சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 21

by நூருத்தீன்
21. புனித ஈட்டி

ந்தாக்கியா நகரின் பழம் பெருமைகளுள் ஒன்று புனித பீட்டருக்கு அர்ப்பணிக்கப்பட்ட நெடுமாட மண்டபம். கிறித்தவர்கள் மத்தியில் அதற்குப் புனித அந்தஸ்து உண்டு. ஜுன் 14 ஆம் நாள். அந்த மண்டபத்தின் தரையை, சிலுவைப் படையைச் சேர்ந்த பீட்டர் பார்த்தோலொமெவ் (Peter Bartholomew) என்பவர் தலைமையில் சிறு கூட்டமொன்று தோண்ட ஆரம்பித்தது. கடப்பாரை, மண்வெட்டி என்று கிடைத்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, வியர்க்க விறுவிறுக்கத் தரையைத் தோண்டி, பள்ளம் பறித்துக்கொண்டிருந்தார்கள்.

பீட்டர் ஓர் உழவர். போப் அர்பன் II நிகழ்த்திய உரையால் உந்தப்பட்டு ஐரோப்பாவின் பலதரப்பட்ட மக்களும் பெரும் வெறியுடன் சிலுவைப் படையில் இணைந்துகொண்டார்கள் என்று வாசித்தோமல்லவா? அப்படி இணைந்தவர்களுள் ஒருவர் இந்த உழவர். கோமான்கள், மேட்டுக்குடியினர், சேனாதிபதிகள் போன்ற முக்கியத்துவம் பெற்றிருந்தவர்கள் நிறைந்திருந்த சிலுவைப் படையில் அன்றைய நாள் வரை வெகு சாதாரண ஒரு படை வீரர் அந்த பீட்டர்.

அப்படிப் பட்ட ஒருவர், சிலுவைப் படை, சரணாகதிக்குத் தம்மைத் தயார்படுத்திக்கொண்டிருந்த அந்த இக்கட்டான தருணத்தில், தம்மைச் சுற்றியிருந்தவர்களிடம், ‘செயிண்ட் ஆண்ட்ரூவின் ஆவி என்னிடம் ஒரு நற்செய்தி வழங்கியது’ என்று திடீரென்று அறிவித்தார். இயேசுநாதரின் பன்னிரெண்டு சீடர்களுள் ஒருவர் புனிதர் ஆண்ட்ரூ (St. Andrew). ‘அவர் என்னுடைய மனக்கண்ணில் தோன்றினார். இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது அவருடைய உடலைத் துளைத்த ஈட்டி இப்பொழுது எங்கே மறைந்துள்ளது என்று எனக்குத் தெரிவித்தார். அது இந்த நெடுமாட மண்டபத்தில் இந்த இடத்தில் பூமியில் புதைந்துள்ளது’ என்று உழவர் பீட்டர் ஓர் இடத்தைக் காட்ட, சிலிர்த்துப்போன அச் சிறு கூட்டம் உடனே செயலில் இறங்கியது.

தோண்டினார்கள். காலையில் ஆரம்பித்தவர்கள் மாலைவரை தோண்டினார்கள். பள்ளம்தான் ஆழமானதே தவிர ஈட்டி மட்டும் தட்டுப்படவில்லை. சோர்ந்து, களைத்து நம்பிக்கை இழக்க ஆரம்பித்தது கூட்டம். அதைக் கவனித்தார் பீட்டர். திடீரென்று மேலங்கியைக் களைந்தார். காலணியை உதறினார். அந்த ஆழமான பள்ளத்தினுள் தொபுக்கென்று குதித்தார். மேலே நின்றிருந்தவர்களிடம், ‘நாம் பலம் பெற, வெற்றியடைய, அந்த ஈட்டியை நமக்கு அளிக்கச் சொல்லி, தேவனிடம் மன்றாடுங்கள்’ என்று கீழிருந்து சப்தமிட்டார். ஜெபித்தது கூட்டம். அந்தக் கூட்டத்தில் சிலுவைப் படைத் தலைவர்களுள் ஒருவரான துலூஸின் கோமான் ரேமாண்ட்டும் ஒருவராக நின்றிருந்தார். அடுத்து நிகழ்ந்ததை அவர் விவரித்துள்ளார்.

