பய்யினா – தெளிவான அறிமுகம்

by நூருத்தீன்

நியூயார்க் நகரில் படித்துக் கொண்டிருந்த மாணவர் அவர். ஒரு சராசரி அமெரிக்க மாணவனுக்குரிய அனைத்து குணாதிசியங்களையும் உடையவர். மதம், இறைவன், மார்க்கநெறி ஆகியனவற்றை எல்லாம் தத்துவயியல், உளயியல் சார்ந்த அவரது படிப்புகள் அவருக்கு அலட்சியத்தை ஏற்படுத்தியிருந்தன. நாத்திகத்தை எட்டிவிடும் antagonistic நிலையில் அவர் மனநிலை இருந்தது. கடவுள் இல்லவே இல்லை என்பது நாத்திகம் (atheism) என்றால், antagonism என்பதை, “கடவுள் இல்லை என்று சொல்லவில்லையே! இருந்தால் நல்லாயிருக்குமே” என்று சொல்லலாம்.

ஆனால் அவர் பாக்கிஸ்தானிய முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்தவர். பெற்றோருடன் ரியாதில் வசித்தபோது, பெரும்பாலான முஸ்லிம் குடும்பங்கள்போல குர்ஆன் ஓதும் அளவு மட்டும் தேறியிருந்தார். ஆனால் அமெரிக்க மாணவ வாழ்க்கை அவரை நேர் எதிர்த் திசையில் பயணிக்க வைத்திருந்தது. அமெரிக்காவிற்கு வரும் முஸ்லிம்களில் குறிப்பிட்ட அளவு மக்கள், முஸ்லிம், இஸ்லாம் என்பதையெல்லாம் ஏதோ ஓர் அசுத்தமான அடையாளமாக நினைப்பது பரவலாக நடைபெறும் ஒன்று. அத்துடன் மட்டும் இல்லாமல், நானும் “உன்னைப் போல் ஒருவன்” என்று அமெரிக்கர்களின் நாகரீகம்தான் உலக உன்னதம் என்று அதில் மூழ்கித் தொலைந்து போவதுதான் கவலைகரமான உண்மை.

இந்த மாணவரும் அப்படியாக மாறி, நண்பர்களுடன் பாடம், படிப்பு, உல்லாசம் என்று சுற்றிக் கொண்டிருந்தார். அப்படியிருந்த அவரை, ஒருநாள் அவர் கல்லூரியில் ஒட்டப்பட்ட சிறு நோட்டீஸ் தோளில் தட்டியது – சரியாகச் சொன்னால் கண்ணில். அது Muslim Students Association எனும் ஒரு முஸ்லிம் அமைப்பு நிகழ்த்தவிருந்த ஒரு சிறு நிகழ்ச்சிக்கான அழைப்பு.

Muslim Students Association, சுருக்கமாக MSA. அமெரிக்காவிலும் கனடாவிலும் கல்லூரி, பல்கலையில் பயிலும் முஸ்லிம் மாணவர்களுக்கு இஸ்லாமிய சேவையாற்ற 1963-இல் துவங்கப்பட்ட அமைப்பு. மிகவும் பயனுள்ள வகையிலும் வெற்றிகரமாகவும் செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவர்தான் அந்த சிறு நோட்டிஸை ஒட்டினார். அவரை நெருங்கிய இந்த மாணவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். “என்னா இது?” என்று கேட்டவருக்கு, “சும்மா … நாங்க உட்கார்ந்து பேசுவோம். வந்து பார். ஜாலியாக இருக்கம்” என்று பதில் சொன்னார் அவர்.

‘இது புதுவகையான பார்ட்டியாக இருக்கும் போலிருக்கிறதே, போய்த்தான் பார்ப்போமே’ என்று ஒரு பெரிய கூட்டத்தை எதிர்பார்த்துச் சென்றார் இவர். போனால், வெகு சில மாணவர்களும் நிறைய பீட்ஸாவும் வரவேற்பு அளித்தன. என்னவோ தெரியவில்லை, அந்த MSA மாணவரை இவருக்குப் பிடித்துப் போனது. அவரிடம் கார் இருந்தது. இவருக்கு எப்பொழுதும் ரயில் பயணம்தான். எனவே அவரை இவர் உபயோகித்துக் கொண்டார். கல்லூரிக்குக் காரில் அழைத்துக் கொண்டு போக-வர. வெறும் பேச்சளவு என்பதைத் தாண்டி நட்பொன்று உருவாக ஆரம்பித்தது.

