இதய வளையம் – மரியம் நூரின் அரிய கண்டுபிடிப்பு

டென்மார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிஎச்டி மாணவி மரியம் நூர் இதய வால்வுகளில் ஏற்படும் கசிவுகளைக் கட்டுப்படுத்தும் வளையம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதய வால்வுகளில் கசிவு உள்ள நோயாளிகளின் பெருந்தமனியைச் சுற்றி இச்சிறு வளையத்தை மாட்டிவிட்டால் அது அவர்களைக் குணப்படுத்தும் என்பது ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

மருத்துவ தொழில்நுட்ப மொழியில் பெருந்தமனி பற்றாக்குறை (aortic insufficiency) எனப்படும் இதய வால்வு கசிவு, இதயத்தின் இடது வென்ட்ரிக்கிளுக்கும் பெருந்தமனிக்கும் இடையே உள்ள வால்வு முழுமையாக மூட முடியாத நிலையைக் குறிக்கும். பிறவி குறைபாடுகளினாலோ, சுண்ணகமயத்தினாலோ இந்த நோய் ஏற்படலாம். இந்நோய் பல்வேறு தீவிரத் தன்மையைக் கொண்டது.

பெருந்தமனி வால்வு கசியும் போது, ​​​​இரத்தம் சிறு அளவில் இதயத்திற்குத் திரும்பி அதனால் இதயம் கடினமாக உழைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது மோசமான பின்விளைவை ஏற்படுத்துகிறது; சில சந்தர்ப்பங்களில் இதய செயலிழப்புக்கும் வழிவகுத்து விடுகிறது. அதனால் இந்த நோய்க்கு சிகிச்சையளிப்பது வெகு முக்கியம். பழுதுற்ற இதய வால்வை சரிசெய்வதன் மூலமோ அல்லது செயற்கை வால்வைப் பொருத்துவதன் மூலமோ மருத்துவர்கள் இந்நோய்க்குச் சிகிச்சை அளிப்பது வழக்கம். ஆனால், இவ்விரண்டு சிகிச்சைகளும் சிக்கல்களும் அபாயமும் உள்ளடங்கியவை.

“செயற்கை இதய வால்வு ஒரு சிறந்த சிகிச்சை வடிவமாகும். ஆனால் இது ஒப்பீட்டளவில் சிக்கலான அறுவை சிகிச்சை முறை. நீண்ட கால அளவில் பல ஆபத்துகளையும் சிக்கல்களையும் உள்ளடக்கியது. இப்போது நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதை எளிதாக்கும் ஒரு தீர்வை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்” என்று தெரிவித்திருக்கிறார் மாணவி மரியம் நூர். ஆர்ஹஸ் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் துறையிலும், கார்டியோதோராசிக் வாஸ்குலர் சர்ஜரி துறையிலும் இவர் முனைவர் பட்ட மாணவியாகப் பயின்று வருகிறார்.

இந்நோயாளிகளுக்கு நல்ல சிகிச்சை முடிவுகளை அளிக்கக்கூடிய ஒரு வளையத்தை வடிவமைக்க மரியம் நூர் கடந்த மூன்று ஆண்டுகளாக உழைத்து வந்தார். அதன் பயனாக அவர் கண்டுபிடித்துள்ள இந்த வளையம் அறுவை சிகிச்சை உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக அமைந்து விட்டது.

“எனது சிகிச்சையின் நோக்கம், குறைபாடுள்ள வால்வை மாற்றாமல் பெருந்தமனியை அடைப்பதாகும். நான் உருவாக்கியுள்ள இந்தப் புதிய வகை வளையம் பெருந்தமனியின் வேரைச் சுற்றி இறுக்கிவிடும். அதனால் இரத்தக் கசிவு இதயத்திற்குத் திரும்புவதை அது தடுத்துவிடும்” என்று மரியம் நூர் விவரிக்கிறார்.

