விடுமுறைக் காலம்

by நூருத்தீன்

ன்னும் இரண்டு நாள்களில் ஆங்கில ஆண்டில் அடுத்தது என்கிறது நாள்காட்டி. பொழுது விடிதலும் சாய்தலும் எப்பொழுதும்போல் நடக்கும் அந்த நாளில் மட்டும் ஏன் ஆரவாரம், கூச்சல், உற்சாகம், நுரை கொப்புளிக்க பீர் என்பது புரிய மறுக்கிறது. அனைவரையும் அனைத்து நாளிலும் வாழ்த்தினால் என்ன போச்சு? என்னுடையது மர மண்டை.

குலுக்கி, கட்டியணைத்து, சந்தடி சாக்கில் அந்நிய ஆண்/பெண்ணை உதட்டில் ‘இச்’சி வாழ்த்திக் கொள்கிறார்கள். நான் கேட்கிறேன், இவர்கள் வாழ்த்தி என்ன வாழ்ந்து விடுகிறது? ஊர் உலகம் முழுக்க சண்டை, போர், பிரளயம். தினசரி வெட்டு, குத்து, கொலை. இனக் கொலைக் கரங்களில் செங்கோல், அஹிம்சையின் படிமத்தைச் சுட்ட கொலைகாரனுக்குச் சிலை.

ஒரு பக்கம் வத வதவென்று பிறப்பு, மறுபக்கம் உற்றார், உறவு, பிரபல்யம், அனாமதேயம் என்று பாரபட்சமற்ற சாவுகள். போதாததற்கு மாயமாய் மறையும் விமானங்கள்…

“நிறுத்து. படுகையனே! ஆண்டின் ஒரு நாளிலாவது உற்சாகம் வேண்டாம்? உன் வீட்டுச் சுவற்றுக்கெல்லாம் எதுக்கு நாள்காட்டி?”

“சரி! சரி! அப்படி என்னை ஒரே மோசமாக நினைக்க வேண்டாம். இந்த ஆண்டுப் பொறப்பு நெருங்குவதில் நல்ல விஷயமும் இருக்கு, மோசமும் இருக்கு. தெரியுமா?”

“முதலில் நல்லதைச் சொல்லு.”

“ஆண்டுப் பிறப்புக்கு முந்தைய ரெண்டு வாரத்தில் அதிகப்படியாக லீவு. அந்த நேரம் அலுவலகத்தில் பாதிப் பேருக்கு மேல விடுப்பில் போய், மீட்டிங்குகள் இன்றி வேலையில் இயலமைதி. வெள்ளைக்காரனுடைய பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறையாகி ஹைவேயில் துணி காயப்போடலாம் போல் டிராஃபிக் குறைவு. நினைத்த நேரத்துக்கு அரைமணி முன்னாடியே ‘டான்’னு ஆபீஸ் வந்து விடலாம். இதுக்காகவே ஆபிஸுக்கு வர ஆசையா இருக்கு தெரியுமா. ஐ லைக் திஸ் ஹாலிடே பீரியட்.”

“அந்தளவுக்காச்சும் உன் மண்டைல நல்லது நினைக்கத் தோணுதே. அப்ப அந்த மோசமான விஷயம் என்ன?”

“மீண்டும் இதுக்காக அடுத்து ஒரு வருஷம் காத்திருக்கணுமே!”

-நூருத்தீன்

Image courtesy of Naypong at FreeDigitalPhotos.net

Related Articles

Leave a Comment