‘பீட்டர் பள்ளத்திலிருந்து ஏறிவர, அவருக்குமுன் அந்த ஈட்டி மேலே எட்டிப்பார்த்தது. அந்த நொடியிலேயே நான் அதை முத்தமிட்டேன். மகிழ்ச்சியும் ஆரவாரமும் உத்வேகமும் உடனே பரவி அந்த நகரில் அனைவரையும் ஆக்கிரமித்தன.’

அந்தச் சிறு உலோகம் சிலுவைப் படையினரின் நிலைமையை முற்றிலும் புரட்டிப்போட்டது. இயேசுவின் புனித உடலைத் தீண்டிய ஈட்டி கிட்டிவிட்டது. அற்புதம் நிகழ்ந்துவிட்டது. தேவனின் ஆசிர்வாதம் கிடைத்துவிட்டது, இனி வெற்றி உறுதி என்று சிலுவைப் படையிலுள்ள அத்தனை பேரும் எள்ளளவும் சந்தேகம் இன்றி நம்பினர். பக்திப் பரவசத்தில் சிலிர்த்தனர். அந்தப் புத்துணர்ச்சி அவர்களுக்குள் மாயம் புரிந்தது. ‘கெர்போகாவா, நாமா என்று பார்த்துவிடுவோம்’ என்று இறுதிக்கட்ட ஆயுதப் போருக்கு அனைவரும் ஆயத்தமாகிவிட்டனர். போர் வியூகத்தைத் திட்டமிட சிலுவைப் படைத் தலைவர்கள் ஒன்றுகூடினர்.

அப்படியோர் ஈட்டியா? அதைப் பற்றி அறிவிக்க எப்படி யாரோ ஓர் உழவர் பீட்டரை செயிண்ட் ஆண்ட்ரூ தேர்ந்தெடுத்தார்? யாரும் எதுவும் கேட்கவில்லை. ஏனெனில், செயிண்ட்கள் இறந்து விட்டார்கள் என்றாலும் தேவனின் சார்பாக, பூமியில் அற்புதம் விளைவிக்கக் கூடியவர்கள் என்ற நம்பிக்கையில் பரங்கியர்கள் ஊறித் திளைத்திருந்தவர்கள். அதனால் அவர்களுக்கு பீட்டரின் கூற்றை நம்புவதில், ஈட்டியை நம்புவதில் எவ்விதத் தயக்கமும் ஏற்படவில்லை. ஆனால் சிலுவைப் படைத் தலைவர்களுள் ஒருவரான பாதிரியார் அதிமாருக்கு மட்டும் அதில் முழு நம்பிக்கை ஏற்படவில்லை. அதுவும் ஏன்? ‘நம்மையெல்லாம் விட்டுவிட்டு, சமூகத்தில் எவ்வித முக்கிய அந்தஸ்தும் இல்லாத, கேவலம் ஓர் உழவனான பீட்டரை செயிண்ட் ஆண்ட்ரூ எப்படித் தேர்ந்தெடுத்தார்? இந்த அற்புதத்தை நிகழ்த்தினார்?’ என்று குறுகுறுப்பு! அவரால் நம்பவும் முடியவில்லை; நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

எது எப்படியோ. ஓர் ஈட்டி அன்று புனித ஈட்டி ஆனது. முதலாம் சிலுவைப் போரில் ஒரு முக்கிய திருப்புமுனையை நிகழ்த்தியது!

