துல்கர்னைன் என்றொரு சக்தி வாய்ந்த மன்னர். கிழக்கும் மேற்குமாகப் பிரயாணம் செய்து வரும்போது இரு மலைகளுக்கிடையே பள்ளத்தாக்கிலுள்ள ஒரு நகரத்தை அடைகிறார். நிறைய மக்கள். அவர்களை இரு அக்கிரமக்காரக் கூட்டம் சர்வ அட்டூழியம் புரிந்து நாசப்படுத்திக் கொண்டிருக்கிறது. அலங்கோலப்பட்டுக் கிடக்கும் அவர்களுக்கு இவரைப் பார்த்ததும் அநேக நம்பிக்கை. துல்கர்னைனிடம் கோரிக்கை வைக்கின்றனர்.
“இந்த அக்கிரமக் கூட்டத்திடமிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள். ஏதாவது ஒரு தடுப்பு ஏற்படுத்துங்கள். அதற்கு நாங்கள் எங்களாலான ஊதியம் அல்லது நன்கொடையை அளித்து விடுகிறோம்.”
“அதெல்லாம் வேண்டாம், எனக்குக் கூலி பரிகாரம் வழங்க அல்லாஹ் போதுமானவன். ஒத்தாசை மட்டும் புரியுங்கள்” என்கிறார்.
இரும்புத் துண்டுகள் அல்லது பாளங்கள் எடுத்து வரப்பட்டு இரு மலைகளுக்கிடையே அடுக்கடுக்காய் நிரப்பி அதன் மேல் உருக்கிய செம்பு ஊற்றி, பெரியதொரு இரும்புத்திரை ஏற்படுத்துகிறார். அந்த மக்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு ஏற்படுகிறது.
இந்த வரலாற்றை அல்லாஹ் சுப்ஹானஹூதஆலா அல்குர்ஆனின் 18ஆவது அத்தியாயமான சூரா கஹ்பின் 83-97 வசனங்களில் விவரிக்கிறான்.
* * * * *
இப்பொழுது வரலாறு தலைகீழாய் மாற்றம் கண்டுள்ளது. ஒரு இரும்புத்திரை கட்டப்பட்டல்ல; நடப்பட்டு வருகிறது. என்ன விசித்திரம் என்றால் அதனை நடுவது நவீன யாஜுஜ் மாஜுஜ் கூட்டம்.
கஸ்ஸா, எகிப்தின் வட எல்லையில் உள்ளது. இஸ்ரேலை எதிர்த்து ஹமாஸ் இங்கு யுத்தம் நடத்தி வருகிறது. கத்தியின்றி, ரத்தமின்றி நடக்கும் யுத்தம் இல்லை. குண்டு, துப்பாக்கி, ஏவுகணை, மனித வெடிகுண்டு என, கைவரப்பெற்ற அத்தனை ஆயுதங்களுடன் ரத்தம் ரத்தமாய் இறைத்து. அதன் நியாயம் வெறும் சுதந்தரப் போர் மட்டுமல்ல; பட்டப்பகலில் வெட்டவெளிச்சத்தில் அபகரிக்கப்பட்ட தன் நிலம் என்பதையும் தாண்டியது. இஸ்லாத்தின் மூன்றாவது புனித ஸ்தலத்தை மீட்டெடுப்பதை உள்ளடக்கியது. சகோதர சகோதரிகள் சின்னாபின்னாமாகி அழிவதைத் தடுப்பது.
அவர்களுக்கு அஹிம்சை அல்ல மொழி. மாறாய் முள்ளை முள்ளால் எடுக்கும் பணி. ஹமாஸைப் பொருத்தவரை அது திருப்பணி.
சொந்த நாட்டில் ஓட ஓட விரட்டி நிலத்தைப் பிடுங்கிக் கொண்டு மீதமுள்ளவர்களை மேற்குக் கரை, கஸ்ஸா என்று இரண்டு ரொட்டித் துண்டுகளாக்கிவிட்டது வந்தேறிகள் கூட்டம். அதில் கஸ்ஸா தக்ணூண்டு அளவில் எகிப்தின் வடமேற்கு எல்லையோரம் ஒட்டிக் கொண்டிருக்கிறது.
இந்தக் கஸ்ஸாவிலுள்ள ஃபலஸ்தீனின் மிச்ச, சொச்ச மக்களுக்கு அவர்களின் அடிப்படை உரிமை, கௌரவம், உணவு, தண்ணீர், அடிப்படை சுகாதார வசதி என அனைத்தும் பகிரங்கமாய் மறுக்கப்பட்டு வருகின்றன. ரகசியமெல்லாம் அல்லாமல் நேரடியான ஒரே குறிக்கோள் – அந்த மக்களைத் தனிமைப்படுத்தி, குரல்வளையை நெறித்து, பட்டினிப் போட்டு, மூச்சுத் திணற அடிக்கும் ஒரே குறிக்கோள்.
