் தலைப்பாகை, நீண்ட அங்கி, ஜெபமாலை முதலியவைகளால் அலங்கரிக்கப்பட்ட பெரு மரங்களையும் அசையாக் கற்றாண்களையும் வாய் பேசாப் பதுமைகளையும் ஆலிம்களாய் நினைத்து அவைகளைத் தாழ்ந்து பணிதல் சாலவும் நன்றாம்! ஐயகோ! இஃது பெரிய மௌட்டியம்!!

பண்டைக்கால் ஆலிம் உலமாக்களில் சிலர் அரசன் அவைக்கு அணிகலனான மந்திரிப் பதவி ஏற்று மன்னர்க்கு வரும்பொருள் உரைத்தனர். மற்றுஞ் சிலர் தக்க சான்று மூலம் உண்மை நெறி திறம்பாது கூர்ந்து பாயும் நீதிபதிகளாயிருந்து தம்முன் வரும் சிக்கலான வழக்குகளை முடிவு படுத்தினர். இன்னுஞ் சிலர் மன்னர்க்கும் மக்கட்கும் இன்றியமையாது வேண்டற் பாலனவாகிய சட்ட திட்டங்கள் யாக்கினர். வேறுசிலர் படிக்கும் போழ்தும் எண்ணும் போழ்தும் கேட்கும் போழ்தும் பக்திரசங் கதித்தெழச் செய்யும் அரும்பொருட் பாசுரங்களையும் அறிவு நூல்களையும் இயற்றிப் பொதுமக்கட்குச் சொல்லரும் பெருநயம் விளைத்தனர். இன்னணமாய உலகூட்டும் உயர் பணியில் அன்னோர் உழைத்துப் பொதுமக்களைத் தம் நோக்குக்கும் வாக்குக்கும் அடங்கி நடக்கும்படி செய்ததால் எங்கணும் அவர் இறும்(?) புகழ் பரவிற்று.

ஆனால், இக்காலம் கற்க வேண்டிய மார்க்கக் கல்வியைக் கசடறக் கற்று அவற்றை எம் நாட்டுக்கு உரிய மொழியாம் தமிழில் வெளியிட்டு எம்மைத் தெளிவு படுத்தாமல் பூர்வம் புகழ் பெற்ற ஆலிம் உலமாக்களின் வழித் தோன்றல் என்று தம்மைப் பற்றி வாய்ப் பறை சாற்றித் திரிகின்றார் ஒருசிலர். போதிய அளவு நன்கு கற்றிருந்தும் அதனை உலகுக்கு ஊட்டாமல் பொரிமாவை மெச்சிக் கொள்ளும் பொக்கு வாய்ச்சியைப் போல் தம் கல்வியைத் தாமே நினைத்து நினைத்து அகமகிழ்ந்து தம் இருப்பிடம் விட்டுப் பெயரமாட்டாத முடவர்களைப் போல் தம் அகத்தே இருந்து வறிதிற் காலங் கழிக்கின்றார் மற்றுஞ் சிலர். படிக்க வேண்டுவனவற்றை அறப்படிக்காமல் சொற்பமாய்க் கற்று ஒன்று கிடக்க மற்றொன்றைச் சொல்லிப் பிறமதத்தினர் இஸ்லாத்தை ஏளனஞ் செய்வதற்கு இடமாக்கியும் ‘தாருல் இஸ்லாம்’ போன்றார் இஸ்லாத்தின் உண்மைத் தத்துவத்தை மக்கட்குப் புலனாகக் கங்கணங் கட்டி வெளிவருங்காலை அவர்களைக் ‘காதியானி”, “‘அஹ்மதீ”, ”காபிர்’ என்று ‘பத்வா”க் கொடுத்தும் வருகின்றார் பின்னுஞ்சிலர். மார்க்கமே இன்னதென்று அறியாத சுத்த சூன்யர்கள் “ஆலிம்” ”முல்லா” என்று போலிப் பெயர் புனைந்து நாட்டுப்புறங்களில் உள்ள ஏழை முஸ்லிம்களிடம் அணுகிப் ”பல்லெலாம் தெரியக் காட்டிப் பருவரல் முகத்திற் கூட்டிச், சொல்லெலாம் சொல்லி நாட்டித் துணைக்கரம் விரித்து நீட்டி, மல்லெலாம் அகலவோட்டி மானமென் பதனை வீட்டி, இல்லெலாம்” ஐயம் ஏற்று உண்ணத் தலைப்பட்டார் வேறு சிலர். அந்தோ! இஃது கொடிதினுங் கொடிது!!

தீன்மணி மாடத்திற்குத் தூண்போல் விளங்கும் உத்தம ஆலிம்களே! சத்திய உலமாக்களே! மௌலவீகளே! முல்லாக்களே! எழுமின்!! எழுமின்!! சர்வ லோகங்களுக்கும் கர்த்தாவாகிய அனந்த கல்யாண குணமுள்ள அல்லா சுபுஹான ஹுத் தஆலா வால் நம் முதற் பிதா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கட்குப் போதிக்கப்பட்டு நபிமார்களின் திருக்கண்ணீரால் வளர்க்கப்பட்ட “தீன்” என்னும் பயிரைச் செந்தமிழ் நாட்டு அஷ்டதிக்கிலும் விளைவித்து அதன் பயனை எல்லாமதஸ்தரும் அனுபவிப்பதற்கான வழி முறைகளில் ஈடுபட்டு உழைமின்! கோவில்களில் தீனி கொடுத்து வளர்க்கப்படும் காளைகளைப் போல் பொதுமக்களால் போஷிக்கப்பட்டு வறிதே காலங் கடத்திவரும் ஒருசில முல்லாக்களை இடித்து அறிவுறுத்தியும் நடு நிலைமையோடு நான் சொல்லியிருக்கும் விஷயத்தை நன்கு ஆராயும்படி செய்தும் தம் குடும்பசம்ரக்ஷணைக்கான ஒரு கண்ணியமான தொழில் முறையிலாவது, அன்றி உலகூட்டும் பத்திரிகாசியர் நூலாசிரியர் போதகாசிரியர் முதலிய தொழில்களிலாவது அமர்ந்து கைம்மாறு கருதாமல் இஸ்லாம் மத அபிவிர்த்தி ஒன்றையே மதித்துத்திறமுடன் வேலை செய்ய அன்னோரைத் தூண்டுமின்! எல்லாம் வல்ல முழுமுதற் பொருள் உங்கட்கு எல்லா நலனும் தந்தருளுமாக! ஆமீன்!!

இங்ஙனம் : “நத்திளங் குமரன்”

தாருல் இஸ்லாம், மார்ச் 1927

Related Articles

Leave a Comment