தற்சமயம் இருதயநோய் நிபுணர்கள் இதய வால்வுகளின் செயல்பாட்டை உறுதிப்படுத்த ஒரு வகை வளையத்தைப் பயன்படுத்து வருகின்றனர். அது கடினமானதாகவும் பெருந்தமனியை வெட்டி கரோனரி தமனிகளை அகற்ற வேண்டியதாகவும் குறைபாடுகளும் சவால்களும் நிறைந்ததாகவும் உள்ளது. அதனால் மரியம் நூர் கார்டியோவாஸ்குலர் அமைப்பில் உள்ள இயக்கவியலின் அடிப்படையில் வளையத்தின் பொருள் பண்புகளிலும் அதன் வடிவமைப்பிலும் கவனம் செலுத்தினார். விளைவாக அவர் உருவாக்கியுள்ள புதிய வளையம் உடலின் திசுக்களுக்கு ஏற்ப தன்னைத்தானே வடிவமைக்கக்கூடிய ஒரு மீள் பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது. வடிவமைப்பில் இது ஒரு திறப்பையும் கொண்டுள்ளதால் இதைப் பொறுத்துவதை எளிதாக்கி விடுகிறது.

“நான் ஒரு பொறியாளரின் கண்ணோட்டத்தில் அறுவை சிகிச்சையின் சிக்கல்களைப் பார்க்கிறேன். ஏனென்றால் நமது இருதய அமைப்பில் இயற்பியலும் கணிதமும் நிறைந்துள்ளன. எனது அணுகுமுறை பெருந்தமனி எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொண்டு, நோயாளிகளுக்கு இயல்பான உடற்கூறியலை மீள் உருவாக்கும் வளையத்தை வடிவமைப்பது ஆகும்” என்கிறார் மரியம் நூர்.

இதயம் இயங்கும் போது உடலில் வளையம் எவ்வாறு விரிவடைகிறது என்பதைப் பார்க்க ஆராய்ச்சியாளர்கள் பன்றியின்மீது ஆய்வை மேற்கொண்டனர். “அந்த ஆராய்ச்சியில் உடலின் இயக்கவியலை நாம் பாதுகாக்க முடியும் என்பதைக் காண முடிந்தது. இந்த முடிவுகள் உண்மையிலேயே நம்பிக்கைக்குரியவை” என்று மரியம் நூர் வியந்து மகிழ்கிறார்.

விளைவை ஆவணப்படுத்துவதற்காக, சக ஊழியர்களுடன் இணைந்து, இதய சிமுலேட்டரில் மரியம் நூர் சோதனைகளை மேற்கொண்டார். “அதில் மனித உடலைப் போன்ற மிகத் துல்லியமான சூழலில் இதயத்தின் செயல்பாட்டை நாம் உருவகப்படுத்த முடியும். அதிர்வெண் பகுதியில் உள்ள வளையத்தில் ஒவ்வோரு இதயத் துடிப்பின் போதும் என்ன நடக்கிறது என்பதை நாம் துல்லியமாகக் கவனிக்கலாம். இதனால் நம்பமுடியாத அளவிற்கு விரிவான தகவல்களைக்  கற்றறிந்து இருக்கிறோம். மேலும் தொடர்ந்து பணியாற்ற அவை உதவும். இது சுவாரஸ்யமானது” என்கிறார் மரியம் நூர்.

இதய வளையம் நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் முன் மருத்துவ ஒப்புதல் நடைமுறைகள் உள்ளன. அவை நிறைவேற சில ஆண்டுகள் ஆகும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

செய்தி ஆதாரம்: https://ingenioer.au.dk/en/current/news/view/artikel/phd-studerende-opfinder-ring-til-utaette-hjerteklapper

-நூருத்தீன்

சமரசம் 1-15 மார்ச் 2022, வெளியான கட்டுரை

அச்சுப் பிரதியை வாசிக்க க்ளிக்கவும்

Related Articles

Leave a Comment