oOo

இந்த நிகழ்வுக்கு முன், தோல்வி உறுதி என்ற நிலையில், சிலுவைப் படைத் தலைவர்கள் சமாதானப் பேச்சுவார்த்தைக்காக ஒரு குழுவை கெர்போகாவிடம் அனுப்பி வைத்தனர். அதைச் சமாதானப் பேச்சுவார்த்தை என்று சொல்வதைவிட, சுமுகமாய்ச் சரண் அடைவதற்கான தூது என்றுதான் குறிப்பிட வேண்டும். சோர்ந்து துவண்டு கிடந்த கிறித்தவர்கள் யோசித்தார்கள். பஞ்சமும் பட்டினியும் நோயும் எல்லை மீறி விட்டன. யாருக்கு உதவலாம் என்று வந்தோமோ அந்த அலெக்ஸியஸும் கைவிட்டுவிட்டார். சூழ்ந்து நிற்கும் முஸ்லிம் படைகளை வெல்வதும் சாத்தியமில்லை. அதனால் கெர்போகாவிடம் பேசி, எப்படியாவது அபயம் பெற்று, நகரை ஒப்படைத்துவிட்டு, நம் நாட்டுக்குப் போய்ச் சேர்வோம்; ஜெருஸலத்தைக் கைப்பற்றப் பட்டபாடு எல்லாம் இதுவரை போதும் என்ற முடிவுக்கு வந்துதான் தூது அனுப்பியிருந்தார்கள். வரலாறு மாறியிருக்க வேண்டிய ஒப்பற்ற தருணம் அது. ஆனால், கெர்போகா அந்த அருமையான வாய்ப்பைக் கைந்நழுவ விட்டார். இறைவனின் நாட்டப்படி அது அவருடைய இரண்டாம் பெரிய பிழையாகப் பதிவாகிவிட்டது. “அதெல்லாம் முடியாது. சண்டைதான். போர்தான். முடிந்தால் எங்களை வென்று தப்பித்துச் செல்லுங்கள்” என்று கூறிவிட்டார்.

அத்துடன் கிறித்தவர்களுக்கான அனைத்து வாயில்களும் மூடப்பட்டன. வாழ்வா சாவா என்ற நிலை அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. பஞ்சத்தின் கொடூரத்தால் எப்படியும் தினந்தினம் சிலர் இறந்துகொண்டிருக்கிறோம் எனும்போது, பஞ்சத்தில் அடிபட்டுப் பரிதாபமாய்ச் சாவதைவிடப் போரிட்டு மாய்வது மேல் என்ற முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டார்கள். அப்படி ஒரு சூழ்நிலையில் புனித ஈட்டி என்ற அற்புதம் தோன்றினால் என்னாகும்? வரலாறு திசை திரும்பியது.

பொஹிமாண்ட் சிலுவைப் படையின் தளபதியாக அறிவிக்கப்பட்டார். படையினர் எண்ணிக்கை இருபதாயிரத்தை எட்டியது. ஆனால் அதில் படை வீரர்கள் அல்லாதவரும் அடங்கியிருந்தனர். ஆயுதங்களும் தளவாட வசதிகளும்கூடப் போதிய அளவில் அவர்களிடம் இல்லை. ஆயுதமும் கவசமும் தரித்திருந்த சேனாதிபதிகள் பலருக்கோ குதிரைகள் இல்லை. பொதி சுமக்கும் மிருகங்கள் மீதேறிப் போரிட வேண்டும்; அல்லது தாங்களும் காலாட்படை ஆக வேண்டும் என்ற அவலம்.

இவ்விதம் சிலுவைப் படை ஏகப்பட்ட பலவீனங்களுடன் போருக்குத் தயாராக, நேர்மாறாக, பெரும் எண்ணிக்கையில், ஆயுத, வாகன வசதிகளுடன், வலுவுடன் நின்றிருந்தது கெர்போகாவின் தலைமையிலான முஸ்லிம்களின் படை. ஆயினும் கெர்போகாவின் படையிலும் பலவீனங்கள் இருந்தன. இரண்டே இரண்டு பலவீனங்கள். ஒன்று, படையின் மையப் பிரிவு வடக்கே வெகு தொலைவில் பாடி அமைத்திருந்தது. இங்கிருந்த படையினரும் பரந்திருந்த அந்தாக்கியாவை முற்றுகையிட்டு விரவிக்கிடந்தனர். இரண்டாவது ஆன்மீக பலவீனம். பலவாறாகப் பிளவுபட்டிருந்த முஸ்லிம்கள் கெர்போகாவுக்காகப் படையில் ஒன்று பட்டிருந்தார்களே தவிர, இது இஸ்லாமியர்களைக் காப்பாற்ற, ஜெருஸலத்தைப் பாதுகாக்க நிகழும் போர் என்ற தீவிரமோ, வீரியமோ அவர்களிடம் இல்லாமற் போயிருந்தது. ஜெருஸலத்திற்கு ஆபத்து வரும் என்று அவர்கள் கருதியதாகக்கூடத் தெரியவில்லை. மாறாக , சிலுவைப் படையினருக்கு அசைக்க இயலாத ஆன்மீக பலத்தைப் புனித ஈட்டி ஏற்படுத்தியிருந்தது. இது நமது புனிதப் போர், இரண்டில் ஒன்று என்ற உச்சக்கட்ட உத்வேகத்தை அவர்களுக்கு அளித்திருந்தது.