ஒருநாள் வீடு திரும்பும் வழியில் மக்ரிபு நேரம் நெருங்கிவிட அந்த MSA மாணவர் இவரிடம் மிக பவ்யமாக, “கொஞ்சம் காத்திருக்க முடியுமா? இதோ தொழுதுவிட்டு வந்துவிடுகிறேன்” என்றார். இவருக்கு மகாக் குறுகுறுப்பு ஏற்பட்டு விட்டது. ஏனெனில் இவர் தொழுது பல வருடங்கள் ஆகிவிட்டிருந்தன. ஒத்தாசையோ, கனிவோ, சரி; தானும் தொழலாமே என்று இணைந்து கொண்டார்.

உடனே, நியூயார்க் வானில் மின்னல் வெட்ட, பெரும் சத்தத்துடன் இடி இடிக்க, பெரும் காற்று ஒன்று வீச என்பதெல்லாம் நடக்கவில்லை. ஆனால் மனதில் என்னவோ ஒன்று மட்டும் இவருக்கு நிகழ்ந்தது. பிறகு மெதுமெதுவாய் மாற்றம் அதிகமானது. ரமளான் மாதம் நெருங்கிவிட, பள்ளியில் தராவீஹ் தொழும் அளவிற்கு மாறிப் போனவர், அத்துடன் நில்லாமல், தினமும் இரவில் தொழுகைக்குப் பிறகு மாதம் முழுவதும் நடைபெற்ற குர்ஆன் பயானில் அமரவும் செய்தார். அது குர்ஆனைப் பற்றிய இவரது பார்வையை முற்றிலுமாய் மாற்றிப் போட்டது. நோன்பு முடிந்தது. பயான் பிரசங்கம் செய்த இமாம் Dr. அப்துஸ் ஸமீயிடம் சென்றார் இவர். “என்ன வேண்டும்?” என்றவரிடம் “நான் உம்மைப் போல் ஆக வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?” என்றார் இவர் – நுஃமான் அலீ கான்.

அந்தக் கேள்வி நுஃமானின் வாழ்க்கையை 180 டிகிரி திசை மாற்றியது. காட்டுத்தனமாய், அளவற்ற வெறியில் அரபுமொழி பயில ஆரம்பித்தார் நுஃமான். இதற்கு முன் குர்ஆன் ஓதும் அளவிற்கு மட்டுமே அரபிப் பயிற்சி இருந்தது. இப்பொழுது எப்படியும் அரபு மொழி கற்றறிய வேண்டும், அதுதான் இப்போதைக்குக் கொள்கை என்று அடுத்து வேகமாகக் கழிந்தன அவரது வருடங்கள். வெளிநாடு, அரபு நாடு என்று எங்கும் செல்லாமல் அமெரிக்காவிலேயே இருந்த ஆலிம்களிடமும், அரபு வாத்தியார்களிடமும் அரபிப் பாடங்கள் பயின்றார் நுஃமான்.

இதனிடையே அந்த MSA மாணவர் நுஃமானை அமெரிக்காவில் அழைப்புப் பணியில் இயங்கிக் கொண்டிருந்த மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். நுஃமான் அவரைப் பற்றிக் குறிப்பிடும் போது, மரியாதையாய் கவனமாய் பெயர் தவிர்க்கிறார். ஆனால் அந்த மாணவரும் அவர் குடும்பத்தாரும் நியூயார்க்கில் அழைப்புப் பணியில் பிரயாசையுடன் செயல்பட்டு வருபவர்கள் என்றும், அதனால் பிரபலமானவர்கள் என்றும் தெரிவிக்கிறார். ஆனால் அந்த மாணவர் நுஃமானிடம் இஸ்லாம் பற்றி வாயால் பேசாமலேயே அழைப்பு நிகழ்த்தியிருக்கிறார்! மேலும், அந்த மாணவர் ஹாபிஸே குர்ஆன் என்று பெருமை தெரிவிக்கிறார் நுஃமான்.

குர்ஆன் நுஃமானின் மனதில் மெள்ள மெள்ள வேர்விட ஆரம்பித்தது. அரபு “உஸ்தாதாக” உருவெடுத்தார் நுஃமான். உருவானது பய்யினா.

