ற்றொரு பக்கத்தில் பிரசுரமாகியுள்ள “இன இழிவு ஒழிய இஸ்லாமே நன் மருந்து” என்னும் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு நாம் அப் பெரியார் ஈ. வே. ரா. வை அறை கூவி யழைக்கிறோம். அவர் இஸ்லாத்தை ஏற்பாராக!

ஈரோட்டுப் பெரியாரே! வணக்கம். நீர் எமது தீனுலிஸ்லாத்தின் அரும் பெருந் தன்மைகளைப் பற்றிச் சென்ற முப்பது ஆண்டுகட்கு மேலாகவே பெரும் பிரசாரம் புரிந்து வருவதாகப் பன்முறையும் பேசியும் எழுதியும் இருக்கிறீர். இஸ்லாத்தின் இணையற்ற பெருமைகளை இனிது ஓர்ந்துள்ள நீவிர் இதுவரை பலரை இம் மதத்தை ஏற்கத் தூண்டிவந்தும், யானறிந்த மட்டில் உம்மாலே ஒரு திராவிடனேனும், நீர் உட்பட இஸ்லாத்தைத் தழுவ முன்வரவில்லை யென்பதை வருத்தத்துடனே தெரிவிக்கிறேன். தலை முற்றிலும் வழுக்கையாயிருப்பவன் எப்படித் தன் வழுக்கையைப் போக்கிக் கொள்ளாமல் மற்ற வழுக்கைத் தலையர்களுக்கு மருந்துவிற்க முடியாதோ, அதே விதமாக இஸ்லாத்தின் அருமை பெருமைகளை முற்றும் நன்கறிந்திருப்பதாகப் பறை சாற்றும் நீர் இனியும் இஸ்லாத்தை ஏற்காம லிருப்பதும், அப்படி ஏற்காததோடு இல்லாமல் அடிக்கடி இதே மதத்தை ஏனை மதங்களுடன் சேர்த்துத் தாக்குவதும், பிறகும் பிறகும் பொதுமக்களின் பெருங்கூட்ட மத்தியிலே நின்று “இஸ்லாம் ஒன்றுதான் இன இழிவைப் போக்கவல்ல மருந்து. இதனினும் வேறு மருந்து ஒன்று மில்லை. இருந்தால் நீங்களே சொல்லுங்களே. எனவே, இங்குள்ள எல்லா ஏனை மதத்தினரும் உடனே இஸ்லாத்தில் சேரந்துவிட்டுத்தான் மறுவேலை பாரக்கவேண்டும்!” என்றெல்லாம் வாய்ச்சவடால் அடிப்பதும் பிறரிடையே பெரு நகைப்பை விளைக்கின்றன வென்பதை நான் கூறவும் வேண்டுமோ?

பெரியாரே! போனதெல்லாம் போகட்டும். நீவிர் தயவு செய்து இப்பத்திரிகையின் இனியோரிடத்தில் பிரசுரிக்கப் பட்டுள்ள நுமது சொந்த உபதேசத்தைப் பொறுமையாய் முற்றும் படித்துவிட்டு, இன இழிவு ஒழிய நன்மருந்தா யுள்ள இஸ்லாத்தை இக்கணமே தழுவி, உம்மைப் பின்பற்றும் இலக்ஷக்கணக்கான திராவிடர்களுக்கும் வழிகாட்டுவீ ரென்று எதிர்பார்க்கிறேன்.

உம்மை யான் இஸ்லாத்தின்பால் அழைக்கின்றேன். நீவிர் முஸ்லிமாய் விடுக. என்னெனின், அப்போதுதான் நீவிர் சாந்தியி லிருப்பீர். அல்லாஹ் உமக்கு இருமடங்கு சம்மான மளிப்பான். ஆனால், நீவிர் புறக்கணித்துத் திரும்பி விடுவீரேல், நும்மீதே நும்மைப் பின்பற்றுகிறவர்களின் பாப முழுதும் சார்ந்துவிடும். உமக்கோ இப்போது 70 வயது பூர்த்தியாகிவிட்டது. பற்பல சந்தர்ப்பங்களில் நீரே ஒத்துக்கொண் டுள்ளவண்ணம், உம்முடைய கொள்கைகளில் எதிலுமே நீர் வெற்றிபெற்றுக் கொண்டதில்லை. உண்மையிலேயே நீர் எந்தக் காரியத்திலும் வெற்றியடைய விரும்பினால், நீரே கூறுகிறபடி இந்த இஸ்லாத்தை விட வேறு மருந்தொன்று மில்லையென்பதை யான் ஞாபகமூட்டுகிறேன். எனவே, இனியுங் காலந் தாழ்த்தாது, கூற்றுவன் வருமுன்னே,

முக்காலுக் கேகாமுன் முன்னரையில் வீழாமுன்
அக்கா லரைக்கால் கண்டஞ்சாமுன்- விக்கி
இருமாமுன் மாகாணிக் கேகாமுன்” னே,

நீர் மனந்திரும்பி, இஸ்லாத்தில் இக்கணமே சேர்ந்து, உமக்கும், உம்மைப் பின்பற்றுகிறவர்களுக்கும் நல்வழியை உண்டுபண்ணி வைப்பீரென்று நம்புகிறேன்.

பெரியாரே! வருக, வருக! இஸ்லாம் தன்னுடைய இருகை யேந்தி உம்மை நல்வர வேற்கிறது. கிடைத்தற் கரிய இச் சந்தர்ப்பத்தை நழுவ விடாது, நீரே பிறருக்குப் பிரமாதமாக ஸிபாரிஷ் செய்கின்ற இந்தச் சாந்தி மார்க்கத்தை இப்போதே தழுவுவீராக! உமக்கு என்றும் சாந்தி யுண்டாகுக! ஆமீன்!

-பா. தாவூத்ஷா

தாருல் இஸ்லாம், நவம்பர் 1948

பக்கம்: 48

Related Articles

Leave a Comment