ஜுன் 28, 1098. அதிகாலையில் சிலுவைப் படையினரின் அணிவகுப்பு அந்தாக்கியா நகரிலிருந்து வெளியே வந்தது. மதகுருமார்கள் தேவனைத் துதித்தபடி கரை கட்டி நின்றிருந்தனர். பால வாயில் திறந்தது. ஆரன்தஸ் ஆற்றைப் படை அணி ஒன்றன்பின் ஒன்றாகக் கடந்தது. படையின் முன்னணிப் பிரிவினர் அம்புகளை மழையாகப் பொழிந்து பின்தொடரும் படையினருக்கு வழியை ஏற்படுத்தியபடி சென்றனர். பொஹிமாண்ட் பின் அணியில் வந்தார். படையினர் அனைவரும் வெளியே வந்ததும் நான்கு பிரிவாக விரிந்து அரை வட்ட வடிவில் முஸ்லிம் படையினரைச் சூழ்ந்தனர்.

வடக்கே, தொலைவே, முஸ்லிம்களின் மையப் படைப் பிரிவு இருந்ததல்லவா?அங்குதான் கெர்போகா தங்கியிருந்தார். சிலுவைப் படை வெளியே வரும் செய்தி தெரிந்து எச்சரிக்கை அடைந்தார். உடனே அவர் தமது படைகளைத் திரட்டி விரைந்து வந்திருந்தால், சிலுவைப் படை சிறிது சிறிதாக நகரிலிருந்து வெளியேறி வரும்போதே அவர்களை வளைத்திருக்கலாம்; தாக்கியிருக்கலாம்; எளிதாக வென்றிருக்கலாம். அதற்கான சாத்தியமும் இருந்தது; வாய்ப்பும் பிரகாசமாக இருந்தது. முஸ்லிம்களின் படை எண்ணிக்கையும் அபரிமிதமாக இருந்தது. இருந்தாலும் தயங்கிவிட்டார் கெர்போகா! அவருடைய அடுத்த பெரும் பிழையாகிவிட்ட தயக்கம்!

சிலுவைப் படை அனைத்தும் நகருக்கு வெளியே களத்திற்கு வரட்டும். அவர்களை ஒட்டுமொத்தமாக ஒரேயடியாக நசுக்கி விடலாம்; அந்தாக்கியாவின் முற்றுகையை வெற்றிகரமாக முடித்து வைக்கலாம் என்று நினைத்துவிட்டார் அவர். ஓரளவு அந்தத் திட்டமும் வெற்றி அடைந்திருக்கும்தான். அதற்குச் சிறப்பான போர் வியூகம் இருந்திருக்க வேண்டும். தம் படையினரைப் பெரும் உறுதியுடன் அவர் வழிநடத்தியிருக்க வேண்டும். பெரிதும் தவறிவிட்டார் கெர்போகா. தாம் விரும்பிய களத்திற்கு எதிரியை வரவிட்டுப் போரை நடத்தத் திட்டமிட்டவர், அப்படிப் போர் நிகழும்போது நிதானத்தை இழந்து பெரிதும் தடுமாறிவிட்டார். தமது படையினர் அனைவரையும் ஒட்டுமொத்தத் தாக்குதலில் ஈடுபடுத்தினார். அதைச் சிலுவைப் படை சமாளித்து முன்னேறியது. பெருமளவில் சிலுவைப் படையினர் மாண்டனர்தாம். ஆனாலும் அசராமல் தமது படையுடன் முன்னேறினார் பொஹிமாண்ட். அது முஸ்லிம்கள் தரப்பில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அச்சமயம் கெர்போகாவின் முக்கிய படை அணி வடக்கிலிருந்து வந்து சேர்ந்தது. தமது படையினர் அனைவரையும் கெர்போகா கட்டுக்குள் கொண்டு வருவதற்குள் பின்னடைந்து ஓடிவந்த முஸ்லிம்களின் படை, முக்கிய படையணியுடன் முட்டி மோத, பெரும் குழப்பம், களேபரம். அதிர்ச்சி அளிக்கும் வகையில் பின்வாங்கி ஓடியது கெர்போகாவின் படை.