அமெரிக்காவின் இஸ்லாமியப் பள்ளிக்கூடங்களில் வாத்தியாராக, பிரன்ஸிபலாகப் பாடம் நடத்த ஆரம்பித்தவருக்கு, மக்களைக் கவரும் வகையில் பாடம் நடத்தும் சூட்சமம் விளங்க ஆரம்பித்தது. அவர் கல்லூரியில் பயின்ற உளவியல், தத்துவயியல் பாடங்கள் அமெரிக்க முஸ்லிம் சமுதாயத்தைச் சரியாகக் கணிக்க உதவின. முஸ்லிம்கள் தங்கள் கைகளிலுள்ள வாழ்க்கை வழிகாட்டி ஏட்டை பரணில் தூக்கி வைத்துவிட்டு, அல்லோல கல்லோலப்படும் நிலை அவரை மிகவும் சிந்திக்க வைத்தது. தவிர,

அரபி மற்றும் இஸ்லாமியக் கல்வி பயில உண்மையிலேயே ஆர்வமுள்ள சில அமெரிக்க முஸ்லிம் மாணவர்கள், எகிப்து, பாக்கிஸ்தான், யமன், மொராக்கோ போன்ற நாடுகளுக்குச் சென்று, பயின்று, திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். அது ஆர்வமுள்ள அனைவருக்கும் சாத்தியப்படாதது. என்பது ஒருபுறமிருக்க, செப்டம்பர் 11, நிகழ்விற்குப் பிறகு அரபி, இஸ்லாமியப் பாடங்கள் பயிலுவதற்காகவே அரபு நாடுகளுக்கும், மதரஸாக்களுக்கும் செல்வது ஆர்வமுள்ளவர்களுக்குப் பயத்தை ஏற்படுத்த ஆரம்பித்து விட்டது. ஏனெனில் அந்நிகழ்விற்குப் பிறகு அமெரிக்காவின் சட்டதிட்டங்களில் பல மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்திருந்தன.

அமெரிக்க முஸ்லிம்கள் என்போர் பல நாடுகளிலிருந்து வந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள். அவர்கள் மூட்டை முடிச்சுடன் குடிவந்தபோது ஒரு மூட்டையில் அவரவர் நாட்டுக் கலாச்சார இஸ்லாத்தையும் எடுத்து வந்திருந்தனர். அது அபிப்ராய பேதங்கள், வாக்குவாதங்கள், சச்சரவுகள் என்று மக்களை அடிப்படைக் கல்வியை விட்டு அர்த்தமற்ற விவாதத்தில் மூழ்க விட்டிருப்பதை உணர்ந்தார் நுஃமான்.

எதில் எந்தப் பிரச்சனை இருப்பினும், “குர்ஆன் ஒன்றுதான்” என்பதில் யாருக்கும் பிரச்சனையில்லை. “அதன் மொழி அரபு” என்பதில் பிரச்சனையில்லை. “அது அல்லாஹ்வின் வார்த்தை” என்பதில் அபிப்ராய பேதமில்லை. ஆனால் முஸ்லிம்கள் படித்து உணர வேண்டுமெனில் ஆங்கிலத்தில் கிடைக்கும் மொழியாக்கம் எதுவும் இறைவனின் வார்த்தையின் வீரியத்தை வெளிக் கொணரவில்லை. அது இயலும் காரியமுமில்லை. என்ன செய்வது?

யோசித்தார் நுஃமான். அரபி மொழியில் அவருக்கு நன்றாகப் பயிற்சி ஏற்பட்டு விட்டிருந்தது. இடைவிடாத தாகம், பல குர்ஆன் தப்ஸீர்களைக் கற்க வைத்து ஆழ்ந்த அறிவை ஏற்படுத்தியிருந்தது. அமெரிக்காவில் கல்வி கற்றதால், அமெரிக்க ஆங்கிலத்தில் நாவன்மையுடன் பேசும் திறன் ஏற்பட்டிருந்தது.

பல முஸ்லிம்களிடமும் தாகம் நிச்சயம் இருக்கிறது. ஆனால் சரியான ஊற்றுதான் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அல்லது அவர்களைக் கவரும் வகையில் எதுவும் அமையவில்லை. மக்களை உலகக் கல்வி சுண்டு விரலில் இழுத்துச் சென்று கொண்டிருக்கும்போது, அவர்களைத் திசை திருப்பி குர்ஆன் கற்கவைக்க வேண்டும் என்றால் சரியான பாடத்திட்டமும் அழகான முறையில் எடுத்துச் சொல்லும் நுண்ணறிவும் வேண்டும்.