கொஞ்ச நஞ்சம், உண்மையை உணரும் அமைப்புகளும், நடுநிலையாளர்களும் முன்னேறி வந்து ஒடுக்கப்பட்ட அந்த மக்களுக்கு உதவி என்று ஏதோ கொஞ்சம் பரிமாற எடுத்து வரும்போது எதிரி இஸ்ரேலும் பங்காளி எகிப்தும் தடுத்து முட்டுக்கட்டை போட்டால் என்ன செய்வார்கள் அவர்கள்? ஓட்டை போட்டார்கள். நிலத்திற்கு அடியில்!
போட்டது கொஞ்சம் பெரிய ஓட்டை. சுரங்கப் பாதை. கஸ்ஸாவிற்கும் எகிப்திற்கும் மேலே உள்ள எல்லையை பூமிக்கு அடியில் கடக்கும் சுரங்கப்பாதை. வேறு என்ன செய்வார்கள்? அனைத்து ஆசிகளுடனும் வாழ்த்துகளுடனும் வான், நில, நீர் மார்க்கமாகப் பணம், ஆயுதம், லொட்டு, லொசுக்கு என அனைத்தும் அளித்தருள வல்லரசு நாடு ஏதும் அவர்களுக்கு நண்பனில்லை. ஐ.நா. எனும் அமைப்போ கோட்டு சூட்டு போட்ட சர்வர். எனவே தங்களின் அறப்போருக்கு அவர்களால் முடிந்த சாத்தியம் அது.
எகிப்து கண்டும் காணாமல்தான் இருந்தது. ஆனால் இஸ்ரேலுக்கு முடியவில்லை. அனைத்து இகலோக சக்திகளுடன் ராட்சசனாய் அமர்ந்திருக்கும் அவர்களுக்கு ஹமாஸிடம் உள்ள ஆயுதங்கள் அனைத்தும் தீபாவளிப் பட்டாசு துப்பாக்கி ரேஞ்சுக்குத்தான்.
ஆனாலும் முடியவில்லை. அதை வைத்துக் கொண்டே ஹமாஸ் அவர்களுக்குத் தண்ணி காண்பித்து வருவது மாபெரும் தலைவலியாய் இருந்து வருகிறது. ஏனெனில் அதனை ஏந்தியுள்ள நெஞ்சங்களில் கலிமாவின் சுவாசம் ஓடிக்கொண்டிருப்பது ஓர் அடிப்படைக் காரணமாய் இருக்கலாம்.
அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தவர்களுக்கு எதிராளியைக் காலை ஒடித்தால் ஓட்டப் பந்தயத்தில் வென்றுவிட முடியும் எனும் நல்லெண்ணம் தோன்றியது. அதற்கு என்ன செய்யலாம்? பங்காளியின் கையை முறுக்கி, சுவர் நட வைத்து விடலாம். கையை முறுக்கக் காத்திருக்காமல், சும்மா குலுக்கியதுமே ஒத்துக் கொண்டார் எகிப்து அதிபர்.
எந்த ஒரு அலுவலுக்கும், பதவிக்கும் அது குறித்த குறைந்தபட்சமான அறிவாவது இருக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. டாக்டர் என்றால் குறைந்தபட்சம் MBBS, என்ஜீனியர் என்றால் அந்தத் துறையின் பொறியியல் ஞானம், ஒரு ரிக்-ஷா ஓட்ட வேண்டுமென்றால் பெடல் மிதிக்க, அவ்வளவு ஏன்? பிச்சை எடுக்க வேண்டுமென்றாலும் அட்லீஸ்ட் கையேந்தத் தெரிந்திருக்க வேண்டும் என்பது யதார்த்தமாய் அனைவர் மனதிலும் இருக்கும் ஓர் எதிர்பார்ப்பு, கருத்து.
ஆனால் அரசியலில் மட்டும்தான் விசித்திரமான விலக்கு. எந்தவித அறிவோ ஞானமோ இல்லாமல் அயோக்கியத் தனமும் கொள்ளையடிப்பதும் மட்டுமே குறைந்த பட்சத் தகுதியாய் இருந்தால் போதும். உதாரணம் சற்று மிகையாய் இருக்கலாம். ஆனால் உண்மை சற்றேறக்குறைய அதுதான். இது லோக்கல் பஞ்சாயத்துத் தொடங்கி, அதிபர், ஜனாதிபதி, ராஜாவரை ஒரே நியதிதான் – உலகம் முழுக்க!