அக்கால முஸ்லிம் வரலாற்று ஆசிரியர் ஒருவர், ‘பரங்கியர்கள் பலவீனமான நிலையில் இருந்த போதிலும் ஒழுங்கு முறையுடன் முன்னேறினார்கள், முஸ்லிம்களின் படையைத் தாக்கினார்கள். எண்ணிக்கையிலும் பலத்திலும் மிகைத்திருந்தும் முஸ்லிம்களின் படை எதிரிகளைத் தாக்கி வெல்லத் தவறியது; சிதறியது’ என்று ஆறாத் துயரத்துடன் இந்நிகழ்வை எழுதி வைத்திருக்கிறார்.

கெர்போகா தமது படையுடன் பின்வாங்கிச் சென்று விட்டார் என்பது தெரிந்ததும் மலையுச்சியில் முஸ்லிம்கள் வசம் இருந்த கோட்டையும் கிறித்தவர்களிடம் சரணடைந்தது. சிலுவைப் படையினரே நம்ப இயலாத வகையில் அந்தாக்கியா எனும் அம்மாபெரும் நகரம் முற்றிலுமாய் கிறித்தவர்கள் வசம் சென்று சேர்ந்தது. தேவனின் அருளே இதற்குக் காரணம்; புனித ஈட்டி புரிந்த அற்புதம் இது என்று கிறித்தவர்கள் இப்பொழுது ஒட்டுமொத்தமாக நம்பினர். வெற்றிக் குதூகலத்தில் குதித்தனர்.

இந்த மாபெரும் வெற்றிக்குப் பிறகு சிலுவைப் படை வெகு வேகமாக இதரப் பகுதிகளை முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்றி முன்னேறப் போகிறது என்றுதான் அனைவரும் நம்பினார்கள். அப்படித்தான் நடந்திருக்க வேண்டும். ஆனால் அவர்களின் போக்குத் திசை மாறியது. சிலுவைப் படைத் தலைவர்கள் தங்கள் தங்கள் பங்கிற்குச் செல்வங்களைக் கொள்ளை அடிக்க ஆரம்பித்தனர். கோடையின் வெப்பம் ஒருவிதமான தொற்று நோயை உண்டாக்க, ஏற்கெனவே பலவீனமடைந்திருந்த அவர்களுள் பலர் செத்து விழுந்தனர். மேட்டுக்குடி, சாமான்யன் என்ற பாரபட்சம் இன்றி நோய் தன் பங்கை ஆற்ற, சிலுவைப் போர் உருவாவதற்குப் பெரும் பங்காற்றிய பாதிரியார் அதிமார் டி மொன்டெயிலும் அதற்கு இலக்கானார்; மரணமடைந்தார்.

பாதிரியாரை அடக்கம் செய்துவிட்டு, அந்தாக்கியாவின் நிர்வாக உரிமை யாருக்கு என்று அவர்கள் தங்களுக்குள் கடுமையாக விவாதித்து மோதிக்கொண்டார்கள். இவ்வெற்றியைச் சாத்தியப்படுத்திய தமக்கே இந்நகர் என்று உரிமை கோரினார் பொஹிமாண்ட். நம்மைக் கைவிட்டுச் சென்ற பைஸாந்தியச் சக்ரவர்த்தி அலெக்ஸியஸுக்கு அந்தாக்கியாவின்மீது எந்த உரிமையும் கிடையாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

துலூஸின் ரேமாண்டோ அதை எதிர்த்தார். ‘அலெக்ஸியஸ் கேட்டுக்கொண்டதால்தானே நாம் இப்படியொரு போருக்குக் கிளம்பிவந்தோம். கிரேக்கர்களுக்கு உதவுவது என்பதுதானே நமது நோக்கம்’ என்று வாதாடினார். கான்ஸ்டன்டினோபிளுக்குத் தூதுவர்களை அனுப்பி, சக்ரவர்த்தி அலெக்ஸியஸ் நேரடியாக வந்து நகரின் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று தகவல் அனுப்பினார்கள். ஆனால் அலெக்ஸியஸ் வரவில்லை.

(தொடரும்)

-நூருத்தீன்

சத்தியமார்க்கம்.காம் – தளத்தில் வெளியானது


Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License


Related Articles

Leave a Comment