காரியத்தில் இறங்கினார் நுஃமான். 2005-ஆம் ஆண்டு. பய்யினா நிறுவினார். பள்ளிவாசல்களில் சிறிய அளிவிலான பாடங்கள் நிகழ்த்த ஆரம்பித்தார். குர்ஆன் ஓத மட்டும் அல்ல, கற்க. அனைத்தும் வார இறுதி வகுப்புகள். மக்கள் கவனிக்க ஆரம்பித்தனர். விஷயம் பரவி அடுத்தடுத்த நகரங்களில் உள்ள பள்ளிவாசல்களில் அழைக்க ஆரம்பித்தனர். தொடங்கியது ஓய்வற்ற அவரது பிரயாணம்.

குர்ஆனின் ஒரு குறிப்பிட்ட அம்சம் பற்றிய தலைப்புகள் ஏற்படுத்திக் கொண்டு, கருத்தரங்குகள் நிகழ்த்த ஆரம்பித்தார். YouTube, பள்ளிவாசல்களின் இணைய தளங்கள் என்று அவருடைய பிரசங்கங்களின் பதிவுகள் பிரபலமடைய ஆரம்பித்தன.

கருத்தரங்கிலும் சிறிய அளவிலான அரபி வகுப்புகளிலும் அவர் கற்றுத் தர முடிந்ததெல்லாம் அடிப்படைகள்தாம். ஆனால் அவர் ஏற்றி வைத்தது அதில் கலந்து கொண்ட மக்களின் மனதில் தீ.

அவரது கருத்தரங்குகள் மிகவும் அர்த்தமுள்ளவையாக இருக்கின்றன. போதனை, பிரசங்கம் என்பதாக எல்லாம் இல்லாமல், கருத்தரங்கத்திற்கு எடுத்துக் கொண்ட தலைப்பின் அடிப்படையில் குர்ஆனிலிருந்து விளக்கம், மேற்கோள்கள் காட்டி, அறிவுத் தாகத்தை தோற்றுவித்து விட்டு அவர் போய்விடுவார். உணர்வும், சிந்தனையும் பற்றிக்கொள்ள, மக்களுக்கு அடுத்து தாங்கள் முக்கியமாய் எதில் சிந்தனை செலுத்த வேண்டும், எதைக் கற்க வேண்டும் என்ற தெளிவு பிறந்து விடுகிறது.

கடந்த 3-5.4.2010 தேதிகளில் அமெரிக்காவின் சியாட்டில் நகரில் மூன்று நாட்கள் நடைபெற்ற அவரது கருத்தரங்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

“நாத்திகம்வரை எட்டி விட்ட தாங்கள், இஸ்லாத்தின்பால் மீள்வதற்கு ஒருவரின் influential dawah – உந்துதல் மூலம் நிகழ்த்திய அழைப்புப் பணிதான் காரணம் என்று தோன்றுகிறது. அப்படியெனில் அதற்கு அத்தகைய வலிமையுள்ளதா?” என்று நான் கேட்டபோது,

”வெகு நிச்சயமாக! அந்த நண்பர் மட்டும் வெறும் வார்த்தைகளால் என்னிடம் இஸ்லாமியப் பிரச்சாரத்தை ஆரம்பித்திருந்தால் நான் ஓடியிருந்திருப்பேன். ஆனால் அவர் மிகவும் பொறுமையுடன் இருந்தார். அவர் செய்கையே என்னை எனது பழைய வாழ்க்கையிலிருந்து மீட்டுக் கொண்டுவரப் போதுமானதாயிருந்தது. Influential dawah எத்தகைய வெற்றி ஏற்படுத்தும் என்பதற்கு நானே மிகச் சிறந்த உதாரணம். இன்று நான் கற்றுக் கொடுக்கும் ஒவ்வொரு எழுத்தின் நன்மையும் அவருடைய கணக்கிலும் சேர்ந்து கொண்டே போகிறது” என்று அந்த நண்பரின் பெயரைக் குறிப்பிடாமல் பூரிப்படைகிறார் நுஃமான்.