எகிப்து அதிபர் மட்டும் என்ன விதிவிலக்கா? இனமாவது, சகோதரத்துவமாவது? மண்ணாங்கட்டி. நியாயங்களையெல்லாம் ஓரமாக நிறுத்துவிட்டு, நன்றாகக் கையைக் குலுக்கி திட்டத்திற்கு ஒத்துக் கொண்டார்.
இரும்புத் திரைஎகிப்து, கஸ்ஸாவை ஒட்டி நீண்டுள்ள தனது எல்லையில் பூமிக்கு அடியில் இரும்புச் சுவர் பதித்து வருகிறது. 10 அல்லது 11 கி.மீ. நீளத்திற்கு நிலத்தின் அடியில் 18 மீட்டர்கள் ஆழம் நடப்பட்டு வரும் இரும்புச் சுவர் அது. தற்போதுள்ள சுரங்கப் பாதைகளை அடைத்து, மேற்கொண்டு சுரங்கப் பாதை ஏதும் ஏற்பட்டுவிடாமல் அந்தச் சுவர் தடுக்கும். இது நிலத்திற்கு அடியில் படு ஆழமாய்ப் பதிக்கப்படுகிறது என்பதால் அதை நோண்டித் துளையிடுவதெல்லாம் இயலாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
“அமெரிக்கா தயாரித்து அளிக்கும் மகா வலுவான எஃகுச் சுவர் அது. வெடிகுண்டு வைத்துத் தகர்க்கும் பாச்சாவெல்லாம் அதனிடம் பலிக்காது. அந்த இரும்புச் சுவரை நோண்டவோ, நுங்கெடுக்கவோ, சூட்டால் உருக்கி இளக வைக்கவோ முடியாது”, என்பதெல்லாம் பிபிசி அளிக்கும் தகவல்கள்”.
அமெரிக்க அதிகாரிகள், “நோ நோ! இந்த மாதிரி சுவரெல்லாம் நாங்கள் தயாரிக்கவும் இல்லை, விநியோகிக்கவும் இல்லை” என்று மறுத்துள்ளார்கள்.
ஓர் உரிமைப் போர் இதனால் தடுக்கப்பட்டு, செயலிழக்கப்படும் என்று யாஜுஜ் மாஜுஜ் கூட்டம் எதிர்பார்ப்போடு உள்ளது. ஆனால் வரலாறு புகட்டிய பாடங்கள் பலவற்றை அவர்கள் அலட்சியம் செய்து விட்டு, அந்த வல்லானின் சக்தியை அறியாமல் போவது கைச்சேதம் என்றுதான் சிம்பிளாய்ச் சொல்ல வேண்டும்.
எல்லா அதிபர்களையும்போல் எகிப்து அதிபர் பற்றியும் உலாவரும் நகைச்சுவை ஒன்று உண்டு.
ஷைத்தானுக்கு வேலையே வழிகெடுப்பதுதானே? பொதுவாய் மனதில் “கிசுகிசுப்பது” அவனது எளிய தந்திரம். எகிப்து அதிபர் நேரடி தோஸ்தாகவே நடந்து கொள்வதால், அவர் பக்கத்தில் சம்மணமிட்டு உட்கார்நது கொண்டு, “நீ அப்படிச் செய், இப்படிச் செய்” என்று சொல்லிக் கொண்டிருந்தானாம். ஆனால் அவர் ஒவ்வொன்றிற்கும், “அது அப்பவே செஞ்சாச்சு, முன்னமேயே செஞ்சாச்சு” என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். தொணதொணப்பு தாங்காமல் ஒரு கட்டத்தில் அவர் வெறுத்துப் போய், “இங்கு வா நான் சொல்கிறேன்” என்று ஷைத்தானின் காதில் கிசுகிசுத்திருக்கிறார்.
“இத்தகுல்லாஹ் யாஷேக்” (அல்லாஹ்விற்கு அஞ்சிக்கொள் தலைவா!) என்று. ஷைத்தானே பதறியடித்து ஓடிவிட்டானாம்.
‘இரும்புத்திரை’ என்றால் ஒருகாலத்தில் பெருவல்லரசாகத் திகழ்ந்த ஒன்றுபட்ட ரஷ்யா நினைவுக்கு வந்தது. இனிமேல் எகிப்தும் நினைவுக்கு வரக்கூடும்.
நாம் வருத்தப் படலாம். அல்லது சிரித்துக் கொண்டே அந்த இரும்புச் சுவரில் முட்டிக் கொள்ளலாம். தகர்ந்து விடும் ஒருநாள், இன்ஷாஅல்லாஹ்.
-நூருத்தீன்
சத்தியமார்க்கம்.காம்-ல் 08 பிப்ரவரி 2010 அன்று வெளியான கட்டுரை