மக்களின் ஆர்வமும் வரவேற்பும் அவருக்கு அடுத்தக் கனவை ஏற்படுத்தின. டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள டல்லஸ் நகரின் மையப் பகுதியில் பய்யினா 10,000 சதுரஅடி இடமொன்றைப் பெற்றுள்து. வெளியூரிலிருந்தும் மாணவர்கள் வந்து கற்றுச் செல்லும் வகையில் 10 மாத அரபி மொழி பாடத்திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. வாரத்தின் 6 நாட்களும் 6 மணி நேர வகுப்புகள். “இந்தப் பாடத் திட்டத்தில் பயின்று வெளிவரும் மாணவர்கள், அரபி பேச, படிக்க, மொழிபெயர்க்க, குர்ஆன் அர்த்தத்துடன் மட்டுமல்ல உள்ளர்த்தத்துடன் படிக்கத் தகுதி பெறுவர்” என்று உறுதியாகச் சொல்கிறார் நுஃமான்.

இன்ஷாஅல்லாஹ் செப்டம்பர் மாதம் துவங்க உள்ள இந்த வகுப்பிற்கு 50 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதியுள்ளது. இதில் பாதிக்கும்மேல் பூர்த்தியாகி வெகு சிலவே பாக்கியுள்ளன என்கிறார் நுஃமான். நான்கு கட்டமாக இண்டர்வியூ நிகழ்த்தி மாணவர்களின் உண்மை ஆர்வம் அறிந்து சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். இதுவரை இடம் பெற்றுள்ளவர்களில் ஒரு பதின்மூன்று வயது மாணவியும், பத்து மாதத்திற்கு தனது தொழிலை நிறுத்தி வைத்துவிட்டு பாடம் பயில இடம் பெற்றிருக்கும் ஒரு நரம்பியல் டாக்டரும் குறிப்பிடத்தக்கவர்கள். அதுவே பல விஷயங்களை நமக்குப் புரிய வைக்கும்.

“ஆலிம் மதரஸாக்கள் போன்றவை நான்கு வருடங்கள், அதற்கு மேல் என்று கற்றுத் தந்து பட்டமளித்து அனுப்பும் போது பத்தே மாதங்களில் இது எப்படி சாத்தியமாகும்?” என்று கேட்டபோது, அவர் அளித்த பதில் சுவாரஸ்யமானது.

“பய்யினாவில் பணியாற்றும் அப்துல் நாஸிர் ஜங்டா பாக்கிஸ்தானில் உள்ள மதரஸாவில் எட்டு வருடம் பயின்று வந்திருக்கிறார். அவர்கள் பாடத்திட்டத்தில் ஒரு முழுநாளின் சில மணி களே அரபிக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற நேரங்களில் ஹதீஸ், ஃபிக்ஹு, மற்றும் பல கற்றுத் தரப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் நீக்கி வெறும் அரபி பாடத்திட்டம் என்று அமைத்தால், ஒரு நாளைக்குக் கடுமையான ஆறு மணி நேர வகுப்புகள், வாரத்தின் ஆறு நாட்கள் என்று திட்டமிட்டால் இது நிச்சயம் சாத்தியமே. அதற்கேற்ப ஆலிம்களின் உதவியுடன் விறுவிறுப்பான ஒன்றாக எங்கள் பாடத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

“பொழுது போகவில்லை … அதனால் சும்மா படிக்க வந்தேன்” ; “சியாட்டிலில் மழை அதிகம் … அதனால் டல்லஸ் பள்ளிக்கூடத்தில் ஒதுங்க வந்தேன்” என்றெல்லாம் நினைப்பவர்கள் இதில் சேரமுடியாது. நிச்சயமான குறிக்கோளுடன், நேரம் ஒதுக்கி முன்வந்தால் மட்டுமே முடியும். அதற்காகவே நான்கு கட்ட இண்டர்வியூ தேர்வு.

“தங்களின் சொற்பொழிவும், கருத்தரங்கும், இப்பொழுது துவங்கப்போகும் இந்தப் பத்து மாதப்பாட வகுப்பும் குர்ஆன் மற்றும் அரபி மொழி சம்பந்தப்பட்தாகவே இருக்கிறதே தவிர, ஏன் மற்ற இஸ்லாமிய டாபிக்குகள் இல்லை?” என்று கேட்டபோது அவர் கூறியது,

“முதலாவதாக, ஹதீஸ் சம்பந்தப்பட்டவற்றைப் பேசவோ, கற்றுக் கொடுக்கவோ அந்தத் துறையில் எனக்கு வல்லமை இல்லை. தவிர மிக எளிதாக, எந்தவிதப் புரிதலும் இல்லாமல், அலட்சியமாக மக்கள் போகிற போக்கில் ஹதீஸ் சொல்லிவிட்டு அதுதான் சட்டம் என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஒரு ஹதீஸ் பற்றிய எந்தவித ஞானமும் இல்லாமல் மொழிபெயர்ப்பை மட்டும் படித்து விட்டுப் பேசி, வாக்குவாதச் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். ஹதீஸ் கலை வல்லுநர்கள்தாம் கருத்துத் தெரிவிக்க வேண்டும், சொல்லிக் கொடுக்க வேண்டும்.

“நாடு முழுதும் பிரயாணம் செய்து பள்ளிவாசலில் கருத்து மோதலை தோற்றுவித்துவிட்டு வர நான் விரும்பவில்லை. மக்களை ஒன்றிணைக்கக் கூடியது, கருத்து வேறுபாட்டிற்கான காரணம் இல்லாமல் இருக்கக்கூடியது குர்ஆன். மேலும் அதன் ஞானம் நமக்கு மிக முதன்மையானது. நான் குர்ஆன் பற்றிப் பேசும்போது மக்கள் ஒன்றுசேரத்தான் இது அதிகம் வழிவகுக்கும். அதுதான் நடைபெற்றும் வருகிறது” என்றவர், மற்றுமொரு கருத்தையும் தெரிவித்தார்: “அறிஞர்கள் சண்டையிட்டுக் கொள்வதில்லை; அவர்களைப் பின்பற்றுபவர்களாகச் சொல்லிக் கொள்ளும் மனமுதிர்ச்சி அற்றவர்கள்தாம் வாக்குவாதம் செய்து கொள்கிறார்கள”.

பய்யினாவின் புதிய பாடத்திட்டத்தின் மூலம் அவரவர் நகருக்கு, சேவை செய்பவர்களைத் தோற்றுவித்து அனுப்ப முடியும் என்பதே அவரது திடமான நம்பிக்கை. அமெரிக்காவின் குடிபுகல் சட்டம், மற்றும் விசா சட்ட விதிமுறைகள் கடினமடைந்துள்ள நிலையில், அமெரிக்கர்கள் இஸ்லாமியக் கல்வி கற்க அரபு நாடுகளுக்கும், மற்ற இடங்களுக்கும் செல்வதும், அல்லது இஸ்லாமியக் கல்வியாளர்கள் கல்வி கற்றுத் தரும் நோக்கத்துடன் அமெரிக்கா வருவதும் மிகுந்த சங்கடத்திற்கு உள்ளாகியிருக்கும் நிலையில், நுஃமான் அலீ கான் வாயிலாக அமெரிக்க முஸ்லிம் மக்களின் விழிப்புணர்வும் கல்வி பயிலுதலும் புதிய பரிமாணத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன.

இறையருளால் ஐந்து குழந்தைகளுக்குத் தகப்பனாக இருக்கும் நுஃமானிற்கும் தமிழகத்திற்கும் ஒரு தொடர்பு உண்டு. அவரது மாமியார் சென்னையைச் சேர்ந்தவராம்.

அவருடைய கனவின் அடுத்த அம்சம், முழுக் குர்ஆனிற்கும் ஆடியோ வடிவில் தப்ஸீர் கிடைக்கச் செய்யவேண்டும் என்பது. பணி துவங்கிவிட்டது. கடைசி ஜுஸ்உவின் அத்தியாயங்கள் பய்யினா தளத்தில் கிடைக்கின்றன. இலவசமாக அனைவரும் தங்கள் கணினியில் download செய்து கொள்ளலாம்.

தொடர்கிறது அவரது பயணம். செல்லுமிடமெல்லாம் பரணில் உள்ள குர்ஆனும் மக்களின் மூளையும் தூசு தட்டப்பட்டுத் திறக்கப்படுகின்றன.

-நூருத்தீன்

சத்தியமார்க்கம்.காம்-ல் 08 ஏப்ரல் 2010 அன்று ‘பய்யினா – தெளிவான அறிமுகம்’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரை

 

Related Articles

Leave a Comment